ஹாரி கூப்பர்- அழியாக் காதலின் ஓர் அத்தியாயம்

எழுபத்து மூன்று ஆண்டுகளாக மனமொத்த என்று சொல்ல முடியாவிட்டாலும் மனமகிழ்ச்சி உள்ள தம்பதியராய் வாழ்ந்தனர் கூப்பர்கள். பாப்பாப் ஹவாயில் சிப்பாயாக பணி புரிந்த காலத்தில் உகுலேலே இசைக்கக் கற்றிருந்தார். கூடவே எறும்புகளையும் சிலந்திகளையும் சாக்லேட்டில் தோய்த்து சாப்பிடும் அரிய சாப்பாட்டுக் கலையையும் கற்றிருந்தார். இவை மூலமும் ஹவாயில் தான் வாழ்ந்த நாட்களை கதை கதையை சொல்லியும் க்யூட்டியின் இதயம் கவர்ந்தார் பாப்பாப்.

ஏறத்தாழ எல்லாருடைய வாழ்க்கையைப் போலவே இவரது வாழ்க்கையும் சத்தமில்லாமல் மணவாழ்க்கையின் உன்னதங்களைத் தொட்டுத் தொடர்வதாய் இருந்தது- இரண்டு ஆண்டுகள் முன் அவர்களுடைய பேத்திகள் ஒரு வீடியோ காமிராவால் அவர்களைப் படமெடுக்கும் வரை.

இவர்களிருவரும் சாதாரணமாகப் பேசிக் கொள்ளும் காணொளிகள் ஒரு வலையேட்டில் பதிவுகளாக வெளிவந்து தொண்ணூறு வயதைக் கடந்த இந்தத் தம்பதியருக்குப் பேரும் புகழும் தேடித் தந்தது- The OGs. காதல் குருவானார்கள் இருவரும். உண்மைதான், இவர்களிருவரிடையே இருந்த நேசம் அப்பட்டமாய் உலகுக்குத் தெரிந்தது. உங்களைப் போல் காலத்தால் அழியாக் காதலை நாங்களும் வளர்த்துக் கொள்வது எப்படி என்று கேள்வி கேட்ட பதின்மப் பருவக் குழந்தைகளுக்கு காதல் வகுப்புகள் எடுத்தார் இந்தப் பாட்டி.

“லவ்வு லவ்வு லவ்வு என்று எல்லாரும் சொல்கிறார்கள். ஆனால் அது கிவ்வு கிவ்வு கிவ்வு என்பது எத்தனை பேருக்குத் தெரிகிறது?” என்று கேட்கிறார் க்யூட்டி பாட்டி. ஆமாம், காதலின் முதல் பாடம் தன்னைத் தருவதுதானே, அப்புறம் என்னத்துக்குக் கல்யாணம் ஆனபின் என்னோட விஷயத்தில் நீ தலையிடாதே, என்னை நீ மதிக்கவில்லை என்றெல்லாம் எதெதையோ எடுத்துக் கொள்வது? கொடுத்தது கொடுத்ததாகத்தானே இருக்க வேண்டும்?

இல்லறம் என்பது நல்லறம் என்று வள்ளுவர் சும்மாவா சொன்னார்? கொடுப்பதுதான் காதல். கொடுத்ததை கொடுத்த மாதிரியே வைத்திருப்பதுதான் திருமண பந்தம்- “நாங்கள் இருவரும் ஒருத்தர் மேலோருத்தர் மதிப்பு வைத்திருக்கிறோம். அங்கிருந்துதான் காதல் வருகிறது” என்கிறார் க்யூட்டி பாட்டி.

எல்லாரும் என்றாவது ஒரு நாள் போகத்தானே வேண்டும்? உடல் நலம் குன்றியிருந்த பாப்பாப் தாத்தாவுக்குதான் முதலில் டிக்கெட் கிடைத்தது- “அவனை நினைத்து நான் அழுவதில்லை,” என்கிறார் க்யூட்டி பாட்டி- “மெய்யாலுமே நான் அவனுக்காக அழுவதில்லை. என் உடம்பு நன்றாக இருக்கிறது, நான் இங்கே இருக்கிறேன். ஒரு நாள் நான் அவனை சந்திக்கப் போகத்தானேப் போகிறேன்!”

ஹாரி கூப்பர்- அதுதான் அவரது பெயர், பாப்பாப் என்பது அவருக்கு இடப்பட்ட செல்லப்பெயர்- தனது தொண்ணூற்று மூன்றாம் வயதில் எழுபத்து மூன்றாண்டுகால மணவாழ்வைத் துறந்து மறைந்ததையொட்டி நிகழ்த்திய ப்யூனரல் சர்வீஸில் இந்த வாசகங்களை வாசித்தனராம்- அவர் தனது இறுதி ஆண்டுகளில் இந்த நூலை விரும்பிப் படித்து இதில் உள்ள விஷயங்களை ஆர்வத்துடன் விவாதிப்பாராம்-

ஆன்ம விஷயங்களை அறிந்தவர்கள் இறந்தவர்களுக்காகவோ இருப்பவர்களுக்காகவோ துக்கிப்பதில்லை. நான்கூட இருந்தவனில்லை, நீயும்தான், இந்த புவியின் அரசர்கள் அனைவரும்தான்; நாம் இனிவரும் காலத்தில் எப்போதும் இல்லாமல் போகப் போகிறவர்களுமில்லை. இந்த உடலை ஆள்பவன் இங்கு குழந்தைமை, இளமை, முதுமை ஆகிய பருவங்களை அனுபவிப்பதைப் போல் எதிர் வரும் அவதாரங்களிலும் நிகழும். இந்த நம்பிக்கையில் நிலை நிற்பவன் தனக்கு நேர்வது எதுவாயினும் சித்தம் தடுமாறுவதில்லை. புலன்கள், தங்களுக்குரிய பொருட்களை நோக்கிய போக்கில், வெப்பத்தையும் குளிரையும், இன்பத்தையும் துன்பத்தையும் உற்பத்தி செய்கின்றன- இவை வரும் போகும், குறுகிய காலத்தவை மாற்றம் காண்பவை; இவற்றை சகித்துக் கொள், பரத மைந்தா! இவற்றால் சித்தம் சிதறாமாலிருக்கப் படித்தவன், இன்ப துன்பங்களை இரண்டையும் ஒன்றே போல் பாவிப்பவன், அவன் இறவாதிருக்கத் தகுந்தவன்…”

எங்கேயோ படித்த மாதிரி இருக்கிறதா? நம் ஊர் பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயம். இதைதான் அவர் விரும்பிப் படித்தார் என்று சொல்லி, ஹாரி கூப்பரின் ப்யூனரல் சர்வீஸில் வாசித்திருக்கிறார்கள்.

அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

தொடர்புடைய சுட்டி- LA Times.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s