தெய்வம் நின்று கொள்ளும்

நேற்று இரவு எக்காரணத்தால் என்று தெரியவில்லை, இரவு பனிரெண்டேகால் மணி அளவில் தானாகவே விழிப்பு வந்து விட்டது. எட்டு மணி நேரம் தூங்கி எழுந்து நல்ல காப்பி குடித்ததுபோல், மூளை கழுவி விட்டதுபோல் பளபளவென இருந்தது. உருகுவே கானா போட்டி பதினைந்து நிமிடங்கள் போய் விட்டிருந்தது. மேட்ச் முடிந்தும் திரும்பவும் தூங்கும் போது விடிகாலை நாலு- இன்றைய பொழுதே கெட்டு விட்டது என்று நினைக்கிறேன்.

அநியாயம் சார்.

மேட்ச் முடிய ஒரு நிமிடமோ என்னமோ இருக்கிறது- மூன்று நான்கு முறை கானாக்காரர்கள் கோல் கிட்டக்க இருந்து அடித்த பந்தை உருகுவே ஆட்டக்காரர்கள் தடுத்தனர்- சுவாரெஸ் என்பவர் கோலுக்கு உள்ளேயே போய் கையால் அதை தட்டி விட்டார்- சட்டம் என் கையில் இருந்தால் அதை கானா அடித்த கோலாக அறிவித்திருப்பேன்.

ஆனால் கானா அணியினருக்கு பெனால்டி கிக்தான் கிடைத்தது. அதையும் அவர்கள் கோட்டை விட்டார்கள், அதுதானே நியாயம்? அப்புறம் பெனால்டி ஷூட் அவுட்- நீங்கள் அறிந்த மாதிரியே உருகுவே வென்று அரை இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

“இப்போது எனது கைகள் கடவுளின் கைகள்,” என்கிறார் சுவாரெஸ். எத்தனையோ மறந்தோம், இதையும் மறக்க மாட்டோமா? இந்தக் கரங்களுக்கு உரியவரான மரடோனாவிடம் இந்த வேலையைக் காட்டினால், வெட்டுங்கடா அவன் கையை, என்பார்.

தர்மம் வெல்லும் என்று சும்மாவா சொன்னார்கள்? உருகுவே இந்த முறை கோப்பையை வெல்கிற வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.

போட்டோ : AP

பிராசில் தோற்ற கதையை அப்புறம் எழுதுகிறேன்- பையனைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும்

ஆச்சு.

ஆமாம், இந்த போட்டி வரலாற்றில் பதிக்கப்பட்டதே இந்த அம்மணியால்தான்- பாரிஸ் ஹில்டனும் அவரது ஆண் நண்பரும் ஆட்டத்தின்போது மரிஜுவானா என்ற போதை மருந்து சுகித்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரிக்கப்பட்டு சந்தேகத்துக்கிடமான முறையில் விடுவிக்கப்பட்டார்கள். விசாரணைக்குக் கூட்டிப் போனதற்காக போலீஸ்காரர்கள் மன்னிப்பு வேறு கேட்டுக் கொண்டார்களாம். வாழ்க.

போட்டோ- xinhua .net

இப்போது வேறு ஒரு வேலை வந்திருக்கிறது. அதை முடித்து விட்டு அனேகமாக ஒரு மணி நேரம் கழித்து வந்து இதைத் தொடர்கிறேன்.


வாசகர்கள் மன்னிக்க வேண்டும்- பதினோரு மணிக்கு இன்சோம்னியா என்ற திரைப்படத்தை டிவிடியில் பார்க்க நேர்ந்தது- சும்மா, சாப்பிட்டுக் கொண்ட என்ன படம் என்று பார்க்கலாமே ஆரம்பித்தது- படம் என்னை உள்ளே இழுத்துக் கொண்டு விட்டது.

புத்தி நல்லபடி இருந்தால் அதைப் பற்றி அப்புறம் எழுதுகிறேன்.

பிரேசில் கதைக்கு வருவோம்.

