புதுஞானமரபுக்கான காலம் வந்து விட்டது!

இந்தக் கட்டுரையின் தலைப்பைப் படித்தவுடன் இப்படிதான் தோன்றியது: இத்தனை நாட்களாக நாம் மேல் நாட்டு தத்துவ மற்றும் கோட்பாட்டுப் பாதைகளைப் பின்பற்றி வருகிறோம் (அறிவார்த்தமாக): அந்த இழவைப் புரிந்து கொள்வதே பெரும்பாடாக இருக்கிறது, அப்படியே ஒரு வழியாகப் புரிந்து கொண்டாலும் அதில் உள்ள பல விஷயங்கள் நமக்குப் பொருத்தமில்லாமல் இருக்கிறது- எதை சொன்னாலும் முழுசாக சொல்ல முடிவதில்லை- அப்படியே ஒன்றை சொன்னாலும் இது நம்மூருக்கு ஏன் எப்படி பொருந்தாது என்று பட்டியல் போடுகிறார்கள்: எல்லாவற்றையும் விடக் கொடுமை, வாயில் நுழையாத பேர்களை எல்லாம் மனப்பாடம் பண்ண வேண்டியிருக்கிறது, தடைகளை எல்லாம் தாண்டி ஊர்ந்து வடிகிற ஒரு சிறு ஓடை பட்டணத்தில் சாக்கடையைச் சேர்ந்து செத்துப் போகிறமாதிரி தமிழ் நாட்டில் அறிவுஜீவியாய் இருப்பவன் இப்படி கஷ்டப்பட்டு கண்டகண்ட விஷயங்களை எல்லாம் மனதில் ஏற்றி, தட்டுத் தடுமாறி, ஒரு சிறு அளவில் புரிந்து கொண்டு, கடைசியில் இதை எல்லாம் இங்கே பொருத்தம் பண்ண முடியாது போலிருக்கிறதே என்று தோய்ந்து விழுகிற அவலத்தை என்ன சொல்ல என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன்.

பின்நவீனத்துவம் கழிந்த பின்சமயசார்பற்ற ஒரு உலகில் நாம் இருக்கிறோம் என்பது அந்தக் கட்டுரையைப் படித்தவுடன்தான் விளங்கியது. எம்மானுவேல் லேவினாஸ், ழாக் டெர்ரிடா, ஜியன்னி வட்டிமோ, ஜியார்ஜியோ அகம்பென், ச்லாவோஸ் சைசெக், யூர்கன் ஹெபர்மாஸ் என்று பெரும்பெரும் தலைகள் எல்லாம் சமயம் குறித்து விவாதம் பண்ண ஆரம்பித்திருக்கிரார்களாம்.

சமயசார்பின்மை என்பதே கிருத்தவத்திலிருந்து முளைத்த பொதுவெளிக்கு வரக்கூடாது என்பதான ஒருசார்பான சமயமறுப்பு என்று இந்தக் கட்டுரையாளர் சொல்கிறார் போலத் தெரிகிறது. மற்ற சமயங்களில் உள்ள அடிப்படைவாத சமய நெறிகளுக்கு எதிரான குரல்களையும், அதிலும் இசுலாம், கருத்தில் கொண்டு பேச வேண்டுமாம்.

மொத்தத்தில் பின்நவீனத்துவம், சமயசார்பின்மை இரண்டும் காலாவதியாகி விட்டதாம். நாம் இதையெல்லாம் கடந்த உலகில் இருக்கிறோம் என்ற மகிழ்ச்சிகரமான செய்தி தெரிகிறது.

ஏன் மகிழ்ச்சி? நமது தலை இந்தப் பந்தயத்தில் அவர்களைவிட முன்னாள் நிற்கிறது. இலக்கியம் சார்ந்த பதிவுலக சூப்பர் ஸ்டார்களான ஜெமோ, சாரு இருவரையும் எடுத்துக் கொள்ளுங்கள்: ஜெமோ வெளிப்படையாகவே தான் இந்து சமய மரபை சார்ந்தவன் என்று அறிவித்துக் கொள்கிறார்; சாரு தனது ஜீரோ டிகிரி கடவுளுடன் நடத்தப்பட்ட சம்பாஷனை என்று வெளிப்படுத்தி இருக்கிறார்.

அந்த ஊர் இலக்கியவாதிகள் எல்லாம் இனிதான் உண்மையை அறிந்து, பின்நவீனத்துவம் கழிந்த பின்சமயசார்பற்ற அறிவுத் தளத்துக்கு நகர்ந்து வந்துப் பேச வேண்டும். ஆனால் நம் ஊர் ஆட்கள் ஏற்கெனவே அங்கு துண்டு போட்டு விட்டார்கள். உஷாராக ஏனைய அறிவுஜீவிகளும் இந்த பஸ்ஸில் ஏறி சுறுசுறுப்பாக தத்துவ இலக்கியக் கலைச்சொற்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு ஆக்கம் தந்து தமிழ் தத்துவ-இலக்கிய இயக்கத்தை உலக அரங்கில் முன்னணியில் நிறுத்த வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

அதற்குப் பிள்ளையார் சுழி போடும் வகையில் நாம் இப்போது வாழும் காலத்துக்கு புதுஞானமரபு என்று பெயர் சூட்டுகிறேன். இந்தப் பெயர் பிடிக்காதவர்கள் இயங்குமெய்ம்மை என்றப் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Advertisements

8 thoughts on “புதுஞானமரபுக்கான காலம் வந்து விட்டது!

