பெர்ட்ரம் மான்டேல்ப்ரோட்- கனிவின் குரல்

நமது ‘சுயம்’ சுயம்புவல்ல. அதன் சில விஷயங்கள் பிறப்பிலும், சில விஷயங்கள் வளர்ப்பு மற்றும் இருப்பின் வழியாகவும் வருகின்றன- கண், காது, மூக்கு போன்ற அவயங்களின் ஆக்கம் மற்றும் வளர்ச்சியைப் பார்க்கும் எவரும் இதை ஒப்புக் கொள்வோம். ஆனால் மூளை/ அறிவு/ மனம் என்று வரும்போது இது பிரச்சினைக்குரிய விவாதமாகி விடுகிறது.

உளசிக்கல்கள் ஏற்படுவதற்கு பாதிக்கப்பட்டவரையே காரணமாக்குவது இன்றும் நடந்து வருகிறது- முன்பெல்லாம் அவர்களது புத்தியைக் குறை சொல்வோம், அப்புறம் கொஞ்சம் விபரம் தெரிந்தபின் மரபணுக்களைக் குறை சொல்கிறோம். இரண்டிலும் ஓரளவு உண்மை இருக்கிறது, இரண்டின் சாத்தியப்பாடுகளும் இணங்கி வரும் வகையில் புறச்சூழல் அமையும் போது உளச்சிக்கல்கள் உருவாகுகின்றன.

நாமெல்லாரும் உளச்சிக்கல்கள் இல்லாதவர்களல்ல. எத்தனை கவலைகள், துயரங்கள் மற்றும் அச்சங்கள் எவ்வளவு உக்கிரமாக இருந்தாலும், அவற்றை புறச்சூழல்களை ஒட்டியே, அதற்கேற்ப வெளிப்படுத்தப் பழகியவர்களாக இருக்கிறோம். ஆனால் இது போல் செய்ய இயலாதவர்கள், சமுதாயத்துக்கு பெரிய பிரச்சினையாக இருக்கிறார்கள். அவர்களை ஏதோ ஒரு வகையில் தன்னிடமிருந்து தனிமைப்படுத்தித் தன் குறைகளை சமன்படுத்திக் கொள்கிறது சமுதாயம். காலப்போக்கில் தன்னை மெதுவாக மாற்றிக் கொள்கிறது.

அந்த வகையில் பார்த்தால் உளச்சிக்கல்களால் பாதிக்கப்பட்டவர்கள் சமுதாயத்தை கேள்விக்குள்ளாக்குபவர்கள்- அதில் மாற்றம் ஏற்பட வேண்டிய அவசியத்தை சுட்டிக் காட்டுபவர்கள். முன்னெல்லாம் இப்படிப்பட்டவர்களை பேய் பிசாசு என்ற அமானுட பாதிப்புகளால் பீடிக்கப்பட்டவர்களாக நினைத்தோம், அப்புறம் நனவிலி மன வெளிப்படுகளால் பாதிக்கப்பட்டவர்களாக நினைத்தோம்- இந்த நனவிலி மனமும் ஒரு வகையில் அமானுடம்தான். இப்போது மரபணுக்களையும் மூளையின் ரசாயனத்தையும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

தன்னை, அவர்களுக்கு மூச்சுத் திணறலாக இருக்கிற தன், நெருக்கடியைத் தளர்த்திக் கொள்வதை விடுத்து, தன்னால் அமானுட காரணங்கள் சுட்டி தனிமைப்படுத்தப்பட்டவர்களை குணப்படுத்துகிற சாக்கில் தன்னை விட்டு விலக்கி வைத்தது நாமாகிய சமூகம். இதற்கு பைத்தியக்கார ஆஸ்பத்திரிகள் பெருமளவில் பயன்பட்டன, மேலை நாடுகளில். ஏறத்தாழ சிறை போன்ற சூழ்நிலையில், மரண தண்டனைக் கைதிகளாக இருந்தனர் அவர்கள். மனம் என்ற ஒன்றே இல்லாத வெற்றுப் பிண்டங்களாகக் கருதப்பட்டனர். நம் நாடு மிகத் தாமாதமாக நாகரீகம் அடைந்த காரணத்தால் நம்மவர்கள் இந்தக் கொடுமையை ஓரளவுக்குத் தப்பினர்.

பெர்ட்ரம் மான்டேல்ப்ரோட் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் லித்துவேனியாவில் இருந்து விரட்டப்பட்டபோது கூட்டம் கூட்டமாக புவியெங்கும் பரவிய யூதர்களில் ஒருவர். இவரது பெற்றோர் தென்னாப்பிரிக்காவை வந்தடைந்தனர். அங்கு மருத்துவப் படிப்பை முடித்துக் கொண்டு, இங்கிலாந்தில் குடியேறினார் இவர். தனக்கு இயல்பான தொழில் மனநல மருத்துவம்தான் என்று கண்டு கொண்டு அங்கு தன் திறன்களை செலுத்தினார்.

