ஸ்லோவேனியா வஸ் இங்கிலாந்து

ஸ்லோவேனியா ரசிகர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்- அதே நேரம் உங்களிடம் நான் மனப்பூர்வமாக மன்னிப்பும் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நன்றாக நினைவிருக்கிறது- எங்கள் வீட்டில் தொலைபேசி இணைப்பு இல்லை- BSNL க்யூவில் நின்றுக் கொண்டிருந்தோம். கைபேசிகள் இன்னும் புழக்கத்துக்கு வராத காலம். அன்று ஒரு உபாதைக்காக சக்திவாய்ந்த மருந்து ஒன்றை சாப்பிட்டு விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தேன்- முன்னிரவா பின்னிரவா என்று தெரியாது- யாரோ என்னை எழுப்பி பக்கத்து வீட்டுக்குக் கொண்டு போனார்கள்: தொலைபேசி அழைப்பு. என்ன சொல்கிறார்கள் ஏது விஷயம் என்பது எதுவும் மனசில் பதிவு ஆகவில்லை. “அப்படியா, சரி” என்று சொல்லிவிட்டு திரும்ப வந்து, விட்ட இடத்திலிருந்து தூக்கத்தைத் தொடர்ந்தேன்.

காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு அலுவலகத்துக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்- எட்டு மணி அளவில் மீண்டும் போன்.

“ஏண்டா, பாட்டி போயிட்டா, நீ அங்க என்ன பண்ணிக்கிட்டிருக்கே- எப்போ வரப்போறே?” என்று கேட்கிறான் சாய்.

“பாட்டி போயிட்டாளா? எப்போ? என்னாச்சு?” என்று நான் கேட்கிறேன்- அதிர்ச்சியில் என் நாக்கு மட்டும்தான் உறையவில்லை.

“என்னடா தெரியாத மாதிரி உளர்றே? நேத்து ராத்திரிதானே சிவா உன்கிட்டே போன் பண்ணி அவன்கூட டாக்ஸில உன்னையும் வரச்சொல்லிக் கூப்பிட்டான்! ஏன் அவன்கூட வரலே? எப்போதான் வரப்போற?”

“அப்படியா, சரி” என்று சொல்லிவிட்டு வீட்டைப் பூட்டி விட்டு அலுவலகம் சென்று விட்டேன். இனி நான் போய் என்ன ஆகப் போகிறது?- கோவை போவதற்குள் எல்லாம் முடிந்துவிடும்.

பத்தாம் நாள்தான் போனேன்- அப்போது வேறு ஒருத்தருக்காக நாங்கள் இருவரும் வேறு ஒரு இடத்தில் வெகு நேரம் காத்திருக்க வேண்டி வந்தது. அந்த சமயம் பார்த்து சாய் வெகு கோபமாக, “எவன்டா இவன்! செத்ததுக்கு சொல்லி விட்டா பத்துக்குதான் வருவான் போல!” என்று வைதான். வேண்டியதுதான் என்று தலையைக் குனிந்து கொண்டேன்.

நேற்று என்ன நடந்தது என்றால், நான் ஏழரை மணி அளவில் சீரியல் பார்த்துக்கொண்டிருந்த என் மனைவியிடம் முன் கூட்டியே மாட்ச் பார்க்க ஏற்கனேவே நான் வாங்கி வைத்திருந்த அனுமதியை நினைவுறுத்தி ரிமோட்டைக் கைப்பற்றி, போகோ பார்க்க வந்த என் மகனை, “என்னடா போகோ? போய் படி! எப்ப பாத்தாலும் கார்டூன்! இப்படி இருந்தா எப்படிடா உருப்படுவே? ட்வெல்வ் டேபிள்ஸ் வரைக்கும் எல்லாமே லீவு விட்டத்துல மறந்து போச்சு. எல்லாத்தியும் த்ரீ டைம்ஸ் எழுது!” என்று அடாவடியாக துரத்தி விட்டதில் அவன் முனகிக் கொண்டே வெளியே விளையாடப் போய் விட்டான். அப்பாடா, எதிரிகளை விரட்டி விட்டாச்சு,, இனி என்ஜாய் என்று ரெடியாக ரெண்டு கை மிக்சர், பாதாம் அல்வா, சோன் பப்டி எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு டிவியை ஆன் செய்து விட்டு கணினியில் ரீடரை திறக்கிறேன், கிரிக்கெட் தவிர தளத்தில் திரு லலிதா ராம் பிழைக்குமா பிரிட்டன்? என்று லைவ் ப்ளாக் செய்ய ஆரம்பித்துவிட்டார்.

