ப்ரொபசர் சாமுவேல் பர்க்- அக்கரையில் ஒதுங்கிய நீதியரசர்

சில பேருடைய வாழ்க்கையைப் பார்த்தாலே ஐயோவென்று இருக்கும். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு காரணம் இருக்கும். என்னைப் பாருங்கள், தினமும் யாரோ ஒருத்தரை முன்வைத்து இரங்கல் கட்டுரை எழுதுவது என்று வைத்துக் கொண்டிருக்கிறேன். எதற்காக? அது ஒரு உன்னதமான வேலை, ஒரு சகாப்தத்தை குறுக்கு வெட்டுப் பார்வை பார்க்கிறது, மறைந்தவர்களை நினைவில் வைத்துக் கொள்கிற சமுதாயம்தான் வாழ்வின் பொருள் உணன்ர்ததாக இருக்க முடியும் என்று உணர்த்துவதற்காக. இன்னும் ஏதேதோ. ஏன் மறைக்க வேண்டும்? எனக்குக் கதை படிக்கப் பிடித்திருக்கு, அதுக்கென்ன இப்போ? இரங்கல் கட்டுரைகள் கட்டை விரலால் வரைந்த ஓவியங்கள் போல ஒரு வகையில் நேர்த்தியான நிறைவு கொண்டிருக்கின்றன.

ப்ரொபசர் சாமுவேல் பர்க். தனது நூற்று நான்காவது வயதில் காலமாகி இருக்கிறார். அவரது வாழ்க்கையைப் பாருங்கள், புரிந்து கொள்ள முடியாதபடி ஆச்சரியமான ஆச்சரியமாக இருக்கிறது.

பர்க்கின் தகப்பனார் பாகிஸ்தானில் ஒரு கிருத்தவ கிராமத்தில் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தாராம். பர்க் என்றால் உருது மொழியில் மின்னல். அது அவரால் கவிதை எழுத புனைப்பெயராக பாவிக்கப்பட்டு அப்புறம் இயற்பெயராக நிலைத்து விட்டது. அப்பாவுக்குத்தப்பாமல் மகனும் பர்க்.

வரலாற்றில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு இந்திய சிவில் சர்விஸ் பரிட்சையில் தேர்வு பெற்றார். இது நடந்தது 1931ல். அப்புறம் காலப்போக்கில் உயர்நீதிமன்ற நீதிபதியானார். 1945ல் நடந்த தேர்தலில் மூன்று நபர் கமிஷனில் இருந்திருக்கிறார். பாரபட்சமில்லாமல் நடந்து கொண்டார் என்று செய்தித்தாளில் போடுகிறார்கள்.

இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்தபோது ஆங்கிலேய அதிகாரிகளை நீங்கள் விரும்பிய நாட்டில் பணி புரியலாம் என்று சொன்னார்களாம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள். ஆனால் நம் பர்க் அவர்களோ, நான் எதோ ஒரு தேசத்தைத் தேர்ந்தெடுத்தால் என் நடுநிலைமை கேள்விக்குறியாகி விடும் என்று சொல்லி விட்டு ஓய்வு பெற்று விட்டார். அப்படி ஓய்வுபெற்ற ஒரே வெள்ளைக்காரர் அவர்தானாம்.

விதி வலியது. அவரை எங்கள் நாட்டுக்கு வா என்று இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டு நாடுகளுமே அழைத்தனவாம். பர்க் பாகிஸ்தானில் பிறந்தவராதலால் அதையே தன் தாய் நாடாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். பாகிஸ்தானின் வெளியுறவுத் துறையில் அவருக்கு பணி நியமனம் கிடைத்திருக்கிறது. இந்திய உறவுகளும் ஐநா சபை விவகாரங்களும் இவர் கவனிப்பில்தான் இருந்திருக்கிறது. இன்றைக்கு காஷ்மீர் விவகாரம் பெரிதாக இழுத்துக் கொண்டு கிடப்பதில் இவரது பங்கும் உண்டு என்று நினைக்கிறேன். பாகிஸ்தானுக்காக அமெரிக்காவெங்கும் பயணம் செய்து உரையாற்றி அந்நாட்டுக்கு ராணுவ ஆயுதங்களும் உணவுப் பொருட்களும் பெற்றுத் தந்தாராம். இந்த இடத்தில் பாகிஸ்தான் பற்றி ஒன்று சொல்ல வேண்டும், அவர்கள் இன்றைக்கும் அதையே மெயின்டேயின் பண்ணுகிறார்கள். செய்தித் தாளைத் திறந்தாள் பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி என்றோ பாகிஸ்தானுக்கு கூடுதலாகத் தள்ளுபடி விலையில் வராக்கடன் என்ற செய்தியையோ நீங்கள் கட்டாயம் பார்க்கலாம்.

கனடாவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொடுத்து பாகிஸ்தானுக்கு யுரேனியம் எல்லாம் வாங்கித் தந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன், இவரா நான் இரண்டு தேசங்களுக்கும் பொதுவானவன் என்று சொன்னார் என்ற வியப்பு வருகிறது.

