முரண்நகை என்றால் என்ன?

நான் ராவணன் படத்தைப் பார்க்கவில்லை. பார்க்கிற எண்ணமும் இல்லை. கதை ஏற்கனேவே தெரியும், பாட்டெல்லாம் கேட்டாகி விட்டது, மணி சார் படத்தில் காமெடி என்று எதுவும் பிரமாதமாக இருக்காது: சன்னில் நாலு சீன, கலைஞரில் நாலு சீன், விஜயில் ரெண்டு ராஜில் ரெண்டு என்று ஒரு மாசத்தில் ஏறத்தாழ முழு படமும் பார்த்து விடலாம் என்று இருக்கிறேன்.

படம் பார்த்தவர்கள் மத்தியில் பலத்த பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று நினைக்கிறேன். அல்லது பதிவு எழுத வேண்டி அப்படி உணர்ச்சி வசப்பட்ட மாதிரி நடிக்கிறார்களா தெரியவில்லை.

நான் படித்ததில் ரசித்த பதிவுகள்:

ராவணனைப் பாராட்டியவர்களில் கேபிள் சங்கர் எழுதி இருந்தது நன்றாக இருந்தது. ஆனால் அவர் கூட நன்றாக இருக்கிறது என்று எழுதிய ஏறத்தாழ எல்லாரையும் போல, இந்தப் படத்தின் குறைகளை பதிவு செய்யவே செய்கிறார்.

எதிரிடை பார்வைகளில், பிச்சைப்பாத்திரத்தில் எழுதியவரது பதிவுதான் சிறப்பித்து சொல்கிற அளவுக்கு சாரமுள்ளதாகத் தெரிந்தது. திட்டி எழுதியவர்களில் பெரும்பாலோர் உருப்படியாய் ஒன்றுமில்லை என்கிற அளவுக்குப் போய் விட்டார்கள்: இவர் இப்படத்தில் ரசிக்கும்படியாக இருக்கிற விஷயங்களையும் மனமாரப் பாராட்டிக் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த படத்தை சாதாரணமான கதையாகப் பார்க்காமல் ராமாயணம்- வீரப்பன்- பழங்குடிகளின் போராட்டம்- – மாவோயிசம் போன்ற திரைக்கு அப்பாலிருக்கிற விஷயங்களில் தங்கள் நிலைப்பாடு எப்படி இருக்கிறது என்பதை வைத்தே நிறைய பேர் படத்தை அணுகி இருக்கிறார்கள்.

பிச்சைப்பாத்திரத்தில் பளிச்சென்று எழுதுகிறார்- “ஓர் உண்மையான கலைஞனுக்கு சமூகப் பிரச்சினைகள் குறித்த இருக்க வேண்டிய அடிப்படை கோபமும் அறவுணர்ச்சியும் பொறுப்புணர்வும் மணிரத்னத்திடம் இல்லை.”

இதை விட அழகுணர்ச்சியும் கலையுணர்வும் முக்கியம் என்று நினைத்தால் நீங்கள் மணிரத்னம் படங்களை விரும்புபவராக இருப்பீர்கள்.

ஆனால் நான் படித்தவரை இரண்டு விமரிசனங்கள், சித்தாந்த சுமை இன்றி கதையை கதையாக அணுகி இருக்கின்றன- தமிழில் எழுதப்பட்ட கருத்துகளைவிட ஒரு படி சிறப்பாக இவர்கள் செய்திருக்கிறார்கள்.

பரத்வாஜ் ரங்கன் எழுதியிருப்பது படிக்கப்பட வேண்டிய ஒரு விமரிசனம். இந்த திரைப்படத்தின் பல நுண்ணிய விஷயங்களைப் பேசுவதோடல்லாமல், அவர் திரைக்கதை குறித்த இந்த பிரமிக்க வைக்கும் பார்வையை முன் வைக்கிறார்-

