சொல்வனம் 28 – பார்வை ஒன்று

வீட்டில் யாரும் இல்லை- என் மனைவி உடல் நலமில்லாமல் இருக்கிற ஒருவரைப் பற்றி விசாரிக்கப் போயிருக்கிறார்கள், பையன் தன் சித்தப்பாவுடன் பெரியபாளையம் போயிருக்கிறான்.  கிடைத்த அவகாசத்தில் ஒரு பதிவு செய்துவிட வேண்டியதுதான் என்று இதோ, கணிப்பொறி முன் அமர்ந்து விட்டேன்.

நம்மால் சுயமாய் சிந்தித்து எதையும் செய்ய இயலாதென்பதால் (அந்த வகையில் நானும் ஒரு மாற்றுத் திறனாளர்தான்)- நான் தினமும் கணினியில் முதல் வேலையாகப் படிக்கிற சொல்வனம் என்கிற இணைய இதழ் குறித்து எழுதலாமென்றிருக்கிறேன்.

முதலில் அடிப்படையில் இணைய இதழ் என்றால் என்ன என்பதில் எனக்கு ஐயமிருக்கிறது- ஒரு சில நண்பர்கள் இணைந்து ஒரு குழுவாய்  நடத்தும் ப்ளாகுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்று தெரியவில்லை (யார் வேண்டுமானாலும் எழுதலாம்  என்பதுதான் வேறுபாடு என்று நினைக்கிறேன்).

மாதம் இரு முறை வெளி வரும் இந்த இதழ் மொத்தத்தையும் ஒரு பிடிஎப் கோப்பாக தரவிறக்கம் செய்து கொள்ள வசதியான வகையில் தந்தால் இதழ் என்பதை நியாயப்படுத்தலாம் என்று தோன்றுகிறது.

இனி 35.6.2010 தேதியிட்ட 28ஆம் இதழை ஒரு பார்வை:

ராஜ்நீதி, ராவணன் ஆகிய இரு திரைப்படங்களையும் குறித்த தன் கடுப்பான பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார் திரு வே. சந்திரமோகன்-

” படங்களைப் பார்க்கும்போது இதிகாசம் மட்டுமல்ல தம் சமகாலத்தையும் நிகழ்வுகளையும் இந்தியாவின் பிரதேசங்களையும் இவர்கள் அறிந்து வைக்கவில்லை அவற்றைக் கையாள தமக்கு எந்த தகுதியும் இல்லை என்று நிரூபித்திருக்கிறார்கள் என்றே தோன்றியது.”

மகாபாரதம், ராமாயணம் ஆகிய இரு மகாகாவியங்களையும் மொக்கை கதைகளாக்கிய பாவத்துக்கு இந்த படங்களை இயக்கியவர்கள் இன்னும் திட்டு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அருணகிரியின் எழுத்துகளை இப்போதுதான் படிக்கிறேன்- என் அப்பா கோபம் வந்தால் பல்லைக் கடித்துக் கொண்டு முகம் மாறாமல் திட்டுவார்: தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு அவர் பேசுகிற தோரணையில் ஒன்றுமே வித்தியாசமாகத் தெரியாது, நான் சத்தமில்லாமல் அழுவதும் யாருக்கும் தெரியாது, அதன் பின்னணியில் இருக்கும் அவரது நகம் பதியாத, தொடை பழுக்கிற கிள்ளலும் யாருக்கும், நான் காட்டினாலொழியத் தெரியாது.

அருணகிரியின் எழுத்தைப் படிக்கும்போது எனக்கு அதுதான் நினைவுக்கு வந்தது. அவர் எழுதிய விஷயம் என்னவோ நமக்கு கொட்டாவி வர வைக்கும் விஷயம்தான்- மக்களை ஏழ்மையின் கொடுமையிலிருந்து மீட்டு அவர்களின் திறன்கள் வெளிப்பட வசதி செய்து தருவது சர்வாதிகார அரசா அல்லது மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு செவி கொடுக்கும் ஜனநாயகமா?-

