இஹுத் நெட்சர்- காலத்தின் வதனங்களில் முகிழ்த்த முரண் நகை

எரோது. நாம் எந்த சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்தக் கொடுங்கோலனை அறியாதிருக்க முடியாது. கம்சன் கதையில் வருவதுபோல், கிருஸ்து பிறந்து விடுவார் என்ற அச்சத்தில் அத்தனை ஆண் குழந்தைகளையும் கொன்று போட்டவன்.

தன் மனைவின் கற்பை சந்தேகப்பட்டு அவளைக் கொன்றான். அவனது மூத்த மகன் தனது தம்பிகள் இருவரும் எரோதுக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்று சொன்னதை நம்பி பெற்ற பிள்ளைகளையே கொன்றவன். அந்த மூத்த பிள்ளை பொய் சொல்லி இருக்கிறான் என்று தெரிந்ததும் மரணப்படுக்கையில் கிடந்த எரோது அவனையும் தீர்த்துக் கட்டத் தயங்காதவன். தான் சாவதற்கு ஐந்து நாட்கள் முன் செய்த காரியம் இது.

தனது மரணம் ஜூடாவைத் துக்கத்தில் ஆழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த நகரின் பிரமுகர்களை சிறை பிடித்து, தான் மாண்டதும் அவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டவன். தனது கல்லறையை ஏழு மாடி உயர மாளிகையாக ஒரு மலையின் மேல் எழுப்பி வைத்தவன்.

இந்த இடத்தை அவன் ஏன் தேர்ந்தெடுத்தான் என்பதற்கு ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது. கலிலீய ஆளுநராக இருந்த எரோது ரோமப் பேரரசு ஒரு போரில் தோற்றபோது அதன் விசுவாசியாக மாறி, தன் குடும்பத்தோடு ஐயாயிரம் பேரைக் கூட்டிக் கொண்டு தப்பி ஓடினான். அப்போது அவனது தாய் பயணித்த வண்டி குடை சாய்ந்தது விட்டதாம். தன் தாய் இறந்து விட்டாள் என்ற துக்கத்தில் கத்தியைத் தன்னுள் செருகி சாவதற்கிருந்தான். கடைசி கணத்தில் தன் தாய் பிழைத்திருப்பதை அறிந்து, கத்தியை தூக்கிக் கொண்டு தன் எதிரிகளின் மேல் பாய்ந்தான்.

வெற்றி பெற்றதும், எனக்கு சாவு எங்கே நேர்ந்தாலும் என் பிணம் இங்கேதான் விழ வேண்டும் என்று முடிவு செய்தான். அந்த மலையில் தனக்கு அரண்மனை போன்ற ஒரு கல்லறை எழுப்பினான். தனக்கு ஏழு மாடி உயர கல்லறை மட்டும் கட்டிக் கொள்ளவில்லை, அடிமைகளைக் கொண்டு மண் குவித்து மலையையே அறுபத்து ஐந்து அடி உயர்த்தினான்!

இவனது எதிர்பார்ப்புகளுக்கு மாறாக எரோது செத்ததும், சிறையிலிருந்தவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஊரே விழாக்கோலம் பூண்டது.

இந்த எரோது கற்பனை பாத்திரமல்ல. இவனது கல்லறை இஹுத் நெட்சர் என்பவரால் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கண்டு பிடிக்கப்பட்டது. அகழ்வாராச்சியாளரான இவர் எரோதின் சவப்பெட்டியைக் கூட கண்டு பிடித்துக் கொடுத்தார்.


நன்றி- Israel Tour Guide

சராசரியாக நாளொன்றைக்கு 146,357 பேர் மரணமடைவதாக சொல்கிறார்கள். இந்த ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பில்லாததுதான். இவர்களில் எவரையும் வீணே வாழ்ந்தவர்கள் என்று சொல்ல முடியாது. எப்படி ஒரு சாமியைக் கும்பிடுவதன் மூலம் அத்தனை சாமிகளையும் கும்பிடுகிறோமோ, அந்த மாதிரியே நாம் இந்தப் பதிவின் வாயிலாக ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம் அத்தனை பேருக்கும் அஞ்சலி செலுத்துகிறோம். படிப்பதற்கு சுவாரசியமாக இருப்பவரைத் தேர்ந்தெடுக்கிறோம், அவ்வளவுதான். இவரது வாழ்வு மூலம் கிடைக்கிற படிப்பினை ஒரு போனஸ். அந்த வாழ்விலேயே இன்னொருத்தர் நாம் காண்பதிலிருந்து முற்றிலும் வேறு விதமான படிப்பினையைக் காணலாம். அது தவறான ஒன்றாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அதுவும் சரியாகவே இருக்கக் கூடும்.

