ஜான் வாட்டர்லோ- பட்டினிச் சாவுகளுக்கு எதிராய் ஒரு போர்

நிறைய பேர் பணக்காரர்களைத் திட்டுவதைக் கேட்டிருக்கிறேன். வறுமையைப் போக்குவது வசதி படைத்தவர்களின் கடமை, ஒருவர் கஷ்டப்படும்போது அதில் நாம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்பது போன்ற வாதங்களை அவர்கள் செய்கிறார்கள். இவர்களின் அக்கறையைப் பாராட்ட வேண்டுமென்றாலும், எல்லாரும் ஒரே மாதிரிதான் செயல்பட வேண்டுமென்பதில்லை. நமக்கு இருக்கிற வசதி, வாய்ப்புகளைக் கொண்டு, நம் திறன்களை, நம் செல்வத்தை எப்படி செலவிடுகிறோம் என்பது அவரவர் விருப்பம். நிறைய பேர் தாங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போதே அதை மற்றவர்களின் நலனுக்கும் செலவிடவும் செய்கிறார்கள்.

ஜான் வாட்டர்லோவின் கொள்ளுத் தாத்தா ஒரு பெரிய பூங்காவையே நாட்டுக்கு எழுதித் தந்தவர். அவ்வளவு பெரிய பணக்காரக் குடும்பம். ஜானின் அப்பா இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்- வீட்டுக்கு வர்ஜினியா வுல்ப் போன்றவர்களெல்லாம் வந்திருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்- பணமும் பண்பாடும் இருக்கிற குடும்பத்தில் வளர்ந்தார் ஜான் வாட்டர்லோ.

கல்லூரியில் படிக்கும்போது ஒரு வகுப்பில் மேற்கு ஆப்பிரிக்காவில் தொழுநோய் நிலவரம் குறித்து ஒரு பாடம் கேட்க நேர்ந்தது. அது தந்த உந்துதலில் மருத்துவம் பயின்றார். வெவ்வேறு ஆய்வுகள் செய்த பின் அவர் முத்திரை பதிக்கவிருக்கும், Malnutrition, சத்துணவுக்குறைவுத் துறைக்கு வந்து சேர்ந்தார்.

1950களில் கரிபியத் தீவுகளில் இவர் செய்த ஆய்வுகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை. குழந்தைகளுக்கு ஏன் சத்துணவுக்குறைவு ஏற்படுகிறது? இதை அவர்களின் கல்லீரல்களின் சிறு துண்டுகளை ஆய்ந்து ஜான் வாட்டர்லோ கண்டு பிடித்தார். இந்த ஆய்வுகளுக்குத் தேவையான உபகரணங்களையும்கூட அவரே வடிவமைத்தார்.

ஆப்பிரிக்காவில் க்வாஷியோர்கோர்என்ற நோயின் குறிகளே கரிபியன் தீவுகளின் சத்துணவுக் குறைவால் பீடிக்கப்பட்ட குழந்தைகளிடமும் இருப்பதை உறுதி செய்தார். இங்கிலாந்து அரசு ஜமைக்காவில் இதை ஆய்வதற்கான ஆய்வுக்கூடம் அமையக் காரணமாக இருந்தார் ஜான் வாட்டர்லோ.

கொழுப்புகூடிய கல்லீரல், கைகால்களில் வீக்கம், தளர்ந்த தோல், முடியுதிர்வு, தசைகளிலும் ரத்த திசுக்களிலும் பொட்டாசியக் குறைப்பாடு, புரதத்தைத் தயாரிக்க இயலாமை- இவையே சத்துணவுக் குறைபாட்டின் அறிகுறிகள். இதற்கான காரணிகள் என்ன, இவற்றை சரி செய்வது எப்படி என்று ஆய்வு செய்து விடை காண்பதில் ஜான் வாட்டர்லோவின் பங்கீடு குறிப்பிடத்தக்கது.


