வன்னெஞ்சுக்கு இடம்தரும் சூழல்

அண்மையில் ஒரு பதிவைப் படித்தபோது எனக்கு situationism குறித்து நான் முன்னொரு சமயம் வேறிடத்தில் செய்த வேறு ஒரு பதிவு நினைவுக்கு வந்தது. அதில் கொஞ்சம் தையல் வேலை செய்து புது சட்டை மாதிரி மீள்பதிவு செய்கிறேன்.

நான் பள்ளிக்குப் போகிற காலத்திலேயே படித்து, என்னை மிகவும் பாதித்த புத்தகங்கள் இரண்டு: ஒன்று ஜார்ஜ் ஆர்வெல்லின் எழுத்துக்கள். இரண்டாவது மில்க்ராம் செய்த ஆய்வு குறித்த ஒரு புத்தகம். அதற்கப்புறம் எத்தனையோ புத்தகங்கள் படித்தாயிற்று- ஆனால் ஆர்வெல் – மில்க்ராம் இவர்களுக்கு இணையாக இன்னொரு பாதிப்பை சொல்ல முடியாது (ஆன்மீக பாதிப்புகளைப் பற்றி இங்கு பேசுவதில்லை என்று இருக்கிறேன்).

“அவனோட நிலைமை அப்படி” என்று சொல்கிறோம், இல்லையா? அதுதான் situationism. சூழியல் என்று சொல்லலாம், ஆனால் அதை சுற்றுப்புற சூழலுக்கு பயன்படுத்துகிறார்கள். நாம் அவனோட நிலைமை அப்படி என்றே வைத்துக் கொள்வோம், எந்த அகராதியையும் புரட்ட வேண்டாம், கூகுளாண்டவரை எழுப்ப வேண்டாம்- சொன்னவுடனேயே புரிகிறது இல்லையா?

புரியாவிட்டால் இனி படியுங்கள்: இது பிலிப் சிம்பார்டோ (Philip Zimbardo) என்பவர் எழுதிய வன்செயலுக்கு இடம்தரும் சூழல் என்ற கட்டுரையிலிருந்து உருவியது-

சர்வாதிகாரி ஆவது எப்படி?- பத்து குறிப்புகள்.

௧.   பிணைக்கக்கூடிய வகையில் ஒரு ஒப்பந்தத்தை முதலில் செய்து கொள்ளுங்கள்: சட்டத்தை நினைவுறுத்தும் சொற்கள் இருந்தால் சிறப்பு. விதி ஒன்று, விதி  இரண்டு என்று ஒப்புதல் வாங்கிக் கொள்ளுதல் நல்லது.

௨.  உங்கள் குழுவில் இருப்பவர்களுக்கு பணி கொடுங்கள்: உன்னுடைய பங்கு/ ரோல் இது என்பதை தெளிவாய் சொல்லுங்கள்.

௩. விதிகளைப் பின்பற்றியாக வேண்டும் என்பதை வலியுறுத்துங்கள்: நீங்கள் எதை வேண்டுமானாலும் சட்டம் என்று சொல்லலாம், நீங்கள் நினைத்தபடி அதை வளைக்கலாம்: ஆனால் இதுதான் சட்டம், இதற்கு அனைவரும் அடிபணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால் உங்கள் அடியாட்கள் கேள்வி கேட்காமல் நீங்கள் வைத்த சட்டத்தை மதித்து நடப்பார்கள்.

௪. இனிய இருக்க இன்னாத சொலல்: அவனை தண்டிக்கப் போகிறோம் என்று வெளிப்படையாக சொல்லாதீர்கள்- அவனைத் திருத்தப் போகிறோம் என்று சொல்லுங்கள். நீங்கள் செய்கிற அக்கிரமங்களுக்கு அறச்சாயம் பூசுங்கள்.

௫. உங்கள் தொண்டர்கள்/ அடியாட்கள்/ போர்ப்படை  வீரர்கள்/ ஊழியர்கள்/ கட்சிக்காரர்கள்: இவர்களது செயல்களுக்கு இவர்களைப் பொறுப்பாக்காதீர்கள். அது தப்பு. எது செய்தாலும் அதற்காக இன்னொருத்தர் மேல் பழி போடுகிற வழி திறந்தே இருக்க வேண்டும்: அவர் சொன்னார், அதனால்தான் நான் செய்தேன் என்று அவர்கள் நினைக்க இடம் இருக்க வேண்டும். அல்லது, சட்டம் அப்படி, நான் என்ன செய்ய முடியும்? இப்படி. தனிமனிதனாக தாங்கள்  பொறுப்பேற்க வேண்டிய அவசியமில்லாத, மனசாட்சியை உறக்கத்தில் ஆழ்த்துகிற செயல் சுதந்திரத்தை, அடிமை எண்ணத்தின் அல்டிமேட் நீட்சியை அவர்களுக்கு அளவில்லாமல் கொடுங்கள்.

