குச்சியோன்- ஒரு உத்தம கலைஞனின் மரணம்

அமேசான் நிறுவனர் ஜெப் பீசோஸ் அண்மையில் ஒரு பட்டமளிப்பு விழாவில் பேசியிருப்பது மிகவும் முக்கியமான ஒன்று- உன் தெரிவுகள்தான் நீ என்கிறார் அவர். உன் எண்பதாவது வயதில் நீ உன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தாய் என்றால், உன் கண் முன் நிற்பது உன் தோல்வியும் சாதனைகளுமாக இருக்காது.  அவற்றை விட கனமானதாக உன் வாழ்க்கையின் வெவ்வேறு காலகட்டங்களில் நீ எடுத்த முடிவுகள் உன் மனதை ஆக்கிரமித்திருக்கும் என்கிறார் அவர். நீ ஒரு சினிக்காக இருக்கப் போகிறாயா, இல்லை ஆக்கப்பூர்வமாக வாழப் போகிறாயா?, மற்றவர்களை உன் புத்திசாலித்தனத்துக்கு காவு கொடுக்கப் போகிறாயா இல்லை கருணை மிகுந்தவனாக வாழப் போகிறாயா? என்றெல்லாம் பொருள் பொதிந்த கேள்விகளைக் கேட்டிருக்கிறார். படித்துப் பாருங்கள்- அற்புதமான உரை.

ராபர்ட் சார்லஸ் ஜோசப் எட்வார்ட் சபாடினி குச்சியோன் 1930ஆம் ஆண்டு பிறந்தவர். சாமியார் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் கலையுலகம் அவரைத் தன்பால் ஈர்த்துக் கொண்டது. படித்து முடித்ததும் அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகள் ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்காவில் உள்ள வெவ்வேறு தேசங்களில் வாழ்ந்தார். சிறப்பான ஓவியங்கள் வரைந்து ஓவியக் கலைஞராகக் காலூன்றப் போராடினார்.

ஒரு மாமாங்கம் கழிந்தபின்தான் பிழைக்கிற வழியைப் பார்ப்போம் என்று முடிவு செய்தார். அவரைத் திட்டுபவர்கள் வீணாய்ப் போன இந்த பன்னிரெண்டாண்டு கால அயரா உழைப்பை ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

லண்டனில் ஒரு ட்ரை கிளீனிங் கடை வைத்து நடத்தினார். அவ்வப்போது தன் கலை தாகத்தைத் தணித்துக் கொள்ளும் வண்ணம் பத்திரிக்கைகளில் கேலிச்சித்திரங்கள் வரைந்தார். ஊஹும்.

அப்போதுதான் ஒரு தவறு செய்தார் குச்சியோன். தன் நண்பர் ஒருவரிடம் 1170 டாலர் கடன் வாங்கி ப்ளேபாய்க்குப் போட்டியாக பெண்ட்ஹவுஸ் என்ற ஒரு பத்திரிக்கையைத் துவங்கினார். இது எவ்வளவு பெரிய தவறு என்று சொல்வதற்கில்லை- அடுத்தது அவர் செய்தது உத்தரவாதமாக தவறேதான்.

ஏதோ ஒரு குளறுபடி. பங்குத் தந்தைகள், பள்ளி மாணவிகள், முதியோர், பாராளுமன்ற உறுப்பினர்களின் மனைவிமார்கள். இவர்களின் பெயர்கள் அடங்கிய ஒரு பட்டியலில் உள்ளவர்களுக்கு இந்த போர்ன் பத்திரிக்கையின் விளம்பரப் பிரதி தவறுதலாக அஞ்சல் செய்யப்பட்டது.

பெண்ட்ஹவுஸ் பற்றிக் கொண்டது. ஒரு லட்சத்து இருபதாயிரம் பிரதிகள் ஒரே வாரத்தில் விற்றுத் தீர்த்தன. குச்சியோன் வாசகர்களின் உயிர்நாடியைப் பிடித்து விட்டார். பணம் கொட்டோ கொட்டென்று கொட்டியது. தன் பத்திரிக்கையில் வேலை செய்ய தந்தையையும் பிள்ளைகளையும் பிற்காலத்தில் சேர்த்துக் கொண்டார்.

ஊடகத் துறையில் அவர் உச்சத்தில் இருந்து கோலோச்சிய நாட்களில் நானூறு மில்லியன் டாலர்களுக்கும் மிகையான சொத்துகளுக்கு அதிபதியாக இருந்தார். சீந்துவாரில்லாத ஓவியங்களை வரைந்த அவர், தேகாஸ், பிகாசோ, ரெண்வார், மதிஸ், சகால் என்று பெரிய பெரிய ஆட்களின் ஓவியங்களை விலைக்கு வாங்கி தன் வரவேற்பறையில் தொங்க விட்டு மகிழ்ந்தார்.

