ஜெனோவின் டைகாட்டமி: அண்டவெளிகள் உங்கள் உள்ளங்கையில்

நமக்கென்று ஒரு ப்ளாக் இருப்பதில் என்ன ஒரு வசதி என்றால் நாம் அடுத்தவர்களின் வலைதளத்தில் சொல்ல முடியாததை எல்லாம் ஒரு சுட்டி கொடுத்து விட்டு நம் ப்ளாகில் சொல்லி வைக்கலாம்- அதிலும் நம் ப்ளாகைப் படிப்பவர்கள் இருபது பேருக்கும் குறைவானவர்கள்,  அவர்களில் ஒருத்தர் கூட நமக்குத் தெரிந்தவர்கள் இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்- கவலையே இல்லை, மனதுக்குத் தோன்றியதை எல்லாம் கண்டமேனிக்கு எழுதிவிட்டு போய்க் கொண்டே இருக்கலாம்.

இதை எதற்கு சொல்கிறேனென்றால், நான் தினமும் படிக்கிற கூட்டாஞ்சோறு என்ற தளத்தில், மெட்ரோ என்ற கதை ஒன்று படித்தேன். நல்ல கதைதான், ஆனால் இன்னும் கொஞ்சம் உட்கார்ந்து யோசித்து எழுதியிருந்தால் அந்தக் கதையின் ஆழம் கூடியிருக்கும்- அந்தக் கதையை எழுதியவரை எனக்குத் தெரியாது, அதனால் அப்படி ஒரு எதிர்மறையான கருத்தை அங்கே சொல்ல தயக்கமாக இருந்தது. அதனால் என்ன, இங்கே வந்தாச்சு.

டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் உலகத்தரத்தில் இருக்கப் போகிறது என்ற செய்தியை அடிப்படையாக வைத்து கதையை எழுதியிருக்கிறார் பேக்ஸ்.  உலகத்தரத்தில் ஓடுகிற அந்த மெட்ரோ ரயிலில் ஒருத்தர்,  தான் இருப்பது பாரீஸா நியூ யாரக்கா சிங்கப்பூரா என்று தீர்மானிக்க முடியாமல் குழம்புகிறார். அந்த அளவில் கதை நன்றாக இருக்கிறது: குழம்புகிறவர், அவரது பின்னணி என்று எல்லாவற்றையும்  யோசித்து சரியாக அமைத்திருக்கிறார்.

ஆனால் இந்த சனியன் பிடித்த ஜெனோவின் டைகாட்டமி அந்தக் கதைக்குள் புகுந்து கதையைக் கெடுத்து விட்டது. இந்த மாதிரி விஷயங்கள் ஒரு கதையில் வருகிறதென்றால், அது கதையில் பிணைந்திருக்க வேண்டும்.

முதலில் ஜெனோவின் டைகாட்டமி: ஒன்றுக்கு அப்புறம் ரெண்டு வருகிறது இல்லையா? என்ன, வருகிறதா? எப்படி வருகிறது! அது வரக்கூடாதே, என்கிறது ஜெனோவின் டைகாட்டமி.  ஆமாம் சார், 1, 1.1, 1.2, 1.3, 1.4, 1.5, 1.6… என்று எண்ணிக்கொண்டே வாருங்கள், ரெண்டு வந்ததும்- நம்மில் ஒருத்தர் உயிரோடிருந்தால் என்னிடம் வந்து சொல்லுங்கள் என்கிறது இது.