சரி ஒரு கமண்ட்டைப் போட்டு வைப்போம் என்று அங்கு போனேன்.

லைவ் ப்ளாகிங்கில் என்ன ஒரு கொடுமை என்றால் நீங்கள் ரெப்ரெஷ் செய்தால்தான் அப்டேட் ஆகும். இன்னொன்று, பதிவு ஒரு ட்ராக் நீங்கள் செய்கிற கமென்ட் அதற்கு பதில் என்பது ஒரு ட்ராக் என்று சம்பந்தமில்லாமல் போகும். இது என்னடா தொல்லை, என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

அந்த சமயம் பார்த்து சாத்தான் “கூகுள் வேவ்! கூகுள் வேவ்!” என்று மண்டைக்குள் ஓதியது- நிச்சயம் அது சாத்தானாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏற்கனேவ கூகுள் வேவின் அருமை பெருமைகளை ஒரு நண்பரிடம் தீவிரமாகப் பேசப் போய் அது வாக்கு வாதமாக தடித்து எங்கள் நட்பு முறிந்தது. அந்த அனுபவம் நினைவுக்கு வந்திருக்க வேண்டாமா? வரவில்லை.,

கூகுள் வேவில் லைவ் ப்ளாகிங் செய்து அதை வலை தளத்தில் எம்பெட் செய்கிற அருமையான வசதி இருக்கிறதே, அதை விட்டு விட்டு இவர் ஏன் திப்பு சுல்தான் காலத்தில் இருக்கிற மாதிரி வர்டுபிரஸ்ஸில் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருக்கிறார், என்று கிளம்பியது சனியன்.

வலையை அங்கு இங்கு அலசி எப்படி வேவில் லைவ் ப்ளாக் செய்யலாம், அதை எப்படி எம்பெட் செய்யலாம் என்பது வரை எல்லாம் கண்டு பிடித்து விட்டேன்- இடையில் என் தேடலையும் அவரது தளத்தில் கமன்ட் செக்ஷனில் லைவ் ப்ளாக் செய்கிறேன்…

கடைசியில்தான் தெரிந்தது- வேவில் தமிழில் எழுத முடியாதாம். அதற்கு பாட் கீட் வேண்டுமோ என்னமோ, ஆராயக்கூட தெம்பில்லை.

ஐந்து நிமிஷத்துக்கு ஒரு தடவை கிரிக்கெட் தவிர தளத்தை ரெப்ரெஷ் செய்ய வேண்டும். இந்த வேவ் தேடல் வேறு. அது குறித்த லைவ் ப்ளாக்கிங் வேறு, மாட்சைப் பார்த்திருப்பேன் என்று நினைக்கிறீர்கள்?

நீங்கள் நினைத்தது டபுள் தப்பு: ஒரு மாட்ச் இல்லை, ரெண்டு மேட்ச் பார்த்தேன். இந்த மாட்சின் ரிசல்ட் அமெரிக்காவும் அல்ஜீரியாவும் இன்னொரு சேன்னலில் ஆடுகிற இன்னொரு ஆட்டத்தின் முடிவைப் பொறுத்தே அமையும் என்பதால் ரிமோட்டை அழுத்தி அழுத்தி அந்த மேட்சையும் பார்த்தேன்.

எல்லாம் முடிந்தபின் நம் தளத்தில் பதிவு போட வருகிறேன்: என்ன நடந்தது ஏது நடந்தது என்று எதுவும் நினைவில்லை. சரி, சேதத்தின் அளவையாவது குறைப்போம் என்று திரு லலிதா ராமின் தளத்துக்குப் போய், “ஐயா சாமி தெரியாமல் செய்து விட்டேன், கூகிள் வேவ் குறித்த என் பின்னூட்டங்களை முற்றிலுமாக நீக்கி என் மானத்தைக் காப்பாற்றுங்கள்” என்று கெஞ்சி நான் செய்த தவறுகளை சுவடுகூட தெரியாமல் அழிக்க வைத்தேன். பெரிய மனதுடன் அந்தக் காரியத்தை செய்த லலிதா ராமுக்கு நன்றி.

ஆக மொத்தத்தில் நேற்று ஸ்லோவேனியாவும் இங்கிலாந்தும் எப்படி ஆடினார்கள் அந்த போட்டியில் என்ன நடந்தது என்று நீங்கள் அறிய விரும்பினால், ஐயா நம்மிடம் சரக்கு இல்லை- “பிழைக்குமா பிரிட்டன்?” படித்து பிரிட்டன் பிழைத்த கதையைத் தெரிந்து கொள்ளுங்கள்.