ப்ளேபாயுடன் போட்ட போட்டியில் பெண்ட்ஹவுஸின் நடுப்பக்கமும் அட்டைப் படங்களும் பல கட்டுகளை உடைத்து அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுவதாக இருந்து பயங்கர சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அரசாங்கம் அவற்றை நெறிமுறைப்படுத்தப் போகிறதாமே என்று குச்சியோனிடம் கேட்டதற்கு, “ஜனாதிபதி நிக்சனுக்கும் அவரது அசிஸ்டண்ட் போர்டுக்கும் தங்கள் மலக்குடல்களின் இயக்கத்தைத் தவிர வேறு எதையும் நகர்த்துவதற்குத் தேவையான அறிவோ திறமையோ இருப்பதாக எனக்குத் தெரியவில்லை- ஆனால் அந்த விஷயமேகூட எனக்கு சந்தேகமாகத்தான் இருக்கிறது,” என்றாரராம்.

கொஞ்சம் செக்ஸ், கொஞ்சம் கலகம், கொஞ்சம் அரசியல் (நம் ஊர் பின்நவீனத்துவவாதிகள் இவரோட இந்தப் பாடத்தைதான் படித்திருக்கிறார்கள் போலிருக்கிறது)- இதுதான் இவரது பெண்ட்ஹவுஸ் இதழின் வெற்றி ரகசியம்.

எது எப்படியோ, இப்படியாகப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர் ஏதேதோ முயற்சி செய்தார்- விதி யாரை விட்டது? அதுவும் இப்படிப் பிழைப்பவர்களை சும்மா விட்டு விடுமா? தான் பெருமையாக மாட்டி வைத்த ஓவியங்களை கழட்டி ஏலம் போட்டு அவை இருந்த இடத்தில் தன் ஓவியங்களையே தொங்க விட்டு அழகு பார்க்கும் நாளும் வந்தது.

இணையம் வந்தபின் அச்சில் வருகிற போர்னுக்கு மதிப்பு போய் விட்டதாம். அதோடு போட்டி போட வேண்டி உரித்த கோழிகளை இன்னும் உரித்துக் காட்டப் போய் அதுவரை இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் கெட்டதில், விளம்பரதாரர்கள் ஓடிப் போனார்கள், கடைக்காரர்கள் ஓரங்கட்டினார்கள்.  முடிவில் எல்லாம் வியர்த்தமாய்ப் போனது.

நுரையீரல் புற்றுநோயால் மாண்ட அன்னாரது ஆன்மா சாந்தி அடிய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

தொடர்புடைய சுட்டிகள்-
New York Times
Guardian

4 thoughts on “குச்சியோன்- ஒரு உத்தம கலைஞனின் மரணம்

 1. குச்சியோன் நல்ல பெயர் புனைபெயராக்கலாம்.முடிவுகள் தான் வாழ்க்கையைத்தீர்மானிக்கின்றன சரி. முடிவுகளை எல்லானேரமும் நாங்க எடுக்க முடியுதா என்ன?
  இப்படி தேடி படித்து நல்லவற்றைப்பகிர்வது ஒரு நல்ல சேவை.மஞ்சரி எனக்கு ரொம்ப உதவிய புத்தகம்.நீங்கள் நடமாடும் மஞ்சரி. சார்
  சார் என்ன அது அசாத்திய திறமைசாலி?கிண்டலா? உண்மையா? நம்பீட்டிங்களா. என்னை நன்கு அறிந்தவர்கள் பார்த்தால் சிரிக்கப்போகிறார்கள்.அல்லது சிரிப்பதற்காகத்தான்..?(cognitive distortion-jumping into conclusion) 🙂

  1. நீங்கள் மஞ்சரி படித்தீர்களா என்ன?

   நான் மஞ்சரி படித்தே வளர்ந்தவன். அடுத்த இதழ் எப்போது வரும் என்று காத்திருந்து படித்தவன் இன்னது என்று இல்லாமல் மராத்தி கதையின் மொழி பெயர்ப்பு என்பன மாதிரி மத்திய தர கலை அறிவியல் இலக்கியம் இருக்கும் என்று நினைவு.. அதே மாதிரி கல்கண்டு, முத்தாரம், கலைக்கதிர் இவையெல்லாம் வெவ்வேறு காரணங்களுக்காக நான் படித்த இதழ்கள்!

