யாரைத் தோலுரிக்க வேண்டும்?

இது பைசா பெறாத விஷயம்தான், இருந்தாலும், இதைப் படித்து இரண்டு நாளாகியும் சும்மா இருக்க முடியவில்லை: அதனால்தான் இந்த விஷயம் குறித்த இந்த பதிவு.

ஜெயமோகனைப் பற்றி இந்திரஜித் என்பவர் எழுதியதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். அதை அறிந்திராவிடிலும் ஒன்றும் மோசம் போகிவிடப் போவதில்லை.

ஆனால் அவர் எழுதியதன் பின்னணியை, அதைவிடப் பொருத்தமாகச் சொல்வதானால், இந்திரஜித்தின் பின்னணியை ஜெயமோகன் கிழி கிழியென்று கிழித்து விட்டார்.- ஆன்மாவை கூவி விற்றல், என்ற பதிவில். அதைப் படித்ததும், வேறொரு தளத்தில் வேறொருவர் ஜெயமோகனை அதிக யோசனை தேவைப்படாத பதிவு ஒன்று பண்ணினதற்கு பின்னூடாக தமிழ் எம் ஏ என்பவர் எழுதியது நினைவுக்கு வந்தது- பச்சையாக எழுதியிருந்தார்:-

“ஜெயமோகன் கட்டுரையை எதிர்த்து ஒரு மொக்கை கட்டுரை. இதை ஜெயமோகன் அவர்களுக்கு அனுப்பினீர்களா? அனுப்பி பாருங்கள் அப்போது தெரியும் உங்கள் டவுசர் கிழிந்து குண்டி தெரியும்.”

இந்திரஜித்தைப் பற்றி ஜெமோ எழுதியதைப் படித்ததும், தமிழ் எழுதியது எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் என்பதை உணர்ந்தேன். இந்திரஜித்தின் மேல் இரக்க உணர்வே மேலிட்டது. என்னைப் போன்ற பலவீனன் ஒருவன் அவர் இடத்தில் இருந்தால் செத்துப் போயிருப்பான்.

எதற்காக இது போன்ற தனி மனித விஷயங்களைப் பொதுவில் பேச வேண்டும் என்ற எண்ணம் எழாமல் இல்லை: சொல்வது யார் என்று பார்க்கக் கூடாது, சொல்லப்படுவதன் நிறை குறைகளை மட்டும் கவனித்தால் போதும் என்ற எண்ணம் கொண்டவன் நான். அது மட்டுமல்ல, வாதத்துக்கு தொடர்பே இல்லாத விஷயங்களைப் பெரிதுபடுத்தியே கலாச்சார தன்னழிவுக்கு ஆட்படும் சமுதாயம் தமிழ் சமுதாயம் என்பது என் கருத்து.

ஜெயமோகன் தான் ஏன் இதை எழுதினார் என்பதை அவரே அந்த பதிவில் பின்னூட்டமிட்டு தெளிவு செய்கிறார்:

“என் கட்டுரையின் சாரமான விஷயம் சண்டையோ பூசலோ அல்ல. பொதுத்தளத்தில் கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைப்பவர்களுக்கு பின்னால் இருக்கும் கபடம் தான். அந்த கபடத்தை கணக்கில் கொள்ளாமல் அக்கருத்துக்களை விவாதிப்பதில் உள்ள மாபெரும் விரயம் குறித்துத்தான்.”

இருந்தாலும், அவ்வளவு கடுமையாகத் தாக்கியிருக்க வேண்டுமா என்றால், அவசியமில்லை என்று நான் சொல்லுவேன்.

கல்கி, 25 4.2010 பக்கம் 39ல், அமரர் கல்கி சொன்னதாக ஒரு மேற்கோள்:

“முழுமையாகப் பார்க்கும்போது, ‘பயனற்றது’ ‘கலை வளர்ச்சிக்கு தீங்கு பயப்பது’ என்று தொன்றினால், அதைப் பற்றி எழுதும் முறையே வேறு. அசோகவனத்தை அழிப்பதில் அனுமன் கையாண்ட முறைதான் அதற்குச் சரி. “இங்கே ஒரு செடி நன்றாயிருக்கிறதே” “அங்கே ஒரு பூ நன்றாயிருக்கிறதே” என்று யோசித்துக் கொண்டிருக்க முடியாது.”