பணிமூப்பு எய்தியதும் அமெரிக்காவில் கல்லூரி ஒன்றில் தெற்காசிய விவகாரங்களை அவதானிக்கும் துறை ஒன்றில் துறைத்தலைவராக இருந்திருக்கிறார். அதன்பின் இங்கிலாந்து திரும்பியபின் புத்தகங்கள் எழுதி இருக்கிறார். எல்லாம் வரலாற்று நூல்கள் என்று தெரிகிறது.

அக்பர் என்னும் மாபெரும் மொகலாய மன்னர் என்ற புத்தகத்தை நம் பிரதமர் ராஜீவ் காந்தி கூடப் பாராட்டினாராம். அவ்வளவு சிறந்த வரலாற்றாய்வாளர். இது தவிர பகதூர் ஷா என்னும் கடைசி மொகலாய மன்னர் என்றப் புத்தகத்தை எழுதி இருக்கிறார். காயிதே ஆஜாம் முஹமது அலி ஜின்னாவின் ஆளுமையும் அரசியலும் என்ற புத்தகமும் இவர் எழுதியதுதானாம். அதில் இந்திய அரசியலில் மத வெறியை நுழைத்தது ஜின்னா இல்லை, காந்திஜிதான் என்ற தகவலையும் தந்திருக்கிறார் இவர், காந்திஜிதான் இந்து முஸ்லிம் சமூக நல்லிணக்கம் துண்டுபடக் காரணமாக இருந்தார் என்று இவர் சொல்வதாகத் தெரிகிறது. பாகிஸ்தான் அரசு இந்த மாமனிதருக்கு தன் நாட்டின் உயர்ந்த விருதாகிய சித்தாரா ஈ பாகிஸ்தான் என்ற விருதைக் கொடுத்து கௌரவித்திருக்கிறது.

இப்படியும் ஒரு மனிதர் என்ற வியப்போடு அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

தொடர்புடைய சுட்டிகள்:
The Guardian
The Telegraph

Advertisements

4 thoughts on “ப்ரொபசர் சாமுவேல் பர்க்- அக்கரையில் ஒதுங்கிய நீதியரசர்

 1. வரலாற்றின் பின்னோக்கிப்பார்ப்பதைத்தான் செய்கிறீர்கள்.தனி மனிதனின் வாழ்க்கையைப்பற்றிப்பார்க்கும்போது வரலாறு பின்னணியாக ஓடுகிறது.இன்று Sunshine என்ற ஹங்கேரி யூத வரலாற்று படம் ஒன்று பார்த்தேன்.தனிமனித வரலாறை சரித்திரப்பின்னணியோடு சொல்லும் படம்.மூன்று தலைமுறைகளை விவரிக்கிறது.உங்கள் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டவர்களின் சாயல் வருகிறது.வரலாறை ஒட்டு மொத்தமாகவும் தனி மனிதப்பார்வையாகவும் வெளிப்படுத்துவதை செய்கிறது. உங்களுடைய இந்தக்கட்டுரைகள் அதைச்செய்கின்றன.மேலே சாமுவேல் பார்வை, வரலாறு உங்கள் பார்வை என மூன்றும் கலந்திருக்கிறது.
  வரலாறென்று எழுதப்படுவதை விட இப்படி தனிமனிதர்களின் வாழ்க்கையின் பின்னணியூடாக வெளிப்படும் வரலாறு உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
  சாமுவேல் நடுநிலை என்பது மாயை என்பதை பின்னர் புரிந்துகொண்டிருப்பாரோ.

 2. உங்கள் ஊக்கத்துக்கு நன்றி. உண்மையாகவே இந்த மாதிரி வாழ்ந்து முடிந்த ஒரு வாழ்வைப் பார்க்கும்போது எனக்கு ஒரு எழுபது எண்பதாண்டு கால வரலாற்றை அடிக்குறிப்புகள் வழியாக வாசித்த திருப்தி கிடைக்கிறது!

  இதில் என் பார்வை தவிர்க்கப்பட வேண்டியது. ஆனால் அது இல்லாவிட்டால் படிப்பவர்களுக்கு சுவாரசியமாக இருக்காது இல்லையா? அதனால்தான் செய்வது அத்தனை பொருத்தமில்லை என்று தெரிந்தும் என் பார்வையையும் இதில் புகுத்துகிறேன். ஆனால் அதுவும் ஓரளவு பொருத்தமானதுதான்- நாம் எந்த விஷயத்திலும் நடுநிலையாளர்களாக இருப்பது கஷ்டமாகவே இருக்கிறது, இல்லையா?

  நடுநிலை இருப்பதுபோல் நடிப்பதைவிட, என் பார்வையைக் காட்டிக் கொள்வது சரியானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அது என்னளவில் மட்டுமே சரியானதாக இருக்கும். நீங்கள் உங்கள் பார்வையில்தான் அந்த வாழ்வைப் பார்ப்பீர்கள், இல்லையா?

