அறம் கதைகள்- சமகால காப்பிய நாயகர்கள்

என்னதான் சொல்லுங்கள், யார் என்ன சொன்னாலும் சரி, ஜெயமோகன் தமிழின் தவிர்க்க முடியாத எழுத்தாளர்தான்- குறிப்பாக இந்த ப்ளாகுக்கு. அவரைப் பற்றி இனி எதுவும் எழுதக் கூடாது என்று நினைத்துக் கொள்வேன்- எழுதுவதனால் அவர் சொல்லும் விஷயத்தை வைத்து வாரம் ஒரு பதிவு போடலாம்- உத்தரவாதமாக பதிவுக்கு நூறு ஹிட்கள் கிடைக்கும், இருந்தாலும் நமக்கென்று ஒரு தனித்தன்மை வேண்டாமா?

ஆனால் பாருங்கள், எழுத வைத்து விடுகிறார்- இந்தப் பதிவில் வளவளவென்று நீட்டி முழக்கப் போவதில்லை: ஓரிரு சிறு குறிப்புகள் மட்டுமே- இனியும் இதை சொல்லாமல் இருக்க முடியாது என்ற விஷயங்கள் மட்டுமே.

தற்போது அவரது தளத்தில் வந்திருக்கிற மூன்று சிறுகதைகளையும் படித்திருப்பீர்கள்- உலுக்கி எடுத்து விட்டன, மூன்றுமே. அவை குறித்து பல்வேறு கருத்துகள், ஆனால் கருத்து சொல்ல வைத்து விட்டதே அவரது சாதனைதான். இதோ இப்போது என் கருத்துகள். எவன் கேட்டான் என்கிறீர்களா?

உங்களை எவன் கேட்டான்?- எழுதுகிறேன், படிக்காவிட்டால் தாண்டிப் போய் விடுங்கள், என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை.

0O0O0

நான் இயல்பாக ஏற்றிருந்த விஷயங்கள் வெறும் நம்பிக்கைகள்தான் என அடையாளம் காட்டப்பட்டு சிதைவுறும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்த காலம்- என்ன செய்வதென்ற தெரியாத நிலை. அப்போது நான் என் நம்பிக்கைகளை மீட்டெடுக்க ஹனுமான் சாலீசா மற்றும் அபிராமி அந்தாதி ஆகிய இரண்டையும் தினமும் படித்து ஒருவாறு தேறினேன்.

இன்று காலை ஜெயமோகன் எழுதிய மத்துறு தயிர் என்ற சிறுகதையை ஒருவிதமான அசௌகரிய உணர்வுடன்தான் படித்தேன்- நல்ல கதை, மனதை உருக்கும் கதை என்பன போன்ற நடுநிலை முடிவுகளை அடைந்தவனாக வேறு வேலைகளைப் பார்த்தேன். அப்புறம் அலுவலகத்துக்குப் பஸ்ஸில் போகும்போது, தன்னிச்சையாக “ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி” என்ற அபிராமி அந்தாதி பாடல் வரி நினைவைத் தட்டியதுதான் தாமதம்- நம்பினால் நம்புங்கள், நெஞ்சைக் கடைகிற உணர்வு வந்து கண்ணில் நீர் முட்டிக் கொண்டு நின்றது.

அப்ப்போதெல்லாம் அபிராமி அந்தாதி படிக்கும்போது குரல் கம்ம, தொண்டை அடைக்க, சில சமயம் தொடர முடியாமல் நிறுத்தியிருக்கிறேன்- அந்த நாட்களையெல்லாம் கடந்து விட்ட நிலையில், இன்று இந்தக் கதை என்னை பழைய நாட்களின் உணர்வுகளில் ஆழ்த்தியது- ததியுறு மத்தில் சுழலும் என் ஆவி என்பதன் உட்பொருள் நான் அறிந்திராத தீவிரத்துடன் என்னைத் தாக்கியது.

அதற்காகவும் ஜெயமோகன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவிக்க வேண்டுமல்லவா?

அதற்காகவேனும் இந்தப் பதிவைப் போடாவிட்டால் தனியாக ப்ளாக் வைத்துக் கொண்டிருப்பது எதற்காக?

எனவே,

ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி

.

0o0o0o0

ஒவ்வொரு கதையைக் குறித்தும் இன்னும் எவ்வளவோ எழுதலாம், ஒவ்வொன்றைப் பற்றியும் குறைந்தது ஆயிரம் சொற்களாவது எழுதினால்தான் ஓயும்- இருந்தாலும், தற்போதைக்கு ஓரிரு சிறு குறிப்புகள்.

ஜெயமோகனுக்கு அசாத்திய துணிச்சல்தான்- ‘அறம்‘ சிறுகதை தர்மபத்தினியின் அறம் குறித்துப் பேசுகிறது, சோற்றுக்கணக்கு உண்டியிடுபவரின் அறம் குறித்துப் பேசுகிறது, மத்துறு தயிர் ஒரு பேராசிரியரின் அறம் குறித்துப் பேசுகிறது: அறச்சார்ப்பு என்று சொல்கிறோமில்லையா, எது அறம் என்ற கேள்வி எழுவது இயல்பே- ஸ்வதர்மம் என்று எளிதாக சொல்கிறோம்: அந்த ஸ்வதர்மத்தை அடையாளம் காட்டுகிறார் ஜெயமோகன் என்று நினைக்கிறேன்.