ஜெயமோகன் இந்திரஜித்தின் நம்பகத்தன்மையை முற்றிலும் அழிப்பது என்று முடிவு பண்ணி விட்டார் என்று நினைக்கிறேன்: தோலுரிப்பது என்று வந்து விட்டால், மறைக்க வேண்டிய இடங்களில் மட்டும் கொஞ்சம் விட்டு வைக்க முடியுமா என்ன? அழிப்பது என்று ஆகிவிட்டது, அதன் பின் இரககம் காட்டுவதற்கு என்ன இருக்கிறது?

இந்த வாதத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால் அதை எப்போது செய்ய வேண்டும்? இந்திரஜித் போன்ற வளரும் கலைஞர்கள் இது போன்ற தாக்குதல்களிலிருந்து மீள முடியுமா?

ஒரு மனிதனின் உள்நோக்கங்கள், தனி மனித விருப்பு வெறுப்புகள் பற்றியெல்லாம் பேச வேண்டிய காலம் அவன் போன பின்னும் அவனது படைப்புகள் நிற்கும்போதுதானே தவிர, அவன் வாழும் காலம் அல்ல. பொதுவெளியில் பிரவேசிக்கும் ஒவ்வொரு கலைஞனது வாழ்வும் அம்பலத்தில்தான் வாழப்பட வேண்டும் என்றால், அவனது படைப்புகள் அந்த கலைஞனின் வாழ்வில் உள்ள நம்பகத்தன்மை, ஒழுக்கம் இவற்றைத் தொட்டே எடையிடப்பட வேண்டும் என்றால்- எத்தனை படைப்புகள் தேறும்? நல்ல படைப்பு என்பது தன்னளவிலேயே சிறந்ததாக தனித்து நிற்க வேண்டாமா?

ஆனால் ஒன்று: இதற்கும் விதிவிலக்குகள் இல்லாமல் இல்லை: அதே கல்கி இதழில் இந்திரா பார்த்தசாரதி எழுதுகிறார் (பக்கம் 62 ):

“ஒரு மிகப் பிரபலமான எழுத்தாளர், ராணுவ ஆட்சியை ஆதரித்துத் தொலைக் காட்சியில் பேசியது, ஒரு நாள் இரவு ஒளிபரப்பாகியது. அடுத்த நாள் காலை, அந்த எழுத்தாளர் தம் வீட்டு வாசற்கதவைத் திறந்ததும் திடுக்கிட்டார். அவர் எழுதிய புத்தகங்கள் அனைத்தும் வாசலில் குவியலாகக் கிடந்தன. அரசாங்கத்தை ஆதரித்து அவர் பேசியது பிடிக்காமல், எண்ணற்ற வாசகர்கள் அவர் எழுதியிருந்த நூல்களை, மூட்டை மூட்டையாக அவர்வீட்டு வாசலிலேயே எறிந்து விட்டுப் போயிருந்தார்கள்! வார்ஸா பல்கலைக்கழக ‘டாய்லெட்’டுகளிலும் அவருடைய புத்தகங்கள் கிடந்தன. ‘டாய்லெட் பேப்பெருக்கு”ப் பதிலாக அந்தப் புத்தகத் தாளை பயன்படுத்தலாமென்று அர்த்தம்.”

எனவே, ஒரு எழுத்தாளனின் எழுத்துக்கள் அவனது நம்பகத்தன்மையைப் பற்றுகோலாய்க் கொண்டும் நிற்கின்றன என்பதை ஏற்கத்தான் வேண்டும்- ஆனால் இவையெல்லாம் அதிதீவிரமான சிக்கல்களுக்கு உள்ளான சமூக நிலையில்தான் பொதுவெளிக்குள் நுழைய வேண்டும். “அவன் என்னைக் காட்டிக் கொடுத்தான்” “யாரோ சொல்லி அவன் என்னைப் பற்றி இப்படி எழுதுகிறான்” “அடியாள் வேலைக்குப் போனதால் அவன் இலக்கியம் பண்ணுகிற தகுதியை இழந்து விட்டான்” (சோரம் போனவர்களால் நேர்மையான படைப்புகள் தர முடியாது என்பது வேறு விஷயம்), இதுவெல்லாம் வலுவான காரணங்களாகத் தெரியவில்லை.

