எஸ் ராஜம் நினைவு விழா- நன்றி நவில் முகமாக…

சென்ற ஞாயிற்றுக் கிழமையன்று நான் திரு எஸ் ராஜம் நினைவு விழாவுக்குச் சென்றிருந்தேன்.  அதே நேரத்தில் ஒரு கல்யாண ரிசப்ஷனுக்குப் போக வேண்டியிருந்தது. என் மனைவியின் உறவினர் வீட்டுத் திருமணம். மேலிடத்தைப் பகைத்துக் கொண்டு இந்த மாதிரி கலை கிளை எல்லாம் வளர்ப்பது தேவைதானா என்ற நினைப்பு எழத்தான் செய்தது.  இருந்தாலும் ஏதோ ஒரு உந்துதலில் நாரத கான சபா சென்றேன்.  நல்ல வேளை,  போகாமல் இருந்திருந்தால் ஒரு இனிய, விலைமதிப்பில்லாத அனுபவத்தைத் தவற விட்டிருப்பேன்.

அது தவிர, எனக்கு சங்கீதம் குறித்து இம்மியளவும் அறிவு கிடையாது என்பதால்தான் நான் கச்சேரிகளுக்கோ இந்த மாதிரி விழாக்களுக்கோ போவதில்லை. ஏதோ ராகங்களின் பேர் தெரியும், எல்லாரையும் போலவே நானும் காற்றுவாக்கில் பிரபலமான ஒரு சில கர்நாடக சங்கீத சாகித்யங்களைக் கேட்டிருக்கிறேன்.

சின்ன வயதில் அப்படியில்லை. அப்போதெல்லாம் என்னை என் அப்பா நிறைய கச்சேரிகளுக்குக் கூட்டிக் கொண்டு போவார். நாங்கள் கச்சேரி முடிந்து திரும்பி வரும்போது, பெரும்பாலும் நீண்ட தொலைவு நடந்து செல்லும்போது, “தனரீனானா… தத்தரீனானா… னா…. னானா… ஆ… ஆஆ…” என்று வறுத்த வேர்க்கடலையை கொறித்துக் கொண்டே பாடியபடி வருவார். எனக்கானால் கால்கள் வலிக்கும், வறுத்த வேர்க்கடலையின் சுவையில் விஷேச விருப்பமும் கிடையாது, தவிர அதை எப்போதோ சாப்பிட்டு முடித்திருப்பேன்.

என் அப்பாவின் ஆதர்ச வித்வான் மதுரை சோமு என்பதை சொன்னால் ஏன் எனக்கு சங்கீதத்தில் ஈடுபாடு வரவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

0o0o0o0oo0

எஸ் ராஜம் நினைவு விழாவின் முடிவில் திரு எஸ் பி காந்தன் மற்றும் லலிதா ராம் ஆகியவர்கள் உருவாக்கிய ஆவணப்படத்தின் சில காட்சிகளைத் திரையிட்டார்கள். இந்தப் பதிவு அது குறித்தே- இசை பற்றி எந்த ரசனையையும் உருவாக்கிக் கொள்ளாதவனைக்கூட அது எத்தனை வலிமையாகத் தாக்குகிறது என்பது வியப்பாக இருக்கிறது.

ஒரு வகையில் அந்த ஆவணப் படத்தை ஒரு கண் திறப்பு என்று சொல்ல வேண்டும். ஒரு கணத்தில், ஒரு இசைக் கோர்வையைக் கேட்கும்போதே அப்படி எதாவது ஏற்பட்டு விடுமா என்ன என்று தோணலாம். ஆனால் அதற்கு முன்னர் அவரைக் குறித்து திரு வேதவல்லி அவர்களும் திரு கேஷவ் அவர்களும் வரைந்திருந்த சொற்சித்திரங்கள் என்னை அந்த அனுபவத்துக்கு ஆயத்தம் செய்து வைத்திருந்தன. அவரைக் குறித்து அவர்கள் பேசப் பேச அவர் என் அபிமானத்தில் அடுத்தடுத்த அடுக்குகளுக்கு உயர்ந்து கொண்டே சென்றார். அவர் வாழும் நாட்களிலேயே அவரைக் குறித்து அறிந்து கொள்ள முடியாத டமாரச் செவிடனாக இருந்திருக்கின்றேனே என்ற பச்சாதாபத்தில் இருக்கும்போதுதான் அந்த ஆவணப் படம் துவங்கியது, ராஜம் அவர்களின் ரீங்காரத்துடன்.

