பால் சொல்ட்னர்- தாமாய்த் திரண்ட களிமண் கலயங்கள்

அமெரிக்காவில் பிறந்த பால் சொல்ட்னர் இரண்டாம் உலகப் போரில் பணியாற்றிய போதில் ஆஸ்திரியாவில் மாத்ஹாசன் என்ற தொகுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்த யூதர்கள் தங்கள் அறையின் சுவர்களில் கரிக்கட்டைகளை வைத்து ஓவியங்கள் வரைந்திருந்ததைப் பார்த்தார். அது அவரது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

அத்தனை கடும் நெருக்கடியான சூழலிலும் தங்கள் வாழ்வில் அழகைப் படைத்து ரசிக்க முனைந்த மானுட இயல்பு அவரது நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. தானும் ஒரு கலைஞனாவதாக முடிவு செய்தார்.  அவரது தந்தை எது இருக்கிறதோ அதை வைத்து எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமா அப்படி நாமும் நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வாராம். இரண்டும் இணைந்து அவரை ஜப்பானிய ராக்கு வகை குயவராக மாற்றியதில் ஆச்சரியமில்லை.

ராக்கு வகை என்பது, எதிர்பாராதது என்பதில் அழகு காணும் முறை- ஜப்பானிய முறையில் ராக்கு என்ற பதம் சுகம் என்ற பொருள் தருகிறது. இன்பம் மற்றும் ஈஸியாக இருத்தல் ராக்கு என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. தமிழில் சுகம் என்ற பதம் சரிதானே?

ராக்கு வகை களிமண் கலயங்களின் செய்முறை வித்தியாசமானது. களிமண்ணைக் கையால் பிசைவார்கள்- சக்கரத்தில் பிசைந்த பாண்டங்களுக்கு இருக்கிற நேர்த்தி இதில் இருக்காது. அப்படி பிசைந்த கலயத்தை தாழ்சூடுடைய கலனில் சுடுவார்கள்- உயர்வெப்பத்தில் சுட்டெடுக்கப்பட்ட கலயங்கள் மொழுமொழுப்பாக இருக்குமென்றால், இவ்வகை கலையங்கள் காற்று புகுந்த மேற்பரப்புடன் மொறுமொறுப்பாக இருக்குமாம்- கொஞ்சம் கரடு முரடாக. இதுவெல்லாம் போதாதென்று மற்ற கலயங்கள் மெல்ல ஆறி அடங்கினால், ராக்கு கலயங்களை கொதி நிலை அடங்கும் முன்னமேயே சில்லென்று இருக்கிற தண்ணீரில் போட்டு விடுவார்களாம்.  இதனால் கலயம் ஒரு உலோகத் தன்மை கொண்ட மேற்பரப்புடன் காட்சி தருகிறதாம். இதையெல்லாம் படிக்கப் படிக்க சுவையாக இருக்கிறது

பால் சொல்ட்னர் வகுப்பெடுத்துக் கொண்டிருந்த போது ஒரு முறை இந்த சுடுகலயம் கைதவறி காய்ந்த சருகுகளாய் இருந்த இலைப் படுகையில் விழுந்து விட்டது.  பற்றியெரிந்த இலைகள் அடங்கியபின் கலயத்தை எடுத்துப் பார்த்தால், சுட்ட பாண்டத்தில் இலைகளின் வண்ணங்கள் பதிவாகி இருந்தனவாம். இதைத் தொடர்ந்து தண்ணீரில் ஆற்றுப் படுத்தாமல் மரத்தூள்கள் மற்றும் காகிதக் குவியலில் கலங்களை ஆற்றுப் படுத்துதலை இவர் வழக்கத்துக்குக் கொண்டு வந்தார்- இது மேலைப் பாணி ராக்கு வகை என்று பிரபலமானதாம்.