எப்போது இது போன்ற விவகாரங்கள் என்னைப் போன்ற மூன்றாம் மனிதர்கள் படிப்பதற்குரிய விஷயமாகிறதென்றால், ஜெயமோகனும் இந்திரஜித்தும் இன்னும் ஐம்பது வருடங்கள் கழித்தும் பேசப்படும்போது, இருவரது எழுத்துக்களும் மறு மதிப்பீடு செய்யப்படும்போது- இவர்களில் யார் யாரெல்லாம் தனது காலத்தின் தேவைகளை, தன்சார்பில்லாமல், நடுநிலையுணர்வு தவறாமல் தன் சந்ததிக்குக் காட்டிச் சென்றார்கள், என்ற கேள்வி வரும்போதுதான்- இந்தக் குப்பைகள் தூசு தட்டப்பட வேண்டும்.

அவை, பதிவு செய்யப்பட்டால்தானே கைக்குக் கிடைக்கும் என்ற கேள்வி வருகிறது: ஜெயமோகன் கவலைப்படவே வேண்டாம், அவரது எழுத்துக்கள் நிச்சயம் இன்னும் பல ஆண்டுகளுக்கு நிலைத்திருக்கும்: சொல்லப் போனால், விட்டுப் போன எழுத்துக்களைத் தேடி எடுத்து பிரசுரம் செய்யும் நிலைகூட வரலாம்: இது போன்ற விஷயங்களை அவர் அயலார் கண்ணில் படாத வண்ணம் மறைவாக ஒரு நாட்குறிப்பில் பதித்தால், யாருக்குத் தெரியும்?- அந்த நாட்குறிப்புகள் செழுமையான, வளமான தமிழகத்தில் ஏலம் விடப்பட்டு அவரது மகனை பெரும் கொடீஸ்வராகக்கூட ஆக்கலாம்.

அப்படி இல்லாமல் இதுபோல் பொதுவெளியில் ஒருத்தரது பின்புலத்தை மற்றவர் அம்பலமாக்குவது, நம் தமிழ் இலக்கியத்தை ஒரு கேடு கேட்ட, மீட்சிக்கு இடமே இல்லாத, குப்பைக் கிடங்கை நோக்கிய திசைக்கே இட்டுச் செல்கிறது: வளரும் எழுத்தாளர்கள் கூட “மொக்கை பதிவர்களின் , மொக்கை புத்தகம் – வரலாற்றை திரும்பி பாப்போம்“, என்பது போன்ற படைப்புகளை அதன் அபத்தத்தைக்கூட உணராமல் பதிப்பிக்க வழி செய்கிறது.

என்னைப் போன்ற அநாமதேயங்கள் இலக்கிய விதிகளை அறுதியிட்டுக் கூறும் தகுதி படைத்த பண்டிதர்களாகவோ, நல்ல இலக்கியங்களை உலகுக்கு அறிமுகப்படுத்தும் நாடாளும் கலைஞர்களாகவோ மேடையேறும்போது சிரித்துவிட்டுப் போவதுதான் சரியாக இருக்கும்: அநாமதேயங்கள் வேடம் கட்டும்போது, புனைவுகளைக் களைவதில் என்ன பயன் இருக்கப் போகிறது!

“இல்லை, இல்லை, தப்பாப் பேசறவன் எவனா இருந்தாலும் சரி, அவனையும் கிழிப்பேன், அவன் அம்மாவையும் கிழிப்பேன்”னு சொன்னால், தமிழ் மொழியின் உன்னத இலக்கியங்கள், அவற்றின் தீன ஒலிகள், எழுத்துச் சந்தையின் அடிதடிகளில், அவற்றை கட்சி கட்டி ஆதரிக்கிறவர்களின் ஆரவாரக் கேளிக்கையில் கேட்காமலே மறைந்து போகும். நல்லபடியாக எழுதுகிறவர்கள்கூட படிக்க ஆளில்லாமல், இலக்கியக் கலவரங்களின் வழியாகத்தான் கவனத்தை ஈர்க்க முடியும் என்று உப்புமா கிண்டி பிழைப்பு நடத்துகிற அவலம் நேரும். அதற்கான அறிகுறிகள் வலைதளங்கள் எங்கும் இன்றே தெரிகின்றன.

Advertisements

13 thoughts on “யாரைத் தோலுரிக்க வேண்டும்?

