திருமண நாள் வாழ்த்துகள் .

தெரிந்தவர்களுக்கே தெரியாதவர்களுக்கு சொல்கிற மாதிரி எழுதுவதற்கு இந்த வலைத்தளம் பயன்படும் என்பது நான் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒன்று. ஆமாம், என்றாவது ஒரு நாள் நீ  எதையாவது தேடும்போது, கூகுள், பிங் போன்றத் தேடித் தருவான்கள் உன்னை இந்த வலைத்தளத்திற்கு அழைத்துவரக் கூடும். நீயும், சொல்வது நானென்று தெரியாமல் இதைப் படித்துவிட்டு போகக் கூடும்: ஆனால் ஓன்று சொல்கிறேன் கேள், அசந்தர்ப்பமாக வந்த உனக்கு மட்டுமல்ல, தினமும் வலைமேல் விழிவைத்து இன்று வருமோ, நாளை வருமோ என்று காத்திருந்து இந்தப் பக்கங்களைப் படிக்கிற அன்பு நெஞ்சங்களுக்கும் சேர்த்துதான் இதை சொல்கிறேன்- படித்துவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் செல்லாதே: உன் வருகையைக் குறிக்கும் விதமாக ஏதேனும் பின்னூடிட்டுப் போ.

முதலில் குழந்தை பிறந்ததற்கு வாழ்த்து சொல்லிவிட்டு, இப்போது திருமணம் நிகழ்வதற்கு என் வாழ்த்திப்  பதிவு செய்கிறேன். இது எனக்கே விந்தையாகத்தான் இருக்கிறது: என்ன செய்வது, எனது நண்பர்கள் ஜாதகத்தைப் பார்த்துதான் தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்களே தவிர, இந்த பதிவனின் தேவைகளை கணப்பொழுதும் சிந்திப்பதில்லை. யாருக்குத் தெரியும், நாளை கல்லூரிக்கு செல்லும் பெண்ணுக்கு ஒரு பதிவு, அதற்கடுத்த வாரம் சாகலேட்டைத் தொலைத்த பிள்ளைக்கு ஒரு பதிவு என்று நான் எழுதக் கூடும்.

ஆமாம் நண்பர்களே, அறிவாளிகளின் கருத்தோடு முரண்படுவதற்கு மன்னிக்கவும்- பௌதிக விதிகளுக்கு உட்பட்டதல்ல வாழ்க்கை.  இயற்கைக்கு வேண்டுமானால் நியதிகளும் விதிகளும் இருக்கலாம், ஆனால் அதைக் கற்பித்த மனிதன் சந்திக்கும் நிகழ்வுகள் பௌதிக விதிகளுக்கு அப்பாற்பட்டவை.

நான் என்ன சொல்ல வந்தேன்? ஆமாம், ரொம்ப யோசித்து எழுதினால் இதுதான் சிக்கல், பற்பல பொருத்தமான யோசனைகளூடே, வேண்மேகங்களிடையே மறைத்து போகும் நிலவைப்போல, கூட்டத்தில் தொலைந்து போகும் பிள்ளையைப்  போல, எழுத வந்த விஷயம் தன்னை இழந்து விடுகிறது.

ஆமாம், இப்போது நினைவு வந்துவிட்டது. உனக்குத் திருமணம். அதை வாழ்த்தும் விதமாக இந்த பதிவை செய்கிறேன்.

காதல் என்பது இரண்டு இதயங்களை இணைக்கும் பாலம் என்று சொன்னால், திருமணம் என்பது இரண்டு உலகங்களை இணைக்கும் பாலம் என்று சொல்ல வேண்டும். அத்தனை பிரம்மாண்டமான பேரண்ட நிகழ்வே உனது திருமணம்.

ஒரு நொடி இங்கிருந்து எழுந்திரு. கண்ணாடியின் முன் போய்  நில்: பார்- உனது பற்கள்- அவற்றின் கோணங்களை கவனி- உனது தலை முடி- அவற்றின் சுருள் கற்றைகளை கவனி- உனது நிறம்- ஏன், உனது காது மடல்: இவைதானே நீ? ஆனால் இவை உனக்குரியனவா?

உனது பாட்டி  நீ பிறக்கும் போது  சொல்லியிருப்பாள், “குழந்தை நிறத்தில் அப்படியே அவனது அம்மாவை உரித்து வைத்திருக்கிறது, ” என்று. உன்னைத் தன் கையில் வாங்கும்போது, உன் தகப்பன் நினைத்திருப்பான், “இவனது கண்ணிமைகள் என்னையொத்திருக்கிறது”, என்று. உன் அத்தை உனது காது மடல்களில் தனது தாயைக் கண்டிருப்பாள். உனது தாய், உனது கால் நகங்களின் வளைவில் தனது சித்தியின் மெட்டியிட்ட பாதத்தை நினைத்து சிரித்திருப்பாள்.

இன்னும் சொல்ல வேண்டுமா? உனது உடல், பல தலைமுறைகளின் வார்ப்பு. உனது மூதாதையர் ஒவ்வொருவரின் பங்கீடும் உன்னை உருவாக்கியிருக்கின்றன. உன்னை மணக்க இருக்கிறாளே, அவள் உருவில் பல நூற்றாண்டுகள், நூற்றாண்டுகள் என்று அபத்தமாகச் சொல்வானேன், மானுட இனத்தின் வரலாறே உன் கையைப் பற்றி உன் தோளில் சாயப் போகிறது.