தனது எண்பத்து ஒன்பதாவது வயதில் காலமான அன்னாரின் நினைவுகளுக்கு இன்றைய பதிப்பை அர்ப்பணிக்கிறோம்.

image credit: istdibs

Advertisements

14 thoughts on “பால் சொல்ட்னர்- தாமாய்த் திரண்ட களிமண் கலயங்கள்

  1. Raku என்ற ஜப்பானிய மொழிச் சொல்லுக்கு “ease”, “joyousness” என்று இரு பொருள் உள்ளனவாம். இதைதான், “சும்மா இருப்பதே சுகம்” என்று நம்மவர்கள் சொன்னார்களோ? அதற்கு ஒரு அழகிய சொல் இருப்பது சுவையான செய்தி.

   இந்த சும்மா இருக்கும் சுகம் செயல் வடிவம் காண்பது எப்படி என்ற கேள்விக்கு ஜப்பானியர்கள் விடை காண முனைந்திருகிறார்கள்- கலை கல்வி என்ற பல்வகை வடிவங்களில்.

   இது பற்றி எழுதுவதானால் எவ்வளவோ எழுதலாம் என்று நினைக்கிறேன்- உள்ளதை உள்ளவாறே ஏற்பது என்பது தன்முனைப்பை அடக்கக் கூடியதாக இருப்பினும், செயலூக்கத்துக்கு எதிரானதல்ல, சொல்லப் போனால் நம் செயலாக்கத்தைக் கூட்டவும் கூடும் என்றுத் தோன்றுகிறது… 🙂

  1. 🙂 நிச்சயம் ஜப்பானியர்களுக்கு ராகு காலம் சுக வேலைதான், சந்தேகம் என்ன!

   உள்ளதை உள்ளவாறே ஏற்பது என்பது செயலூக்கத்துக்கு எதிரானதாகத் தான் தெரிகிறது. ஆனால் நாம் எவரும் செயலற்றிருக்கக் கூடியவர்கள் இல்லையே!

   உள்ளதை உள்ளபடியே ஏற்றுக் கொண்டு அதிலிருந்து மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசிப்பது சரிவரும் என்று நினைக்கிறேன். இது சூழியலை ஒட்டிய வாழ்முறைக்கும் வழி வகுப்பதாக இருக்கக் கூடும்.

   இந்த விஷயம் குறித்து விரிவாகப் பேச வேண்டும், இல்லையா? அதை செய்ய உங்களை விட்டால் வேறு யார் இங்கு இருக்கிறார்கள்!

 1. ஒரு மருத்துவர் உள்ளது உள்ளபடி என்று இருக்கமுடியாது.ஏதோ அவர் விதி இழுத்துக்கிட்டுக்கிடக்கிறார் அப்படி விடமுடியாது உள்ளதை உள்ளபடி ஏற்காதவர்களால்தான் எல்லாத்துறைகளும் வளர்ந்திருக்கிறது..தோல்விகளை தவிர்க்கமுடியாதவைகளை அப்படிக்கடந்து செல்லலாம் என்று தோன்றுகிறது 🙂

  1. உங்கள் கருத்தை, கொள்கையை மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள், மிக்க நன்றி. நீங்கள் சொல்வது சரிதான் என்று ஏற்றுக் கொள்கிறேன்.

   இருந்தாலும் நம்ம ஊரு உள்ளது உள்ளபடிக்கும் ஜப்பானிய உள்ளது உள்ளபடிக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். அவர்கள் தோட்டம் காடு போல் இருக்குமாம்- ஆனால் அந்தக் காடு எல்லாம் வளர்கிறபடி வளரட்டும் என்று சும்மா விட்டதனால் அல்ல- ரொம்ப மெனக்கெட்டு அந்த ஒரு எபெக்ட் கொண்டு வருகிறார்கள்.

   இது சிந்தனைக்குரியது… 🙂

 2. மேலே பின்னூட்டத்தில் ஏதோ கொஞ்சம் அழுத்திச்சொல்லிவிட்டேன்.மன்னித்துவிடுங்கள்
  உண்மையில் ஆழ்ந்து சிந்தித்தால் ஆணித்தரமான கருத்தொன்றில்லை என்பதுதான் என் ஆணித்தரமான கருத்து. 🙂
  ஆணித்தரமான கருத்து என்று சொல்லப்படும்போது ஒரு பக்கம் மறைக்கப்படுகிறது என்பது உண்மை.

