எமிலியோ மசெரா- எதற்கும் துணிந்த புரட்சியாளர்

நாம் பாட்டுக்கு உலகின் ஒரு மூலையில் இருந்து கொண்டு உலக இலக்கியம், உலக சினிமா என்று பேசிக்கொண்டிருக்கிறோம். வாய்ப்பு கிடைத்தால் உலக தத்துவம்கூடப் பேசுகிறோம். ஆனால் அதன் பின்னால் இருக்கிற வலியும் துயரமும் தெரிவதில்லை. இசுலாமிய மற்றும் ஆங்கிலேய ஆட்சியில் கூட தமிழ் நாட்டில் இருக்கிறவர்கள் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது ரொம்ப பத்திரமாகவே இருந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது. அதனால் பெரும் அழிவுகளின் வலியை நம்மால் கற்பனையில் மட்டுமே உணர முடிகிறது. அவரவர் உளச்சாய்வுக்கு ஏற்ப எதற்கான கற்பிதங்களையும் எளிதாக அமைத்துக் கொள்ள முடிகிறது.

“போரென்று வந்தால் அங்கங்கு அத்துமீறல்கள் இருக்கத்தான் செய்யும்,” என்கிறார் எமிலியோ மசெரா, “எனக்கும் இதில் பொறுப்பிருக்கிறது என்று தெரியும், ஆனால் எனக்கு இது குறித்து குற்ற உணர்வெல்லாம் கிடையாது. எனது இதயத்தில் வெறுப்புக்கு இடமில்லை”. அவர் என்னவோ கிருஷ்ணர் போதித்த கர்ம யோகத்தைப் பயின்றவர் மாதிரி பேசுகிறார். ஆனால் அவர் செய்த காரியம் ஒன்றும் அவ்வளவு எளிதில் நியாயப்படுத்திவிடக் கூடியதில்லை.

அவர் அர்ஜெண்டினாவில் பெரோனின் இடதுசாரி அரசைக் கவிழ்த்த ராணுவ அதிகாரிகளில் முக்கியமானவர். அத்தோடு விடாமல் இடதுசாரி தீவிரவாதிகளை அழிக்கிறேன் பேர்வழி என்று இவரும் இவரை சார்ந்த ராணுவ ஆட்சியும் பதின்மூன்றாயிரத்திலிருந்து முப்பதாயிரம் பேரைக் கொன்றதாகத் தெரிகிறது. நமக்கு இது என்னவோ ரொம்ப கம்மி மாதிரித் தோன்றுகிறது, ஆனால் மேலை நாட்டில் இதை ஒரு பெரிய தொகையாக நினைக்கிறார்கள். அங்கெல்லாம் ஒரு நாலைந்து பேர் மருத்துவமனையில் வாந்தி எடுத்து செத்தாலே ஏதோ ப்ளேகு நோய் வந்த மாதிரி பரபரப்பாக தேசிய அளவில் பேசுகிறார்கள். நாம், “வரும் போகும்,” என்று கடந்து போய் விடுகிறோம், அதை விடுங்கள்.

அவர் செய்த மனித உரிமை மீறல்கள் நிரூபணமாகி ஐந்து ஆண்டு காலம் சிறைச்சாலையில் கழித்தார். வசதியாகத்தான் இருந்திருப்பார் என்று நினைக்கிறேன், தெரியவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு அப்புறம், சமனமயமாக்கம் (Reconciliation) என்ற பெயரில் வெளியே வந்து விட்டார்.

அதற்கப்புறம் பார்த்தால் இவரும் ஆட்சியிலிருந்த மற்ற சில ராணுவ அதிகாரிகளைப் போலவே எதிர்க்கட்சியினரின் சிறு பிள்ளைகளை, குழந்தைகளைக் கூட, திருடிக் கொலை செய்தது தெரிய வந்தது. அவர்களை சித்திரவதை முதலானதும் செய்திருப்பார் என்று நினைக்கிறேன். இந்த மாதிரி ஆட்கள் எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள். ஆனால் வழக்கு விசாரணையில் இவர் உடல் நலம் சரியாக இல்லாதவர் என்பதைக் கருத்தில் கொண்டு வயதான ஒரு பெரியவரைத் தேவையில்லாமல் சிறையில் அடைத்து அவருக்கு மன உளைச்சல் தருவது நியாயமில்லை என்று சும்மா விட்டு விட்டார்கள். நீங்களும்தான் சொல்லுங்களேன், எழுபது வயது தாண்டிய ஒருவரை, “நீ சின்னப் பிள்ளைகளைக் கடத்திக் கொண்டு போய் கொலை செய்தாய்,” என்று சொல்லி சிறையில் அடைப்பதால் என்ன பெரிதாய் சத்தித்து விடப் போகிறோம்? இதனால் செத்தவர்கள்தான் எழுந்து வந்து விடப்போகிறார்களா இல்லை, இனி இந்த மாதிரி சாக இருக்கிறவர்கள்தான் பிழைத்துப் போய் விடப் போகிறார்களா? தள்ளாத வயதில் இருக்கிற ஒருவரை கஷ்டப்படுத்திய பாவம் நமக்கெதுக்கு என்று நீதிபதிகள் கை கழுவி விட்டார்கள்.