ஒரு அரை மணி நேரம் போல, வேதவல்லி மற்றும் கேஷவ் ஆகிய இருவரும் பேசியிருந்தார்கள். அவரது இசை மற்றும் ஓவியக் கலையின் மேன்மைகளை விட, இத்துறைகளில் அவருக்கு இருந்த மேதைமையும் அதை விடக் கூடுதலாக அவரிடம் அமைந்திருந்த தன்னடக்கமும் என்னை ஈர்த்தது- வழியில் எதிர்ப்படுகிற ஒருவர் உங்களிடம் ஒரு சந்தேகத்தை எழுப்புகிறார். அதற்கு விளக்கமாக பதில் தர வேண்டும், வீட்டுக்கு வரச் சொல்கிறீர்கள். நேரமில்லை என்பதைக் குறிக்கும் விதமாக அவர் தயங்குகிறார், நீங்கள் என்ன செய்வீர்கள்?

ராஜம் அவர்களிடம் ஒருவர் இப்படி ராகம் தொடர்பாக ஐயம் எழுப்பியபோது, அங்கேயே அருகில் இருந்த ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து அந்த ஐயம் குறித்த வினாவுக்கு விளக்கம் தந்தாராம் அவர்! இது போன்ற அனுபவங்களைக் கேட்டு, யார் இவர் என்ற மனநிலையில் அரங்கத்தில் அமர்ந்திருந்தேன், ஆவணப் படம் துவங்கியது.

அந்தஆவணப் படத்தின் துவக்கத்தில் டைட்டில் போடும்போது ராஜம் அவர்களின் இள வயது புகைப்படங்களை ஸ்டாப் மோஷன் ஷாட்களாக அமைத்து பின்னணியில் அவர் பாடுவதைக் கேட்கையில் அந்தக் குரலின் வேகமும் கோர்வையும் அருவி போல் பாய்ந்தன, இதற்கு முன் நான் இவர் பாடிக் கேட்டதில்லை- இப்படியே இது தொடராதா என்று நினைக்கும்படி இருந்தது எனக்கு- இசைக் கோர்வை சீக்கிரம் மாறி விடும், அதற்குள் கிடைப்பதை சரியாகக் கேட்டு விட வேண்டும் என்ற பிரக்ஞையால் ஏற்பட்டிருந்த விழிப்புணர்வு ஒரு புறம் இருந்தாலும், அவரது பாடலும் வசீகரிக்கும் தோற்றமும் என்னை இசையினுள் இழுத்துச் சென்று விட்டிருந்தன என்பதுதான் உண்மை என்று நினைக்கிறேன். எனக்கு கர்நாடக் இசை குறித்து எதுவும் தெரியாது என்பதால் அவர் பாடியதன் இலக்கண இயல்புகளைப் பற்றி எதுவும் அறியாமல் அந்த சமயத்தில் அவரது இசையை ஒரு ரீங்காரமாகத்தான் கேட்டேன்.

என்ன ராகம், என்ன தாளம், என்ன பாவம் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது- நான் இப்போது சொல்வது சரியா தவறா என்பதுகூட தெரியவில்லை. ஆனால் நான் அந்த கணத்தில் புகைப்படங்கள் மற்றும் அவரது குரல், கானம் வாயிலாக ராஜம் அவர்களை அறிந்தேன்- ஒரு கம்பீரமான ரீங்காரமாக. உச்சி வெய்யில் வேளையில் சர்வமும் அசைவற்றுக் கிடக்கும்போது கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு அரைத் தூக்கத்தில் இருக்கிறவனை திடீரென்று அறையுள் நுழைந்து ரீங்கரிக்கும் பொன் வண்டு போல் அந்தக் குரல் என்னை எழுப்பியது-  மலர்ப்படுகைகள், வனம், ஆறு என்று அந்த வண்டின் ரீங்காரத்தூடே விரிந்து கொண்டே போகிறது அறைக்குள் இருக்கும் நம் உலகம்.

