நடுப்பனிக் காலம்…

நவம்பர் 17th, 2011 § 7 மறுமொழிகள்

அண்மையில் நோபல் பரிசு பெற்ற கவிஞர் ட்ரான்ஸ்ட்ரெமர் அவர்களைக் குறித்த நேர்முகம் ஒன்றில் Poetry Magazine என்ற சர்வதேச  சஞ்சிகையொன்றின் எடிட்டர் திரு. டான் ஷேர் அவர்கள் ட்ரான்ஸ்ட்ரெமர் குறித்து ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டார். 

ட்ரான்ஸ்ட்ரெமரின் படைப்புகளில் மகிழ்வளிக்கும் விஷயங்களில் ஒன்று, அவருக்கு மாபெரும் மொழிபெயர்ப்பாளர்கள் இவ்வளவு பேர் அருளப்பட்டிருக்கின்றனர் என்பதுதான்.  ராபர்ட் ப்ளை அவர்களில் ஒருவர், அவர் தவிர பிரிட்டிஷ் கவிஞர் ராபின் புல்டன் இருக்கிறார், ராபின் ராபர்ட்ஸனும் மொழிபெயர்த்திருக்கிறார். ஆக, அவரது ஆக்கங்கள் ஆங்கிலத்தில் மகோன்னதமான வகையில் கொணரப்பட்டிருக்கின்றன”

ட்ரான்ஸ்ட்ரெமரின் அதிர்ஷ்டம் தமிழிலும் தொடர்கிறது.

அவரது கவிதை ஒன்றை வரசித்தன் அவர்கள் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.  படித்துப் பாருங்கள்.

என் ஆடைகளிலிருந்து

பரவுகிறது ஒளிர் நீலம்.

நடுப்பனிக் காலம்.

உறைபனி வெண்பறை அதிர்ந்து கொண்டே இருக்கிறது.

கண்களை மூடிக் கொள்ளுகிறேன்.

”எங்கோ இருக்கிறது ஓர் உலகம்

நிசப்தம் உறைந்து…

வாசல் திறந்தபடி..

எல்லைகளுக்கும் அப்பால்

இறந்தவர்களை யாரும் அறியாமல் 

கவர்ந்தபடி.

(இடுகையிட்டது: நட்பாஸ்.)

Tagged: ,

§ 7 Responses to நடுப்பனிக் காலம்…

  • varasiththan says:

    பதிவிட்டதற்கு மிக்கநன்றி சார்

    இது மொழிபெயர்ப்பல்ல. கவிஞரின் மொழியொட்டிய கவிதையின் தாக்கத்தின் வெளிப்பாடு.

    நான் எழுதியது ”வந்தவாக்கு:. இப்போது அது வெளிவந்தவாக்காகிவிட்டது.. :) ஆயினும்ம் திருத்தங்கள் செய்யலாம்.

    “எங்கோ… இருக்கிறது அந்த உலகம்…நிசப்தம் உறைந்த தன் வாசல் திறந்தபடி”

    வாசலில்தான் நிசப்தம் உறைந்திருப்பதாகத்தோன்றுகிறது

    இப்படி மாற்றலாம்

    ”எங்கோ இருக்கிறது ஓர் உலகம்
    நிசப்தம் உறைந்து..
    வாசல் திறந்தபடி..

    smuggling – கள்ளக்கடத்தல் என்றுதான் ஊரில் சொல்வார்கள். கவர்தல் -தனக்காக எடுத்துக்கொள்ளுதல் .இதில் வித்தியாசம் இருக்கிறது.(ஆநிரை கவர்தல் தெரியச்செய்வது என்று நினைக்கிறேன் அது விடப்படுகிற சவால்)

    ”இறந்தவர்களை யாரும் அறியாமல் கடத்தியபடி?? “

    ஆனால் கவர்தல் என்கிற வார்த்தை கவர்ச்சியானது-

    • natbas says:

      மாற்றி விட்டேன்.

      மிக்க நன்றி.

      எதிர்பாட்டு:

      நீலக் கிளரொளி
      என் ஆடைகளின்று பொங்கிப் பரவும்.
      இடைபனிக் காலம்.
      உறைபனி வெண் பறைகளின் சலங்கை.
      என் கண்கள் மூடும்.
      ஓசைகளற்ற ஓர் உலகம்
      ஆங்கோர் திறப்பு
      களப்பட்டோர் அவ்வழி
      கவர்படும் புலம்.

  • varasiththan says:

    நன்றி சார்.

    நன்றாக இருக்கிறது.நீலக்கிளரொளி/ஆங்கோர்திறப்பு/ஓசைகளற்ற ஓர் உலகம்/ களப்பட்டோர்/ கவர்படும் புலம்/தீட்டப்படுகிறது வைரம்.எழுதலாமோ ஒரு கவிதையும் ஐந்து மொழிபெயர்ப்புகளுமென்று..அல்லது.. :)

    ஒரு கவிதையும் ஐந்து கண்ணாடி அரியங்களும்.