  மருத்துவத்துக்கு அது தேவை என்பதை விட அது விதியாக்கப்பட்டிருக்கிறது.Intervention – a doctor have to intervene the natural course of the disease அதனால்தான் உலகில் மனித இனம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக மாறி சமநிலை குழம்பிவிட்டது.
  ஆனால் மற்றைய விஷயங்களிலும் குழப்பம்தான். சமூகத்தை ஒட்டுமொத்தமாகப்பார்க்கும் போது சமநிலை என்று வருகிறபோது ஏற்றத்தாழ்வுகளை ,இரை,இரையுண்ணி இப்படி ஒரு முழுப்பார்வை என்று வருகிறபோது உள்ளது உள்ளபடி சிக்கலாக வருகிறதோ என்னவோ

  அது நாங்கள் எந்த வட்டத்தில் இருந்து பார்க்கிறோம் என்பதைப்பொறுத்து என்று சொல்லலாமோ என்னவோ.Globalist,humanist,indian.tamil,caste இப்படி வட்டங்கள் வேறுபடும்போது ஒரு புலி மானை உண்ணும்போது புலி சொல்லலாம் மானே உன் விதி இது ஏற்றுக்கொள் என்று. மான் போராடுவதுதான் ஓடித்தப்ப முயற்சிப்பதோ என் விதி என்று சொல்லும் உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்வது மானுக்கு அழிவு.
  உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்வது என்பதன் அர்த்தம் இந்த வட்டங்களுக்கு இடையில் மாறுபடும் என்று தோன்றுகிறது.

  யப்பானியர்கள் தோட்டத்தைக்காடாக்கி ஒரு சமநிலையை உருவாக்குகிறார்கள் ஆச்சரியம்.
  நாங்கள் சமுகத்தை காடாக்கி ஒரு சமநிலையை உருவாக்கி வைத்திருக்கிறோம்.அந்த உள்ளது உள்ளபடியை ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.
  வலியது மெலியது வேட்டை போராட்டம் பல மட்டங்களில் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.
  எங்கள் சமூகத்தை இந்த களிமண்கலயத்துக்கு ஒப்பிடலாமா.
  சும்மா இப்படிச்சிந்திக்கிறேன். தவறாக இருக்கலாம்.
  பதில் பின்னூட்டம் இடுவது தாமதமானாலும் குறைப்படவேண்டாம் கொஞ்சம் நேரச்சிக்கல்

  1. தொடர்புடைய சுட்டி- http://en.wikipedia.org/wiki/Acceptance_and_commitment_therapy

   சுருக்கமாக- பெண் நமக்குப் பிடிக்காத ஒரு குடும்பத்தில் மணம் செய்து கொண்டு விடுகிறாள்- அவளது தேர்வை ஏற்றுக் கொண்டால்தானே உறவு தொடரும்?

   பொதுவாக பாலியல் வன்முறைக்கு ஆளானவர்கள் மன நிம்மதியைத் திரும்பப் பெற நடந்த நிகழ்வை ஏற்றுக் கொள்வதும் மன்னிப்பதும் துணை செய்கிறது என்று சொல்கிறார்கள்.

   மறுமலர்ச்சி என்பது ஏற்பின் பின் நிகழும் ஒன்று என்று நினைக்கிறேன்- தனி மனித அளவிலும் சமூக அளவிலும்.