இந்த அனுபவம் நினைவுகளாக நேர்வதில்லை- பொன்வண்டைப் பார்க்கும்போது, அதன் ரீங்காரத்தைக் கேட்கும்போது, “இதோ இந்த வண்டின் ரீங்காரம் நந்தவனங்களில் ஒலிக்கின்ற ஒன்று, காடுகளை நிறைக்கின்ற ஒன்று, ஆற்று நீரின் சலசலப்பைத் தாண்டி எழுகின்ற ஒன்று,” என்றெல்லாம் நாம் நினைப்பதில்லை. அந்தப் பொன்வண்டு இவை அத்தனையையும் எந்த நினைப்புக்கும் இடமின்றி தன் ரீங்காரத்தின் வழியாக நமக்கு மொழியின்றி உணர்த்தி விடுகிறது. அது ஓய்ந்த பின் வேண்டுமானால் நமக்கு காடுகளும் ஆறுகளும் நினைவுக்கு வரலாம்.

ராஜம் அவர்களின் ஓவியம் குறித்து கேஷவ் சொன்னார், நம் ஓவியக் கலை குறித்து, அவை signifiers என்று- எது ராஜம் அவர்களின் ஓவியங்களுக்கு மற்ற ஓவியங்களில் இருப்பதைக் காட்டிலும் தெய்வீகக்களை கொடுக்கிறது, எது அவரது மும்மூர்த்திகளை நம் பூஜை அறைகளில் வைத்து வழிபடச் செய்கிறது?- அதை வார்த்தைகளில் சொல்ல முடியாது. ஏதோ ஒரு ஜீவகளையை நாம் நம் கண்களாலும் காதுகளாலும் உணர நேர வேண்டும்- அந்த ஜீவகளையின் உன்னதம் நமக்கு தெய்வீகமானதாகத் தென்படுகிறது என்று நினைக்கிறேன்.

ராஜம் அவர்களின் ஓவியங்களில் உள்ள அந்த உன்னதம், பொன் வண்டின் ரீங்காரத்தில் உள்ள உன்னதம், அந்த கணத்தில், அந்த ஆவணப் படத்தின் துவக்கத்தில் எனக்குத் தென்பட்டது. குரலில் எத்தனை ஏற்ற இறக்கங்கள், தொனி மாற்றங்கள் இருந்தாலும் அதில் முழுமையான, நிறைவான ரீங்காரம் இருந்தது- அத்தனை வண்ணங்களும் ஒரு நிறப்பிரிகையில் (ஸ்பெக்ட்ரம்) நிறைந்து அடங்குகிற மாதிரி.

அப்போது எனக்குத் தோன்றிய எண்ணம், இந்த இசை காலத்துக்கு அப்பாற்பட்டது, இதில் காலம் என்பதே கிடையாது என்று- சங்கீதத்தைப் பற்றி எழுதும்போது அதன் தோற்றம், அதன் பண்பாட்டுக் கூறுகள், அந்த சங்கீத வித்வான்களின் வாழ்வுச் சூழல், இதையும் இன்னும் என்னவெல்லாமும் எழுத வேண்டும் என்று சொல்கிறார்கள் இல்லையா, இது எவ்வளவுக்கு இசைக்குப் பொருத்தமற்றது என்று நினைத்தேன். இது திரு ராஜம் அவர்களுக்கேக்கூட உரியதல்ல- காடுகளும் ஆறுகளும் பொன்வண்டாக ரீங்கரிப்பதுபோல் இயற்கையைத் தன்னுள் அடக்கி அதனினும் அகன்று விரியும் தெய்வாம்சம் ராஜம் அவர்களின் இசையாக வெளிப்படுகிறது என்று நினைக்கிறேன். அதற்கு மொழி கிடையாது, சொற்கள் அதைத் தாங்கிச் செல்லும் வாகனங்கள், அவ்வளவே. காலம், காட்சிகளைப் போல் ஒரு சன்னல்தான்: இயற்கையும் இசையும் இவற்றுக்கு வெளியே இருக்கின்றன.

