நீல் பூஜீடா- தன் வரலாற்றைக் கடந்த கலைஞன்

ஒன்றை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்- ஒருத்தரைத் திட்டுவதானாலும் சரி, குறை சொல்வதானாலும் சரி அதற்கு அடிப்படையில் நமக்கு அவர் மேல் ஒரு அன்பும் பரிவும், குறைந்த பட்சம் மரியாதையுமாவது இருக்க வேண்டும். அதே போல். ஒருத்தரைப் பாராட்டும்போதும் இப்படிதான்- மனதில் அவர் மேல் வெறுப்பையும் கோபத்தையும் வைத்துக் கொண்டு பாராட்டுவதை விட வேறு வேலை பார்த்துக் கொண்டு போகலாம்.

என்னடா இவன், சம்பந்தா சம்பந்தமில்லாமல் தத்துவ முத்துகளை உதிர்க்கிறானே என்று பார்க்கிறீர்களா? நாம் நமது அஞ்சலிக் குறிப்புகளில் வாழ்க்கைக்கு உதவக் கூடிய ஒரு விஷயத்தைப் பேச வேண்டும் என்பதை வழக்கமாக வைத்திருக்கிறோம். அந்த வகையிலான ஒரு பீடிகையோடு துவங்கினால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன், நன்றாக இல்லை. சரி போகட்டும்.


நீல் பூஜீடா ஹவாயில் பிறந்தவர். அவரது உண்மையான பெயர் சடாமிட்சு பூஜீடா. அப்பா ஒரு கரும்புத் தோட்டத்தில் இரும்புக் கொல்லராய் வேலை செய்தார். நீல் என்ற பெயரை அவருக்குப் பள்ளியில் சூட்டினார்கள். ஹானலூலூவுல் பள்ளிப் படிப்பு முடிந்ததும் லாஸ் ஏஞ்சல்ஸில் ஓவியம் பயின்றார். ஆனால், இந்தப் பதிவுகளில் பெரும்பாலான இடங்களில் குறுக்கிடுகிற இரண்டாம் உலகப் போர் பூஜீடாவின் வாழ்க்கையிலும் விளையாடியது.

ஜப்பானிலிருந்து வந்து குடியேறியவர்களுக்குப் பிறந்தவராக இருந்ததால் பூஜீடா ஒரு கிடப்பு முகாமில் (internment camp) இருத்தி வைக்கப்பட்டார். ஆனால் மனதளவில் அமெரிக்கராக இருந்த அவர் அடுத்த ஆண்டு தன்னையொத்தவர்களுடன் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்து இத்தாலி மற்றும் பிரான்சில் போர் புரிந்தார். கிழக்கு பசிபிக் பிரதேசத்தில் நடந்த போர் சம்பவங்களிலும் பங்கேற்றார் என்றுத் தெரிகிறது.

அமேரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டு வீசியபோது அவரது உணர்வுகள் எப்படி இருந்தன என்றுத் தெரியவில்லை. ஆனால் அவர் அமெரிக்கராகவே தன் வாழ்வைத் தொடர்ந்தார். ஐம்பது ஆண்டு காலப் பார்வையில் உலக வரலாற்றில் இது போன்ற முரண்கள் சாதாரணம்.

இன்னும் சொல்லப்போனால் இந்தப் பார்வையை ஆயிர ஆண்டு காலமாக விரித்தோமானால் இதுதான் மனித குலத்தின் தலைவிதி என்றுகூட சொல்லலாம். காலத்தின் கட்டாயங்களுக்கேற்ப கூட்டம் கூட்டமாக இடம் பெயர்வதும், தன் இருப்பை நிலை நிறுத்திக் கொள்வதற்காக அழிப்பதும், அதில் தோற்றுப் போகிறவர்கள் அழிக்கப்படுவதும் இயல்பான ஒன்றே. இதில் என்ன ஒரு ஆறுதல் என்றால், மனிதனால் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்ட நியாண்டர்தாள்களைத் தவிர, நம் எல்லாருடைய மரபணுத் தொகுப்பிலும் நம் அனைவரின் அடையாளங்களும் இருக்கின்றன. நம் ஒவ்வொருவரும் நம் ஆப்பிரிக்க அன்னை லூசி தொடங்கி அதன் பின் புவியின் வரைபடத்தைப் பரவிய ஒவ்வொரு இனத்தின் மரபுகளைச் சேர்ந்தவர்களின் தடங்களையும் நம் உடலில் சேமித்து வைத்திருக்கிறோம். ஒரு வகையில் எங்கோ தென்னமெரிக்காவில் அழியும் கடைசி வனவாசி நம் உடலில் தன் பூர்வகுடியின் மரபணுக் குறிப்பாக இன்னும் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறான் என்று சொல்லலாம்.

நீல் பூஜீடா இசைத்தட்டுகள் மற்றும் புத்த அட்டைகளை சிறப்பாக வடிவமைத்த கலைஞர். அதுவரை ஒப்புக்கு எதையோ போட்டு இசைத்தட்டுகளின் அட்டையை ஒப்பேற்றி வந்தார்களாம். பூஜீடா தேர்ந்த புகைப்பட மற்றும் ஓவியக் கலைஞர்களை கொண்டு அவற்றை வடிவமைக்கும் பழக்கத்தை கொண்டு வந்திருக்கிறார். இவர் மைல்ஸ் டேவிஸ் இசைத்தட்டு ஒன்றுக்கு வடிவமைத்த அட்டை மிகவும் பாராட்டப்படுகிறது.

இது போல் இன்னும் பல புகைப்படங்கள் 17dots என்ற தளத்தில் உள்ளன.