அது அவரது நோக்கமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் இந்தக் கதைகளை இப்படித்தான் படிக்கிறேன். இது இந்தக் கதைகளின் பன்முகத்தன்மையைக் குறுக்குகிறதென்றாலும்,  இவற்றுக்குப் பொதுவான ஒரு சரடைத் தேடினால், அது இந்த ஸ்வதர்மம்- தனக்கு உண்மையாக இருப்பது- என்பதுவாகதான் இருக்கிரும்.

அப்படி இல்லையெனில், அறம் சிறுகதையின் முடிவில் எழுத்தாளர் அறம் அந்தப் பெண்மணியில் கையில் அல்லவா இருந்தது என்று சொல்வது முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத நெருடலாகவே இருக்கும்- மூன்று நாட்களுக்கு ஒரு புத்தகம் என்று தமிழில் பிரதி எடுத்த எழுத்தாளரிடம் அறம் இருந்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்- சொன்ன காசை தராமல் ஏமாற்றிய பதிப்பாளர் கையில் அறம் இல்லை என்பது சொல்லாமலே தெரியும்- ஆனால் அந்தப் பதிப்பாளரின் மனைவி தன் கணவனை தர்மம் வழுவாமல் காப்பாற்றுகிறாள் என்பது உண்மையானால், தர்மபத்தினி என்ற தன் ஸ்வதர்மத்தைக் கடைபிடிக்கிறாள் என்பதை ஒப்புக் கொண்டேயாக வேண்டும், இல்லையா? மற்ற இரு கதைகளும் பல்வேறு திசைகளில் கிளைத்தாலும், கதைகளின் மையத்தில் இந்த ஸ்வதர்மம் என்ற அறமே இருக்கிறது என்று நினைக்கிறேன்.

இதில் ஒரு விஷயம் என்னவென்றால் இந்தக் கதைகளைப் பிரச்சார எழுத்தாக மாறாமல் காப்பது ஜெயமோகனின் துயர் துளங்கு பார்வை என்று சொல்லத் தோன்றுகிறது- இப்போதைக்கு இதற்கு மாற்றாக செம்புலப் பார்வை என்ற ஒன்றை சொல்லி வைக்கிறேன் (மேலதிக விவரங்களுக்கான துவக்கம் ஒன்று இங்கே இருக்கிறது)

எந்த ஒரு செம்புலத்தையும் (உடோபியா) அடையாளம் காட்டாமல், இன்னும் சொல்லப் போனால், செம்புலத்துக்கு இட்டுச் செல்வதை நோக்கமாக வைத்திராத, இந்த மண்ணின், இந்த காலக் கட்டத்தில், சமகால பிரச்சினைகளுக்கான ஆதர்சங்களைக் கட்டமைக்கிறார் ஜெயமோகன் என்று நினைக்கிறேன்- இவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று அவசியமில்லை, அந்த மாதிரி எந்த நியதியும் இல்லை.

இதையெல்லாம் விவரமாக எழுதாவிட்டால் பிரயோசனமில்லை- ஆனால் இப்போது இப்படி எதையும் எழுதும் மூடில் இல்லை: எதற்கும் இருக்கட்டும் என்று சொல்லி வைக்கிறேன்.

0o0o0o0o

அப்புறம் இன்னொன்று. இந்தக் கதைகளில் ‘நிஜ’ நாயகர்கள் யார் என்று அடையாளம் காணும்படி கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. எது கற்பனை எது உண்மை என்பதைக் கண்டு பிடிக்க முடிவதில்லை- அது அவசியமா என்ன என்றும் சொல்ல முடியாது- ஆனால் இது சம்பந்தமாக காரசாரமான விவாதங்கள், வம்புப் பேச்சுகள் எழலாம்.

ஆனால் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்- புனைவு என்பது வெற்றுக் கற்பனை, வாழ்க்கையின் போக்குக்கு தொடர்பில்லாத ஒன்று என்று ஆகிவிட்ட இந்நாட்களில், இது நிஜ மனிதர்களின் கதை என்ற அடையாளம் கதைகளின் தாக்கத்தை இன்னும் வலுவானதாக மாற்றுகிறது.

அது தவிர, காவியம் என்று சொல்கிறோமில்லையா, அதன் சாரத்தில் உண்மை இருக்க வேண்டும்- அந்த வகையில், உண்மை மனிதர்களின் வாழ்வில் நடந்த உண்மைக் கதை என்ற உணர்வு, இந்த சிறுகதைகளை புனைவு என்பதையும் தாண்டி,  எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய காவியத் தளத்துக்கு நம்மைக் கொண்டு செல்கிறது என்று நினைக்கிறேன்.

0o0o0o

இதை அவசர அவசரமாக எழுதுகிறேன்- திரும்பப் படிக்கக் கூட இல்லை. அவகாசப்பட்டால் திருத்தி எழுதலாம், என்ற எண்ணத்தில் -ஓரிரு தடவைகள் திருத்தி விட்டேன் 🙂

Advertisements

5 thoughts on “அறம் கதைகள்- சமகால காப்பிய நாயகர்கள்

  1. அறம் பற்றிய எனது பதிவைப் பாருங்கள். அவர் தளத்தில் அக்கதை அப்போதுதான் வெளியாகியிருந்தது, நான் அதைப் பார்ப்பதற்குள் அவரே எனக்கு அதன் சுட்டியைத் தந்தார் என்பதை நெகிழ்ச்சியுடன் நினைவில் வைக்கிறேன்.

    பார்க்க: dondu.blogspot.com/2011/02/blog-post.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s