இவரும் ஒன்றும் நீங்கள் நினைக்கிற மாதிரி ஈவு இறக்கமில்லாதவரில்லை. தான் சொன்ன வேலையை செய்கிற ஊழியர்கள் குறித்து, “பாவம். எவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து வேலை செய்கிறார்கள், இதற்கு கொஞ்சமாவது சன்மானம் தர வேண்டாமா?” என்று சட்டத்தைக் கொஞ்சம் போலத் தளர்த்தி விடச் செய்தார். அதன்படி ஒரு எதிர்க்கட்சிக்காரரைக் கைது செய்தால் அவரது வீட்டின் போலி பத்திரங்களைத் தயார் செய்து ராணுவ அதிகாரிகள் விற்று காசு பண்ணி விடுவார்களாம். துணி, சோப்பு, சீப்பு என்று எது கிடைத்தாலும் விட மாட்டார்களாம். அந்த மாதிரி தன் உடமைகளை இழந்த ஒரு பெண்மணி ஒரு இடத்துக்கு வேலை செய்யப் பணிக்கப்பட்டாராம். தன் வீட்டில் இருந்த மேஜை, நாற்காலி, சோபா எல்லாம் அங்கே வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு ஆகக்கிடைத்த ஆறுதல் அடைந்தாராம்.

ஆனால் என்ன அநியாயம் பாருங்கள், இந்தக் கர்ம வீரர் ஒரு நாள் சாலையில் சுறுசுறுப்பாக சும்மாத் துள்ளல் நடை போட்டுக் கொண்டு போவதை யாரோ படமெடுத்துப் போட்டு விட்டார்கள். அதனால் கோபம் வந்த ஒரு நீதிபதி அவர்கள், கொண்டாய்யா அந்த ஆளை, என்று உத்தரவிட்டு அவரை சிறையில் போட்டுப் பூட்டி விட்டார்.

ஒரு ஆறு வருடம் போல சிறையில் இருந்ததாகத் தெரிகிறது. அப்புறம் ஒரு திருநாளன்று அவரது மூளைப் பிரதேசத்தில் இருக்கிற ரத்தக் குழாயில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டு (அது மூளைக்கு ரத்தத்தைக் கொண்டு போகிற குழாயா இல்லை அங்கிருந்து ரத்தத்தைக் கொண்டு வருகிற குழாயா என்பதெல்லாம் தெரிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது சொல்லுங்கள்) அங்கு அடைப்போ உடைப்போ வெடிப்போ ஏற்பட்டு மொத்தத்தில் மூளை பணால் ஆகி விட்டது என்று நினைக்கிறேன்.

ஒரு வழியாக அவரது செயல்களுக்கு அவர் பொறுப்பு கிடையாது என்று மருத்துவர்களிடம் சான்றிதழ் பெற்று அதையும் நீதிபதிகள் ஏற்றுக் கொள்ள சுத்திகரிக்கப்பட்ட மனசாட்சியுடன் வெளியே வந்தார் என்று வைத்துக்கொள்ளலாம். அவர்தான் செய்த தப்புக்கு தண்டனை அனுபவித்து விட்டாரே, இல்லையா?

அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்- யாராவது ஒருத்தர் ரெண்டு பேர் இப்படி பிரார்த்தனை செய்தால்தானே உண்டு? அது அவருக்கு அவசியமில்லை, அதனால் அவருக்குப் பெரிய அளவில் பயன் இருக்கப் போவதில்லை என்பதுதானே உண்மை என்கிறீர்களா?

தொடர்புடைய சுட்டிகள்:
LA Times
Wikipedia
Yendor.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s