இது நடந்த 1950கள் ஓரளவுக்கு உளச்சிக்கல் இருப்பவர்களுக்கு ஜன்னல்கள் திறந்த நேரம். ஒன்று, இப்படி இருக்க வேண்டும், அல்லது அப்படி இருக்க வேண்டும், என்ற மனநலம் குறித்த கோட்பாடுகள் உடையத் தொடங்கிய காலம். மாற்றத்தை ஏற்கத் துணிந்த மருத்துவர்களும், வழக்கமான மருத்துவமே சரியானது என்ற நம்பிக்கை கொண்டிருந்த மருத்துவர்களும், எது சரியான முறை என்று சரிவரத் தெரியாத குழப்பத்தில் இருந்த காலம்.

பெர்ட்ரம் மான்டேல்ப்ரோட் சமுதாயம் தன்னை நெகிழ்த்திக் கொண்டு அவர்களும் தன்னுள் இணைந்து இயங்கக் கூடிய நிலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று நினைத்தார். அதன் மிக உறுதியான அதிகார வரம்புகள் குறுக்கப்பட்டு தளர்த்தப்பட உழைத்தார். அவர் பணியாற்றிய மருத்துவமனைகளுள்ளும் புறமும் அவர்களது நிலை குறித்த புரிதல் ஏற்படக் காரணமானார்.

மருத்துவமனையில் இருப்பவர்கள் சுதந்தரமாக நடமாட வழி செய்தார், நோயாளிகளும் அவர்களின் பணியாளர்களும் நெருங்கிப் பழக அனுமதித்தார். நட்பு வட்டம் (லீக் ஆப் பிரண்ட்ஸ்) என்ற அமைப்பை உருவாக்கி உள்ளூரில் அதிகாரத்தில் இருப்பவர்கள் மருத்துவமனையின் செயல்பாட்டை அறிந்து கொண்டு, அங்கு நோயாளிகளாக இருப்பவர்களது “நோய்” எத்திறப்பட்டது என்று புரிந்து கொள்ள வழி செய்தார்.

மன நல மருத்துவத்தில் பெரியதொரு மாற்றம் ஏற்பட்ட காலகட்டத்தில் அதன் இருட் கதவு திறக்கப்பட காரணமாக இருந்தவர்களில் ஒருவர் பெர்ட்ரம் மான்டேல்ப்ரோட். இன்றைக்கு கடுமையான அணுகுமுறை கனிந்த கருணை மிகுந்த ஒன்றாக மாறி இருக்கிறதென்றால் அதில் இவர் போன்றவர்களின் செயல்பாடு மிக முக்கியமான ஒன்றாக இருந்திருக்கிறது.

இவர் குறித்த நினைவுகள் இங்கே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன- European Federation of Therapeutic Communities.

நானும் இன்றைய பதிவை அன்னாரின் நினைவுக்கு அர்ப்பணிக்கிறேன்.

image credit- EFTC

Advertisements

2 thoughts on “பெர்ட்ரம் மான்டேல்ப்ரோட்- கனிவின் குரல்

 1. உங்கள் பதிவுகளை மீண்டும் பார்க்க மகிழ்ச்சியளிக்கிறது.உங்கள் இந்த வகைப்பதிவுகள் சொல்வதென்ன.மழையோ வெயிலோ கஷ்டமோ கொண்டாட்டமோ வாழ்க்கை மனிதர்களினூடே நகர்ந்து கொண்டுதானிருக்கிறது.
  அவர்கள் விட்டுச்சென்றவை தவிர இயற்கை மாறமலேயே இருக்கிறது.இதுவரை மனிதவாழ்வு விட்டுச்செல்லச்செல்ல அடுக்கப்படுபவைகளில் ஒரு இதழை நீங்கள் எழுந்தமானமாக இழுத்துக்கொடுக்கிறீர்கள்.நீங்கள் இழுத்துக்கொடுப்பதுவும் மீண்டும் அடுக்கப்படுகிறது.

  தொடர்ந்து எழுதுங்கள் படிப்பதற்கு காத்துக்கொண்டேயிருக்கிறேன்
  நன்றி

 2. நீங்கள் இந்த மாதிரி வாழ்க்கை குறித்த உங்கள் எண்ணங்களை அவ்வப்போது – மாதம் ஒரு முறையோ இரு முறையோ- பகிர்ந்து கொண்டால் எனக்குப் பெரிய ஊக்கமாக இருக்கும் 🙂

  வாழ்க்கை என்பது கணந்தோறும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது- நாம் அதன் நினைவுகளைத் தொகுத்து அதில் உழன்று இன்பமும் துன்பமும் அடைகிறோம். இதில் நன்மை தீமை இரண்டையும் கலந்தே அனுபவிக்கிறோம். நாம் சமகால, நினைவில் உறையாத நிகழ்வைத் தொடும் தருணங்களே வாழ்வைத் தொடும் கணங்களாக இருக்கின்றன- அவையே வாழ்வுக்குப் பொருள் சேர்க்கின்றன.

