சொல்வனம்- இரண்டாம் பார்வை

(முதல் பார்வை இங்கே)

இலக்கியவாதியாகும் முயற்சியில் சொல்வனம் இதழில் வந்த சில படைப்புகளைப் பற்றி எழுதலாம் என்று நினைத்தால் அதோ ஆச்சு இதோ ஆச்சு என்று நாட்கள் தள்ளித் தள்ளிப் போனதில் அடுத்த இதழ் கூட வந்து விடும் போல் இருக்கிறது. என்ன செய்வது, நம் லெவல் அவ்வளவுதான்.
மகரந்தம் என்ற பகுதியில் தேர்ந்தெடுத்த சில தகவல் கட்டுரைகளுக்கு சுட்டி தருகிறார்கள்- ஷ்ரோடிங்கரின் பூனை, நியண்டர்தால்கள், வௌவால்கள், அன்டார்க்டிகாவில் விவசாயம், அணையாது எரியும் நிலக்கரி சுரங்கம் என்று ஐந்து சுட்டிகள்: என்னைக் கேட்டால், இது போன்ற சுட்டிகளை தினமும் தரலாம் என்று சொல்வேன். ஆனால் யார் கேட்கிறார்கள்!

“எனக்கென்னவோ இந்த விவகாரத்தில் உள்ள பொருளாதார, தொழில் நுட்ப, சுற்றுச்சூழல் கோணங்களை விட, சிந்திய எண்ணையைச் சுற்றி மனிதர்கள் எப்படியெல்லாம் நடனமாடினார்கள் என்பதுதான் சுவாரசியமாக இருக்கிறது. இதில் நாடு மொழிகளைக் கடந்த ஒரு அடிப்படை மனித இயல்பைப் பார்க்க முடிகிறது.,”

என்று மெக்ஸிகன் வளைகுடாவில் ஏற்பட்டுள்ள எண்ணை விபத்தில் தெரிந்த மனிதர்களின் பொது இயல்புகளை விவாதிக்கிறார் ராமன் ராஜா.கட்டுரையின் இறுதியில் இது போன்ற ஒரு அசம்பாவிதம் நம் ஊரில் நடந்திருந்தால் நாம் என்ன செய்வோம் என்று அவர் எழுதியிருக்கிற பத்து விஷயங்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றன.
ஜோசே சாரமோகோ காலமான செய்தியை எப்படியோ மோப்பம் பிடித்து நாம் ஏற்கனவே இங்கு எந்த சாரமுமில்லாத ஒரு பதிவை எழுதியிருந்தோம். இது குறித்து எனக்கே அதிருப்தி இருந்தது என்று சொன்னால் மிகையாக இருக்காது: அவரை குறித்து நல்ல ஒரு பதிவு தமிழ் வலைதளங்களில் இல்லை என்று குறைபட்டுக் கொண்டிருந்தேன்: அதை நீக்கும் விதமாக சேதுபதி அருணாசலம் ஒரு அற்புதமான கட்டுரை எழுதி இருக்கிறார்- தமிழில் வலையில் சாரமாகோ குறித்து யார் தேடினாலும் சேதுபதி அவர்கள் மூலமாகத்தான் சாரமாகொவை அறிமுகம் செய்து கொண்டாக வேண்டும்- சாரமாகொவுக்கு நீதி கிடைக்கும் வகையில்தான் இருக்கிறது அவரது கட்டுரை

தன்னுடைய ‘பார்வையின்மை’ நாவலை, ‘அடக்குமுறையைப் பற்றிய என் விமர்சனம் இந்த நாவல். பல பணக்கார நாடுகள் ஏழை நாடுகளைச் சுரண்டி மேலும், மேலும் அவர்களை ஏழ்மையாக்குவதைக் குறித்த என் மன வருத்தத்தை என் நாவல் வழியே முன்வைக்கிறேன்” என்கிறார் சாரமாகோ. அப்படிப்பட்டவர் இரண்டு சர்வாதிகாரங்கள் மறைந்து ஒரு ஜனநாயகம் மலர்ந்த தினத்தை ‘இருண்ட நாளாக’ ஏன் பார்க்கிறார்? தான் அதிகாரத்தில் அமர்ந்த ஒரே ஒரு முறை (பத்திரிகையாசிரியர்), கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை ஏன் நெறித்தார்? தான் நம்பும் கொள்கைகளுக்காக எந்தவிதமான சர்வாதிகாரத்தையும் சகித்துக் கொள்ள ஏன் அவர் தயாராக இருந்தார்? தெரியவில்லை.

