தமிழிஷ் இன்ட்லியான மாற்றம்- விரும்பத்தக்கதா?

தமிழிஷ் இப்போது இன்ட்லியாக மாறியிருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆங்கிலம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் செய்யப்படுகிற இடுகைகளைப் படிக்கிறவர்களுக்கு இது ஒரு பொன்னான தளமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. வரவேற்கப்பட வேண்டிய விஷயம்- தமிழகத்தை சேர்ந்த பலரும் கூட ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள், சிறப்பாகவே. அவர்களது இடுகைகள் தமிழ் இடுகைகளோடு சேர்த்துப் படிக்கப்பட வேண்டியவை: அந்த அளவில் இன்ட்லி ஒரு சிறப்பான முயற்சி.

ஆனால் எனக்கு இன்ட்லியில் ஏற்பட்டிருக்கிற ஒரு மாற்றம்தான் பிடிக்கவில்லை- பிடிக்கவில்லை என்பதை விட, அச்சத்தை ஏற்படுத்துகிறது.

தமிழிஷுக்கு முன்பே தமிழ் மணம் என்ற திரட்டியைத் துவக்கி இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் என் நண்பர் ஒருவர் தன தளம் பெறுகிற பார்வைகளில் பெரும்பாலானவை தமிழிஷில் இருந்துதான் வருகின்றன என்று சொல்கிறார். இது தமிழிஷ் வாசகர்களின் ஆதரவைப் பெற்றிருப்பதைக் காட்டுகிறது என்று நினைக்கிறேன். ஆனால் வலைப் பதிவர்களுக்கு அனுசரணையான தளம் என்றால் அது தமிழ் மணமாகதான் இருக்க முடியும் என்று தோன்றுகிறது. எது எப்படி இருந்தாலும் சரி, விஷயத்துக்கு வருகிறேன்.

நான் தமிழிஷில் இணைக்கிற பதிவுகள் பெரும்பாலும், பெரும்பாலும் என்றால் பெரும் பெரும்பாலும் சொல்வனம் மற்றும் அழியாச்சுடர்கள் ஆகிய தளங்களில் இடப்படுகிற இடுகைகளே. இவை தவிர என் நண்பர் கிரியின் இடுகைகளுக்கு வாக்களிக்கிறேன்: அதுவும் நான் ரசிக்கும் பதிவுகளுக்கு மட்டும். இந்த மூன்றன்றி வேறு சில பதிவுகளுக்கும் அப்போதிருக்கிற மன நிலைக்கு ஏற்ப வாக்களித்திருக்கிறேன்.

ஆனால் இப்போது என்ன பிரச்சினை என்றால்: நான் தொடர்பவர்கள் என் வீட்டு வாசலின் வலப்புறம் வந்து விட்டார்கள்: அவர்கள் வாக்களித்த/ இட்ட இடுகைகள் என் வாக்கைக் கேட்டு நிற்கின்றன. இதுதான் என் அச்சத்துக்குக் காரணம்: என்னையும் மீறி நான் படிக்காமலேயே என் நண்பர்கள் இணைத்த இடுகைகளுக்கு வாக்களித்து விட்டேன்.

இது எங்கே போய் முடியும் என்று தெரிகிறதா? ஆமாம், நல்ல இடுகைகளைவிட நிறைய பேரைத் தொடர்ந்து அவர்களின் வாக்குக்கு மறு வாக்கு அளிப்பவர்களின் பதிவுகளே முன்னணி பதிவாக உயரும்- நான் சொல்வது சரிதானே? இது ஒரு விரும்பத்தகாத பக்க விளைவு,

இனி எல்லாரும் எல்லாரையும் பின்தொடர்ந்து வாக்குப் பதிவு யந்திரங்களாக மாறிவிடக் கூடும். இன்ட்லியின் இந்த மாற்றம் குழு மனப்பான்மையையே ஊக்குவிக்கும் என்று தோன்றுகிறது.

திரட்டிகளின் வெற்றி பதிவர்களால் அல்ல: வாசகர்களுக்கு வகை வகையான சுவாரஸ்யமான பதிவுகளை அறிமுகப்படுத்துவதே வெற்றிக்கு சிறந்த வழிமுறை.

இன்ட்லியின் இந்த மாற்றம் பதிவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்துத் தரலாம்- ஆனால் வாசகர்களை அது முட்டுச் சந்தில் கொண்டு போய் விட்டுவிடக் கூடிய அபாயம் இருக்கிறது.

போகப் போகதான் தெரியும்- என் கவலைகளை வெளிப்படுத்தி விட்டேன், அவ்வளவுதான்.

Advertisements