உடலை விடு- மனம்: உனது ஒவ்வொரு நினைவும், உணர்வும் நீ சுயமாகத் தேர்ந்தெடுத்ததில்லை. நீ தேர்ந்தெடுத்து அணிகிற சட்டைகள் உன் நண்பர்களின் ரசனையால் தீர்மானிக்கப்பட்டது. நீ நேரம்  பார்த்து ஒழுங்கு தவறாமல் ஒவ்வொரு செயலையும் செய்து முடிக்கிறாயே, அது உன் பெரியப்பாவால் பதிப்பிக்கப்பட்டது.  வெயிலை நீ வெறுப்பதற்கும், காரில் பயணிக்கும்போது “தில்லானா! தில்லானா!” என்று திரும்பத் திரும்பக் கேட்பதற்கும்,  வீடு திரும்பியதும் செலவுக் கணக்கெழுதுவதற்கும் , உன் செயல்கள் எல்லாவற்றுக்கும் பின்னணியில் ஒரு இடம் ஒரு காலம் நீயறியா வித்தாயிருக்கிறது.

ஆமாம், உன் உடல் ஒரு வரலாறு- காலவெளியில் மானுட இனம் வரைந்த உயிரோவியம் நீ என்று சொன்னால், உன் மனம் ஒரு பூகோளம்- காலவெளியில் உன் சமகாலத்து மனிதர்களால் குறியிடப்பட்ட வரைபடம்.

இதோ, இன்னும் சில நாட்களில் இரண்டு வெவ்வேறு சரித்திரங்களும் பூகொளங்களும்- நான் முன்னமேயே சொன்ன மாதிரி இரு வேறு உலகங்கள் சேரப் போகின்றன: அதில் பல வேற்றுமைகள் ஒன்றுபடப் போராடும்: நீ அவற்றை ரசிக்கத்தக்க விந்தைகளாக வியப்பாயா , இல்லை, வேண்டாத  விபத்துகளாக வெறுப்பாயா?

ஒரு கணம்: ஒரு கணம் போதும்: உங்கள் வரலாற்றையும், பூகோளத்தையும்- நீங்களாய் ஜனித்த வெவ்வேறு உலகங்களையும் நினைவுகூர- ஒரு கணம் போதும். அந்த ஒரு கணத்துக்கு இடம் கொடுத்தால் ஒரு அதிசயம் நிகழக் காண்பாய்: ஜன்ம ஜென்மங்களாய் இணைந்திருந்தவர்கள் நீங்கள் என்ற உண்மையை: எப்போதும் பிரிவறியாத அன்பின் வடிவத்தைத் தொடப் பெறுவாய்:

அந்த ஒரு கணத்தை நீங்களிருவரும் – சொல்லப்படாத நினைவாலுணர,  நான், நான் தொழும் தெய்வங்களை ஒட்டுமொத்தமாய்ப்  பிரார்த்திக்கிறேன்.

கடவுளைக் காண ஞானியர்தான் வேண்டுமென்பதில்லை: மனமடங்கின நிலையில், உன் மனைவியின் மடியில் அது கிடைக்கும்: உன் உள்ளங்கையில் கண்களைப் பாதி திறந்த நிலையில் அழும் குழந்தை- அதன் தொடுகையில், பௌதிக விதிகள் புண்ணாக்காய்ப் போன உன்னத அதிசயம் நேரக் காண்பாய்.

மனித வாழ்க்கை, ஒற்றை இதயத்தால் ஒற்றை மூளையால் கணக்கிடப்பட்ட பாழ்:  மெய்வாழ்வு: தன்னை மறந்த, தான் என்பதற்கவசியமில்லாத  தனிநிலை: இந்தத் திருமணம் பந்தமல்ல: தன்னைத் தாண்டத் தூண்டும் பாலம்.

அதில் பயணிக்க வாழ்த்துகள்.

Advertisements

7 thoughts on “திருமண நாள் வாழ்த்துகள் .

  1. நீங்க ஒரு ஞானக் கிறுக்கு சார். அப்படிப் பட்டவர்களால்தான் இது போல ஒரு அட்டகாசமான பதிவை இட முடியும். அனாயாசமாய் எழுதியிருகீங்க ஒரு அற்புதமான பதிவை. நான் உங்க எல்லாப் பதிவையும் வரிக்கு வரி படிச்சவனில்லை…இருந்தாலும் சொல்றேன்…. இந்தப் பதிவு….சம்திங் கிரேட்! தனிச்சு நிக்கிது. நான் எழுதறத இன்னையோட நிறுத்திடறது நல்லதுன்னு நெனைக்கறேன்.

    1. நல்லா இருக்கே நீங்க சொல்றது! மூட்டைப் பூச்சிக்கு பயந்துகிட்டு வீட்டைக் கொளுத்துவாங்களா என்ன? எங்கயோ ஒரு மூலைல எவனோ கிறுக்கினான்னு பீல் பண்ணி நீங்க உங்க கலக்கல் பதிவுகளை நிறுத்திடாதீங்க… நான் உங்கள் ரசிகன்.

    1. ஆமாம் சாய், மணம் செய்து கொள்ளும்- செய்து கொண்ட- தம்பதியர் அனைவரையும் உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s