   இன்னும் சொன்னால் அர்ஜுனன், “நியாயம் தர்மம் என்ற பெயரில் சொந்தங்களையும் சுற்றத்தையும் கொலை செய்து என்ன ஆகப் போகிறது?” என்று கேள்வி கேட்டு தன் நிலையை ஏற்காமல் துவண்டு விழுந்த நிலையில், கிருஷ்ணர் இதுதான் உண்மை, இதை நீ ஏற்றுக் கொண்டு முன்னே செல்ல வேண்டும் என்று சொன்னதுதானே பகவத் கீதை…

   உள்ளதை உள்ளவாறே ஏற்பது மட்டும்தான் செயலூக்கம் தரும் என்று நினைக்கிறேன்! நீங்கள் மருத்துவராக உள்ளதை உள்ளபடியே ஏற்கும் மனநிலையில் இல்லாவிட்டால் சரியாக வியாதியை அடையாளப்படுத்தி மருந்து தர முடியாது, இல்லையா? இது சாதாரண விஷயம் இல்லை- எவ்வளவோ பேர் தனக்கு நோய் இருப்பதையே ஏற்காமல் காலம் தாழ்த்துகிறார்கள். அதே போல் ஆய்வு செய்பவர்களும் உள்ளது உள்ளபடி எப்படி இருக்கிறது என்பதைக் குறித்த கவலையுடன் இல்லாவிட்டால் தடம் மாறிப் போக அதிக வாய்ப்பு இருக்கிறது, இல்லையா?

   பொதுவாக நாம் ஒரு விஷயத்தை ஏற்காமல் இருப்பது நம் ஆற்றலை விரயப்படுத்துவதாக இருக்கிறது- ஆக்கப்பூர்வமாக வெளிப்பட வேண்டிய செயலூக்கம் நம் மனதின் முரண்களோடு சண்டை போடுவதில் வீணாகி விடுகிறது என்று நினைக்கிறேன்.

   ஒரு ஆயிரம் ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் எப்படி இருக்கும் என்று மனதில் ஒரு கணம் நினைத்துப் பார்த்தால் நம் முரண்களில் பாதிக்கும் மேல் பொருளற்றுப் போய் விடும்.

   நாம் நம் செயல்களில்தான் வெளிப்படுகிறோம், நம் நிராகரிப்புகளில் நம் அச்சங்களே வெளிப்படுகின்றன என்று நினைக்கிறேன்.

   நான் சொன்ன மாதிரி இது விடை இல்லாத புதிர்- அவரவர் தம் மனப்பாங்குக்கு ஏற்ப செயல்பட வேண்டியதுதான், உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொள்வது என்பதை மற்ற கட்டளைகளைப் போல் நினைக்க முடியாது- உள்ளதை உள்ளபடி ஏற்க இயலாத நிலை இருப்பதும் உண்மைதானே, அதையும் சரியான நிலைப்பாடாக ஏற்றுக் கொண்டு அடுத்து ஆகிற வேலையைப் பார்ப்பதுதானே சரியாக இருக்கும்?! 🙂

 3. //பதில் பின்னூட்டம் இடுவது தாமதமானாலும் குறைப்படவேண்டாம் கொஞ்சம் நேரச்சிக்கல்//

  நானே நேரமில்லாமல் பதிவு எழுத முடியாமல் உட்கார்ந்திருக்கிறேன், நீங்கள் பின்னூட்டம் இடவில்லை என்று குறை சொல்வேனா என்ன!

  நீங்கள் ஒரு சிக்கலான விவாதத்தைத் துவங்கி வைத்திருக்கிறீர்கள்- இதற்கு விடை கிடையாது என்பதுதான் உண்மை என்று நினைக்கிறேன். உங்களுக்கா தெரியாமல் இருக்கும், புலி வாயில் அகப்பட்ட மானுக்கு வலி தெரிவதில்லை. ஒரே நிச்ச்சலனமாக ஆகி விடுகிறது. Corbett போன்ற புலி வேட்டைக்காரர்கள்கூட, அவ்வளவு நேரம் இருந்த பீதி அது என்னைக் கவ்விப் பிடித்ததும் அமைதியாக அடங்கி விட்டது என்று சொல்கிறார்.

  மனித உடலின் தற்காப்பு இயக்கம் இது என்று சொல்கிறார்கள். வேண்டுமானால் சுட்டிகளைத் தேடித் தருகிறேன்.