    விழித்தேன்
    கனத்துப்போயிருக்கும்
    கண்கள் கூசின

    என்றைக்கும்போலவே
    என்மேஜையில் படர்ந்து
    தரையில் தவழுகின்றன
    காலைச்
    சூரியனின் கிரணங்கள்

    இன்னும் ஒட்டியிருக்கிற
    மதுத் துளிகளோடு
    சரிந்தும் நிமிர்ந்தும்
    மேஜையில் ஓய்ந்திருக்கின்றன
    இரவு நாங்கள்
    உயர்த்தி மோதிய
    ஐந்து கண்ணாடிக்குவளைகள்

    என்றைக்குமில்லாமல்
    இன்றைக்கு
    வண்ணமயமாய்க்கிடக்கிறது

    கசக்கியெறியப்பட்ட
    கைவராத கவிதைகள்
    எப்போதும்
    இறைந்து கிடக்கின்ற
    என் அறை

    தெறித்து
    சிதறிக்கிடக்கின்றன
    பூச்சுதிர்ந்த அழுக்குஅறைச்சுவர்களில்
    ஒளிர்ந்தபடி
    அனேகம் வானவில் துண்டுகள்

    யன்னலை
    நோக்கி மெல்ல நகர்ந்து
    வெளியேறிக்கொண்டிருக்கிறது
    காலம்
    என்னைப்பதற்றமடையச்செய்தபடி.

  • natbas says:

    நீங்களே இந்தக் கவிதையை நேரடியாகப் பதிப்பிக்கலாமே? ஏன் இது பின்னூட்டத்தில் நிற்கிறது?

    முன்னே தள்ளுகிறேன்.

    —-

    அதற்கு முன் முடிந்த கதை/ கவிதை: தெரியாத மொழியில் வந்த கவிதையை இடைமொழியின் துணை கொண்டு மொழிபெயர்ப்பதில் உள்ள சில சிக்கல்களை/ வாய்ப்புகளைச் சுட்டும் விதமாக-

    பயன்படுத்தப்பட்ட ஸ்வீடிஷ் அகராதி இது –
    http://folkets-lexikon.csc.kth.se/folkets/folkets.en.html

    இரண்டு ஆங்கில மொழிபெயர்ப்புகள் காணக் கிடைக்கின்றன:
    http://www.guernicamag.com/poetry/47/midwinter/
    http://www.blackbird.vcu.edu/v10n1/poetry/crane_p/017pc_page.shtml

    இவற்றிடையே உள்ள பெரிய வித்தியாசம்- ஒரு கவிதையில் ஒற்றைப் பறை, இன்னொன்றில் பன்மை.

    பயன்படுத்தப்பட்ட ஸ்வீடிஷ் சொல்: tamburiner.

    பொருள்: tamburin noun, tambourine

    ஒரு இடத்தில், “Forming the plural of Swedish nouns is not quite as simple as in English. You will see that the great majority of nouns have plurals ending in -r, however some get -or, some get -ar, and some get –er…. -er suffix: Many foreign words fall in this category, as well as those words with irregular plurals ” என்று படிக்கிறேன். எனவே பன்மையைத் தேர்வு செய்யத் தோன்றுகிறது.

    glow என்றும் light என்றும் மொழிபெயர்க்கப்பட்ட, sken என்ற சொல், “light, glare [figuratively, " semblance, guise"]” என்று பல் வகையில் பொருட்படுகிறது. இதில், ” semblance, guise” என்ற பொருளைத் தமிழுக்குக் கொண்டு வர முடியாது. நீல வண்ணத்தில் ஒளிர்கிறது என் ஆடைகள் என்று சொல்லலாம், இந்தப் பொருளை உணர்த்த நீல வண்ணம் தரித்து ஒளிர்கிறது என் ஆடைகள் என்று சொல்லலாமோ என்னவோ- அதுகூட சரியாக வருவதாக இல்லை.

    அடுத்த அடியில் உள்ள strömmar என்ற பதம் stream என்று பெயர்க்கப்படுகிறது. அகராதி, “stream, flow, pour [also used figuratively]” என்று சொல்கிறது. இந்த ஒளி வெள்ளமாய்ப் பெருகிப் பரவுகிறது: தண்ணீரைப் போல்.

    யோசித்துப் பார்த்தால், ஒரு தனி மனிதனின் சோகத்தில், அவனது ஆடைகள் நீல வண்ணம் தரித்து, அந்த நீலம் அவற்றிலிருந்து வெள்ளமாய் பரவுகிறது என்ற தோற்றம் எழுகிறது.

    குளிர் காலம். இருள். பனி உடைகிறது, உரசுகிறது- Klirrande- clink ஆகும் ஓசை பல திசைகளில் இருந்து கேட்கிறது. இருள், குளிர், சோகம், உடையும் பனிக்கட்டிகள்: பறையின் சலங்கை (http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2c/Pandei_inter.jpg/250px-Pandei_inter.jpg இந்தப் புகைப்படத்தில் உள்ள மணிகளின் ஓசையை சலங்கை என்று சொல்லலாமா?) பறை ஒலிக்கவில்லை,. இரவின் நிசபததில் திசையெங்கும் அமானுடமாய் அதன் மணிகள் கிணிகிணிக்கின்றன.

