புனைவும் மெய்ம்மையும்

ஒவ்வொருத்தருக்கும் ஒரு குரல் இருக்கிற மாதிரி, இந்த ப்ளாகுக்கும் ஒரு தொனி இருக்கிறது என்று நினைக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் என்னவும் எழுதலாமென்றாலும் நினைத்தபோது நினைத்தபடி எழுதிவிட முடிவதில்லை- இப்போது ஜெயமோகன் சீசன் போலிருக்கிறது. இந்த ப்ளாகில் எதை எழுத ஆரம்பித்தாலும் அங்கே வந்து நிற்கிறது, என்ன செய்யட்டும்?

இப்போது பாருங்கள், ஹார்ப்பர்ஸ் என்ற ஆங்கில இதழில் ஒரு கட்டுரை படிக்கிறேன், அதில் வரும் பத்தி இது- அதிக அளவில் சுதந்திரம் எடுத்துக் கொண்டு மொழிபெயர்த்திருக்கிறேன், மன்னிக்கவும்-

உத்வேகமான வாசிப்பென்பது இலக்கிய வளவினுள் தினவெடுத்த ஒரு அத்துமீறல். வாசகர்கள் தேசாந்தரிகளைப் போல- தங்களுக்கு சொந்தமில்லாத வயல்களில் களவு செய்கிறார்கள். பண்பாட்டு வர்த்தகர்கள் தங்கள் படைப்புகளின் மீள்பயன்களைக் கட்டுப்படுத்த இயலாமல் தவிப்பது போலவே கலைஞர்களும் பார்வையாளர்களின் கற்பனையைக் கட்டுப்படுத்த இயலாதவர்களாக இருக்கிறார்கள். Velveteen Rabbi என்ற குழந்தைகளுக்கான க்ளாசிக்கில் ஸ்கின் ஹார்ஸ் என்ற மூப்பன், முயலுக்கு பிரதியைக் களவாடும் கலையை உபதேசிக்கிறது. ஒரு புதிய பொம்மையின் மதிப்பு அதன் பருண்ம குணங்களில் இல்லை (“உனக்குள் சத்தமிடும் வஸ்துக்களும் வெளியே நீண்ட பிடியும்” கொண்டிருப்பதிலல்ல நீ) என்று சொல்கிறது ஸ்கின் ஹார்ஸ், “உன் படைக்கப்பட்ட தன்மையில் இல்லை உன் உண்மை… அது உனக்கு நேரும் ஒரு விஷயம். ஒரு குழந்தை உன்னை வெகு காலம் நேசித்ததெனில், உன்னை ஒரு விளையாட்டுப் பொருளாக மட்டுமல்ல, உன்னை உண்மையாகவே நேசிக்கையில், அப்போது நீ மெய்யாகிறாய்”. முயல் அஞ்சுகிறது, நுகர்பொருட்கள் திருத்தி அமைக்கப்படாமல் “உண்மை” நிலை அடைவதில்லை என்பதை அது உணர்ந்திருக்கிறது: “வலிக்குமா?” என்று கேட்கிறது. அதைத் தேற்றும் விதமாக ஸ்கின் ஹார்ஸ் சொல்கிறது, “எல்லாமே திடீரென்று மாறி விடாது… நீயாவாய். அதற்கு வெகு காலமாகும்… பொதுவாக சொல்வதானால், நீ நிஜமாகும் போது உன் மயிரில் பெரும்பகுதி நேசத்தில் கழிந்திருக்கும், கண்கள் கழண்டு விழுந்திருக்கும், உன் முட்டிகள் தொய்வடைந்திருக்கும், நீ நைந்து போயிருப்பாய்” பொம்மைக்காரனின் பார்வையில் வெல்வெட்டீன் ராப்பிட்டின் துவண்ட முட்டிகளும் தொலைந்த கண்களும் சேதாரத்தைக் குறிக்கும், தவறான பயன்பாட்டுக்கும் முரட்டு கையாள்கைக்கும் சாட்சியமாகும்; மற்றவர்களுக்கு அவை அதன் நேயமிகு புழக்கத்தின் அடையாளங்களாக இருக்கும்”

ஜெயமோகன் இப்போது எழுதி வரும் அறம் கதைகளை எடுத்துக் கொள்ளுங்கள், அந்தக் கதைகளின் பொருள் என்ன என்று எத்தனை கருத்துகள்! ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று சொல்கிறார்கள்- மெய் விதிர்த்து கண்ணீர் உகுத்துப் பாராட்டுபவர்களாக இருக்கட்டும் இல்லை நார் நாராகக் கிழித்துத் தோரணம் கட்டித் தொங்க விடுபவர்களாக இருக்கட்டும்- இந்தக் கதைகளில் உயிர் இருப்பதால்தானே, பொருட்படுத்தத்தக்க ‘உண்மை’ இருப்பதால்தானே இவற்றைப் பேசுகிறோம்? ஒன்றுமில்லாததைப் பற்றி யாராவது மெனக்கெட்டு பேசுவார்களா- உதாரணத்துக்கு நானும் நீங்களும் நம்மைப் போன்ற இன்னும் பிற உன்னத எழுத்தாளர்கள் எழுதும் கதைகளை யாரும் கண்டுகொள்வதில்லையே, அது ஏன்? நமது அன்புக்கும் ஆத்திரத்துக்கும் பாத்திரமாகும் மெய்ம்மை கொண்டிருக்கின்றன, அறம் கதைகள்.