  எல்லாவற்றுக்கும் அததற்கு என்று ஒரு இடம் இருக்கிறது என்று தோன்றுகிறது.

 4. உள்ளது உள்ளபடியே ஏற்றுக்கொள்வது என்ற வாக்கியம் கொஞ்சம் மயக்கம் தருகிறது என்று நினைக்கிறேன்.
  மாற்றமுடியாதவைகளை கடந்து விட்டவைகளை ,அதாவது சிந்தியபாலை இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்பவைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் அதை ஏற்றுக்கொள்ளமுடியாத தன்மை சிக்கல்.அதற்குச்சிகிச்சை தேவை
  அதைக்குறிப்பிடுகிறபோது நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை.
  நடந்தவை .என் தோற்றம் இப்படி. எனக்கு நோய் போன்றவைகள் நடந்து முடிந்தவை.

  ஆனால் அது ‘உள்ளது உள்ளபடி யா?’’

  இல்லையல்லவே.

  உடல் அளவுக்கு மீறி பருமனாயிருக்கிற ஒருவர் தன் உடலின் அளவை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். அல்லது கடுமையான உடற்பயிற்சி செய்து குறைக்கலாம்

  இந்த இடத்தில் உள்ளது உள்ளபடியே ஏற்றுக்கொள்வது என்று சொல்லலாம்
  ஆனால் பருமனை ஏற்றுக்கொள்வது உடல்நலத்துக்குப்பாதகமாகிவிடும்.

  உடலைப்பற்றிய பிரக்ஞை அதிகரித்து அதனால் தாழ்வு மனப்பான்மை வரும்ப்போது உடல் பருமனை ஏற்றுக்கொள் என்று சொல்வது சரியாக இருந்தாலும் உடலைக்குறைக்க வழியிருக்கும் போது ஏற்றுக்கொள்ளும் வழிமுறை உடற்பயிற்சி செய்வது என்கிற செயலூக்கத்தை குறைத்துவிடும்.

  ஒஸ்விட்ஸ் முகாமில் சாகலாம் என்று நினைத்தவர்கள் இறந்து போனார்கள். வாழவேண்டும் என்று நினைத்தவர்கள் கடுமையான சூழலில் தாக்குப்பிடித்தார்கள்.
  கடுமையான நோய்வாய்ப்படுகிறவர்களில் சாகப்போகிறோம் செத்துவிடுவோம் என்று நம்பத்தொடங்கியவர்களின் உடல் போராட்டசக்தியை இழக்கிறதென்கிறார்கள்.
  நான் பலமானவன் என்ற மனப்பாங்கு இருப்பவர்களின் உடல் நோயோடு போராடுகிறதாம்.

  புலி வாயில் அகப்படுகிற மான் கண்களைப்பார்த்து அப்படியாகிவிடுகிறது என்று சொல்லுவார்கள்.இந்த உதாரணத்தை எடுப்பது உண்மையில் அபாயமாகிவிடுகிறது.

  ஏனென்றால் இயற்கையில் எமது உடல் போராடு அல்லது தப்பியோடு என்ற அடிப்படையில்தான் இயங்குகிறது.இதை Fight or Flight response என்று சொல்வார்கள்.இந்த நேரத்தில் உடலின் இயங்குசக்தி பல மடங்கு அதிகரிக்கிறது.
  அட்ரினலின் என்ற சுரப்பிவகைகள். இதைத்தான் ஓட்டப்பந்தய வீரர்கள் பாவிக்கமுயல்வார்கள்.
  இதுதான் உடலின் தற்காப்பு இயக்கம்.
  பரு அளவில் இப்படியென்றால் நுண் அளவில் உடல் எதையும் ஏற்றுக்கொள்வதில்லை.மிகக்கொடுரமாக போராடுகிறது. தாக்கி அழித்துவிடுகிறது.உடலினுள் தற்கொலைத்தாக்குதல் கூட இருக்கிறது

  மகாபாரதத்திலிருந்து உதாரணத்தையே பார்த்தால் ஏன் யுத்தம் ஏற்பட்டது பாண்டவர்கள் நாடிழந்ததை ஏற்றுக்கொண்டிருந்தால் பாரத யுத்தம் இல்லையே. ஏன்
  அருச்சுனன் மனம் மயங்க வேண்டி வருகிறது?
  ஏன் அந்தத்தருணத்தில் மாத்திரம் கண்ணன் உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்ளச்சொல்கிறான். போர்தொடங்கமுன்பே உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்ளச்சொல்லி போரை நிறுத்தவில்லை?