எண்ணத்தை வாருறது? ஆட்டம் முடிந்து பதினெட்டு மணி நேரம் கழித்து இதோ வாறன் அதோ ஆரேன் என்று ஆடி அசைந்து பதிவு எழுதுகிறேன் என்ற பேரில் அக்கிரமம் பண்ணினால் உங்களைப் போன்றவர்கள் எல்லாம் என்ன குழந்தைகளா என்ன, வாயில் விரலைப் போட்டுக் கொண்டு சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதற்கு?

அதனால் சுருக்கமாக நாலு வரிகள்- அந்த ஆட்டத்தின் ஹீரோ யாரு வில்லன் யாரு என்று.

Photo- INEWSCATCHER
Photo: WHO ATE ALL THE PIES

ஹாலந்துக்கு இரண்டு ஹீரோக்கள்.

முதலாமவர் அவர்கள் அணி வீரர் அர்ஜன் ராபன். எங்கும் நீக்கமற எல்லா இடத்திலும் நிறைந்திருந்தார்: வேரறுந்த ஆலமரம் போல் சாய்ந்து விழுந்து அவர் வாங்கித் தந்த ப்ரீ கிக்கில் கோல் போட்டு ஹாலந்து சமன் செய்தது. அடுத்தது அவர் எடுத்த ஒரு கார்னரில் ஸ்னைடர் தலையால் முட்டி கொலடித்தார் (அன்றே எழுதி வைத்தான் பிரம்ம தேவன் இந்த நெற்றியில் நான் கோல் அடிக்க வேண்டும் என்று, அப்படிக்கா கூக்குரல் போட்டபடி அவர் ஸ்டேடியத்தை சுற்றி ஓடியது தமாஷாக இருந்தது). மூன்றாவதாக ராபன் செமக் கடுப்படித்ததில் வெறி ஏறிப்போன பிலிப்பி மேலோ அவரை கீழே வீழ்த்தி அவர் மேல் ஏறிக் குதித்து சிவப்பு அட்டை வாங்கிக் கொண்டு வெளியேறினார்- பிரேசில் அப்போதே உலகக் கோப்பையை விட்டு வெளியேறி விட்டது எனலாம்.

இத்தனைக்கும் அவர்கள் நன்றாகத்தான் ஆரம்பித்தார்கள்- நெதர்லாண்ட்ஸ் சமன் செய்ததும் எதிர்பார்ப்புகளின் சுமையில் தோய்ந்து போனார்கள்- அவசரப்பட்டு ஆடியதில் எல்லாம் தப்பாகி விட்டது. போதாக் குறைக்கு ஹாலந்துக்காக பனிரெண்டாவது ஆளாக ஆடிய மேற்கண்ட மேலோ வேறு.

மேலோ சிவப்பு அட்டை வாங்குவதற்கு முன் ஒரு வேலை செய்தார்- சாதாரண பந்து, கோல் கீப்பர் கைக்கு நேராக வருகிற பந்து- ஆர்வக் கோளாறில் அவருக்கு குறுக்கே போய் அதைத் தலையால் தட்டி கோலை நோக்கி திசை திருப்பிவிட்டு புண்ணியம் கட்டிக் கொண்டார்.

ஹாலந்து நன்றாகத்தான் ஆடியது… இருந்தாலும் பிரேசில் வந்திருந்தால் நம்மவர்களில் நிறைய பேர் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். அவர்களில் ஒருவர் என் நண்பர்- யார் எப்படி விளையாடினாலும் கடைசியில் காப்பு ஜெர்மனிக்குதான் என்று லிநேக்கர் சொல்லியிருக்கார், அதுதான் நடக்கும் என்று நான் சொன்னதைத் நினைவில் கொண்டு,

“மஞ்ச பட… சம்பா டான்ஸ்.. ஆயிரம் மெஸ்ஸிக்கு அர காக்கா… கக்காயுட ப்ளேமேக்கிங் பாபியோனுட கொள்வர நிரகள். ஒடுக்கம் செமி காணாதே புறத்துப் போயி. வோச் அர்ஜென்டினா…”

என்று எனக்கு வல்லிய மிரட்டல் கடிதம் அனுப்பியிருக்கிறார். இந்த ஜெய பேரிகை எனக்கு மோகனமாக இல்லை.