 1. “என்னைப் போன்ற அநாமதேயங்கள் இலக்கிய விதிகளை அறுதியிட்டுக் கூறும் தகுதி படைத்த பண்டிதர்களாகவோ, நல்ல இலக்கியங்களை உலகுக்கு அறிமுகப்படுத்தும் நாடாளும் கலைஞர்களாகவோ மேடையேறும்போது சிரித்துவிட்டுப் போவதுதான் சரியாக இருக்கும்: அநாமதேயங்கள் வேடம் கட்டும்போது, புனைவுகளைக் களைவதில் என்ன பயன் இருக்கப் போகிறது!”

  ஆஹா…என்ன ஒரு சிந்தனை?

  1. சிந்தனை என்கிற சொல்லை பயன் படுத்தி அந்த வரிகளுக்கு மரியாதை செஞ்சதுக்கு நன்றி, கிரி அவர்களே. ஆனா, அவசியமே இல்லாமல் கேள்விக் குறியைக் கையாண்டிருப்பது, டைபோன்னு நினைக்கிறேன். அந்த இடத்துல ஆச்சர்யக் குறி இருந்தா இன்னும் பொருத்தமா இருந்திருக்கும்.

  1. ஆஹா!
   ரெண்டாம் தடவை படிச்சு பாக்கும்போது நீங்க என்னவோ வேணும்னேதான், “என்ன ஒரு சிந்தனை?”ன்னு கேள்விக்குறி போட்டிருக்கிங்கன்னு சந்தேகம் தோணுது.
   இருக்கட்டும். வெச்சுக்கறேன்…
   உங்களுக்கும் பாட்டு இருக்குடீ…

 2. //…அந்த இரண்டு கவிதைகள் திரள்வதற்கு காரணமான சில சலனங்களைச் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்……என் தோழிகளில், 80 சதவிகிதம் பேர் தன் சொந்த குடும்பத்து ஆண்களின் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாகியிருக்கிறார்கள், எனக்கும் அந்த அனுபவம் உண்டு. source from http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html//

  லீணாவின் இந்தக் கருத்து பற்றி ஐயன்மீர் தங்களது கருத்தை அறிய ஆவல்.

  1. உங்க இடுகைக்கு நன்றி.

   முதல்ல ஒரு டிஸ்க்ளைமர்: ரெண்டு வாரம் முன்ன வரைக்கும் எனக்கு லீனாவைப் பத்தி எதுவும் தெரியாது. அவரு மேல கேஸ் போட்டிருக்காங்கன்னு படிச்சேன், ஆனாலும் அவரோட கவிதையைப் படிக்கத் தோணலை. கோயமுத்தூர் போயிருந்தபோது என்னோட சகோதரர் அதைப் படிச்சுக் காட்டினார். அந்த இரண்டு கவிதைகளைத் தவிர அவரோட வேற எந்த எழுத்தையும் நான் படிச்சதில்லை, அவரை பத்தி எதுவும் தெரியவும் தெரியாது.

   அதனால எனக்கு அவரோட கவிதைகளை விமரிசிக்கிற தகுதி கிடையாது: ஆனா அந்த இரண்டு கவிதைகளைப் படிச்ச வரையில, அதில கோபம் இருந்ததுன்னு உணர்ந்தேன், அறிவுப்பூர்வமா பேசறவங்க பெண்கள்கிட்ட கடைசியில எதிர்பர்ர்க்கிற விஷயம் இதுதானாங்கற ஆதங்கத்தை உணர்ந்தேன். சில சொற்பிரயோகங்களைத் தவிர்த்திருக்கலாம். ஆனா அந்தக் கவிதைகளின் பச்சைமிளகாகாரம் (Rawness) அந்த சொற்கள் இல்லாத பட்சம் இழக்கப்பட்டிருக்கும்.

   நான் anne sexton ங்கரவரோட கவிதைகளை ஓரளவுக்கு வாசிச்சிருக்கேன். அவரது சாயல் இவரிடம் கொஞ்சம் தெரியுது- நானறிஞ்ச ஒரே பெண்ணியல் கவிஞர் இவர் என்பதால் அப்படி இருக்கலாம் 🙂 விகிபெடியாவில அவரைப் பத்தி இப்படி எழுதியிருக்காங்க: “…her work also encompasses issues specific to women, such as menstruation, abortion, and more broadly masturbation and adultery, before such subjects were commonly addressed in poetic discourse.” இது அம்பது வருஷத்துக்கு முந்தைய கதை: இங்க நாம இந்த காலகட்டத்துலயும் இப்படிப் பட்ட கவிதைகளை ஜீரணிச்சிக்க முடியாதவங்களா இருக்கறது வருத்தத்துக்குரிய விஷயம்.