நாம் நம்மை மறந்து, நம் நினைவுகளை இழந்து காலப் பிரக்ஞையின்றி இந்த இசையின் லயத்துடன் ஒன்றும்போது நமக்கும் இந்த உன்னதம், நாம ரூபங்களுக்கு அப்பாற்பட்ட பிரம்மத்தின் சாந்நித்யம் ஒரு சிறு சன்னலின் ஊடாகத் தென்படுகிறது- இந்த லயிப்புக்கு வெளியே எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் அவை லயிப்பின் அனுபவத்தை சுட்டலாமே அன்றி தொட்டு விட முடியாது.

இதைத்தான் நான் கண நேரப்போதே நிறைந்திருந்திருப்பினும், ஒரு கண் திறப்பு என்று சொல்லிக் கொள்கிறேன்- எப்படிப்பட்ட மனிதர் இவர் என்ற பிரமிப்புடன் நான் அரங்கை விட்டு வெளியே வந்தேன். நடிப்பு, இசை, ஓவியம் என்றில்லை- இவர் எந்தத் துறைக்கு சென்றிருந்தாலும் அங்கு இவரது இந்த உன்னதத் திறமைகள் வெளிப்பட்டிருக்கும்: இந்த மனிதரின் இயல்பு அப்படி. இவர் ரசம் வைத்திருந்தாலும்கூட அதில் ஒரு தனிச்சுவை இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

எஸ் பி காந்தன் மற்றும் லலிதா ராம் ஆகிய இருவரும் செய்துள்ளது ஒரு அரிய செயல். சாதாரணமான விஷயம் இல்லை. இந்த ப்ராஜெக்டில் இவர்களைத் தவிர வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை- அனைவரும் அதற்காகவே என் போன்றவர்களின் நன்றிக்குரியவர்கள்.

Advertisements

13 thoughts on “எஸ் ராஜம் நினைவு விழா- நன்றி நவில் முகமாக…

 1. நேரில் பார்த்த நிறைவைத் தந்து விட்டீர்கள் நன்றி. ராம் போன்றவர்கள் பாரட்ட, ஊக்குவிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் ஐயமில்லை.

  1. ராம் போன்றவர்களை ஊக்குவிக்கும் அளவுக்கு நானெல்லாம் பெரிய ஆள் இல்லை என்றாலும் நீங்கள் சொல்வது உண்மைதான்- ஏதோ எனக்குத் தோன்றியதை பகிர்ந்து கொண்டிருக்கிறேன், அவ்வளவுதான். விஷயம் தெரிந்தவர்கள் இது குறித்து எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும்.

   தங்கள் வருகைக்கும் இடுகைக்கும் நன்றி.

 2. என்னால் பாட இயலாதே தவிர மற்றவர்கள் பாடும்போது செய்யும் தவறுகள் தெளிவாக என்னால் கண்டுபிடிக்க முடியும். இது எங்ஙனம் சாத்தியம் என்று இப்போதுதான புரிந்தது.
  நன்றி. இதையொட்டி ஒரு பதிவும் போட்டிருக்கிறேன்.

  http://easytamil.blogspot.com/2011/02/blog-post_15.html

  1. //இது எங்ஙனம் சாத்தியம் என்று இப்போதுதான புரிந்தது.//

   இதுக்குப் பேருதான் முரண் நகையா? 🙂

   கலை உங்கள் ரத்தத்தில் கலந்திருப்பதை அறியாதவனா நான்!!