ஒரு நாவலாசிரியனாக நான் கதாசாகரத்தில் ஒரு கார்க், காற்றடிக்கும் போதில் ஒரு இலை,” என்று சொல்கிறார் நான் மேற்சுட்டிய ஹார்ப்பர்ஸ் கட்டுரையின் ‘ஆசிரியர்’-என் ஆக்கங்களைக் களவாட வேண்டாம், என் காட்சியைக் கொள்ளை கொள்ளுங்கள். இது அனைத்தையும் கொடுக்கும் கலை. வாசகர்களே, என் கதைகளை உங்களுக்கு ஒப்புத் தருகிறேன். அவை முதலில் எனக்குரியவையே அல்ல, ஆயினும் நான் தருவித்துத் தருகிறேன். இவற்றை எடுத்துக் கொள்வதானால், என் ஆசிகளுடன் கொண்டு செல்லுங்கள்.

நேசித்து நன்றி சொல்வதானாலும் வெறுத்து வைவதானாலும், நம் கைகளில் உள்ளவரை இந்தக் கதைகள் உயிர்ப்புள்ள உண்மைகள். உண்மையின் உயிர்ப்பு பெறும்வரை எந்தக் கதையும் பொருட்படுத்தத்தக்கதல்ல. அப்படி உயிர் பெற்றபின், இவை நமக்குரியனவாக மாறி விடுவதால், இவற்றின் சுவாசம் நம் மூச்சாய் இருப்பதால், மறந்தாலொழிய மறுப்பதற்கில்லை.

—-

மத்துறு தயிர் மற்றும் மயில்கழுத்து ஆகிய இரு கதைகளும் படித்து முடித்து வெகு நேரம் போன பின்னரே என் நினைவில் மறு உருவாக்கம் பெற்று முழுமையடைந்தன- அதுவரை அவை செயற்கையாகவே இருந்தன. கவித்துவத்தை, அல்லது காப்பியத் தன்மையை அடித்தளமாய்க் கொண்ட புனைவுகள் வெற்றியடைய வேண்டுமானால், வாசகன் ஏதோ ஒரு கட்டத்தில் தன் அவநம்பிக்கையை கணப்பொழுதேனும் தளர்த்திக் கொள்ள வேண்டும். இதை ஒரு படைப்பாளன் கோரிக்கையாக வைத்து நிகழ்த்த முடியாது. வாசகன் தன்னிச்சையாக செய்தால்தான் உண்டு.

யானைடாக்டர் கதையில் சாராய பாட்டில்கள் யானைகளின் கால்களில் புரைப்புண்ணாக்கி அவற்றைக் கொல்கின்றன என்ற தகவல் வரும் கட்டத்தில் இந்தக் கதையின் ‘செயற்கைத்தன்மை’ மறைந்தது. பெருவலி கதையில் “அந்த கதவை திறந்து இடுக்கிலே கட்டைவிரலை வை. அப்டியே கதவை இறுக்கமூடி அழுத்தமா புடிச்சுக்கோ. அப்டியே நாளெல்லாம் வச்சுக்கோ. அப்டி இருக்குன்னேன்,” என்று புற்றுநோயின் வலி விவரிக்கப்படும்போது அது உயிர் பெற்றது.

ஒவ்வொருத்தருக்கும் அவரவர் மனப்பாங்குக்கேற்ப இந்த உயிர்ப்பு வெவ்வேறு கட்டங்களில் நிகழ்ந்து மெய்ம்மையடையலாம் என்று நினைக்கிறேன்.

Advertisements

8 thoughts on “புனைவும் மெய்ம்மையும்

 1. நான் வெறும் காலி டப்பா, சோ நோ பப்ளிக் கமண்ட்ஸ் :))

  யாரும் எதையும் கலக்கலீங்க. ஒவ்வொருத்தரும் அவங்கவங்களுக்குத் தெரிஞ்ச வகையில, பிடிச்ச வகையில படிக்கிறோம். அவ்வளவுதான்.

  ஆமா, நீங்க எழுதப் போறதா சொன்ன கதை என்ன ஆச்சு? அதுக்கு இங்க போஸ்டர்லாம் ஒட்டியாச்சு, பாத்தீங்கள்ல?

  1. சார், உங்க ஸ்வாமி சிறுகதையைப் படிச்சேன் சார், சூப்பர்.

   நீங்க தப்பா நினைக்காட்டி அதன் சுட்டியை இங்கே தர விரும்பறேன்- http://www.sasariri.com/2011/03/blog-post_09.html

   ஜெமோ மாதிரியே ‘நிஜ’ மனிதர் ஒருத்தரை வைத்து கதை பின்னியிருக்கீங்க. ஆனா அவரை அப்படியே காப்பி அடிக்காம உங்க பாணியில, “இது இப்படித்தான், இதுக்கு என்ன அர்த்தமோ அதை நீயே செஞ்சுக்க” அப்படின்னு ப்ரீயா விட்டிருக்கீங்க, அது சூப்பர். அதே மாதிரி வலிய உணர்ச்சிகளைக் கதைக்குள் திணிக்க எத்தனையோ உந்துதல் இருந்திருக்கும் என்றாலும், அதையெல்லாம் தீவிரமா ரெசிஸ்ட் பண்ணி நீங்க எப்படி கதை சொன்னா சரியா வரும்னு நினைச்சீங்களோ, அப்படி சொல்லி இருக்கீங்க. அதுக்காக உங்களை அட்மைர் பண்றேன்.

   இது போல் இன்னும் நிறைய கதை எழுதுங்க.

   என்று கேட்டுக் கொள்கிறேன்.

  1. இருங்க, போஸ்டர்தான் ஒட்டியிருக்கோம். இதுக்கு மாலை போடறாங்களா இல்லை சாணி அடிக்கப் போறாங்களான்னு பொறுத்திருந்து பாத்துட்டு நன்றி சொல்லுங்க! 🙂

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s