   மத்தபடி லீனாவோட அனுபவம் என்னங்கறது வேண்டாத ஆராய்ச்சி: அவர் அப்படி எழுதக் காரணமா இருந்தது இளம் வயதில் அவர் அனுபவித்த பாலியல் வன்முறைன்னு அவர் சொன்னாலும், அதை நாம கருதத் தேவை இல்லை. அவரது கவிதைகள் நின்னா நல்லக் கவிதையாத்தான் நிக்குமேத் தவிர, நல்ல தெரப்பியா நிக்கப் போறதில்ல. அப்படி ஒரு அசம்பாவிதம் அவரோட வாழ்க்கையில நடந்திருந்தா அது மிகுந்த துயரம் தரும் நிகழ்வு: அட் லீஸ்ட் இந்த சர்ச்சையை முன்னிட்டாவது சிறு குழந்தைகளுக்கு நேர்கிற இந்த கொடுமை பேசப்பட்டா பரவாயில்லை: http://www.aaets.org/arts/art31.htm (please read the section under myths ) ஆனா விவாதம் வேற பக்கம் போயிகிட்டிருக்கு.

   என்னைப் பொறுத்தவரை அவர் எடுத்துக் கொண்ட பொருளுக்கு, அவர் எழுதின முறை தப்பில்லை.

   உங்க டெஸ்ட்டுல நான் பாஸ் பண்ணிட்டேனா இல்லியான்னு தெரியலே, ஆனா என்னை அய்யன்மீர்னு வள்ளுவர் ரேஞ்சுக்கு உசத்தி நிக்க வெச்சதால நீங்க பாஸ் பண்ணிட்டீங்க!

   ஒரு வேண்டுகோள்: அனானியா இடுகை wordpressla போடாதிங்க: ஏதாவது ஒரு புனைப் பேராவது வெச்சுக்குங்க. எப்படியும் உங்க ஈமெயில் அட்ரஸ் என்னோட இன்பாக்சுக்கு வந்திருது. 🙂 இது wordpressla சகஜம்னு நினைக்கிறேன். தெரில.

   நன்றி.

 3. நான் ஜெமோ வின் பதிவை முழுவதும் படித்தேன். அபிலாஷின் பதிவு ரொம்ப நீளம் என்பதால் பாதிக்கு மேல் படிக்கவில்லை. ஆனால் இந்த எழுத்துச் சண்டைகளை தவிர்த்திருக்க வேண்டும் இருவரும். மாஜி குருநாதர் என்று சொல்லிக் கொள்கிறார் அபிலாஷ் ஆனால் குருவை கண்டபடி விமர்சனம் செய்கிறார். குரு என்றே வார்த்தைக்கு என்ன அர்த்தமோ?

  http://www.virutcham.com

 4. not sure if the comment was submitted. so for the second time,

  நான் ஜெமோ வின் பதிவை முழுவதும் படித்தேன். அபிலாஷின் பதிவு ரொம்ப நீளம் என்பதால் பாதிக்கு மேல் படிக்கவில்லை. ஆனால் இந்த எழுத்துச் சண்டைகளை தவிர்த்திருக்க வேண்டும் இருவரும். மாஜி குருநாதர் என்று சொல்லிக் கொள்கிறார் அபிலாஷ் ஆனால் குருவை கண்டபடி விமர்சனம் செய்கிறார். குரு என்றே வார்த்தைக்கு என்ன அர்த்தமோ?

  http://www.virutcham.com

  1. குரு என்கிற சொல்லை எல்லாரும் கண்டபடி பயன்படுத்தறதால அதோட அர்த்தமே கெட்டுப் போச்சுன்னு நினைக்கிறேன். உண்மையில ஒருத்தரை நாம குருவா ஏத்துக்கிட்டா அதுக்கு அப்புறம் மறு பரிசீலனைங்கர பேச்சுக்கே அர்த்தம் கிடையாது: கண்ணை மூடிக்கிட்டு அவரு செய்யறது தப்போ சரியோ அவரு பின்னாடி போக வேண்டியதுதான், நல்லதோ கெட்டதோ எல்லாம் கடவுள் செயல்னு ஏத்துக்க வேண்டியதுதான். எனக்குத் தெரிஞ்சவரை ஒரு சீடன் கடைத்தேறுவது அவனது குருபக்தியாலதானே தவிர குருவோட நம்பகத்தன்மையால கிடையாது. அதனாலதான் உன்னோட குரு திருடனா இருந்தாலும் அவரை கண்ணை மூடிக்கிட்டு நம்பினா கடவுள் உன்னை காப்பாத்துவாருன்னு சொல்லறாங்க. ஆனா இதுவெல்லாம் ஆன்மீக சாதகர்களுக்கான அறிவுரைன்னு நினைக்கிறேன்.

