ஸ்டான்லி ஆலன் கூச்- அறிவியலின் பிளவினுள் விழுந்தவர்

இது தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் தெரிந்திருந்தால் சொல்லுங்கள்- இன்றைய அறிவியல் ஒரு வகையில் மனச்சிதைவுற்றவனைப் போல் இருக்கிறது. டாக்கின்ஸ் போன்ற விஞ்ஞானிகள் பரிணாம வளர்ச்சியைத் தங்கள் ஆயிரம் கைகளாலும் தழுவி ஆனந்திக்கிறார்கள். அதைக் கொண்டு மனித வரலாற்றை எழுதினால் தவறில்லை, ஆனால் இயற்கை நியதி என்று ஒன்றை பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் நிறுவுகிறார்கள். இது ஒரு புறம்.

க்வாண்டம் இயற்பியல் என்று ஒன்று சொல்கிறோமில்லையா, அதன் அடிப்படை நியதிகளில் ஒன்று காண்பவனல்லால் காட்சியில்லை என்பது என்று நினைக்கிறேன்.  இது குறித்து நீண்ட விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது,  உங்களுக்கு அது பற்றி எல்லாம் தெரிந்திருக்கும் என்றாலும்கூட.  மிக சுருக்கமாகவும் ருசிகரமாகவும் இந்த விஷயத்தை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் நேச்சர் என்ற இதழில் வந்திருக்கிற இந்த விஞ்ஞானப் புனைகதையைப் படித்துப் பாருங்கள். காண்பவனும் காட்சியும் பின்னியிருக்கிற அறிவியல் மிக அடிப்படையான ஒன்று என்றுத் தெரியும். காலத்துக்கு திசை இல்லை- எப்படி நம்மால் ஒரு வரைபடத்தில் அமெரிக்காவையும் ஆஸ்திரேலியாவையும் ஒரே வேளை அறிய முடிகிறதோ, அது போலவே இந்த கால-வெளி நீட்சியை அவற்றுக்கும் அப்பாலிருந்து பார்க்கிறவர், இன்றிலிருந்து ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட காலத்தையும் பிற்பட்ட காலத்தையும் ஒருங்கே பார்க்க இயலும்.

நீங்களெல்லாம் எம்ஜிஆர் படம் பார்த்திருப்பீர்கள். புரட்சித் தலைவர் தர்ம நியாயங்களுக்குக் கட்டுப்பட்டவர். வில்லன் வரம்பு மீறி, மூன்று தடவை அடித்த பின்தான் தலைவர் திருப்பி அடிப்பார். மூன்றாவது அடி விழுகிறவரை வில்லனுக்குத் திருந்துவதற்கான வாய்ப்பு கொடுத்த மகாத்மா அவர்.  அப்படி மூன்றாவது அடி விழுந்து விட்டதென்றால்- அப்புறம் அடித்தவனை அந்த ஆண்டவனே காப்பற்ற முடியாது. துவைத்துக் காயப் போட்டு விடுவார். தலைவரை அடிச்சுக்க ஆள் கிடையாது. எப்போதும் தர்மமே வெல்லும்.

விளையாட்டுக்கு இந்தக் காட்சியை ரீவைன்ட் செய்யுங்களேன். முதலில் தலைவர் அடி அடியென்று அடிப்பார். ஆனால் முடிவில் திருப்பி அடிக்கக் கூட திராணி இன்றி மூன்று முறை அடி வாங்கித் தோற்றுப் போய், “வேண்டாம், நாம பேசித் தீத்துக்கலாம்!” என்று அவர் வெள்ளைக் கொடியைப் பறக்க விடுவார், இல்லையா?

நியாயமாகப் பார்த்தால் பரிணாம வளர்ச்சியும் இப்படித்தானே இருக்க வேண்டும்? நாம் காலவெளியில் மாற்றுப் பாதையில் போனால் மனிதன் குரங்காக பரிணாம வளர்ச்சியடைவான், சரிதானே? இது பற்றி டாக்கின்ஸ் வகையறாக்களுக்கு கவலை இல்லை.

சரி அதை விடுவோம். இன்னொன்று சொல்கிறார்கள்- பல்குலக கோட்பாடு என்று. அதன்படி நான் இப்போது தட்டச்சு செய்கிறேன் இல்லையா? கூடவே பாட்டும் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இந்தப் பாட்டை நிறுத்தி வேறு பாட்டு போடலாமா என்று யோசிக்கிறேன். பாட்டையும் மாற்றுகிறேன்.

அப்போது என்ன நிகழ்கிறது? நான் பாட்டை மாற்றும் கணத்தில் வேறு உலகம் இங்கிருந்து பிரிகிறது. அங்கு இந்த பாஸ்கர் இதே பாட்டைக் கேட்டுக் கொண்டு இதை விட நன்றாக எழுதி பேரும் புகழும் பெற்று இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற முதல் தமிழன் என்று வரலாற்றில் இடம் பெறுகிறான். இதை நம்ப மாட்டீர்கள், இல்லையா?