இதையே வேறு மாதிரி சொன்னால், நீங்கள் ஒரு அடி எடுத்து வைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அது எப்படி உங்களால் வைக்க முடியும்?- முடியாது என்கிறேன் நான். முதலில் நீங்கள் பாதி தூரத்தைக் கடக்க வேண்டும் இல்லையா? அதற்கும் முன்பாக அதில் பாதி, அதற்கும் முன்பாக அதில் பாதி,அதற்கும் முன்பாக அதில் பாதி,அதற்கும் முன்பாக அதில் பாதி,அதற்கும் முன்பாக அதில் பாதி,அதற்கும் முன்பாக அதில் பாதி- (1/2, 1/4, 1/8, 1/16, 1/32, 1/64…)- இப்படி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறித்தானே முதல் அடியை வைத்தாக வேண்டும்? ஆனால் இந்த சீரிஸ் இன்பினிட்டாக இருப்பதால், உங்களால் ஒரு அடி கூட நகர முடியாது என்பதை அறிவியல்பூர்வமாக சொல்கிறேன் நான். இதற்கு நின்ற இடத்திலிருந்தே பதில் சொல்லுங்கள், என் சட்டையைப் பிடித்து திட்ட நினைத்தால், அது முடியாது: உங்கள் கையிலிருந்து என் சட்டை அறிவியல் விதிகளின்படி எட்ட முடியாத தொலைவில் இருக்கிறது என்கிறது ஜெனோவின் டைகாட்டமி- கைதான் வைக்க முடியாது, திட்டலாமென்றால் உங்கள் நாக்கு  மேல் அண்ணத்தைத் தொட எத்தனை தூரம் பயணப்பட வேண்டும் தெரியுமா? அதற்குள் த்ரேதா யுகம் வந்து விடும்.

ஆனால் இது எல்லாம் நடப்பதில்லை. பகுத்தறிவாளர்களுக்கு ஏமாற்றமளிக்கிற வகையில், இந்த உலகம் எக்காரணம் தொட்டோ உருவாகி, எக்காரணம் தொட்டோ நிலைபெற்று, எக்காரணம் தொட்டோ நம் புலன்கள் வழி புலப்படுகிற மாதிரி- நமது லௌகீக நியாயங்கள் கணித மேதைகளுக்கும்கூட அல்வா கொடுத்து விடுகின்றன.

இந்தக் கதையில் ஜெனோவின் டைகாட்டமி பங்கு பெறவில்லை என்று ஏன் நான் வருத்தப் படுகிறேன் என்று புரிகிறதா உங்களுக்கு? இதன் சாத்தியக்கூறுகளை பயன்படுத்தாமல் தவறி விட்டார் பேக்ஸ் என்பதை நினைக்கும் போது அழுகையே வருகிறது- அதைக் கொண்டு, நம் நாடு உலகத் தரத்தை அடைய எத்தனை யத்தனித்தும் அது இயலாமல் போகிறதை சொல்லியிருக்கலாம், அல்லது நியாயப்படி நடந்திருக்ககூடாதேன்றாலும்- ஒரு அசுரப் பாய்ச்சலில் நாம் அதை எட்டி, வெள்ளைக்காரன், சைனாக்காரன் எல்லோரையும் பின்னுக்குத்  தள்ளிவிட்டு முன்னால் ஓடிப் போய் விட்டோம் என்று கூட சொல்லியிருக்கலாம்- அல்லது அந்த பிரின்ஸ்டன் ப்ரொபசரை இரண்டு ஸ்டேஷன்களுக்கு மத்தியில் உலகம் அழியும்வரை பயணப்பட வைத்திருக்கலாம் (என்னை மாதிரி, தன பிள்ளை எதைக் கேட்டாலும், “நாளைக்கு, நாளைக்கு” என்று ஒத்திப் போடுகிற அப்பாவாய் அவன் இருந்தால் அது நியாயமான தண்டனையாகக் கூட இருக்கும்) .

இந்தக் கதையில் ஜெனோவின் டைகாட்டமி தன் வேலையைக் காட்டுகிறமாதிரி திருத்தி எழுதுவாரா பேக்ஸ்? (எனக்கு அந்த நம்பிக்கை இல்லை, இதுவரை நான் சொன்னதை யாரும் கேட்டது கிடையாது).

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s