   பிக் பாக்கெட்டெல்லாம் “இன்னா குரு? கீசிடலாமா”ன்னு கேக்கற இந்த காலத்துல அந்த சொல்லை பயன்படுத்தாம இருக்கறதுதான் நல்லதுன்னு தோணுது.

   அபிலாஷ் அவரு தளத்துல மனமிரங்கர வகையில மன்னிப்பு கேட்ட அப்புறம் எனக்கே நான் எழுதினதைப் பத்தி கசப்பா இருக்கு. ஏன்தான் இந்த விஷயத்துல வாயத் தொரந்தோமுன்னு தோணுது. நமக்கும் கொஞ்சம் லொள்ளு இருக்குல்ல- அதுதான் கொலைச்சுப் பாத்தோம். இனி அடங்கிருவோமில்ல…

 5. Thanks to Jeyamohan the discussion drifted towards the phenomenal perversion of social practices of male gender. The minds of men now are the same to those who existed million or billion years back. There could not have been any rules regarding handling of men and women then. Only social compulsion made them stick to one partner. and the existing temptation to jump over the soft target was suppressed by the invented morals and their correlation with god, after death and so on.

  Now people dont fear god and they dont believe such storeis.. honesty is lack of opportunity. and media makes them come out of such moral ethics by their own act of vulgarism. now it is free to go. what best can you expect from such moral stripped human animals. full credit to cinemas and tvs.

  1. சாய், காலம் மாறிப் போச்சு. சாமி நம்பிக்கை எல்லாம் செத்துப் போக ஆரம்பிச்சிருச்சு- நீதி ஞாயம் இதுவெல்லாம் வீணாப் போனவின் கவலைன்னு வெளிப்படையாவே சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. ஒழுக்கத்தை நாங்களே தீர்மானிச்சுக்கறோம் நீங்க உங்க வேலையைப் பாத்துக்கிட்டு போங்கன்னு பயப்படாம சொல்லறாங்க. இதுக்கு யாரையும் நொந்து எந்த பிரயோசனமும் இல்லை. அவங்க பேச்சில இருக்கற நியாயத்தை எடுத்துக்கிட்டு நம்ம நியாயத்தை புரிய வெக்க முயற்சி பண்ணலாம் அவ்வளவுதான்- இதுக்கெல்லாம் ரகளை பண்ணிக்கிட்டு, சட்டம் போட்டுக்கிட்டு இருக்க முடியாது. எப்படிப் பாத்தாலும் வாழப் போறது அவங்கதான், நாம ஓரளவுக்கு மேல என்ன பண்ண முடியும்?

 6. நேற்று நான் இங்கு பின்னூட்டம் இட்டேன். submit ஆனா மாதிரியே தெரியலைன்னு மறுபடியும் இட்டேன். அப்போவும்ஒரு acknowledgement உம் வரலை. இப்போ பின்னூட்டத்தையும் காணலை. error எதுவும் வரவும்இல்லை.

  1. திரு விருட்சம், தப்பு என்னோடதுதான். வோர்ட்ப்ரஸ்ல எக்காரணத்தாலோ உங்க பின்னூட்டம் ஸ்பாம்ல மாட்டிக்கிச்சு. அதை கவனிச்சு நான் ஸ்பாம் இல்லைன்னு சொல்லியிருக்கணும், ஆனா இங்க அதிகம் பின்னூட்டம் வருவதில்லை என்கிறதால நான் அதை எல்லாம் அக்கறையா கவனிக்கறதில்லை. இப்போ அந்த இரண்டு கமெண்டையும் பதிவு பண்ணிட்டோம்னு நினைக்கிறேன்.
   அனேகமா முதல் தடவை மட்டும்தான் இப்படி நடக்கும்- இனி நீங்க போடற பின்னூட்டமெல்லாம் உடனே இந்த தளத்துல பதிவாயிடும்னு நினைக்கிறேன்.
   கமண்ட் பண்ணினதுக்கு நன்றிங்க.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s