௬. எடுத்த எடுப்பிலேயே “அந்த ஆளின் தலையைக் கொண்டு வா!” என்று சொல்லாதீர்கள். “அந்தப் பாப்பாவிடமிருந்து சாக்லேட்டை வாங்கி வா பார்க்கலாம்- உனது சாமர்த்தியத்தை நான் தெரிந்துகொள்ள வேண்டும்,” என்று சொல்லுங்கள். குழந்தையை வளர்க்கிற மாதிரி குற்றம் செய்யத் துணியும் மனமும் கொடுஞ்செயல்களில் மெல்ல மெல்லத்தான் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

௮. உங்கள் குழுவிலிருந்து/ கட்சியிலிருந்து/ அமைப்பிலிருந்து சுலபமாக  வெளியேறுகிற வசதியைக் கொடுக்காதீர்கள். அதற்கு பதிலாக இயன்ற அளவு கருத்து சுதந்திரத்தைக் கொடுங்கள்.  அவர்களது புலம்பல்கள், அறக்கோபம் வெளிப்பட்டு அடங்கிவிடும். “நீ உன் மனதில் உள்ளதை ஒளிவு மறைவின்றி எந்த அச்சமுமில்லாமல் பேசலாம். அந்த சுதந்திரம் உனக்கு உண்டு. ஆனால் நீ செயல் என்று வந்தால் நம் சட்டங்களுக்கு/ விதிகளுக்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும்”. இதுதான் சுதந்திர உணர்வுள்ள அடிமைகளைக் கட்டுப்படுத்தி வைக்க சிறந்த வழி.

௯. உங்கள் மனதில் எவ்வளவு வன்மம் வேண்டுமானாலும் இருக்கலாம்: ஆனால் ஆரம்ப கால கட்டத்தில் மட்டுமாவது பேசுவதற்கும் பழகுவதற்கும் இனியவராகவே நீங்கள் இருங்கள். பிற்காலத்தில்  கொஞ்சம் கொஞ்சமாக இன்னும் கொடிய  கொடுஞ்செயல்களில் நீங்கள் ஈடுபடும்போது யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்- என்ன, நேற்றைக்கு இருந்ததைவிட இன்று கொஞ்சம் கடுமையாக இருக்கிறீர்கள், கடுமையான சட்டங்கள், கடுமையான தண்டனைகள், அவ்வளவுதான். என்ன செய்வது,  வேறு வழி இல்லை, இல்லையா?

௧௦. மெச்சத்தகுந்த ஒரு கதைக் குறிப்பு அவசியம். நாம் செய்யப்போவது கொலை, கொள்ளை, ஏமாற்று வேலை, பொய், பித்தலாட்டம், களவு என்றெல்லாம் சொன்னால் யார் நம் பின்னால் வருவார்கள்? நாம் அழுகிப் போன சமுதாயத்தை சீர்திருத்தப் போகிறோம்/ சமுதாய சீர்கேடுகளிலிருந்து உங்களை காப்பாற்றப் போகிறோம் , ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்யப்போகிறோம்/ உங்களுக்கு இருப்பதையும் கெடுக்க வருகிறார்கள்- அவர்களிடமிருந்து உங்களைப் பாதுகாக்கப் போகிறோம், அநீதிகளைக் களைந்துவிட்டு நீதியை நிலை நாட்டப் போகிறோம்/ சட்டம் ஒழுங்கு கெட்டு விடும், இழந்த உரிமைகளை திரும்பப் பெறப் போகிறோம்/ நம் உரிமைகள் பறிபோய் விடும், இந்த மாதிரி. புரட்சி, நீதி, நியாயம், சட்டம், சமத்துவம், உரிமை, சுதந்திரம், விடுதலை- இவை கொடுங்கோலர்களுக்கு துப்பாக்கியை விட வலுவான ஆயுதங்கள்.

Situationsim என்றால் என்ன என்று புரிகிறதா?  சொற்கள் நம்மை சுற்றி எழுப்பப்பட்ட வேலிகள்: வேலிகளுக்குள் நாம் பத்திரமாக இருப்போம் என்று உடன்படுவோம்- வெளியேற முனையும்போதுதான் தெரியும் வேலிகள் பாதுகாப்பு வளையங்கள் மட்டுமல்ல, சிறைக்கூடங்களாகவும்  இருக்கும் என்பது.

எந்த நிலையிலும், “என் நிலைமை அப்படி,” என்று சொல்லாதீர்கள்: உங்கள் சிந்திக்கும் திறனை எவர் காலடியிலும் பலியிடாதீர்கள்: அறம் என்பது மனிதனாக வாழ்வது- எக்காரணம் கொண்டும் மற்றவர்களை மிருகமாக, எண்களாக, லேபல்களாகக்   காணாதீர்கள். மற்றவர்களும் நம்மைப் போன்றே நிறை குறைகள் இருக்கிற மனிதர்கள்தான் என்ற உணர்வு விரவி இருக்கிற சமூகத்தில் கொடுமைகளுக்கு இடமிருக்காது, கொடுங்கோலர்கள் வளர முடியாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.