போனால் போகட்டும். அந்த உலகத்தில் இருக்கும் பாஸ்கர் எந்த பரிணாம வளர்ச்சியில் தோன்றினான்? அவனோடு இருக்கும் குரங்குகள் யாரையாவது அந்த உலகத்தில் அவனது தாத்தா என்று உங்களால் கைகாட்ட முடியுமா?

பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது, ஆனால் இதற்கும் அறிவியல் ஆதாரங்கள் இருக்கின்றன, இதையும் சீரியஸாக எடுத்துக் கொண்டு பேசுகிறார்கள்.

அறிவியல் என்பது பண்பாடு சார்ந்தது- இரண்டும் இரண்டும் நான்கு என்ற லாஜிக் அறிவியலில் எடுபடாது. ரசவாத தத்துவங்களைக் கண்டுபிடித்து எழுதிய ந்யூட்டனின் கட்டுரைகள் பெட்டிகளில் பூட்டப்பட்டு நூற்றாண்டு காலமாக மறைத்து வைக்கப்பட்டன. கானன் டாய்ல் சாதாரண எழுத்தாளரல்ல. தன் பண்பாட்டுத் தளங்களைத் தாண்டி யோசித்தவர். நிற உணர்வு காரணமாக தண்டிக்கப்பட்ட ஒரு இந்திய வம்சாவழியினரை பெரும் போராட்டம் நடத்தி காப்பாற்றியவர். அவர் ஆவிகள் குறித்து நிறைய ஆராய்ச்சி செய்தார். குழந்தைகளின் உளவியல் குறித்து ஆய்வறிக்கைகள் பதிப்பித்த கூச் தான் மனிதர்களுக்குள் இருக்கும் நியாண்டர்தால்கள் குறித்து புத்தகங்கள் எழுதினர். இவர்கள் அறிவியல் என்றால் என்னவென்று தெரியாதவர்களா? பகுத்தறிவு இல்லாதவர்களா?

மிகையில் போலான்யி நோபல் பரிசு பெற்றவர். அவர் அறிவியல் குறித்து சொல்வது விசேட கவனத்துக்குரியது. அவரது கணிப்பில் அறிவியல் என்பது அகத்துக்கு வெளியே இருக்கிற விதிகளின் அடிப்படியில் அறியப்படுவதல்ல. நாம் புதிதாய் அறிகிற விஷயங்கள் நமக்கு ஏற்கனவே இருக்கிற அறிவின் பின்புலத்திலேயே அறியப்பட்டு ஏற்கப்படுகின்றன. தனி மனித அளவிலும் இதுவே உண்மை, பண்பாட்டு தளத்திலும் இதுதான் உண்மை.

நாம் மேற்சொன்னவர்களின் ஆய்வுகள் லாஜிக்காக இருந்தாலும், அவர்களது அனுபவத்தில் பொருள் செறிந்ததாக இருந்தாலும், பொது அனுபவத்தில், பண்பாட்டின் விழுமியங்களுக்கு ஏற்புடையனவாக இல்லை. இங்கு எது சரி எது தவறு என்பது விஷயமல்ல. எது ஏற்புடையதாக இருக்கிறது, எது அவ்வாறு இல்லை என்பதுதான் விஷயம். இந்தக் காரணத்தாலேயே ஒன்றின் வெளிச்சத்தில் மற்றொன்று அபத்தமாக இருக்கக்கூடிய பரிணாம வளர்ச்சி சார்ந்த பௌதிகமும் காலவெளியை திசையற்ற பரப்பை நிறுவும் க்வாண்டம் இயற்பியலும் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருப்பினும், இரண்டுமே கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன என்று நினைக்கிறேன்.


image credit- Telegraph.co.uk

இலக்கியத்தைப் போலவே அறிவியலும் பண்பாடு சார்ந்த ஒன்றே. வான் கோவாகட்டும், பாரதியாகட்டும், நம் கூச்சாகட்டும் தாங்கள் வாழும் காலத்தைத் தாண்டி சிந்தித்தவர்கள். கூச்சின் அறிவியலில் குறை இல்லை, அதன் விழுமியங்கள் அவர் வாழ்ந்த காலத்துக்கு ஒப்புமையுடையனவாக இல்லாமல் போனதுதான் பிரச்சினை.

மனிதனின் உளவியலில் பரிணாம வளர்ச்சி குறித்து விவாதிக்கும் புத்தகங்களை எழுதும் முழு நேர எழுத்தாளராக மாறிய பின் ஸ்டான் கூச் ஏழ்மை நிலையை ஏற்க வேண்டியது வந்தது. தன் இறுதி காலத்தை வேல்ஸ் பகுதில் வாடகைக்கு எடுத்த ஒரு காரவன் வீட்டில் கழித்தார்.

திங்கட் கிழமையன்று விழுகிற பதின்மூன்றாம் தேதிக்கு ஒரு ஆன்மீக முக்கியத்துவம் இருக்கிறது என்று நம்பிய கூச், செப்டெம்பர் மாதம் பதின்மூன்றாம் தேதி திங்கட்கிழமையன்று காலமானார்.

அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s