கடவுளுக்கு மட்டும் கண் இருந்தால் நாளைக்கு மரடோனா அழணும், அதை நான் என் ரெண்டு கண்ணால பாக்கணும்- எத்தனையோ வருஷத்துக்கு முன்னால இங்கிலாந்துக்கு எதிரா கைப்பந்து விளையாடிட்டு “யாமறியேன் பராபரமே… எல்லாம் அவன் செயல்!” அப்படின்னு பழியை ஆண்டவன் மேல போட்ட போலி சாமியார் மரடோனானந்தாவின் முகத்திரை கிழியணும்.

இங்கிலாந்தையே தோக்கடிச்சுட்டாங்க- இந்த கத்திரிக்காய் டீமை ஜெர்மனி வாணலில போட்டு வருத்துற மாட்டாங்க?

மாட்டாங்க?

மாட்டாங்க?

என்னப்பா டௌட்டா கேக்கறீங்க, கொஞ்சம் தயிரியம் குடுங்கப்பா…

Advertisements

30 thoughts on “தெய்வம் நின்று கொள்ளும்

 1. என்னா சார், பிரேசில் மாட்சை விட்டுவிட்டீர்களே! (நேத்து இரவு முழுவதும் நீங்கள் லைவ் பிளாக்கிங் பண்ணுவீங்கன்னு ரெப்ரெஷ் பண்ணிப் பண்ணி பாத்தா புது போஸ்ட் ஒன்னையும் காணோம்… ஏன்?

  1. இப்போது பிரேசில் பற்றி எழுதியாகி விட்டது.

   நான் கடமை தவறியமைக்காக வருந்துகிறேன்…

   உண்மைய சொன்னா… முடியல. மேட்சுல ஒரு கண்ணு, கணிப்பொறியில ஒரு கண்ணுன்னு ரெண்டு மணி நேரம் விடாம தப்பச்சு செஞ்சா அடுத்த ரெண்டு மணி நேரத்துக்கு மூளைக்குள்ள மசமசன்னு மூணு நாலு கம்பளிப் பூச்சி ஊறரா மாதிரி ஒரு பீலிங்.

   நீங்க இந்த மாதிரி எல்லாம் மெனக்கெடுவீங்கன்னு தெரிஞ்சிருந்தா கடையை விரிச்சிருப்போம்னு வெய்யுங்க. அடுத்த தடவை இப்படி வருவதானால் ஒரு மெயில் செய்து விட்டு வரவும்.

   நீங்க எந்த அணியை ஆதரிக்கறீங்க? அர்ஜென்டீனான்னு மட்டும் சொல்லிராதீங்க- தமிழனுக்கு அர்ஜென்டீனாவையும் பிரேசிலையும் தவிர மத்த ஊர்ல புட்பால் விளையாடுற செய்தியே தெரியாதோ என்று சந்தேகமாக இருக்கிறது- எல்லாரும் இந்த இரண்டு அணிகளைதான் சொல்கிறார்கள்.

   1. சார், நானெல்லாம் பிரேசிலுக்குத்துத் தான் ஆதரவு. ஆனா என்ன பண்றது.. சைக்கிள் கேப்புல நெதர்லாந்து தூக்கிட்டானுக. ஆனா நேத்து நான் மாட்ச் பாக்கும் போது, பிரேசில்காரனுக தான் பாலை காலுக்குல்லையே வச்சுக்கிட்டு பூச்சாண்டி காட்டினானுக.. ஒரு ரெண்டு தடவ அம்மா சீரியல் பாக்குறதுக்குள்ள ஹாலந்து கோல் போட்டுட்டானுக… எப்பிடின்னே தெரியல.. என்ன பண்றது.. போன தடவையும் இப்பிடித்தான் பிரேசிலுக்கு சப்போர்ட் பண்ணேன்.. வாழ்கையே வெறுத்துப் போச்சு….

    ஆ.. அந்தக் கம்பளிப் பூச்சி.. அதுவும் உண்மைதான் சார்.. கண்ணைப் பாத்துக்குங்க.. (முடிந்தால் பூச்சி மருந்து பயன்படுத்திப் பார்க்கவும்….!)