“…இருந்தாலும் இந்தக் கதையோட்டத்தின் மிக சுவாரசியமான விஷயம், முதலிலேயே சொல்லி விடாமல் நமது முந்தைய அனுபவத்துக்கு மறு வடிவம் தரும் வகையில் தகவல்களை நிறுத்தி வைத்து பின்வரும் கட்டங்களில் உண்மையை அம்பலப்படுத்துவதுதான். பீராவை முதல் தடவை நாம் பார்க்கும்போது அவனது தொண்டையில் பிளாஸ்திரி இருக்கிறது. பின்னர்தான் நமக்குத் தெரிகிறது இந்த காயம் மிக அண்மையில் நிகழ்ந்த ஒரு துயரத்தின் அடையாளம் என்று, இது வார்த்தைகளால் சொல்லப்படுவதில்லை. ஒருவருக்குத் தங்கக் கடிகாரம் கொடுக்கப்பட்டு அவன் கை பிற்சமயம் துண்டிக்கப்ப்படும்போதும், ஒரு போலீஸ்காரருக்கு மொட்டை அடிக்கப்பட்டு அவர் சித்திரவதை செய்யப்படுகிறபோதும், அவர்களுக்காக நாம் கோபப்படுகிறோம்- பின்னர் தெரிய வரும் சம்பவங்கள்தான் அவர்களுக்கு அந்த கதி வருவது நியாயமே என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது…. இந்தப் படத்தில் நமது உணர்ச்சிகள் எப்போதும் திகைத்து நிற்கின்றன. கண்மூடி கண் திறப்பதற்குள் ஹீரோக்கள் வில்லன்களாகி விடுகிறார்கள், வில்லன்கள் எந்த பாதிப்புக்கும் ஆளாகாத ஹீரோத்தனத்தை இருப்பில் வைத்திருக்கிறார்கள்….”

ஒரு சமயம் மணிரத்னம் இந்தப் பார்வையில் படத்தைப் பண்ண நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை: ஹீரோக்களுக்குள்ளும் ஒரு வில்லன் இருக்கிறான், வில்லனுக்குள்ளும் ஒரு நல்லவன் இருக்கிறான் – அல்லது நீங்கள் நல்லவன் என்று நினைக்கிறவர்கள் கெட்டதும் செய்யக்கூடியவர்களே, கெட்டவர்கள் நல்லது செய்யாதவர்களல்ல: உங்கள் தீர்ப்புகளை எல்லா உண்மைகளும் தெரிந்தபின் மாற்றி எழுத வேண்டி வரும். இந்த மாதிரி எதுவோ ஒன்று.

ஆனால் படத்தைப் பார்த்தவர்கள் எழுதுவதைப் பார்த்தால் இப்படி ஏதும் கதையில் இருப்பதாகத் தெரியவில்லை- ஒரே ஒருவரைத் தவிர. Hawkeye.

பெயருக்குத் தகுந்தாற்போல் அவர் இந்தப் புள்ளியை பச்சக் என்று பிடித்து விட்டார்: அவர் கேட்கும் கேள்வி- முன்னொரு முறை வங்கி ஒன்றைக் கொள்ளை அடிக்கும்போது ஹேமந்த்தின் பெண்ணைச் சூறையாடி இருபது போலீஸ்காரர்களைக் கொன்றிருக்கிறான் பீரா என்பதை பிற்கட்டக் காட்சிகளில் ஒன்றில் சொல்லியிருக்கக் கூடாதா?

அந்த மாதிரி படம் எடுத்திருந்தாரானால் கதையின் கனம் கூடி இருக்கும் (ஆனால் கலக்ஷன் கம்மி ஆகி இருக்கும்!).

அப்படியும் சொல்ல முடியாது: மகாபாரதத்தையும் ராமாயணத்தையும் வேலை மெனக்கெட்டு நாம் இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கான காரணம் கதை மற்றும் பாத்திரங்களின் சார்பில் கலந்து நிற்கிற நியாய-அணியாயக்  கூட்டணிதானே!

திரைப்படமாகட்டும் கதையாகட்டும்- தன்னம்பிக்கை இருக்கிற கலைஞன் முரண்பாடுகளைக் கண்டு அஞ்சமாட்டான்: வலுவான காரணங்கள் இருந்தால் முரண்பாடுகள் குழப்பம் செய்யாது.

எப்படியோ- பார்க்காமலேயே, படித்துப் பார்த்த அனுபவத்தை வைத்துக்கொண்டு நானும் ஒரு ராவணன் பதிவு பண்ணி விட்டேன்- என் பொழுதும் உங்கள் பொழுதும் கெட்டதுதான் மிச்சம். வேலையைப் பாப்போம்.

முரண்நகை என்றால் என்ன?” இல் 5 கருத்துகள் உள்ளன

 1. ப.ரங்கன் கருத்து படம் பத்தின அட்டகாசமான dimension தருது. நன்றி.