“சீனாவில் இரண்டு நிமிடத்துக்கொரு முறை ஒரு தற்கொலை நடப்பதாக W.H.O தெரிவிக்கிறது. ஏழ்மையையும் அவலத்தையும் விடக்கொடியது அவற்றை எதிர்த்துக்குரலெழுப்பவும் போராடவும் முடியாமல் முடக்கிப்போடப்படும் நிலை. கம்யூனிஸ சர்வாதிகாரத்திற்கும், ஜனநாயக முதலியத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடு இதில்தான் அடங்கியுள்ளது. ஏழ்மையும் அவலமும் இவ்விரண்டு அமைப்புகளிலும் காணப்படுவதுதான் என்றாலும், ஜனநாயக முதலியம் அவற்றிலிருந்து விடுபடும் வழியையும் திறந்து வைத்திருக்கிறது. கம்யூனிஸமோ அந்தக்கதவுகளை இறுக்க மூடிவிட்டு சர்வாதிகார இருளில் சாவியைத் தொலைத்து விடுகிறது”

அருணகிரி அநீதிகளுக்கு எதிரான தன் கண்டனத்தை காட்டுக் கூச்சலாய்க் கத்தாமல் ஒரு கீழ்க்குரலில் பாய்ண்ட் பாய்ண்ட்டாக எடுத்து வைக்கிறார். நான் இதை மிகவும் ரசித்துப் படித்தேன்.

கர்நாடக சங்கீதத்தில் ஆனா ஆவன்னாகூட தெரியாத எனக்கு திரு அருண் நரசிம்மனின் ராகம் தானம் பல்லவி என்ற கட்டுரை ஒரு தெம்பைத் தந்தது எனலாம்  (இத்தனை நாள் நான் இதை ராகம் தாளம் பல்லவி என்று நினைத்துக் கொண்டிருந்தேன்!)-

நகர வாழ்கையின் அவசர கதி சிலுவையில் அறையப்பட்டுள்ள இக்கச்சேரிகளில் விஸ்தாரமான இரண்டு மணிநேர ராகம் தானம் பல்லவியை எதிர்பார்ப்பது அறிவியல் துறைகளில் இந்தியாவிலிருந்தபடியே இந்தியர் நோபல் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவதற்கு ஒப்பானது. என்றாவதே நடக்கலாம்.

ராகம்- தானம்- பல்லவி குறித்த என் போன்ற அறியாதவனுக்கும் புரிகிற மாதிரி ஒரு நல்ல அறிமுகம். எனக்கு இந்த இசையில் நாட்டம் வராமல் இருப்பதே இதுபோன்ற கத்தரி வேலைகலால்தான் என்று தோன்றுகிறது- ஒரு சமயம் ஆற அமர ரசித்து அனுபவித்துப் பாடினால் இந்த இசை எனக்குப் பிடிபடுமோ என்னவோ!

மெக்சிகன் வளைகுடாவில் ஏற்பட்டுள்ள எண்ணைக் கசிவு பற்றி ரஞ்சனின் ஏன் எப்படி என்ற கட்டுரை ஒரு எளிய அறிமுகம்-

மற்ற இடங்களில் நிலத்தடியிலிருந்து பெருமுயற்சி செய்து எண்ணெயை உறிஞ்சி எடுக்கவேண்டியதாக இருக்கிறது. ஏன் இந்தக் கிணறு மட்டும் தானாகவே தொடர்ச்சியாக பெருமளவில் எண்ணெயை கக்கியபடியே உள்ளது?

நைஜீரியாவில் இதைவிட மோசமான சுற்றுச் சூழல் அழிவு ஐம்பது ஆண்டுகளாக இந்த எண்ணைக் கிணறுகளால் நடந்து கொண்டு இருக்கிறது- மூன்றாம் உலக நாடு ஒன்றில் நடக்கும் இந்த பேரழிவு குறித்து மேற்கத்திய நாடுகள் மௌனம் சாதிப்பதாவது புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றாக இருக்கிறது- ஆனால் நம்மவர்கள்?

அடுத்த இதழில் ரஞ்சன் இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கிறேன்- இது நாமெல்லாம் அறிய வேண்டிய விஷயம்.

இன்னும் சில கட்டுரைகளைப் பற்றி எழுத வேண்டும்- ஆனால் ஒரு படம் கூட இல்லை, படிப்பதற்கே இந்த பக்கம் படு திராபையாக இருக்கும்: பொதுவாக இம்மாதிரி பதிவுகளுக்கு ஐநூறு சொற்கள்தான் நான் வைத்துக் கொண்ட லிமிட்.

