ஹோனோர் பிராஸ்ட்- மறைபொருளில் பாய்ந்தது புத்தொளி

ஓங்கி உயர்ந்து நின்றது அந்தக் கட்டிடம்- நானூற்று அறுபது அடி அதன் உயரம். அலைகள் ஆர்ப்பரிக்கும் சிறு தீவில் அதைக் கட்டியிருந்தார்கள்- கற்களிடையே ஈயத்தை உருக்கிப் பூசி. அந்தக் கட்டிடத்தின் உச்சத்தில் இருந்த கோபுரத்தில் ஒரு கண்ணாடி வைத்து- பகற்பொழுதில் அது சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும்- இரவில் அந்த அறையில் ஏற்றி வைக்கப்பட்ட நெருப்பின் ஒளி அதைச் சூழ்ந்திருந்த இருளில் செங்கீற்றாய்க் கடலூடே பரவும். ஏறத்தாழ ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள கப்பல்களின் மாலுமிகளுடைய களைத்த கண்கள் இச்சுடரைக் கண்டதும் ஆறுதலடையும்- அவர்களது ஆபத்துகள் நிறைந்த பயணங்கள் முடியும் தருணம் தொலைவில் இல்லை: அதோ தெரிகிறது அடைக்கலம்- துறைமுகம்.

இந்தக் கட்டிடம் கட்டப்பட்டது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர். இதைக் கட்டிய அரசன், கட்டிடக்கலைஞனிடம் என் பெயர் தவிர வேறு யார் பெயரும் இங்கு பொறிக்கப்படக் கூடாது என்று ஆணையிட்டிருந்தான். “தெக்ஸிபேணஸின் மகன், நீடஸைச் சேர்ந்த சொஸ்திராடஸ் கடல் வழிப் போனோரைக் காக்கும் கடவுளருக்காகச் செய்தது” என்று அந்தக் கட்டிடத்தின் அடித்தளத்தில் ஒரு கல்லில் பதித்தான் அவன், அதன் மேல் ஒரு பூச்சு பூசி, அதில் வேறொரு கல்லைப் பதித்து தன் அரசனைக் கௌரவித்து கல்வெட்டு செய்தான். அவன் கட்டுவித்தது ஒரு மாபெரும் தெய்வத் தீபாராதனை: கடலில் காலங்காலமாக உயிரைப் பணயம் வைத்துப் பயணிப்போருக்கு வழி காட்டித் துணை நிற்கும் தன் கடவுள்களுக்கு அது ஒரு அஞ்சலி.

காலங்கள் போயின. பல நூற்றாண்டுகளின் கழிவில் மேல்பூச்சு உதிர்ந்து, அரசனின் பெயர் மறைந்து, உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் அலேக்ஸான்ரியாவின் கலங்கரை விளக்கத்தைக் கட்டிய உன்னதக் கலைஞனின் பெயர் ஒரு வழியாக வெளிவந்தது.


நன்றி- விக்கிபீடியா

பின்னர் சிதிலமடைந்து தண்ணீரில் மறைந்த இந்த அதிசயத்தைக் கண்டறிய 1968ல் யுனெஸ்கோ ஒரு அகழ்வாராய்ச்சிக் குழுவை அலெக்ஸான்ட்ரியாவுக்கு அனுப்பியது. அதற்குத் தலைமை தாங்கிய அம்மணி தனது தொண்ணூற்று இரண்டாவது வயதில் மறைந்த ஹோனோர் பிராஸ்ட்.

சைப்ரசில் பிறந்தவர். பெற்றோர் இறந்ததும் இங்கிலாந்தில் வில்பிரட் ஈவில் என்பவரின் தத்துப் பிள்ளையாய் வளர்ந்தவர். கலை படித்தவர். பொறுப்பான பதவி வகித்தவர். ஒரு நாள் கை பம்பு ஒன்றில் கிடந்த டைவிங் சூட்டால் கவரப்பட்டார். அது இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட ஒன்று. அதை அணிந்து கொண்டு தன் வீட்டிலிருந்த கிணறு ஒன்றில் இறங்கினார்.

