ஹாசர்மேன்- வானமே எல்லை.

திடீரென்று எனக்கு இந்த வகையான பதிவுகளில் ஆர்வம் விட்டுப் போய் விட்டது. என்ன காரணம் என்று தெரியவில்லை. ஒரு வகையில் நான் ஏதோ பாவனை செய்து கொண்டிருப்பதாக ஒரு எண்ணம் எனக்கு வந்து விட்டது என்று நினைக்கிறேன். இரக்கம், மற்றவர்களுக்காக வருத்தப்படுதல், அதிலும் நமக்குத் தெரியாதவர்களின் மறைவை நினைக்கையில் அவர்களது வாழ்வை நினைத்தல், இதுவெல்லாம் எந்த அளவுக்கு உண்மையானவை என்பது சந்தேகமாக இருக்கிறது. ஆனால் நாம் வாழ்ந்தவர்களுக்குக் கடன்பட்டவர்கள் என்பதிலோ அவர்களில் ஒருவரையாவது நினைவு கூர்ந்து நன்றி பாராட்ட வேண்டும் என்பதிலோ எனக்கோ உங்களில் யாருக்குமோ இரு கருத்துகள் இருக்க வாய்ப்பில்லை.

கடந்த சில நாட்களாக எழுதி எழுதி அழித்து விட்டேன்- இதையாவது ஒழுங்காக எழுதி முடிக்கிறேனா பார்க்கலாம்.

வால்டர் ஹாசர்மேன் என்ற விஞ்ஞானி தனது தொண்ணூற்று ஆறாவது வயதில் மரணமடைந்திருக்கிறார். இவர் 1939ஆம் ஆண்டு ஹிட்லரின் நாஜி ஜெர்மனி தயாரித்த V-2 என்றழைக்கப்படும் ஏவுகணைகளைத் தயாரித்தவர். இவை இங்கிலாந்திலும் பெல்ஜியத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தின. எங்கே விழும் என்றே சொல்ல முடியாத ராட்சத ராக்கெட்டுகள் இவை. காதைக் கிழிக்கும் சப்தத்துடன் கண்ட இடங்களில் விழுந்து சிதறும். இதில் கொடுமை என்னவென்றால் சில ஏவுகணைகள் வானத்திலேயே வெடித்து வெற்றுச் சிதறல்களாகக் கீழே விழும். சில வெடிக்காது. தலையில் விழும், மரணம் நிச்சயம் என்றால் கூட ஒருவாறு மனதை திடப்படுத்திக் கொள்ளலாம்.

எங்கே விழும், வெடிக்குமா வெடிக்காதா என்பன போன்ற கவலைகள்- ஆவல் கலந்த அச்சம்-கர்ண கடூரமான சப்தத்துடன் நெருங்கி வந்தால் மனிதனுக்கு அதைவிடக் கொடுமையான வதை அந்த சமயத்தில் ஏதேனும் நினைத்துப் பார்க்கத் தக்கதாக இருக்குமா என்ன!

இதை வடிவமைத்த ஹாசர்மேன் போர் முடிந்த மூன்றாம் வருடம் அமெரிக்காவில் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். ஒன்றும் தெரியாதவனுக்குதான் எல்லைகள், கலைக்கும் அறிவியலுக்கும் எல்லை கிடையாது இல்லையா? நல்லதுக்கோ கேட்டதுக்கோ எதுவும் முழுமையான மானுடத்துக்கும் உரியது.

ஹாசர்மேன் அமெரிக்காவில் ஏவுகணைகள் தயாரிக்க உதவினார். இவரைப் போன்ற நூறு விஞ்ஞானிகள் நாஜி ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவுக்கு வந்தார்களாம். காதலுக்கு மட்டும் அல்ல, குரோதத்துக்கும் கண் கிடையாது. காதலுக்காவது பரவாயில்லை, நினைவிருக்கும்- தன் காதலியின் நினைவாகவே ஏங்கித் திரிவார்கள்- குரோதத்துக்கு அதுவும் கிடையாது: நேற்றைய எதிரி இன்றைய நண்பன், இன்றைய நண்பன் நாளைய எதிரி. எதுவும் நிலையில்லை. இதில் நியாய ஒழுக்கம் பேசி என்ன ஆகப் போகிறது? திறமை இருக்கிறவனை யாரும் பயன்படுத்திக் கொள்ளவே செய்கிறார்கள், திறமை இருக்கிறவனும் நியாய தர்மம் பேசி தன் பிழைப்பைக் கெடுத்துக் கொள்வதில்லை- பெரும்பாலும். ஏதோ ஒரு சிலர் வேறு மாதிரி இருக்கிறார்கள்.

ஹாசர்மேன் நூற்றைம்பது மைல் துவங்கி ஆயிரத்து ஐநூறு மைல்கள் தாண்டிச் சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளை வடிவமைத்துக் கொடுத்தார். 1957ல் ரஷ்யா ஸ்புட்னிக் என்ற ராக்கெட்டை விட்டவுடன், அமேரிக்கா தான் விண்வெளி ஆய்வில் பின்தங்கி இருப்பதாக உணர்ந்து அதில் தனி கவனம் செலுத்தி அடுத்த ஆண்டே தானும் ஒரு ராக்கெட் விட்டது. அப்படியாக ஆரம்பித்தது ஸ்பேஸ் ரேஸ் என்று அழைக்கப்படும் விண்வெளி ஓட்டம். இன்னும் ஓயவில்லை.

ஹாசர்மேனுக்கு அதன் பின் ஏறுமுகம்தான். நிறைய சாதனைகள், விருதுகள். சந்திரனில் காலடி வைத்தானில்லையா மனிதன், அந்த ராக்கெட்டுகளின் எலக்டிரானிக்ஸ் மற்றும் கைடிங் சிஸ்டம் வடிவமைத்த குழுவுக்கு இவர்தான் தலைவராக இருந்தாராம். ஒரு வகையில் இவர்தான் நிலவுக்குப் போன மனிதனின் சிறகுகளுக்கு சாலை போட்டு கைகாட்டி வழிகாட்டிய தொப்புள்கொடி என்று சொல்லலாம், இல்லையா?

எவ்வளவு பெரிய ஆளாக இருக்கறதும், ஆண்டவன் யாரையும் பார்த்து நகைமுரண் செய்து சிரிக்காமல் இருப்பதில்லை என்று நான் நம்புகிறேனில்லையா, அது அப்படித்தான் இருக்கும் என்று நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், வால்டர் ஹாசர்மேன் தன் தள்ளாத வயதில் கீழே விழுந்து அடிபட்ட காயங்களால் காலமானார்.

நமக்கு இறந்தவர்களை நினைவு கூர்வதுதான் காரியமே தவிர அதில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று கட்சி சேர்ந்து செத்தவன் நரகம் போய் சேர்ந்தானா என்று ஆளை விட்டு விசாரித்துத் தெரிந்து கொள்வதில்லை. ஆடுகிற வரைதான் ஆட்டம், ஆடி ஓய்ந்தால் வெறும் கட்டைதான். நாம் அதன் நினைவுகளை ஏன் பழிக்க வேண்டும்?

இன்றைய பதிவை அன்னாரின் நினைவுகளுக்கு அர்ப்பணிக்கிறேன்.

Image credit : Scientists and Friends

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s