(என்ன பிழைத்து என்ன- அடுத்து இங்கிலாந்து ஜெர்மனியுடன் மோதப்போகிறதாம்: நான் எலக்ட்ரிக் ட்ரெயினில் மோதப்போகிறேன் என்று சொல்வது போல் இருக்கிறது இது- பொட்டலம்தான்!)

பின்குறிப்பு: லைவ் ப்ளாகிங் செய்ய கூகுளே பஸ்ஸ் நல்ல இடம் என்று தோன்றுகிறது- மூச்சு விடுவேன்?

Advertisements

9 thoughts on “ஸ்லோவேனியா வஸ் இங்கிலாந்து

 1. நண்பரே, என்னால் கூகிள் வேவில் தமிழில் தட்டச்ச முடிகிறதே! கூகிள் IME பயன்படுத்திப் பார்த்தீர்களா?

 2. இருக்கிறது. அதன் புக்மார்க்லேட்டை எனது உலவியில் பதித்து வைத்திருக்கிறேன். அதைக் க்ளிக்கிதான் இப்போதும் தமிழில் எழுதுகிறேன். ஆனால் எக்காரணத்தாலோ அது வேவுக்குள் வர மறுக்கிறது- அல்லது எனக்குதான் பயன்படுத்தத் தெரியவில்லையோ என்னவோ!

  உங்கள் உதவிக்கு நன்றி- இன்று மாலை மீண்டும் முயற்சி செய்து பார்க்கிறேன்…

  1. இல்லை நண்பரே. புக்மார்க்லேட் Text Box உள் மட்டும்தான் வேலை செய்யும். google Wave இல் பயன்படுத்தப்படுவது, Google Chrome Frame சார்ந்த தொழில்நுட்பமாகும். அங்கு புக்மார்க்லேட் வேலை செய்யாது.

   http://www.google.com/ime/transliteration/

   இந்த முகவரியில் போய், தமிழ் மொழியை தேர்வு செய்து டவுன்லோட் செய்து பாருங்கள். தட்டச்ச முடியும்! (இது ஒரு keyboard வகை மென்பொருள் முரசு அஞ்சல் போல)

  1. பயனுள்ள தகவல். மிக்க நன்றி.
   இப்போது என்னாலும் தமிழில் அலையாட முடிகிறது என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  1. நான் ஆட்டத்தை சரியாக கவனிக்கவில்லை- அதனால் உங்கள் கூற்றில் குற்றம் கண்டு பிடிக்க முடியாத கையறு நிலையில் நான் இருப்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 3. என்ன பாஸ் ரெண்டு நாளா ஆளே காணோம்? டிஸ்டஸ் பண்ண இருந்த ஒரு ஆளும் மிஸ்ஸிங்-னா லைவ் அப்டேட் செய்ய போர் அடிக்குது.

  நேற்ரைய ஸ்பெயின் ஆட்டம் பார்த்தீங்களா? சூப்பர் இல்ல?

  1. என்ன செய்வது, இந்த ஆணாதிக்க உலகில் எல்லா வேலைகளையும் நாங்களே செய்ய வேண்டி இருப்பதால் அரை மணி நேரம் டிவி பார்க்கக்கூட இரண்டு நாள் முன்னதாக திட்டமிடாவிட்டால் திண்டாட்டமாகி விடுகிறது…

   முந்தா நாள் என் மகனின் தமிழ் பிறந்த நாள் என்பதால் மாலை வடபழனி கோவில் செல்ல வேண்டி இருந்தது. திரும்ப வரும்போது இரவு மணி பத்து.

   நேற்று ஒரு நண்பரின் வருகை, கடை காய்கறி என்று எக்கச்சக்கமான எடுபிடி வேலை இருந்ததால் எதிலும் முனைந்து ஈடுபட முடியவில்லை.

   இன்று ப்ரீதான் என்று தோன்றுகிறது: சரியான நேரத்தில் ஆஜராக முயற்சி செய்கிறேன்.

   இந்த பதிவைப் படிக்க நேரும் ஏனைய அன்பர்களையும் ஏழரை மணிக்கு என்னோடு அங்கு வரும்படி விரும்பி அழைக்கிறேன்-உருகுவே தென் கொரியாவை எதிர்த்து ஆடுகிறது. இதுவரை உருகுவே கோலுக்குள் எந்தக் கொம்பனாலும் பந்தைப் போட முடியவில்லை. தென் கொரியா அர்ஜென்டினாவிடம் ஏழு கோல் வாங்கியிருக்கிறது.

   நான் உருகுவேயின் வெற்றியை எதிர்பார்க்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s