 1. நீங்கள் எல்லோரையும் விட ஒரு ரவுண்டு முன்னுக்கு ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்.
  இது ஒரு நல்லதகவல். ஆனால் பின் நவீனத்துவமே இன்னும் பிடிபடவில்லை.ஒரு வேளை சுழன்று பழைய நிலைக்கு வருகிறோமோ.சுழற்சிதானே எல்லாம்.
  இப்படிக்கதவு திறந்து காட்டியதற்கு கோடி நன்றிகள்.உங்களுக்கு பட்சி ஏதாவது சொல்லுகிறதா? ஏதாவது புதிய தேடும் எந்திரம்?
  மீண்டும் நன்றி.

  1. இந்த இடத்தில் கொஞ்சம் ப்ளேடு போட வேண்டி இருக்கிறது- மன்னிக்கவும்.

   மேல் நாடுகளுக்குத் தீவிர சமய நம்பிக்கைகளையும் அதன் பின்விளைவுகளையும் எதிர்கொள்ளும் வேளை வந்து விட்டது. ஒரு பக்கம் தீவிர இசுலாமியர்களின் அச்சுறுத்தல் என்றால் இன்னொரு பக்கம் அதன் எதிர்வினையாக தீவிர கிருத்தவர்களின் எதிர்ப்பு (யாரும் திட்ட வேண்டாம், தீவிர இந்துத்வா இன்னும் அவர்களை அச்சுறுத்தும் அளவு வளரவில்லை- அதனால் அவர்களை சொல்லவில்லை, அதே காரணங்களால் தீவிர பௌத்தமும், ஜைன மதமும் பேசப்படவில்லை).

   கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்டு இவர்களோடு பேச்சு வார்த்தை நடத்த முடியாது: அதனால் இசுலாமிலேயே பல விதமான இசுலாம்கள் இருக்கின்றன, கிறுத்துவத்திலும் அது போலவே என்று சொல்லி, ஒரு பன்முகப் பார்வையை வளர்த்து விட்டு இந்தப் போக்குக்கு உள்ளிருந்தே குண்டு வைக்கப் பார்க்கிறார்கள். ஜனநாயகப் பார்வையில் இது சரியானதும் கூட.

   அவர்களது விவாதத்தில் நமக்கு இடமில்லை- ஆனால் நாம் அதை நிராகரிக்க முடியாது. சமூக, கலை, தத்துவ நோக்கில் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படும்போது நாம் மட்டும் அனாதையாக இருக்கும் நிலை வரும். அப்புறம் இந்த கிருத்தவ- இசுலாமிய விவாதத்தின் முடிபுகளை நாமும் கொண்டாட வேண்டி வரும்.

   அதனால்தான் முன்கூட்டியே நாமும் காலத்தில் குதித்துவிட வேண்டும் என்று சொல்கிறேன். அதாகப்பட்டது, அமேரிக்கா மீது குண்டு போட்டு அவர்கள் பார்வையை நம் பக்கம் திருப்ப வேண்டும் என்று பொருள் பண்ணிக் கொள்ளக் கூடாது. நாமே நம் அளவில் இது குறித்த கோட்பாடுகளை வகுக்க வேண்டும்.

   இல்லா விட்டால் இந்த விஷயத்திலும் நாம் மொழி பெயர்த்த கலைச்சொற்களை வைத்துக் கொண்டு முடியைப் பிய்த்துக் கொள்ள வேண்டி வரும். பார்க்கலாம், நான் சொன்ன மாதிரி ஜெமோ, சாரு இருவரும் இந்த விஷயத்தில் நம்பிக்கை வரும்படி பேசிக்கொண்டிருக்கிறார்கள்…

 2. புது ஞான மரபு என்கிற பெயரே முரணானது. பின் நவீனத்துவம் என்கிற சொல்லும் அப்படித்தான். புதியன புகுதலும், பழையன கழிதலும் வழுவல. போஸ்ட்செக்யூலர் என்பதற்கு பின் நவீனத்துவம் என்று முதலில் மொழிபெயர்த்ததே தவறு. போஸ்ட்மாடர்னை அதே போல் மொழிபெயர்த்தால் பின் புது ஞானம் என்று அபத்தமாகத்தானே வரும். தற்போது இவ்வளவுதான் உளற முடிந்தது. மேலும் விரிவாக பின்னர் எழுதுகிறேன்.

  1. வீரா, நீங்கள் உளறியது தெளிவாகவே இருக்கிறது 🙂

   வருகைக்கும் இடுகைக்கும் நன்றி- உங்கள் விரிவுரையை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

   1. நட்பாஸிசம்- சூப்பர். செம பஞ்ச். நல்ல பாசிசம் நட்பாசிசம் என்ற அளவில் சரி.

    ஆனால் பிற்காலத்தில் எல்லாரும் மார்க்சிசத்தின் தந்தை மார்க்ஸ், நட்பாசிசத்தின் தந்தை நட்பாஸ் என்று சொல்வார்களே- அதுதான் பயமாக இருக்கிறது.

    அதற்கு பதிலாக வரசித்தாந்தம் என்ற பெயரைப் பரிந்துரை செய்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s