அரவிந்தன் நீலகண்டன் தன் சிந்தனைகளை தமிழ்படுத்த ரகசியமாக ஒரு எந்திரனைப் பணித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்:

இயந்திர உடலற்று பரந்து செயல்படும் செயற்கை அறிவுகளும் ஹாலிவுட் திரைப்படங்களில் செயல்பட்டுள்ளன. இவற்றுள் முக்கியமானது ஆர்தர்.சி.க்ளார்க்கின் புகழ்பெற்ற நாவல் 2001: A Space Odyssey ஸ்டான்லி குப்ரிக்கால் திரைப்படமாக்கப்பட்ட போது அதில் வரும் HAL-9000 – பிரபல IBM பெயரை ஒவ்வொரு எழுத்து மாற்றி அமைக்கப்பட்ட பெயர். ஆலன் ட்யூரிங்க் செயற்கை அறிவு குறித்து கணித்த ஒரு அடிப்படை ஊகம் செயற்கை அறிவு அப்படியே முழு மானுட அறிவுத்தன்மையுடன் வெளிப்படுவதாக அமையாது மாறாக ஒரு சிறுகுழந்தை போல உருவாகி குழந்தை வளர்ச்சி அடைவது போலவே கற்பிக்கப்பட வேண்டியதாக இருக்கும் என்பதுதான்.

என்று துவங்குகிறது அவரது ஹாலிவுட் உலக எந்திரர்கள் குறித்த பார்வை: வசீகரமான கருத்து: எந்திரர்கள் குறித்த நம் பார்வை எவ்வாறு எந்திரம் என்ற நிலையிலிருந்து மானுடம் என்ற நிலைக்கு மாறியது என்று பல திரைப்படங்களைத் தொட்டு எழுதி இருக்கிறார்: கொஞ்சம் பொறுமையாக, வரிகளை இரு தடவைக்கு மூன்று தடவை படித்தால் நிச்சயம் ஒரு பயனுள்ள கட்டுரையைப் படித்த நிறைவு கிடைக்கும்.

சுஜாதா தேசிகன், தான் ஓவியம வரையக் கற்ற நாட்களைக் குறித்து எழுதி இருக்கிற கட்டுரைக்கு பல முகங்கள் இருக்கின்றன: அவற்றுள் முக்கியமானது அவர் தன் தந்தைக்கு,  அழகாக, மிகை உணர்ச்சி காட்டாமல் இயல்பாக நன்றி நவிலும் விதம்.

நான் கடக லக்னம் என்பதாலோ என்னவோ, எனக்கு நேரடியாக சொல்லப்படுகிற விஷயங்களை விட தொட்டுக் காட்டி நம் கற்பனைக்கு இடம் கொடுக்கும் எழுத்தே பிடித்திருக்கிறது. சுஜாதா தேசிகனின் இந்த பதிவு பல விதங்களில் சிறப்பாக இருக்கிறது- அதை பாராட்ட வார்த்தைகள் இல்லை: அதனால் அடக்கிக் கொள்கிறேன்-

என் அப்பாவிடம் வெளிநாட்டு வாட்டர் கலர் பென்சில் வேண்டும் என்று ஒரு முறை கேட்டேன். எவ்வளவு என்று கூட கேட்காமல் “பீரோவில் பணம் இருக்கு எடுத்துக்கொண்டு போய் வாங்கிக்கோ” என்றார்.
என் முதல் சம்பளம் வந்த போது “உன்னுடைய முதல் சம்பளம், நான் ரிடையர் ஆகும் போது வாங்கிய கடைசி சம்பளம்” என்றார். அவர் வாங்கிக்கொண்டுத்த அந்த கலர் பென்சிலின் விலை கிட்டத்தட்ட அவர் சம்பளத்தில் 15%

சுஜாதா தேசிகன் இந்தக் கட்டுரையில் எத்தனையோ ஒவியங்களை பிரதி செய்திருக்கிறார்- ஆனால் அழகாக இருக்கிற அவை அனைத்தையும் விட என்னைக் கவர்ந்தது அவர் அசலாகப் படைத்திருக்கிற தன் தந்தையின் உயிரோவியம்தான்.

சூப்பர்.

Advertisements

9 thoughts on “சொல்வனம்- இரண்டாம் பார்வை

  1. ஐயோ, அப்படியெல்லாம் சொல்லாதீங்க. நான் உங்கள் ரசிகன். அதிலும் உங்கள் புனைவுகளுக்காக தினமும் காத்திருப்பவன்- தன் பட்டுக் குஞ்சலத்தை அலங்கரித்து, அதை ஏளனம் செய்பவர்களை வெறுத்து ஒதுக்கும் மிக்சீநியர்களை நினைக்கும்தோறும் சிரிப்பு வருகிறது. அதிலும், அவனது சிரிப்பு கேவலாக மாறியது என்று எழுதியிருப்பீர்களே (நினைவிலிருந்து சொல்கிறேன், அதனால் பிழை நேரலாம்)- அந்த வரி, பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டு தஞ்சாவூர் கோவில் கல்வெட்டில் பதிக்கப்பட்டு நூறு காவலர்களால் பொத்திப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று.அவ்வளவு கவித்துவம் அதில் அடங்கி இருக்கிறது.

