வலைதள பரிந்துரை

ஒரு காலத்தில் கூகுள் ரீடரே பழி என்று கிடந்தேன். அப்போதெல்லாம் ப்ளாக், வலைதளம் என்று நிறைய எழுதவும் செய்வார்கள். கூகுள் ரீடர் மூடப்பட்டபின் கிட்டத்தட்ட அதன் வசதிகள் எல்லாம் இருக்கும் ஃபீட்லிக்கு அந்த ரீடர் ஃபீட்களை அப்படியே கொண்டு போனேன். ஆனால் ரீடர் காலத்திலே குறைந்திருந்த பதிவுகள் இப்போது கிட்டத்தட்ட நின்றே போய் விட்டது. நல்ல எழுத்து வேண்டாம், தமிழில் எழுத்தைப் பார்க்க வேண்டுமென்றால்கூட பேஸ்புக்தான் போக வேண்டும் என்று இருக்கிறது நிலைமை. ஒரு நாளைக்கு தமிழில் பத்து பதிவுகள் வந்தால் பெரிய விஷயம் (நம் டேஸ்ட்டுக்கு எழுதுபவர்கள்).

இந்த கஷ்டமான காலகட்டத்தில் சித்துராஜ் பொன்ராஜ் எழுத ஆரம்பித்திருக்கிறார். கிறுகிறுக்க வைக்கும் வேகம்.

இன்றைக்கு படித்து நாளைக்கு எழுதுகிற விஷயங்கள் இல்லை இவை. ஏற்கனவே படித்து கைவசம் குறிப்புகள் இருந்தால்கூட இதையெல்லாம் அடுத்தடுத்த நாள் எழுத ஏதோ ஒரு இது இருக்க வேண்டும். அந்த இதுக்கு எது காரணமாக இருந்தாலும் அது நீண்ட நாள் நிலைத்தால் நன்றாக இருக்கும்!

‘ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே’ என்ற பௌராணிக கதையாடல் இந்த  அறிமுகங்களில் இல்லை  என்பது நல்ல விஷயம். ஆனால், பதிவுகளில் பாதிக்கு பாதி பொது கருத்துகள் என்பது கொஞ்சம் பொறுமையைச் சோதிக்கிறது – “வாழ்க்கையின் எல்லா வகையான வளங்களையும் பெற்றுள்ள ஒருவன் தன் தலையீடில்லாமல் தன்னைச் சுற்றி நடக்கும் சரித்திர, அரசியல், சமூக நகர்வுகளால் சீரழிந்து போவது எதனால் என்ற கேள்வியை இந்த நாவல் எழுப்புகிறது,” என்றால் சந்தோஷம்; ஆனால் எப்படி எழுப்புகிறது, என்ன விடை காண்கிறது என்பதுதானே சுவாரசியம்? இதை ஒரு குறையாகச் சொல்லவில்லை.

கிட்டத்தட்ட நவீன ஆங்கில இலக்கிய சிலபஸையே ஒரு மாதத்தில் கவர் செய்து விடுவார் போலிருக்கிறது, சீக்கிரம் வாசிக்கத் துவங்குங்கள்.

சித்துராஜ் பொன்ராஜ் வலைப்பக்கம்

வழுக்கும் சரிவுகள்

சீனாவின் வலிமை என்ன, வரலாறு என்ன, இதெல்லாம் தெரிந்திருந்தும் ஹாங்காங் மக்கள் தங்கள் சுதந்திரத்தை தக்க வைத்துக் கொள்ள அகிம்சை போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒன்றாக விமான நிலையத்தில் கூடி ‘Les Miserables‘ என்ற திரைப்படத்தில் உள்ள பாடல் ஒன்று பாடுவதன் காணொளி-

பாடல் வரிகள் இங்கிருக்கின்றன-

இதே நாட்களில் ருஷ்யா. சீனாவோடு ஒப்பிட ருஷ்யா மட்டுமென்ன, வலிமையிலும் வரலாற்றிலும் சளைத்ததா? இருந்தும் அங்கே சுதந்திரமான, நேர்மையான உள்ளாட்சி தேர்தல்கள் நடத்த மக்கள் போராட்டம்.

இவர்கள் கதி அதோகதிதான் என்பது நன்றாகவே தெரிகிறது. இவர்களை நினைத்தால் இரக்கமாகவும் இருக்கிறது , இவர்களுடைய வீரத்தை (என்ன இருந்தாலும் நாளது வரை அகிம்சை போராட்டம்) பார்த்தால் வியப்பாகவும் இருக்கிறது. ஆனால் கூடவே, இதையெல்லாம் பாராட்டுவது நல்லதுதானா என்று ஒரு சின்ன உறுத்தலும் இருக்கிறது.

ஒரு காலத்தில் பெர்லின் சுவர் உடைந்தபோது அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அதே போல் சீனாவில் தியானன்மென் சதுக்க போராட்டம் முதலில் மகிழ்ச்சியையும் பின்னர் வருத்தத்தையும் கொடுத்தது. இன்றைக்கு ஹாங்காங்கில் சீனா டாங்கிக்களைப் பயன்படுத்தினால்கூட அதில் நமக்கு ஒரு படிப்பினை கிடைக்கும். ருஷ்யா என்ன செய்ய வேண்டும் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். “அவர்களுக்கு வேறு வழியில்லை,” என்ற சமாதானத்தை நாம் சொல்லவும் செய்வோம்.

ஆனால் வேறென்ன செய்வது? மற்றவர்கள் பாராட்டுதவதற்காகவோ அல்லது அவர்களைக் கண்டிக்க தார்மீக மேடையில் உயர்ந்து நிற்கும் சொகுசு நிலைக்காகவோ ரியல்போலிடிக்கை நிராகரிக்க முடியுமா? சீனாவும் ருஷ்யாவும் எதற்கு, நம் பாட்டைப் பார்ப்போம், என்பதுதான் நம்மால் ஆகக்கூடிய யதார்த்தச் செயல்.

அதிகாரத்தை மூர்க்கமாக பயன்படுத்தும் அரசுக்கு எதிர் போராடும் சாமானியர்களைப் பார்த்து இரக்கப்பட்ட அன்று இருந்தது வயதுக்கு வராத குழந்தைப் பருவத்தின் கள்ளமின்மை. இன்றைக்கு பெரிய ஆட்களாகி விட்டோம். எப்போதும் போல் நாம் நல்லவர்கள்தான், “எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே,” என்று ஒருவர் சொன்னால் அவர்களுடன் சேர்ந்து உற்சாகமாக ஆமோதிக்கக் கூடியவர்கள்தான், நமக்கொன்றும் நடக்கவில்லை. ஆனால், எனக்கே ஹாங்காங்கும் ருஷ்யாவும் உறுத்தலாக இருக்கிறது, தம்மை நெருக்கும் வேலிகளுக்குள் அடங்க மறுக்கும் அந்த மக்கள் வெற்றி பெற அச்சமில்லாமல்  விரும்ப முடியவில்லை.

நாமென்னவோ எப்போதும் போல் இருக்கிற இடத்தில்தான் இருக்கிறோம், ஆனால் காலம் நமக்குள் நிகழ்த்திய மாற்றங்கள், தடுப்பரண்களை நம் மறுபக்கத்தில் கொண்டு போய் வைத்து விட்டது.