image credit- The Telegraph

ஆண்டிபயாட்டிக்குகள், எலெக்ட்ரோலைட்டுகள், மினரல்கள், விட்டமின்கள் இவற்றை முதலில் கொடுத்து, அதன் பின் ஒரு சிறு அளவு உணவு புகட்டி உடலின் இயக்கத்தை நிலைப்படுத்தி, அதன் பின்னரே நிறைவான உணவு புகட்டல் சத்துணவுக்குறைபாட்டில் இருந்து குழந்தைகளை மீட்க வல்லது என்பது இவரது ஆய்வுக் குழுவின் கண்டுபிடிப்பாக இருந்தது. இந்த நடைமுறை முதலில் ஜமைக்காவிலும், பின்னர் கரிபியன் தீவுகள் எங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் வெற்றியைத் தொடர்ந்து WHO ஜான் வாட்டர்லோவின் முறையைத் தழுவி உலகெங்கும் நடைமுறைப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஆப்பிரிக்காவில் மட்டும் ஒரு மில்லியன் குழந்தைகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்கிறார்கள்.

யோசித்துப் பாருங்கள். சத்துணவுப் பற்றாக்குறைக்கான காரணி அரசியலில் இருக்கிறது, சமூக அமைப்பில் இருக்கிறது, இனம், தேசியம் என்று இன்னும் எங்கெங்கோ இருக்கிறது. ஒரு குழந்தையின் கல்லீரலிலும் இருக்கிறது. கவிதை எழுதி இருக்கலாம், புரட்சி செய்திருக்கலாம், அவ்வளவு ஏன், ஒரு பதிவாவது எழுதி இடுகை இட்டு முப்பது நாற்பது ஓட்டும் ஏழெட்டு பின்னூட்டமும் பெற்று சமூக விழிப்பை உருவாக்கியிருக்கலாம்.

ஆனால், ஜான் வாட்டர்லோ போன்றவர்கள், இதை எல்லாம் செய்யாமல், வேலை மெனக்கெட்டு மருத்துவம் படித்து, தாங்கள் சௌகரியமாக இருக்கக்கூடிய இங்கிலாந்து போன்ற சொந்த ஊரை விட்டு, ஆய்வு செய்வதற்கு வசதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து வறுமையின் காரணமாக ஏற்படும் இல்லாமையால் உண்ண உணவில்லாமல் சாகும் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற இரவு பகலாக உழைத்து ஒரு விடியல் வரவழைத்திருக்கிறார்.

இதில் பெரிய அளவில் புகழ் வெளிச்சம் இல்லை, பரபரப்பில்லை, எந்த மகுடமும் தலையில் ஏற்றி வைத்துக்கொள்ள வாய்ப்பு இல்லை. ஆனால் பாருங்கள், இவர் கரிபியன் தீவுகளில் செய்த ஆய்வு, ஆப்பிரிக்காவில் இருக்கிற குழந்தைகளில் உயிரைக் காப்பாற்றி இருக்கிறது. இன்னும் பல்லாயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும்.

அதற்கான அவசியம் வரக்கூடாதென்றால், அரசியல், சமுதாயம், அது இது என்று வெட்டிப் பேச்சு பேசாமல் அவனவன் உருப்படியாய் அவனுக்கு இருக்கிற வசதி வாய்ப்புகளை வைத்துக் கொண்டு ஆகிற வேலையைப் பார்ப்பதுதான், இல்லையா? இருட்டை ஏசுகிற வேலையில் நீ ஒரு விளக்கேற்றி வைக்கலாமே, என்று சும்மாவா சொன்னார்கள்?

பயனுள்ள தொண்ணூற்று நான்காண்டுகள் வாழ்ந்து மறைந்த அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

தொடர்புடைய சுட்டிகள்-
The Guardian
World Public Health Nutrition Association, Festschrift for John Conrad Waterlow A leader of us all

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s