“கிணற்றில் செதுக்கப்பட்ட சுவர்களில் பாதரச மணிகளாய் காற்றுக் குமிழ்கள் ஒட்டி இருந்தன. கிணற்றின் தரையில் வெவ்வேறு நிலைகளில் மக்கிப் போன இலைகள் படுக்கை விரித்தன. நீரினாழத்தில் மனம் தன் கவலைப்படும் பழக்கத்தை இழக்கிறது, அதன் மோன நிலையில் தியானம் செய்திறன் கூடுகிறது”

என்கிறார் அவர்.

அவர் ஒரு அகழ்வாராய்ச்சியாளராக மாறி விட்டார்.

காலம் கொள்ளை கொண்டவர்களின் நினைவுகளை உயிர்ப்பித்து, வாழ்பவர்கள் மனதில் இருத்துகிறார்கள் அகழ்வாராய்ச்சி செய்பவர்கள். எவ்வளவு பெரிய நாகரீகமாக இருந்தாலும் சரி, கால வெள்ளத்தில் மறைந்து மண்ணோடு மண்ணாகிப் போன நிலையில் அது இவர்களுடைய பார்வை பட்டு விழித்துக் கொள்ளக் காத்திருக்கிறது. வாழும் மக்கள் இவர்களின் ஆய்வுகளை செவித்தால் அடையக்கூடிய நன்மைகள் எண்ணற்றவை.

அத்தகு சிரஞ்சீவித்துவத்தை உறுதி செய்பவராக இருந்தார் ஹோனோர் பிராஸ்ட். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

Advertisements

3 thoughts on “ஹோனோர் பிராஸ்ட்- மறைபொருளில் பாய்ந்தது புத்தொளி

 1. //அதன் மேல் ஒரு பூச்சு பூசி, அதில் வேறொரு கல்லைப் பதித்து தன் அரசனைக் கௌரவித்து கல்வெட்டு செய்தான். //

  இது புதுசு… நல்லாயிருக்கு..

 2. நீரின் ஆழத்தில் வெளிப்படுகிற அமைதியும் ஆழமானது.தியானம் செய்யும்போது அமைதியை உருவகிக்க ‘ஆழ்கடலின் அமைதி’’ என்று முன்பு மனதில் உருவாக்க
  முயற்ச்சித்தது ஞாபகம் வருகிறது.
  சூழலில் இருக்கும் அமைதி உடலில் எங்கும்பரவுவவதாக பாவனை செய்தால் மனம் தளர்ந்து அமைதியாகும்.காலப்போக்கில் எல்லாசப்தங்களுக்கும் பின்னே அமைதி பகைப்புலமாக இருப்பதை உணரலாம்.சத்தங்களுப்பின்னே இருக்கும் அமைதி மனதில் பரவுவதாக வந்தவுடன் தளர்த்த சூழல் அமைதி தேவைப்படாது

  அவருடைய வாழ்க்கை புதைந்தவைகளை கிளறுகிறது.அவர் பணியும் அதுதானே.

  நன்றி பாஸ்.உங்கள் எழுத்து நன்றாயிருக்கிறது என்று சொன்னால் அதற்கு விளக்கம் சொல்லுவீர்கள்.அதனால் நன்றாயிருக்கிறது என்பதைச் சொல்லவில்லை. எனக்குள் நினைத்துக்கொண்டேன். 🙂

  1. நானும் தியானம் செய்ய முயற்சி செய்திருக்கிறேன்- கோபம்தான் அதிகமாகிறது. அவ்வளவ்வ்வ்வு மன அழுத்தம். இது நமக்கு சரிப்படாது என்று விட்டு விட்டேன்.

   இப்போது உண்மையான தியானம் கணத்துக்குக் கணம் நிகழ்த்தப்படுவது- உட்கார்ந்து செய்கிற தியானம் சும்மா இருக்கையில் என்னென்ன எண்ணங்கள் வருகின்றன என்று பார்த்து நம் மனச்சாய்வுகளை அறிந்து கொள்வதற்கானது என்று முடிவு செய்து விட்டேன்!

   எழுத்து- நன்றி. ஆனால் நான் நன்றாக எழுதுவதாக நினைக்கவில்லை. ஏன் என்று எழுதுவதனால் பெரிய ஒரு கதாகாலட்சேபம் பண்ண வேண்டி வரும் 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s