    1. பிரேசில் ஜெயிச்சிருந்தா நல்லாத்தான் இருந்திருக்கும்- ஆனா அவங்க ஆடின தற்காப்பு ஆட்டம் ஒண்ணும் பார்க்க அவ்வளவு நல்லா இல்லியே? அந்த மாதிரி ஆடி ஜெயிக்கறது ப்ரேசிலா இருந்தா என்ன ஸ்லோவேனியாவா இருந்தா என்ன?

     எனக்கென்னவோ பிரேசில் தோற்றுப் போனது ஹாலந்த் நல்ல ஆடினதால என்பதை விட தோத்துப் போயிடப் போறோம்னு பயப்பட்டதாலன்னு தோணுது.

     ஆமாம், மம்மி போட்டு படபடன்னு சுட்டுப் பொசுக்கிக்கிட்டு போயிக்கிட்டிருக்க வேண்டிய விளையாட்டுப் பருவத்துல அம்மா சீரியல் பாத்து மூக்க உறிஞ்சிக்கிட்டிருக்கீங்களே, உங்களை புரிஞ்சிக்கவே முடியல பாஸ்.

     1. பாஸ்.. நான் ‘அம்மா’ங்கற சீரியல் பாக்கல.. என்னோட அம்மாதான் சன் டிவில சீரியல் பாத்தாங்க… ஹையோ ஹையோ….

      1. ஓஹோ, நீங்க அம்மா பாக்கற அம்மாவைப் பாத்துக்கிட்டிருந்தீங்களா?

       அம்மாவுக்காக மம்மியைத் தியாகம் பண்ணின நீவீர் வாழ்க!

       1. தியாகமா? சேனலை மாத்தச் சொன்ன வாய்க்கு சேமியா கிடைக்காது பாஸ்… நீங்க வேற…

        (தமிழ்நாட்டுக்காரங்களுக்கு இதுல நிறைய அனுபவம் இருக்கும்னு யாரோ சொன்னாங்களே..?)

        1. விவகாரமான ஆளா இருப்பீங்க போல இருக்கே…

         பக்கத்துல என் மகனோட மம்மி உக்காந்திருக்காங்க…☼

         ஐயா வாயில பிளாஸ்திரி.

 2. எனக்கும் மாரடோனா அழனும்னுதான் ஆசையா இருக்கு. ஆனா அர்ஜென்டினா வெளியே போயிருச்சுன்னா அரையிறுதியிலே எல்லா அணிகளும் ஐரோப்பிய அணிகளா போயிருமேன்னுதான் யோசிக்க வேண்டியிருக்கு.

  1. விளையாட்டு விஷயத்தில் கொஞ்சம் கூட இரக்கம் இருக்கக் கூடாது தோழர். முட்டைய உடைக்காம ஆம்லட் போட முடியுமா?

   மனசக் கல்லாக்கிக்குங்க- இன்னிக்கு அர்ஜென்டினாவுக்கு சங்கு.

    1. ஊஊஊஊஊஊஊ… சங்கு ஊதிபுட்டானுக… (மரடோனா அழுதால் தயவுசெய்து அந்த வீடியோவின் லிங்க் தரவும்!

     1. பாவம், எனக்கே வருத்தமாத்தான் இருக்கு.

      என்னதான் ஜென்ம பகையானாலும் ஒருவர் கண்ணீர் சிந்தும்போது சிரித்து எக்காளமிடுவது தமிழர் பண்பாடு இல்லை என்பதால் தேடிக் கண்டுபிடிக்க முடிந்தால் சுட்டி நாளை அல்லது நாளை மறுநாள் தரப்படும்.

      (மரடோனா தனி மரமா நிக்கற போட்டோ பாத்தீங்களா? எனக்கே பரிதாபமா இருந்துச்சு.)

      1. நல்ல தமிழர் நீங்க…

       //என்னதான் ஜென்ம பகையானாலும் ஒருவர் கண்ணீர் சிந்தும்போது சிரித்து எக்காளமிடுவது தமிழர் பண்பாடு இல்லை//

       சிக்கன வெட்டாமல் பிரியாணி போட முடியுமா? (ரிப்பீட்டு…!)