   எனக்கு மட்டும் நேரமும் கற்பனைத்திறனும் இருந்தால் அந்த ஒரு வரி தந்த உந்துதலாலேயே ஆயிரம் பக்கங்களுக்கு ஒரு நாவல் எழுதி தமிழ் இலக்கிய உலகை தலை கீழாக மாற்றிப் போடுவேன். நேரம் இருந்தால் நீங்கள் அதை செய்யுங்களேன்- உங்களுள் ஒரு மகோன்னத தமிழ் நாவல் இருக்கிறது.

   இது அடியேனின் தாழ்மையான கருத்து. நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் (அந்த கேவலுக்காகதான் இந்த நன்றி நவிலல்)…

 1. உங்கள் இதயம் பேத்துகிறது.
  அடக்கமுடைமை என்ற அதிகாரத்தை ஆழமாகப் படித்திருக்கிறீர்கள்.பின்பற்றவும் செய்கிறீர்கள்.
  அடக்கம் அதிகமாக ஆழம் அதிகமாகும்.உண்மையில் பரந்தவாசிப்பு ஆழமான அறிவு பலதுறைகளிலுமிருக்கும் பலவிதமான பார்வை.
  நான் இந்தத்தளங்களை அண்மையில்தான் தேடிக்கண்டுபிடித்தேன்.
  உங்களில் தன்முனைப்பு தெரிவதில்லை.அனேகமான எழுத்தாளர்களில் ‘நான்’ துருத்திக்கொண்டிருக்கும்.இன்றைய உலகில் அது ஆச்சரியம்.
  உங்கள் பார்வை என்மீது பட்டது புண்ணியம். முன்பு யாரோ ஏழை எழுத்தாளனின் புத்தகத்தை காசு கொடுத்து வாங்கியிருப்பேனோ என்னவோ.
  உங்களில் ஒரு குறை அதிக அடக்கம் . மற்றது மேலே போல சும்மா புகழாதீர்கள்.
  நான் படித்தவற்றைக்கக்குகிறேன். புனைவுகள் கூட முன்பு எங்கோ படித்தவை புதிது போல வந்து விழலாம்.ஹெலென் கெல்லர்ருக்கு நடந்தது போல.
  பின்னூட்டங்கள் போடப்பழகுகிறேன்.தவறு இருந்தால் மன்னிக்கவும்.

  ஏதோ பரஸ்பரம் பாராட்டிக்கொள்வதாக நினைக்கக்கூடாது.அறிவையும் இதயத்தையும் ப்பேச விட்டு சுயத்தை சுருட்டி வைப்பது கஷ்டம். ஆழமான அறிவோடு அது உங்களுக்கு கைவருகிறது.விமர்சனத்தில் மொழியக்கையாள்வதோடு அது சம்பந்தமான பரந்த வாசிப்பும் அன்ப்பொடும் சொல்லலாம்.கறாராகவும் சொல்லலாம். அன்போடு சொல்லப்படும் குறைகள் ஆக்குபவரை வளர்க்கும்.உங்கள் நல்ல விமர்சனங்களில் கொஞ்சம் அன்பு தூக்கலாக இருக்கிறது(positive filter).கண்டிப்பும் காட்டுங்கள்.
  மரியானா ஆழி ஆழம் சார் .

  1. ஜி, அப்படியொன்றும் பெரிய அடக்கம் எனக்குக் கிடையாது என்பதைப் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்.

   ஈகோ என்ற பதத்தை ‘தன்முனைப்பு’ என்று அழகாக தமிழ் செய்திருக்கிறீர்கள். நன்றி.

   நான் உங்களுடைய எழுத்து பற்றி கூறியதில் ஒரு .95 முதல் .1 சதவிகிதம் வரை ஓரளவு மிகைப்படுத்தல் இருக்கலாம்- ஒப்புக் கொள்கிறேன். அதற்காக அதில் உள்ள உண்மை இல்லாமல் போய் விடாது.