   நீங்கள் வரைந்த காமிக்குகள் இன்னும் என் கண் முன் நிற்கின்றன. உங்களுக்கு இசை ஞானம் இல்லை என்று சொல்லியிருந்தால்தான் அதிர்ச்சியாக இருந்திருக்கும்.

   தங்கள் வருகைக்கும் இடுகைக்கும் அடியேனின் உளமார்ந்த நன்றிகள்.

 3. நன்றி பாஸ்கர்.

  இசையை ரசிக்க இசையறிவு தெவையில்லை, மனம் இருந்தால் போதும் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. உங்கள் கடிதம் அதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது.

  நிகழ்ச்சிக்கு வந்ததற்கும், இந்தக் கடிதத்துக்கும் மிக்க நன்றி.

  1. தன்யனானேன்!

   ஏதோ யானையைக் குருடன் தடவிப் பாத்த மாதிரி நான் எனக்குத் தெரிஞ்சதை சொல்லியிருக்கேன்- இதுல உள்ள நுணுக்கங்கள் எவ்வளவு விட்டுப் போயிருக்கு என்பது உங்களுக்குத்தான் தெரியும்- அதையெல்லாம் பெரிசு பண்ணாத உங்க பெருந்தன்மைக்கு நன்றி.

   டிவிடி வெகு விரைவில் வெளிவர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்- ரிலீஸ் ஆகும்போது ஒரு வார்த்தை சொல்லுங்கள், எனக்குத் தெரிந்தே ஐந்து பேர் எங்கே கிடைக்கும், எப்போது கிடைக்கும் என்று இப்போதே கேட்டு விட்டார்கள்!

   தங்கள் வருகைக்கும் இடுகைக்கும் நன்றி.

  1. டிவிட்டரில் உங்கள் குறும்பதிவுகளைப் படித்து வெறித்தனமாக சிரித்திருக்கிறேன்… நீங்கள் இந்தப் பதிவைப் பார்த்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது- ராஜம் அவர்கள் உண்மையிலேயே க்ரேட்தான்- என்னையே உருப்படியான ஒரு பதிவு எழுத வைத்து விட்டாரே!

   “என் ட்விட்டை யாரும் படிக்காதீங்க. நீங்கல்லாம் படிக்கணும்னு நான் ட்விட்டலை. #வருங்கால-ட்விட்டியவாதியாக-ப்ராக்டீஸ்.!!” என்று ட்விட்டியவரா இவ்வளவு கனமான ப்ளாக் வைத்திருக்கிறீர்கள்?

   ரீடரில் உங்கள் பதிவோடையை சேர்த்துக் கொண்டேன்.

   தங்கள் வருகைக்கும் இடுகைக்கும் நன்றி.

 4. ரயில் ஓட்டத் தெரியவில்லை என்றாலும், ரயில் பயணம் ஒரு தனி சுகம் தான். உங்கள் பதிவைப் படித்த போது இதைப் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற மனவருத்தம் மேலோங்கியது.

  1. ஜன்னல் வழியாகவும் சிலிக்கான் ஷெல்பிலும் தங்களை சந்தித்திருக்கிறேன். தங்கள் வருகைக்கும் இடுகைக்கும் நன்றி.

   அக்கரைக்கு இக்கரை பச்சைன்னு சொல்வாங்க- உங்களைப் போன்றவர்கள் இன்னும் சில பேராவது சென்னையில் இருந்திருந்தால் அரங்கம் வெகு சீக்கிரம் நிறைந்திருக்கும்- ஒரு வேளை அமைப்பாளர்கள் விழா துவங்குமுன் மைசூர் போண்டா, ரவா கிச்சடி சூடான சூப்பர் காபி ஆகியவை தரவிருக்கிறோம் என்ற செய்தியை போஸ்டரில் வெளியிட்டிருக்க வேண்டுமோ என்னவோ 🙂

   எப்படியோ, டிவிடி வெளிவரும்போது தவறாமல் காணவும்- சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s