அதே போல் அவர் வடிவமைத்த த காட்பாதர் மற்றும் ட்ரூமேன் கபோட்டின் இன் கோல்ட் ப்ளட் என்ற புத்தக அட்டைகளும் பெரிய அளவில் இன்னமும் பேசப்படுகின்றன.

இது போல் இன்னும் பல புகைப்படங்கள் Spine Out என்ற வலைதளத்தில் உள்ளன.

நாம் எங்கே இருக்கிறோம் என்ன செய்கிறோம் என்பதைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு நமக்கு ஓரளவுக்குத்தான் தரப்படுகிறது. ஆனால் நமக்கென்று கிடைக்கும் தளத்தில் ஆர்வத்தோடு நம் இருப்பின் வெளிப்பாட்டை செய்தோமானால் நாமிருக்கும் காலத்தில் நம்மோடிருப்பவர்களின் உன்னத உணர்வுகளை எதிரொலிப்பவர்களாக நாம் இயங்கக் கூடும். காரணம் நாம் எங்கிருந்தாலும், எந்த நிலையில் இருந்தாலும், நம் தனி வரலாறு எப்படிப்பட்டதாக இருந்தாலும், மனிதர்கள் என்ற அளவில் ஒரு பத்து பதினைந்து உணர்ச்சிகளையே நாம் அனுபவிக்க முடியும்.

அந்த உணர்வுகளை எழுப்புகிற நினைவு, எண்ணங்கள் வேறுபடலாம்- ஆனால் உணர்வுகளின் இயல்பு நம்மெல்லாருக்கும் ஒன்றுதானே? ஒரு உயர்ந்த கலைஞன், தன் பிரத்யேகமான நினைவுகளையும் அதனூடெழும் உணர்வுகளையும் ஆழ அனுபவித்து அறிந்து, அவற்றைக் கடந்தவொரு படைப்பை நமக்குரிய அனுபவமாக நிகழ்த்திக் காட்டுகிறான், இல்லையா?

நீல் பூஜிடோ எண்பத்து ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

The Telegraph , The New York Times

Advertisements

4 thoughts on “நீல் பூஜீடா- தன் வரலாற்றைக் கடந்த கலைஞன்

 1. கோட் பாதர் அட்டைப்படம் எனக்குப்ப்டித்தது. பூஜிடோ படத்தைப்போடவில்லையே.
  வாழ்ந்து மறைந்த சாதித்த மனிதர்களின் வாழ்க்கையூடாக வாழ்தலுக்கான அர்த்தங்களை புரிந்துகொண்டு செல்லும் உங்கள் எழுத்து சிறப்பாக இருக்கிறது.இப்படிதேடி தேடலைப்புரிதலோடு பகிர்தலுக்கு நன்றி.
  capote திரைப்படம் பாத்தீங்களா?

  1. போட்டு விடுகிறேன்.

   என்னைவிட நன்றாக நீங்கள் எழுதுகிறீர்கள். இன்னும் நிறைய பேர் எழுதுகிறார்கள். சுர்சுருப்பாக யோசிக்கக்கூடிய அ———-ன்கூட நன்றாக எழுதக்கூடியவர். நான்தான் என் முன்னோடிகளான உங்களுக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டும்.

   படம் பார்க்கவில்லை. நன்றாக இருக்கிறதென்றால் பார்க்க முயற்சி செய்கிறேன். அவர் புத்தகத்தின் அட்டையிலும் ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது. ரத்தத்துளி உறைந்திருப்பதைக் காட்ட சிவப்பு வண்ணத்தைத் தவிர்த்திருக்கிறார் பாருங்கள்…படித்தேன்.

 2. இதென்ன அநியாயம். சிறப்பு என்பதும் நன்று என்பதும் ஆளுக்கு ஆள் ரசனை மாறும்.நீங்கள் தன்னடக்கமானவர் என்பதால் இப்படியான விஷயங்களில் நீங்கள் சொல்வதற்கு எதிர்மாறாய்த்தான் எடுத்துக்கொள்வேன்.உங்கள் கருத்துக்கு நான் முற்றிலும் எதிர்.
  உங்கள் எழுத்தாற்றல் உங்களுடைய திறமை
  இதுவரை படித்த எல்லா எழுதப்பட்டவைகளுக்குமே உங்கள் நன்றி போய்ச்சேரவேண்டும்.
  முன்னோடி????? என்பதற்கு அர்த்தம் மாற்றி விட்டார்களா என்ன?

  ஏன் ஒரு உண்மைப்புகழ்ச்சியை ஏற்பதில் அவ்வளவு தயக்கம்? 🙂

  இந்த நாவல் எழுதிய வரலாறுதான் capote பாத்திர நடிப்புக்கு ஒஸ்கார் கிடைத்தது( கதைக்கு மாருதிகார்)

 3. கபோட் படம் தேடிப் பார்க்கிறேன்.

  நானும் உண்மையைத்தான் சொன்னேன். அபராஜிதன் பெரிய பெரிய விஞ்ஞானிகளின் தளங்களுக்குப் போய் அவர்களே தலை சுற்றி விழுகிற மாதிரி எவ்வளவு அருமையாக கேள்விகள் கேட்கிறார்! உங்கள் கதைகள் பற்றி சொல்லவே வேண்டாம். இதுதவிர இணையத்திலேயே எவ்வளவு பேர் மிக நன்றாக எழுதுகிறார்கள். நாம் இப்படிப்பட்ட எல்லாருக்கும் ரசிகராக இருப்பதில்தான் பெருமைப்பட வேண்டும். என்று தோன்றுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s