  மேலும் சார், இது போங்கு ஆட்டம். காசு குடுத்து படம் பாத்துட்டு மணி சாரை எவ்வளவு வேணா திட்டுங்க, நான் ஒப்புத்துக்கறேன். இப்படி பார்க்காமலேயே கேபிள் பேசறது, பிச்சைப் பாத்தரத்துல இருக்கறத வெச்சு ஒரு மனுஷனோட தன்னம்பிக்கை பத்தி பேசப்படாது.

  படத்தோட கலெக்ஷன் பத்தி யோசிக்கற மனுஷனா இருந்தா அவரு ஷங்கர் லெவலுக்கு டூ பீஸ்ல ஸ்ரேயாவை ஆட விட்டிருப்பாரு. அவரோட படமாக்கும் முறை பற்றி பேசுங்க ஒத்துக்கறேன்,

 2. ஐ, ஆசையைப் பாரு!!!

  திட்டறதுன்னு முடிவு பண்ணியாச்சு, அப்புறம் அதுக்கு காசு வேற குடுக்கணுமாமே? நல்லா இருக்கு உங்க நியாயம்.

  ஆமா, டூ பீஸ்ல ஆட விடுறது ஒரு தப்புன்னு சங்கரைத் தாக்குறீங்களே- அவருக்கு இருக்கற துணிச்சல்ல பாதி மணி சாருக்கு இருந்திருந்தா இன்னிக்கு அவரு வீட்டு கப் போர்டில ஆஸ்கார் கோப்பைகள வெக்க இடம் இல்லாம அவரோட மனைவியின் சித்தப்புக்கு ஒண்ணு ரெண்டு “இந்தா வெச்சிக்கோ!”ன்னு இரவல் தந்திருப்பார். இதுதான் உண்மை.

  1. சார், மணிக்கு தைரியம் இல்லைன்னும் ஷங்கருக்கு தைரியம் இருக்குன்னும் சொல்லாதீங்க. மணியோட தைரியம் பத்தி நான் பத்தி பத்தியா எழுதுவேன். ஆனா அது உங்க கருத்தை மாற்ற உதவாமல், இணையக் குப்பையை நாம் கூட்ட மட்டுமே உதவும்.

   ஷங்கர் என் பார்வையில தன் கதை மேல நம்பிக்கை, தைரியம் இல்லாத ஒரு பயந்தான்கொள்ளி இயக்குனர். அதனாலதான் அவர்க்கு உசிலம்பெட்டி பெண்குட்டி போன்ற பாடல் திணிப்புகள் அவரோட எல்லா சீரியஸ் படங்கள்லயும் தேவைப்படுது. தன ஸ்கிரிப்ட் மேல நம்பிக்கை இல்லாத மனுஷன் அவரு.

   1. ஜி, மணி சாரோட தைரியம் பத்தி உங்க ப்ளாகுல ஒரு ரெண்டு பதிவு பண்ணுங்களேன். நானும் தெரிஞ்சுக்கறேன்.

    உசிலாம்பட்டி பெண்குட்டி என்கிற பாட்டு கதைப்படி வருகிற பாட்டு சார்- அதை ஒண்ணும் அவரு திணிக்கல- “மனச சேலைக்குள் மறைப்பது, ஒளிப்பது / அதுதான் பெண்ணின் குணம்” என்ற வைர வரிகளுக்காக மட்டும் அந்தப் பாட்டை எந்தப் படத்திலும் சேக்கலாம் சார், தப்பில்லை.

    தன்னோட ஸ்க்ரிப்ட் மேல நம்பிக்கை இல்லாம அவரு என்ன ஹால்லிவுட் படத்துல இருந்தா உருவறாரு? நூறு பெர்சென்ட் லோக்கல் சார்.

    யாரைப் பத்தி வேணா என்ன வேணா சொல்லுங்க, ஆனா சங்கருக்குத் தன் ஸ்க்ரிப்ட் மேல நம்பிக்கை இல்லைன்னு மட்டும் சொல்லிராதீங்க.

    அவரு படம் எடுக்க ஆராம்பிச்ச அப்புறம் அந்த கதையை வெச்சு தமிழில மத்தவங்க அவசர அவசரமா மூணு படம் பண்ணினாலும் அவரு நின்னு நிதானமா மூணு வருஷம் அதை படம் பண்ணுறாரே, அதுதான் சார் தைரியம், தன்னம்பிக்கை.!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.