    கவிஞன் தன் கண்களை மூடிக் கொள்கிறான்- கண்கள் என்றால் கண்களை மட்டுமல்ல, புலன்கள் அனைத்தும் உன்முகப் பார்வை கொள்கின்றன. அவனை மௌனம் நிறைக்கிறது.

    நிசப்தமான ஒரு உலகம் இருக்கக்கூடும் என்கிறான், தான் அக விழியால் காண்பதால், அந்த உலகுக்கு ஒரு திறப்பு இருக்கக் கூடும் என்று சொல்கிறான்: பனிக்கட்டிகள் உடைவது போல், இந்த பருவுலகம் உடையலாம். அதன் வழியாக இறந்தவர்கள் இவ்வுலகின் எல்லையைத் தாண்டி கடத்திச் செல்லப்படலாம்.

    இங்கு dead என்று ஆங்கிலத்தில் பெயர்க்கப்படும் döda என்ற சொல்லின் பொருள் பலதரப்பட்டவை: kill [figuratively, " repress"], cancel, dispatch, eliminate, eliminate, kill off என்றும் இன்னும் பலவுமாக விரிகிறது: http://folkets-lexikon.csc.kth.se/folkets/folkets.en.html#lookup&d%C3%B6da

    இவர்களை இறந்தவர்கள், என்று பொதுவாய்ச் சொல்லிவிட முடியாது- இவர்கள் கொல்லப்பட்டவர்கள்: வீழ்ந்தவர்கள், கூற்றுவனால் கவர்ந்து செல்லப்பட்டவர்கள்,

    —-

    எங்கே? கவிதையில் விடையில்லை. ஆனால் கவிஞனின் உலகை சோகம்/ நீலம் நிறைக்கிறது: (அவனது இதயத்தை உறைபனி என்று சொல்லலாமா?) உறைபனி உடைவதுபோல் ஒரு திறப்பு- அதன்வழி அந்த உலகின் எல்லையைக் கடந்து வீழ்ந்தவர்கள் கொண்டு செல்லப்படுகிறார்கள்- இந்த உலகை நீலம் நிறைக்க வாய்ப்பில்லை, இல்லையா?

    —-

    ட்ரான்ஸ்ட்ரெமரை mystic poet என்று சொல்கிறார்கள். அவர் மனநல மருத்துவரும்கூட. பொதுவாக mysticகளுக்கு புறவுலகும் அகவுலகும் வெவ்வேறாக இருப்பதில்லை, இல்லையா?

    இந்தக் கவிதையில் அவர் தனி மனித மீட்சியைப் பேசுகிறார் என்று நினைக்கிறேன். பறையொலி இசைப்பது வாழ்பவர்களுக்காக, இல்லையா? அது இறந்தவர்களை மட்டுமல்ல, நம்மையும் வாழ்வை நோக்கி அழைக்கிறது.

    —-

    என்ன சொல்கிறீர்கள்? இத்தோடு இந்தக் கவிதையை நாம் கடந்து செல்லலாம் என்று நினைக்கிறேன். .

    நீண்ட பின்னூட்டம். :)

    நன்றி.

  • varasiththan says:

    உங்கள் பின்னூட்டமும் முன்னுக்குத்தள்ள வேண்டியது.மொழிபெயர்ப்புக்கான திறப்புகள்
    அங்கிருக்கின்றன.இப்படித்தேடிதேடி தருவதற்கு மிக்க நன்றி.

    எனக்கு உறைபனிச்சூழலின் ஓசை எப்படியிருக்குமென்று தெரியாது.Tambour, tambourine ஒன்றில் சலங்கை இருக்கிறது.ஒன்றில் இல்லைப்போலவும் தெரிகிறது..கவிஞர் எதைக்குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை.

    உறைபனியும் பரந்த வெண்மையும் வர்ணங்களைத்துடைத்துவிட்டு பார்வைக்குச்சலிப்பைத்தருகிறது.மனச்சோர்வையும் தோற்றுவிக்கலாம் என்கிறார்கள்.

    உயிர்ப்பான ஒரு உலகம்.ஓசை நிறைந்தது.அடங்கிப்போன ஓர் உலகம்.நிசப்தமானது இரண்டுக்குமிடையில் எங்கோ ஒரு தொடர்பு இருக்கிறது.

    பின்னூட்டம் போடத்தோன்றியதை பின்னூட்டத்தில் எழுதினேன். பழக்கமாகிவிட்டது :)

  • natbas says:

    அது சரி.

    இதுக்கு மேலே இதைப் பத்தி பேசினா என்னை ஒரு மாதிரியா பாக்க ஆரம்பிச்சுடுவாங்க…

    ட்ரான்ஸ்ட்ரெமர் மர்மமாகவே இருக்கட்டும்! அதிலும் ஒரு அழகு இருக்கிறது.

    நன்றி.

  • varasiththan says:

    :D அப்படியே ஆகட்டும் =))

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

What’s this?

You are currently reading நடுப்பனிக் காலம்… at கள்ளிப் பெட்டி.

meta

Follow

Get every new post delivered to your Inbox.