   எறும்பு தன்னைவிட பத்து மடங்கு எடையைத் தூக்கும்; முந்திரிப் பருப்பைத் தேனில் கரைத்துக் குடித்தால் நீரிழிவு வியாதிக்கு நல்லது என்பன போன்ற சுவையான, நம்பிக்கை அவநம்பிக்கைக்கு அப்பாற்பட்ட செய்திகள் கிடைக்கும். தமிழ்வாணன் ஒரு போனஸ்.

   முத்தாரம் ஏறத்தாழ அதே சாயல்- ஆனால் நகைச்சுவை குறைவு, தமிழ்ச் சாயம் கூட.

   கலைக்கதிர் ஒரு கல்லூரியின் பதிப்பு. அறிவியல் கட்டுரைகள்.

   அசாத்திய திறமைசாலி என்பது உண்மைதான் டாக்டர். உங்கள் கதைகளே அதற்குச் சான்று. ரொம்பப் புகழ்ந்தால் சங்கடப் படுவீர்கள். அதனால் சுருக்கமாக இன்று இணையத்தில் இலக்கியம் என்ற பெயரில் கூத்தடிக்கும் எவரையும் விட உங்களது அமைதியான படைப்புகள் சிறப்பாக இருக்கின்றன என்ற ஒரு வார்த்தையை மட்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

   இதையெல்லாம் ரசித்துப் படித்ததனால்தான் நான் தீவிர இலக்கிவாதியாக மாற முடியாமல் போய் விட்டேன் என்று நினைக்கிறேன்.

 2. மஞ்சரி புதையல்போல புத்தகப்பெட்டிகளைக்கிளற முன்னுக்கும்பின்னுக்கும் பக்க்கங்களற்ற புத்தகங்கள்கிடைக்கும் வரிவிடாது படிப்பேன்.நாவல் சுருக்கம் தி.ச.ராஜு இப்படி..
  மஞ்சரியும் கலைமகளும் வசதியிருக்கும்வரை அப்பா வாங்கியவை.அது தவிர ரத்னபாலாவும் பாலமித்ராவும்.மஞ்சரி மீண்டும் மீண்டும் படித்த புத்தகம்.கல்கண்டு முத்தாரம் எனக்குச்சிறுவயதில் படிக்ககிடைக்கவில்லை.கலைக்கதிர் கடைகளுக்கு வந்தால் படிக்கக்கிடைக்கும்.ஆனந்தவிகடன் அம்புலிமாமா கல்கி என் பெரியம்மாவீட்டில் வாங்குவார்கள்.குமுதம் இன்னொருவீட்டில்வாங்குவார்கள்.
  அதுதவிர பலநாட்டு உலகச்சிறுகதைகளின் தொகுப்புக்க்கள் பல அப்பா சேகரித்துவைத்திருந்தார்.short story course என்று அமெரிக்கன் கொரஸ்பொண்டென்ஸ் .சிறுசிறுபுத்தகங்களாக அவையும் இருந்தன.அவர்கள் திருத்தியனுப்பிய கதைகளும் இருந்தன.

  எனக்கு ஆரம்ப வாசிப்புச்சூழல்பரவாயில்லை நன்றாகத்தானிருந்தது என்று இப்போது தோன்றுகிறது.
  தீவிர இலக்கியவாதியாக மாறினால் எல்லாவற்றையும் ரசித்து வாசிக்கும் சந்தோஷம் போய்விடும் என்று நினைக்கிறேன்.
  உங்களை வாசிப்பு தடுக்கிறதா என்ன?

 3. தீவிர இலக்கியவாதி- சும்மா விளையாட்டுக்கு சொன்னது. உண்மையை சொன்னால் தன் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் சூடு தணியாமல் இடம் மாற்றித் தருபவன்தான் தீவிர இலக்கியவாதி, இல்லையா? அதற்கு வாசிப்பு ஒரு தடை அல்ல. தன்னை வாசிக்கத் தெரிய வேண்டும், அதுதான் தடை.

  உங்கள் வாசிப்புச் சூழல் சிறப்பாகவே இருந்திருக்கிறது. உங்கள் தந்தையார் பெருமதிப்புக்குரியவர் என்று நினைக்கிறேன். இப்போது இங்கே எல்லா வசதிகளும் இருந்தாலும் கூட அப்படி வாசிப்பவர்கள் அதிகம் இல்லை. வார்த்தைகளின் காலம் போய் பிம்பங்களின் காலம் வந்திட்டதோ என்றுகூடத் தோன்றுகிறது. பெரியவர்களும் பிள்ளைகளுக்கு அப்படி புத்தகங்களையெல்லாம் வாசிக்க தொகுத்து வைப்பதில்லை….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s