  ஒரு வாழ்வை வாழ்ந்து முடித்தபின் அதில் நல்லது கெட்டது பார்க்கக் கூடாது என்று நினைக்கிறேன். அது அவர்களுக்கு செய்யப்படுகிற மரியாதை என்பதைவிட, வாழ்பவர்களுக்கு நாம் வாழத் தருகிற சுதந்திரம் என்று தோன்றுகிறது.

  எது எப்படி இருந்தாலும் நீங்கள் அவ்வப்போது தருகிற ஊக்கம் என்னைத் தொடர்ந்து எழுத வைக்கிறது என்பதை சொல்லியாக வேண்டும். ஒரு பின்னூட்டம் ஏறத்தாழ பத்து முதல் பன்னிரெண்டு நாட்கள் வரை எனக்கு தொடர்ந்து பதிவுகள் இடப் போதுமான அளவில் உந்துதல் தருகிறது என்பது அனுபவம்.

  நன்றி!

 3. உங்கள் பார்வைதான் இந்த பதிவின் ஜீவன்.பார்வை கலக்காமல் எழுதமுடியுமா என்ன.மொழிபெயர்ப்பு கூட ஆளுக்கு ஆள் வேறுபடும்.
  வாழத்தருகிற சுதந்திரம் நல்ல கருத்து.
  அந்தச்சூழலில் அவர்கள் அப்படி வாழ நேர்ந்தது என்றுதான் சொல்லலாம் என்று தோன்றுகிறது.
  நான் என்பதை மையமாக கொண்டு இயங்கும் வரை எப்படி நடுநிலை வர முடியும் என்பது எனக்குப்புரிவதில்லை.
  இப்படி நீங்கள் எழுத எழுத வாழ்வின் பல சந்தர்ப்பங்களில் பொருந்தக்கூடிய பல சரிதங்கள் சேரும் அது வாழ்க்கை வழித்துணையாக இருக்கும்.
  இன்னுமொன்றைக்குறிப்பிடலாம் சரியா தெரியவில்லை. ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதென்பது தேவையா. ஒரு ரெடிமேட் வசனம்.அதன் அர்த்தத்தை இழந்து விட்டதல்லவா.
  பல வருடங்கழித்து எழுதுகிறபோது இப்போதும் அவர் ஆன்மா சாந்தியடையாமல் இருப்பதாக தோன்றுவதை தவிர்க்கமுடிவதில்லை எனக்கு.

  ஊக்கமா… வாசகனாக கருத்தைப்பரிமாறிக்கொள்வதுதானே நடக்கிறது.எழுதுவதற்கான ஊக்கம் வாசிக்கப்படுகிறோம் என்பதில் கிடைக்கிறது இல்லையா.

  தேடிப்படிக்க முடியாத நேரப்பற்றாக்குறை எனக்கு, நீண்ட வாசிப்பனுபவத்தை நீங்கள் தேடித்தருவதற்காக நான் நிறைய நன்றி சொல்ல வேண்டும்.

  1. உண்மைதான், சுய சார்பில்லாமல் எந்த விஷயத்தையும் அணுக முடியாதுதான். ஆனால் இப்படி பேசுவதே சில பேருக்கு பாவனையாகத் தெரிவதாக இருக்கும்.

   என்னை பொறுத்தவரை, நான் நினைப்பது ஒருவரது வாழ்வைப் பார்ப்பது நமது வாழ்வு குறித்து ஒரு தொலைநோக்குப் பார்வை தருவதாக இருக்கக் கூடும். அப்படி அமைந்தால் அதுவே பெரிய பயன், இல்லையா?

   ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதென்பது தேவையில்லைதான், அது ஒரு வகையில் வன்முறையாகக் கூட அறியப்படக் கூடும். ஆனால் நான் முன்னமேயே சொன்னமாதிரி, நாம் மறைந்தவர்களைப் பேசுகிறமாதிரி இருப்பவர்கள் குறித்துதான் பேசிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் வாழ்வை நினைவு கூர்வதன் மூலம் நம் வாழ்வின் கூறுகளை மறு வாசிப்பு செய்கிறோம் என்றுத் தோன்றுகிறது. எனவே அவர்கள் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம் என்பது நமது வாழ்வு சாந்தியை நோக்கியதாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையின் மறு வடிவம்தான்! உங்களுக்கே தெரிந்திருக்கும், பரந்த வெளியை தியானிப்பவனது மனம் விரிவடைகிறது. தீய நினைவுகள் நம் மனதை தீய குனமுடையதாக ஆக்குகிறது.

   “நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு மனங்கள் இல்லை. மனம் ஒன்றே. வாசனைகளே சுபமென்றும் அசுபமென்றும் இரண்டுவிதம், மனம் சுபவாசனை வயத்தாய் நிற்கும்போது நல்ல மனம் என்றும், அசுபவாசனை வயத்தாய் நிற்கும்போது கெட்ட மனமென்னும் சொல்லப்படும்” என்று ரமணர் சொல்கிறார். ஜே கிருஷ்ணமூர்த்தி, “Consciousness is its content” என்று சொல்கிறார். ஒருவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று நினைப்பது நமது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்ற ஆசையின் வேறு வடிவம், அவ்வளவே!

   ஏதோ இது என் எக்ஸன்ட்ரிசிடி! 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s