  நான் ஏற்கனவே இரண்டு மூன்று முறை ஜெமோ சொன்ன ஒரு மேற்கோளை சுட்டி இருக்கிறேன்-

  ““காலையொளியில் வைரம்போலச் சுடர்விட்டு இலைநுனியில் அமர்ந்திருந்த புழு ஒன்றைக் கண்டேன். வாழ்க்கை என்பது மாபெரும் வரம் என்று அப்போது என் அகம் அறிந்தது. இந்த உலகின் ஒவ்வொரு துளியும் பேரழகு கொண்டது, மகத்தானது. இதன் ஒவ்வொரு கணமும் அமுதம்.

  வாழ்க்கைக்கு அப்பால் ஏதுமில்லை, வாழ்க்கை வழியாகச் சென்றடையக்கூடியதென்றும் ஏதுமில்லை. வாழ்க்கையே தன்னளவில் முழுமையானது. நேற்றிலாது நாளையிலாது இன்றில் வாழமுடிந்தால் அதுவே வீடுபேறு…”” – http://www.jeyamohan.in/?p=7409

  இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது!

  இன்று நான் படித்த இரு விஷயங்கள் மிக்க ஆச்சரியமானவை.

  ஆப்பிரிக்காவில் உள்ள ஈ வகைகளில் மிகப் பெரிதானவை Rhinoceros bot fly என்றழைக்கப்படும் Gyrostigma Rhinocerontis. இவற்றின் லார்வாக்கள் காண்டாமிருகத்தின் வயிற்றில்தான் வளர முடியும். அது வளர்ந்து வெளிவந்தபின் மூன்று முதல் ஐந்து நாட்களே வாழ்கின்றன. வாய் கிடையாது. உணவு உண்பதில்லை. இந்தக் குறுகிய வாழ்நாளில் இவை ஜோடியைக் கண்டு புணர்ந்து அதன் பின் தன் முட்டையைப் பொறிப்பதற்காக ஒரு காண்டாமிருகத்தைப் பிடிக்க வேண்டும். என்ன வாழ்க்கை என்று தோன்றுகிறது, ஆனால் அது தோன்றிய நாள் முதலாய் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து இந்த பூமியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. –

  செய்தி இங்கே – http://www.nhm.ac.uk/nature-online/species-of-the-day/biodiversity/endangered-species/gyrostigma-rhinocerontis/index.html

  ஆனால் இதை சொல்லும்போதே இதுவும் நினைவுக்கு வருகிறது:

  வில்லியம் பீப் என்பவர் 1944ல் எழுதியது:

  தியோடர் ரூஸ்வெல்ட்டும் நானும் மாலைப் பொழுதில் அறிவின் எல்லைகள், மற்ற மிருகங்களின் மனதினூடே அறிதல் போன்ற விஷயங்களைப் பேசி விட்டு புல்வெளிக்குப் போவோம். அங்கே வானின் ஒரு புகை மண்டலத்தைப் பார்த்தபடி நாங்கள் ஒரு வழிபாட்டை நிகழ்த்துவதுண்டு-

  அதுவே ஆண்ட்ரோமீடா ஸ்பைரல் காலாக்ஸி.
  அது நம் பால் வழி போல் பெரிதான ஒன்று.
  நூறு மில்லியன் காலக்ஸிகளில் அதுவும் ஒன்று.
  அது 750,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது.
  அங்கு நூறு பில்லியன் சூரியன்கள் உள்ளன, அவற்றில் ஒவ்வொன்றும் நம் சூரியனைவிடப் பெரியவை.

  இந்த வழிபாடு முதிந்ததும் ரூஸ்வெல்ட் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொல்வார், “இப்போது நாம் போதுமான அளவுக்கு சிறிதாகி விட்டோமென்று நினைக்கிறேன், இனி தூங்கப் போகலாம், ” என்று.
  http://www.futilitycloset.com/2010/12/19/a-prayer/

  இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால், நம் பூமி சூரியனில் அவ்வப்போது வெடித்து அடங்கும் சன் ஸ்பாட்கள் ஒன்றின் அளவு கூட இல்லையாம்!

  இதுதான் வாழ்க்கை.

  இதில்தான் இவ்வளவும்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s