  தர்மம் அதர்மம் என்று அங்கு வருகிறது. அப்படியென்றால் தர்மமாயிருந்தால் ஏற்றுக்கொள்ளலாம் அதர்மமாயிருந்தால் போராடவேண்டுமென்றல்லவா ஆகிறது.
  பின்னே கீதை சுதர்மம் பேசுகிறது. புலி வாழ வேட்டை. மான் வாழ புலிக்குத்தப்புதலும் மேய்ச்சலும் என்றாகிறது.
  புலி மான் இரண்ண்டுகுமிடையில் ஒன்றுக்கு சார்பாக இன்னொருவர் புகக்கூடதென்பதைச்சொல்ல உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்லலாம்.
  புலியிடம் அகிம்சையைப்போதிப்பதோ மானுக்கு நீ புலிக்கு இரை என்பதை ஏற்றுக்கொள் என்பதோ உள்ளது உள்ளபடியாக்குமா?

  உள்ளதை உள்ளபடி எமக்குப்பார்க்க முடிகிறதா?

  பிரக்ஞையில் அல்லது ஈடுபடுத்திக்கொள்ளல் என்ற தன்மை அற்றுப்போதல் அதாவது தன்சார்பாக தன்னை மையப்படுத்தாமல் ஒன்றைப்பார்க்கின்ற பக்குவத்தை உள்ளது உள்ளபடி பார்த்தல் என்று எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
  ஒரு அகிம்சாவாதி புலியை கொடிய விலங்கு என்று சொல்வதில் உள்ளது உள்ளபடி இல்லை. புலி மாமிச பட்சணி. அது வேட்டையாடும் என்றால் அது உள்ளது உள்ளபடி.
  கொடிய விலங்கு என்பதில் சொல்பவர் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுவிடுகிறார்.
  ஒருவருடைய பிரிவு எனக்கு இழப்பு என்கிறபோது கவலை. இறந்தவரை மையப்படுத்தி அவர் பாழும்பிறவியைத்தொலைத்துவிட்டார் என்று யோசித்தால் கவலையிருக்காது இல்லையல்லவா

  விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் இந்த இடத்தில் நெருங்கிவருகின்றனவோ.இரண்டும் உள்ளதை உள்ளபடி பார்க்கமுயல்கின்றனவோ.

  உள்ளதை உள்ளபடி பார்க்காமல் எங்கள் கண்களை மறைத்திருப்பதை மாயை என்கிறோம்.
  உள்ளது உள்ளபடி துலங்குவதை ஞானம் என்கிறோம்

  உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்ள உள்ளதை உள்ளபடி பார்க்கவேண்டும்போலத்தோன்றுகிறது

 5. நன்றி டாக்டர். நேரம் இல்லாமல் பதிவு போடத் தவிக்கிற நேரத்தில் ஒரு நல்ல சிறப்பு பதிவு தந்து கை கொடுத்திருக்கிறீர்கள், நன்றி! “)

 6. யானை ஆறடி… அங்குசம் அறுவத்தாறு அடி’ங்கற மாதிரியில்ல இருக்கு. என்னா சார் ஒரு மொழ நீள போஸ்ட்டுக்கு, ஒன்றரை கஜத்துக்கு பின்னூட்டம்.

  1. இந்த விஷயமா இன்னும் நிறைய எழுதிய வேண்டியது இருக்கு ஜி, எழுதலாமா வேணாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்கோம்லா!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s