       1. 🙂

        அடுத்தது ஓட்டை போடாம மெதுவடை பண்ண முடியுமா என்று யோசிக்க வேண்டும், என்ன சொல்லறீங்க?

        அப்பீட்டு!

   1. சரியான பாய்ண்ட். அரை இறுதிக்கு வந்திருக்கற ஒரே தென் அமெரிக்க அணி அவங்கதான். ஹாலந்துகிட்ட மோதறாங்க, பாக்கலாம் என்ன பண்றாங்கன்னு- அவங்களே நம்பிக்கை இல்லாமதான் பேசறாங்க (கோலைத் தடுத்த உருகுவே கையாள் சுவாரெஸ் இந்த ஆட்டம் சஸ்பெண்டட்…)

     1. இந்த உலகக் கோப்பையிலே சிறந்த வகையில் ஆடியிருக்கிற அணி ஸ்பெய்ன்தான் என்று ஜெர்மன் பயிற்சியாளர் சொல்லியிருக்கிறார்- அதனா; அந்த மாட்ச் கொஞ்சம் கஷ்டம்தான்.

      ஆனால் உருகுவே அப்படி ஒன்றும் மிரட்டற அணியைத் தெரியவில்லை…

  1. கலிகாலத்துல தெய்வம் தவறு செய்பவர்களைக் கண்டால் மரியாதையாக எழுந்து நின்று கொள்வதாகத்தான் கேள்வி (நமக்கேன் சாமி வம்பு?). தண்டிச்சதெல்லாம் பொய்யாய் பழங்கதையைப் போய் விட்டது. அதற்கு இந்த ஆட்டம் ஒரு நல்ல உதாரணம்.

 3. நீங்க ஒருவேள அந்த இங்கிலாந்து ஆக்டோபஸ் வம்சாவளில வந்தவங்களோ?? புட்பால்ல நீங்க சொல்றதெல்லாம் நடக்குது???

  1. எங்க! ஸ்லோவேனியா, இங்கிலாந்து இவங்களை எல்லாம் ஆதரிச்சேன்… ரெண்டு ரவுண்ட் கூட தாண்டலையே!

 4. என்ன பண்றது, ஆக்டோபசுக்கும் அடி சறுக்கும்.

  பாத்து சார்.. பைனல்ஸ்ல மட்டும் தப்பா சொல்லிடாதீங்க.. எட்டுக் கையையும் வெட்டிப்புடுவானுக….

  1. அதெல்லாம் நாம் உஷாராகத்தான் இருக்கிறோம்-

   ஜெர்மனிக்கு தற்போது இருக்கிற பார்மில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருக்கிறது.

   ஸ்பெயின தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் ஜெயித்திருக்கிறது. ஒரு போட்டியிலும் கூட சமன் இல்லை. நூத்துக்கு நூறு- தவிர, அவர்கள் வசீகரமாக விளையாடுகிறார்கள்- ஜெர்மனிக்கு இருக்கிற பிரஷர் அவர்களுக்கு இல்லை: அரை இறுதி ஆட்டத்தில் என்ன வேண்டுமானால் நடக்கலாம்.

   இன்னொரு போட்டியில் ஹாலந்து- தெரியாத்தனமாக ஒரே ஒரு தோல்வி: அதன் பின் பட்டையைக் கிளப்புகிறார்கள்- பிரேசிலைத் தோற்கடித்த டீம். யாரை வேண்டுமானால் ஜெயிப்பார்கள், இல்லையா?

   அப்புறம்- உருகுவே. பெனால்ட்டி ஷாட்களில் அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் இருந்ததிலிருந்தே தெரிகிறது: அந்த அணியில் யாருக்கோ எங்கேயோ மச்சம் இருக்கிறது. அவர்கள் உலகக் கொப்பையையே வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

   மொத்தத்தில் நான் என் எட்டு கைகளையும்/ கால்களையும் இன்சூர் செய்து கொண்டுவிட்டேன் என்று நினைக்கிறேன்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s