   நான் கண்டிப்பு காட்டாத விமரிசகன் அல்ல. மனதுக்குள் நான் வைகிற மாதிரி யாரும் வைய மாட்டார்கள் – அதைப் பதிவு செய்கிற அபத்தத்தைக் கூடுமானவரைத் தவிர்க்கிறேன், அவ்வளவுதான்.

   பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

   1. இது விட்டுப் போய் விட்டது- நீங்கள் உங்கள் எழுத்தைக் குறைத்து மதிப்பிடுவது என் போன்ற வாசகர்களுக்கு வலிக்கிறது: தயவு செய்து அந்தப் பிழையைத் திரும்ப செய்யாதீர்கள்.

 2. நன்றி,(என்னவோ!)
  “எழுத்து இதழ் நிறுத்தப்பட்டதற்கே இலங்கை சந்தாதாரர்களை அது இழந்ததுதான் முக்கிய காரணமாயிற்று. ஏனென்றால் எழுத்தின் பாதிக்கு மேலான சந்தாதாரர்கள் அங்கேதான் இருந்தார்கள். இதே நிலைதான் சரஸ்வதிக்கும் ஏற்பட்டது,” என்ற திடுக்கிடும் செய்தியை முன் வைக்கிறார் வெங்கட் சாமிநாதன்.

  அங்கே பின்னூட்டம் இல்லை ?

  எந்தந்தையாரும் எழுத்து சந்தாதாரர். எனக்கும் எழுத்தைப்படிக்க கிடைத்தது.

  1. சார், தற்போது நான் கடும் நேரமின்மையால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன். ஏகப்பட்ட கமிட்மென்ட்டுகள் . உங்களை எழுத விட்டு விட்டு நான் பதில் தராமல் சும்மா இருக்கக் கூடாது இல்லையா? அதனால்தான் இப்படி. டுவிட்டரில் பின்னூட்டமிட்டால் ஒற்றை வரியில் வேலை முடிந்து விடும். அதுதான் இப்படி 🙂

   நீங்கள் வலியுறுத்துவதானால் பின்னூட்டப் பெட்டியைத் திறந்து வைக்கிறேன். என்ன, நான் பதில் தருவது தாமதமாகும்.

   நீங்கள் எழுத்து பத்திரிக்கையை வாசித்த அனுபவம்- அப்போது யார் யார் என்னென்ன பத்திரிக்கைகள் படித்தார்கள், நீங்கள் தமிழ் பத்திரிக்கைகளை எப்படி அணுகினீர்கள், அது அந்நிய உணர்வைத் தரவில்லையா என்பன குறித்து அறிய ஆவலாக இருக்கிறது. உங்கள் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளலாமே?

   வெங்கட் சாமிநாதனின் கருத்து எழுப்பிய நினைவலைகள் என்ற வகையில் இதை சொல்வனத்திலேயே எழுதலாம் என்று தோன்றுகிறது.

   அவர்கள் பிரசுரிக்க மறுத்தால் சொல்லுங்கள், அவர்களின் இணைய இதழ் முன் நான் நாலு பேரைக் கூட்டிக் கொண்டு வந்து வழியடைப்பு செய்கிறேன். என்ன சொல்கிறீர்கள்?

 3. நன்றி

  எனக்கும் நேரச்சிக்கல்தான் சார்.எழுதுவதை நிறுத்தவேண்டியதாகிவிட்டது.சும்மா பழையதைபோட்டுக்கொண்டிருக்கிறேன். தமிழ் எழுதுக்களில் அனேகமாக அன்னியத்தன்மை உணருவதில்லை.
  ஆனால் உலோகம் போல(kamal-தெனாலி) யாராவது அங்கிருந்து யாழ் தமிழை முயற்சித்தால் அது அன்னியமாகத்தெரியும்.அது முள் மாதிரி குத்தும். மற்றும்படி தமிழ்நாட்டின் எந்த வட்டார வழக்கில் எழுதினாலும் அது எனக்கு படிக்க இன்பமாகவே இருக்கும்.அது என் தனி அனுபவம்.
  உங்கள் உந்துதல் மீண்டும் இலக்கிய ஆசையை ஏற்படுத்துகிறது.மருத்துவத்துக்கும் தொடர்ச்சியான வாசிப்பு தேவைப்படுகிறது(exams).நான் நேரத்தை நிர்வகிக்கத்தெரியாதவன்.
  உங்கள் ஊக்கத்துக்கு நன்றி.தற்போது கொஞ்சம் சிக்கல்.சில மாதங்கள் போகவேண்டும்.
  (சு)வாசிக்கிறேன். நீங்கள் எழுதுங்கள். உங்கள் எழுத்துக்கள் நிறைய வாசித்த உணர்வைத்தருகிறது(கற்றதும் பெற்றதும்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s