இதுதான் அந்த ஐநூறாவது சொல்.

அப்புறம் பார்க்கலாம்.

Advertisements

14 thoughts on “சொல்வனம் 28 – பார்வை ஒன்று

 1. நல்ல பதிவு.. ஆயிரத்தில் ஒருவனும் இப்பிடியான வரலாற்றை இழிவுபடுத்தும் படம் தான் சார்.. எண்ணைக் கசிவு.. நாம என்ன பண்றது? அமெரிக்க விமானங்கள் போட்டோ எடுக்கற நேரத்துல கசிவைச் சரி பண்ணியிருக்கலாம்….

 2. ஆயிரத்தில் ஒருவன் தமிழை விட தெலுங்கில் நன்றாக ஓடியது என்று கேள்விப் பட்டேன்- தமிழில் சோழர்கள் மாதிரி தெலுங்கில் யாரு? அங்கே சுந்தரத் தெலுங்கையும் ஒரு வழி பண்ணினார்களா? அதற்கு யாரும் செல்வராகவனைத் திட்டவில்லையா?- தெலுங்கும் ஒரு செம்மொழி ஆயிற்றே!

  1. தெலுகுவில் “கிருஷ்ணா தேவராயர்” குலத்தை இழுத்திருப்பார்கள்.
   தெலுகு செம்மொழியா என்ன? செப்பனே லேது?

 3. http://www.indianexpress.com/news/telugu-kannada-to-get-classical-language-st/348627/
  தெலுங்கு மட்டும் இல்ல சார், கன்னடமும் செம்மொழிதான்.
  அவங்களுக்கும் ஓட்டுரிமை இருக்கு, இல்லியா?
  மலையாளமும் செம்மொழிதான்னு சில பேர் கிளம்பிட்டதா கேள்வி.

  1. சார்.. தெலுங்கும் கன்னடமும் உண்மையான செம்மொழிகள் இல்லை. செம்மொழிக்கான பதினோரு தகுதிகளும் முழுமையாக உடைய மொழிகள் எட்டே எட்டுதான்.. அதில் தமிழும் சமஸ்கிருதமும் அடங்கும். ஆனால் ஒரு சில தகுதிகள் மட்டுமே கொண்ட சில மொழிகளையும் செம்மொழிகளாக கூறியிருக்கிறார்கள். அப்படிக் கூறப்பட்ட இருபதற்கும் மேற்பட்ட மொழிகளில் தெலுங்கு கன்னடம் அடங்கும். (நன்றி விக்கிபீடியா)

 4. இந்த செம்மொழிக்கும் அந்த செம்மொழிக்கும் என்ன வேறுபாடு? கொள்கை அளவில் வேறுபடலாமே தவிர செயல் அளவில் எல்லாவற்றுக்கும் ஒரே நடைமுறைதான் இருக்கும் என்று தோன்றுகிறது.

 5. என்னதான் இருந்தாலும், தமிழின் தொன்மையோடு ஒப்பிடும் போது அவையெல்லாம் குட்டிச்சாத்தான்கள் தானே?

  1. இது பற்றி ஒரு நீண்ட மொக்கை பதிவு போடுவதாக இருக்கிறேன்- நேரம் வரட்டும்.

   தமிழ்த்தாய் ஈன்றெடுத்த குட்டிப் பிசாசுகள் என்று பொருள் கொண்டால், ஆம் தெலுங்குக்கும் கன்னடத்துக்கும் வயசு கம்மி.

   ஆனால் செம்மொழி என்பது ஒரு அடையாளம்தானே? டாப் டென் என்கிற மாதிரி கட்டுப்பாடு எதுவும் இல்லாத நிலையில் நாமே ஒரு சில வரைமுறைகளை ஏற்படுத்திக்கொண்டு தருகிற பட்டம்தானே இது?

   ஒரு பேச்சுக்கு சொல்கிறேன், ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் தோன்றிய மொழிகள் அனைத்தும் செம்மொழிகள் என்று அரசு நாளை ஆணை பிறப்பித்தால், எல்லாமே செம்மொழிகள்தான், இல்லையா?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s