ஜோசப் ஸ்டீன்- கூரை மேல் ஒரு கூத்துக்காரன்

நான் மிகவும் ரசித்துப் பார்த்த திரைப்படங்களில் ஒன்றான Fiddler on the Roof என்ற படத்தின் (முந்தைய) நாடக வடிவை எழுதிய ஜோசப் ஸ்டீன் தனது தொண்ணூற்று எட்டாவது வயதில் காலமானார். சில பேரின் வாழ்வை விட அவர்களது செயல்களே பேசப்படுவனவாக இருக்கின்றன. அவர்களும் நம்மைப் போல் உணர்ச்சிகள், வெற்றி தோல்விகள், சவால் சாதனைகள் என்று வாழ்ந்தாலும் அவர்கள் மனிதர்கள் என்ற அளவையும் மீறி தங்கள் படைப்பின் நிழலாக ஆகி விடுகிறார்கள். ஜோசப் ஸ்டீன் அப்படிப்பட்ட ஒரு சாதனையாளர்.

ரஷ்யாவில் ஊரை விட்டு விரட்டப்படுவோம் என்ற அச்சத்தில் இருக்கிற ஒரு கிராமத்தின் யூத மக்களைக் குறித்த கதை. மரபை உயர்த்திப் பிடிக்கிற கறாரான, ஆனால் பாசமான அப்பாவாக வருபவரின் நடிப்பில் நடிகர் திலகம் சிவாஜியின் சாயலைப் பார்க்கலாம்.

அவருக்கு மூன்று பெண்கள். மூவருக்கும் நல்ல மாப்பிள்ளையைத் தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அத்தனை பேரும் தங்கள் மனதுக்கேற்ற மணாளனை வரித்துக் கொள்கிறார்கள். முதலில் சிங்கம் போல் கர்ஜனை செய்கிற இந்த அப்பா மெல்ல மெல்ல நெகிழ்ந்து கொடுத்து கண்டும் காணாமல் தன் பெண்களின் விருப்பத்துக்கு விட்டுக் கொடுப்பது அருமையாக படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. சிறப்பான நடிப்பு.

மறக்க முடியாத படம்.  நான்கைந்து பேரிடம் இதன் டிவிடியைக் கொடுத்து பார்க்கச் சொல்லி இருக்கிறேன். இந்த வாரக் கடைசியில் மறுபடியும் பார்க்கப் போகிறேன். ஸ்டீனின் மறைவு இப்படத்தை எனக்கு நினைவூட்டி விட்டது.

யோசித்துப் பாருங்கள்- வாழ்க்கை ஒரு மர்மமான விஷயம்- அதன் புதிர்களுக்கு விடை கிடையாது. அது ஒரு மாயக்காரனின் படைப்பு- அழிவின் விளிம்பில் இருக்கிறோம் என்று தெரிந்தாலும் கூட அதன் உன்னதங்களை, இன்பங்களைக் கொண்டாடாமல் இருக்க முடிவதில்லை, இல்லையா?

நம் வாழ்வே மரணத்தின் நிழலில் நடத்தப்படுகிற ஒன்றுதான். ஆனால் ஜீவிதத்தின் பாதுகாப்பின்மை ஒரு வெஞ்சூரியனாய்த் தகித்து, வாழ்வின் நிலையாமை எனும் கருநிழலை இன்னும் நீண்டதாக, இன்னும் கரியதாக, இன்னும் கடுமையான அச்சுறுத்தலாக நம் கண் முன் நிறுத்தும் கணங்களில் கூட வாழ்வின் அழகுகள் வெளிர்த்துப் போவதில்லை. சொல்லப்போனால் அதன் வண்ணங்கள் இன்னும் வலிய தாக்குதலாய் நம் இதயத்தினுட் புகுந்து பிரகாசிக்கின்றன- இன்னும் கூரிய முனைகளைக் கொண்டதாய், காணும்போதே கண்ணீர் வரவழைப்பதாய் உள்ளது இவ்வுலகின் இருப்பு. இந்த மாயத்தைக் கொண்டாடுகிறது இப்படம். வாய்ப்பு கிடைத்தால் கண்டு மகிழுங்கள்.

மரணம் வாழ்வின் மறுதலிப்பல்ல. ஆக்கத்தை வற்றச் செய்வதில்லை அழிவு. எண்ணையைக் குடிக்கும் திரியின் மரணப் பாதையை வெளிச்சமிடுகிறது அதன் தீபம். ஏற்கனவே ஒரு முறை மேற்கோள் காட்டியிருக்கிறேன், இருந்தாலும் நினைவை விட்டு நீங்காததால் ஜெயமோகன் அவர்கள் எழுதியது திரும்பவும் நினைவுக்கு வருகிறது-

“காலையொளியில் வைரம்போலச் சுடர்விட்டு இலைநுனியில் அமர்ந்திருந்த புழு ஒன்றைக் கண்டேன். வாழ்க்கை என்பது மாபெரும் வரம் என்று அப்போது என் அகம் அறிந்தது. இந்த உலகின் ஒவ்வொரு துளியும் பேரழகு கொண்டது, மகத்தானது. இதன் ஒவ்வொரு கணமும் அமுதம்.

வாழ்க்கைக்கு அப்பால் ஏதுமில்லை, வாழ்க்கை வழியாகச் சென்றடையக்கூடியதென்றும் ஏதுமில்லை. வாழ்க்கையே தன்னளவில் முழுமையானது. நேற்றிலாது நாளையிலாது இன்றில் வாழமுடிந்தால் அதுவே வீடுபேறு…”

பிட்லர் ஆன் த ரூப் மூலம் பெரும்புகழ் கிடைத்தாலும், ஜோசப் ஸ்டீன் தான் நாடக வடிவாக்கிய Zorba the Greek என்ற கதைதான் தன்னை மிகவும் பாதித்தது என்கிறார். அக்கணமே சாகக்கூடியவன் போல் கணத்துக்கு கணம் அதன் அருமை தெரிந்து ஆராதிக்கும் பேருணர்ச்சி கொண்ட ஜோர்பாவின் கதையை எழுதி அவர் கற்றுக் கொண்டதே அதிகமாம்- “நீ சாகும் நாள் வரை என்ன செய்கிறாயோ அதுதான் வாழ்க்கை, அதனால் அதன் முழுமையையும் இன்னும் நன்றாகப் பயன்படுத்திக் கொள்- நீ செய்கிற காரியத்தில் உனக்கு பெருமை இருக்க வேண்டும்,” என்கிறார் அவர்.

பிட்லர் ஆன் த ரூப் அதைத்தான் உணர்த்துகிறது. ஸ்டீனின் உள்ளுணர்வுகள் இப்படத்தில் மறைந்திருத்து பேசி, ஜோர்பாவில் அவை வெளிப்படையான உரை வடிவம் கண்டிருக்கின்றன என்று நினைக்கிறேன்.

ஒரு நல்ல வாழ்க்கை. அதை எப்படி வாழ வேண்டும் என்று ஆர்ப்பாட்டமில்லாமல் அடிதடி செய்யாமல் மகிழும் வகையில் தந்தவர் ஜோசப் ஸ்டீன். அவருக்கு நாம் கடமைப் பட்டிருக்கிறோம்.

அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

நன்றி- The New York Times

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s