மறைந்தவர்கள் நினைவையும் நீங்கியவர்களாவார்கள் எனில், வாழ்பவர்கள் வாழ்வது எதற்காக? மேலை நாடுகளில் அஞ்சலிக் கட்டுரைகள் மிகப் பிரபலமாக இருப்பது அவர்கள் உயிரையும், நினைவையும் எவ்வளவு அருமையாகப் போற்றுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
நண்பர் ஆர்வி சிலிகான் ஷெல்ப் என்ற புக்ப்ளாக் துவங்கும்போது அவருக்கே இவ்வளவு வரவேற்பு இருக்கும் என்பது தெரிந்திருக்காது. ஆனால் ஆங்கில மொழியில் அவற்றுக்கு இருக்கும் மரியாதையைப் பார்த்தால் சிலிகான் ஷெல்ப் போன்ற இன்னும் நூறு புக் ப்ளாகுகளுக்கு தமிழிலும் இடம் இருக்கிறதென்று தோன்றுகிறது.
அதே போல் இந்த வகையான அஞ்சலிகளுக்கும் ஒரு இடம் இருக்கிறது. யாராவது இதற்கென்றே ஒரு வலையேடு துவங்க வேண்டும். அதன் பின் பாருங்கள், எப்படி பிச்சுக் கொண்டு போகிறதென்று.
எல்லாரும் செய்வதையே வெறும் பிரபலத்துக்காக எதற்காக செய்வது? இதில் நாட்டமுள்ளவர்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் இவ்வகைக் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துப் பதிவு செய்யத் துணியலாம்.
அப்போதுதான் தமிழ் வாழும். ஒருத்தருக்கு அஞ்சலி செய்யும்போது நாம் அவர் ஒருவரை மட்டும் நினைவு கூர்வதில்லை- ஒரு சகாப்தத்தையே குறுக்கு வெட்டாகத் திருப்பிப் பார்க்கிறோம். இணையத்திலும் அச்சு ஊடகத்திலும் இவை பெருமளவில் இடம் பெரும் நாள், தமிழ் தன் பொறுப்பை உணர்ந்த நாள் எனக் கொண்டாடப்படும்.