எரோது மன்னன் கெட்டவன் என்பதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் இருப்பதற்கில்லை. ஆனால் அவனே கூட, தன் தாய் பயணித்த வண்டி குடை சாய்ந்து அவள் இறந்து விட்டாள் என்று நினைத்து தற்கொலை செய்து கொள்ள முனைந்தான். அத்தனை பாசக்காரப் பிள்ளை. இருந்தாலும் கூட, ஒரு இருபது ஆண்டுகள் போன பின், அந்தத் தாயே தனக்கு எதிராக சதி செய்கிறார் என்று சந்தேகப்பட்டிருந்தால் அவரை அவன் கொன்றிருக்கவும் கூடும். மனித மனம் எப்போது எப்படி மாறும் என்று சொல்வதற்கில்லை.

நம் அனைவரின் உள்ளத்திலும் இந்த சாத்தியங்கள் இருக்கின்றன. நாம் எரோதாகவும் வாழக் கூடியவர்கள், ஏசு பிரான் போலவும் வாழக் கூடியவர்கள். நாம் எப்படிப்பட்ட வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது. சில சமயம் இதுவும்கூட காலத்தின் கட்டாயத்தால் நம் கைமீறிப் போகிறது. இது எதையும் வரைமுறைப்படுத்தி இது இப்படிதான் என்று தீர்மானமாக சொல்வதற்கில்லை.

அதனால்தான் இப்படி தோன்றுகிறது- நாம் வெறுப்பதானால் அது நமக்கு வேண்டப்பட்டவர்கள் பாலிருப்பதாக இருக்கட்டும்; நமது வசவுகள் நம் அன்புக்குரியவர்களைப் போய் சேரட்டும்; நமது கண்டனங்கள் நமது நேசத்திலிருந்து பிறக்கட்டும். உன் எதிரியையும் நேசி என்று ஏசு பிரான் சொன்னதை இப்படிதான் பொருள் செய்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். Resist not evil என்று கூட விவிலியத்தில் படித்ததாக நினைவு.

தீயவை நமக்கு வேறானவை என்ற எண்ணம் ஒரு பிழை. தீமை நமக்கு அன்னியமான ஒன்றல்ல. நமது வாழ்வின் சாத்தியங்களில் ஒன்றுதான் அங்கே அவர் மூலம் நிகழ்த்தப்படுகிறது. அதற்காக அதை எதிர்க்காமலிருக்க முடியாது- நாமே நமது கெட்ட எண்ணங்களை மட்டறுப்பதில்லையா? அப்படிப்பட்ட எதிர்வினை அபிமானத்திலிருந்து வர வேண்டும் என்று நினைக்கிறேன். அது இயலாத இடத்தில் அமைதியாக இருப்பதே நல்லது. பொய்ப் பாசம், வஞ்சப் புன்னகை, தேசபக்த வேடம் – இதுவெல்லாம் நமக்கெதிராக நாமே நிகழ்த்திக்கொள்ளும் வன்முறை. அதற்கான அவசியத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.

எப்படியோ.

தன்னை மிஞ்சி எவருமில்லை என்று அரசாண்ட எரோது, தனது கல்லறையைக் கூட இயற்கையாய் இருக்கிற மலையை மண் போட்டு உயர்த்தி, அங்கு ஒரு மாளிகை கட்டி அடக்கம் செய்துக்கொண்ட எரோது- கால வெள்ளத்தின் சுழலில் சிக்கி எங்கு புதைக்கப்பட்டிருக்கிறான் என்ற நினைவே மறைந்து மண்ணோடு மண்ணாகி சுவடழிந்து போனான்.

அந்தக் கல்லறையை அடையாளம் கண்டு, அவனது சிதிலமான சவப்பெட்டியைக் கண்டெடுத்ததன் மூலம் அவனது நினைவுகளை, அவனது ஆணவத்தை, காலத்தின் முகத்தில் அவன் உயர்த்திக் காட்டிய கட்டை விரலை புதுப்பித்தார் இஹுத் நெட்சர்.

எழுபத்தைந்து வயதான இவர் வேறொரு அகழ்வாராய்ச்சியின் போது, அங்கு வெட்டப்பட்டிருந்த குழியை சுற்றி எழுப்பப்பட்டிருந்த மர சட்டகத்தின் மீது தவறுதலாக சாய்ந்திருக்கிறார். அது முறிந்து, பதினைந்தடி ஆழ இருக்கிற பள்ளத்தினுள் விழ நேர்ந்ததில் காயங்கள் பட்டு இறந்து போனார்.

கடவுளுக்கு சிரிக்கத் தெரியாது என்று யார் சொன்னது? இவருக்கு இதை விட பொருள்பொதிந்த மரணம் நேர்ந்திருக்கக் கூடுமா என்பது சந்தேகமே. நான் இவர் இறந்ததை நினைத்து சிரிக்கிறேன் என்று தயவு செய்து நினைக்காதீர்கள். ஒரு முத்தாய்ப்பு வைத்தது போல் நிகழ்ந்திருக்கிறது இவரது மரணம் என்ற குறிப்பை சுட்டுகிறேன். அவ்வளவுதான்.

அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

தொடர்புடைய சுட்டிகள்-
National Geographic, Smithsonian, The New York Times.

இஹுத் நெட்சர்- காலத்தின் வதனங்களில் முகிழ்த்த முரண் நகை” இல் 9 கருத்துகள் உள்ளன

 1. சார்…. டிக்கெட்டு வாங்கின எல்லாரும் சாந்தியை அடையணும் சாந்திய அடையணும்னு சொல்றீங்களே…. அத்தினி பேரும் ஒருக்கா சாந்திய அடைஞ்சா… அத்தினி பேருக்கும் டிக்கிட்டு கெடைக்குமா சார்? ஹவுசு ஃபுல் ஆகிடாது?

  1. சரியான கேள்வி, உங்கள் கேள்விக்கு பதில் தரப் போதுமான தகவல்கள் தற்போது இல்லை.

   நான் சாந்தியை அடைஞ்சதும் அங்க என்ன நிலவரம், எப்படி சமாளிக்கறாங்கன்னு ஒரு போஸ்ட் போடறேன், கவலைப்படாதீங்க. 🙂

 2. ஓக்கே….நம்மளோட முந்தின பின்னூட்ட ச்சும்மா தமாசு….

  எங்கியோ ஆரம்ச்சி எப்டியோ கட்ச்சில நேச்சராண்ட கூட்டினு வந்தீங்க பாருங்க. அங்க நிக்கறீங்க சார்.

  சூப்பர் சார்…… ஸ்டான்டிங் ஓவேஷன் எங்க எல்லாராண்ட இருந்தும்.

  1. ஆனானப்பட்ட எரோதே எங்கயோ நிக்கறாரு, நாமல்லாம் என்னத்த நின்னு என்னத்த பண்ண!

   இருந்தாலும் உங்க கரவொலியில நானும் சேந்துக்கறேன்- க்ளாப் க்ளாப்!

 3. When people see beauty, they think, “that’s beautiful”.
  Thinking of something as beautiful makes you think other things are ugly.
  Calling something “good” forces you to call some other things “evil.”

  The ideas “difficult” and “easy” support each other.
  “Long” and “short” define each other.
  “High” creates “low”
  “Tone” creates “noise”
  “Before” creates “after”
  “Have” creates “don’t have”

  This is why the Sage acts without effort and teaches without words.
  New things are created and the Sage just accepts them.
  Things fade away and the Sage accepts that too.

  A Sage can have things without feeling they “own” them.
  The Sage does things without putting an emotional stake into the outcome.
  The task is accomplished, but the Sage doesn’t seek credit or take pride in the accomplishment.
  Because the Sage is not attached to the accomplishment, the accomplishment lasts forever

  -Tao-
  தாவோ தெறிக்கிறது. 🙂

  1. எக்ஸ்செல்லென்ட் என்று சொல்லத்தான் ஆசை….

   தாவோ தெறிக்கிறது…ஒப்புக்கறேன். ஆனா இதை முழுமையா புரிஞ்சிக்கறதுக்குள்ள தாவு தீந்துடுதே?

  2. அருமையான தேர்வு. மிக்க நன்றி.

   நான் Arthur Waley மொழி பெயர்த்த The way and the Power என்ற புத்தகத்தைப் படித்திருக்கிறேன். அருமையாக இருந்தது. தாவோ மொத்தத்தையும் ஒரு நாட்குறிப்பில் காப்பி பண்ணி வைத்திருந்தேன். அடிக்கடி படிப்பதுண்டு.

   ஒரு நண்பரிடம் அதை இரவல் தந்தேன். ஒரு வருடம் போல ஆனபின்தான் திரும்பக் கிடைத்தது- இப்போது படிக்கும்போது நான் நினைத்த அளவுக்கு அது சுவாரஸ்யப்படவில்லை.

   நூலுக்கு பதிலாக முன்னுரையை எழுதி வைத்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன் 🙂

   ஏறத்தாழ தாவோ மாதிரியே ரொம்ப நன்றாக இருக்கும் இன்னொன்று இது- AFFIRMING FAITH IN MIND

   இங்கே பின்னூட்டத்தில் இருக்கிறது. அவகாசமிருந்தால் படித்துப் பாருங்கள்-

   http://www.crlgnestrn.tk/verses-on-faith-mind

   மிக்க நன்றி.

 4. தமிழில் எம் எஸ் உதயமூர்த்தி ஆவி இல் எழுதினார் வாழ்க்கை வெளிச்சம் என்று நினைக்கிறேன் லா ட்சு என்று தான் வந்திருந்த ஞாபகம்.

  கிரி தாவு தீர்தலைத்தான் முக்தி என்கிறார்கள்?

  1. முடிஞ்சுது போங்க…!! என்ன அங்ஙன வரைக்கும் போயி அதை ருசி பாக்க சொல்றீயளா? பெறகு இந்த சம்சாரம், சங்கீதம் இதோட எல்லாம் யாரு லோல் படறது?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.