இயங்குமெய்ம்மை அ போஸ்ட்செக்யூலர் – மீள்பார்வை

நியாயமாய்ப் பார்த்தால் நான் எழுதப் போவதை ஒரு சுட்டி தந்து விட்டு எழுத வேண்டும், ஆனால் பாருங்கள், இங்கே வருகிறவர்கள் யாரும் நாம் தரும் சுட்டிகளில் எதையும் தட்டுவதில்லை: “இவன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்,” அல்லது, “இவன் எப்போது சரியாக சொன்னான்!” என்று கண்களை ஓட்டிக் கொண்டு போய் விடுகிறார்கள்.

எனவே இதோ ஒரு திருத்தப்பட்ட மீள்பதிவு:

இந்தக் கட்டுரையின் தலைப்பைப் படித்தவுடன் இப்படிதான் தோன்றியது: இத்தனை நாட்களாக நாம் மேல் நாட்டு தத்துவ மற்றும் கோட்பாட்டுப் பாதைகளைப் பின்பற்றி வருகிறோம் (அறிவார்த்தமாக): அந்த இழவைப் புரிந்து கொள்வதே பெரும்பாடாக இருக்கிறது, அப்படியே ஒரு வழியாகப் புரிந்து கொண்டாலும் அதில் உள்ள பல விஷயங்கள் நமக்குப் பொருத்தமில்லாமல் இருக்கிறது- எதை சொன்னாலும் முழுசாக சொல்ல முடிவதில்லை- அப்படியே ஒன்றை சொன்னாலும் இது நம்மூருக்கு ஏன் எப்படி பொருந்தாது என்று பட்டியல் போடுகிறார்கள்: எல்லாவற்றையும் விடக் கொடுமை, வாயில் நுழையாத பெயர்ர்களை எல்லாம் மனப்பாடம் பண்ண வேண்டியிருக்கிறது, கங்கை யமுனை காவேரி போன்ற ஒரு நதியானது தடைகளை எல்லாம் தாண்டி ஊர்ந்து வடிந்து ஒரு சிறு ஓடையாகி பட்டணத்தில் சாக்கடையில் விழுந்து செத்துப் போகிற மாதிரி தமிழ் நாட்டில் அறிவுஜீவியாய் இருப்பவன் இப்படி கஷ்டப்பட்டு கண்டகண்ட விஷயங்களை எல்லாம் மனதில் ஏற்றி, தட்டுத் தடுமாறி, ஒரு சிறு அளவில் புரிந்து கொண்டு, கடைசியில் இதை எல்லாம் இங்கே பொருத்தம் பண்ண முடியாது போலிருக்கிறதே என்று தொய்ந்து விழுகிற அவலத்தை என்ன சொல்ல என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன்.

பின்நவீனத்துவம் கழிந்த பின்சமயசார்பற்ற ஒரு உலகில் நாம் இருக்கிறோம் என்பது அந்தக் கட்டுரையைப் படித்தவுடன்தான் விளங்கியது. எம்மானுவேல் லேவினாஸ், ழாக் டெர்ரிடா, ஜியன்னி வட்டிமோ, ஜியார்ஜியோ அகம்பென், ச்லாவோஸ் சைசெக், யூர்கன் ஹெபர்மாஸ் என்று பெரும்பெரும் தலைகள் எல்லாம் சமயம் குறித்து விவாதம் பண்ண ஆரம்பித்திருக்கிரார்களாம்.

சமயசார்பின்மை என்பதே கிருத்தவத்திலிருந்து முளைத்த பொதுவெளிக்கு வரக்கூடாது என்பதான ஒருசார்பான சமயமறுப்பு என்று இந்தக் கட்டுரையாளர் சொல்கிறார் போலத் தெரிகிறது. மற்ற சமயங்களில் உள்ள அடிப்படைவாத சமய நெறிகளுக்கு எதிரான குரல்களையும், அதிலும் இசுலாம், கருத்தில் கொண்டு பேச வேண்டுமாம்.

மொத்தத்தில் பின்நவீனத்துவம், சமயசார்பின்மை இரண்டும் காலாவதியாகி விட்டதாம். நாம் இதையெல்லாம் கடந்த ஒரு உலகில் இருக்கிறோம் என்ற மகிழ்ச்சிகரமான செய்தி தெரிகிறது.

ஏன் மகிழ்ச்சி? நமது தலை இந்தப் பந்தயத்தில் அவர்களைவிட ஒரு அடி முன்னாள் நிற்கிறது. இலக்கியம் சார்ந்த இணைய சூப்பர் ஸ்டார்களான ஜெமோ, சாரு இருவரையும் எடுத்துக் கொள்ளுங்கள்: ஜெமோ வெளிப்படையாகவே தான் இந்து சமய மரபை சார்ந்தவன் என்று அறிவித்துக் கொள்கிறார்; சாரு தனது ஜீரோ டிகிரி கடவுளுடன் நடத்தப்பட்ட சம்பாஷனை என்ற உண்மையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அந்த ஊர் இலக்கியவாதிகள் எல்லாம் இனிதான் உண்மையை அறிந்து, பின்நவீனத்துவம் கழிந்த பின்சமயசார்பற்ற அறிவுத் தளத்துக்கு நகர்ந்து வந்துப் பேச வேண்டும். ஆனால் நம் ஊர் ஆட்கள் ஏற்கெனவே அங்கு துண்டு போட்டு விட்டார்கள். உஷாராக ஏனைய அறிவுஜீவிகளும் இந்த பஸ்ஸில் ஏறி சுறுசுறுப்பாக தத்துவ இலக்கியக் கலைச்சொற்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு ஆக்கம் தந்து தமிழ் தத்துவ-இலக்கிய இயக்கத்தை உலக அரங்கில் முன்னணியில் நிறுத்த வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

அதற்குப் பிள்ளையார் சுழி போடும் வகையில் நாம் இப்போது வாழும் காலத்துக்கு புதுஞானமரபு என்று பெயர் சூட்டுகிறேன். இந்தப் பெயர் பிடிக்காதவர்கள் இயங்குமெய்ம்மை அல்லது வரசித்தாந்தம் என்ற பதங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

—————

இது சம்பந்தமாக The Immanent Frame என்ற தளத்தில் அருமையான கட்டுரை வெளிவந்திருக்கிறது. புதுஞானமரபு/ இயங்குமெய்ம்மை/ வரசித்தாந்தம்/ போஸ்ட் செக்யூலரிசம் எப்படி தோன்றியது, எப்படி வளர்ந்தது என்று விரிவாக எழுதி இருக்கிறார்கள். இதற்கு அச்சாரம் போட்ட Juergen Habermasன் பேருரை ஒன்றுக்கும் சுட்டி தந்திருக்கிறார்கள்.

ஏன் போஸ்ட்செக்யூலர்?

நவீன தொழிநுட்ப உதவியால் சமூகம் வளர்ந்த அளவுக்கு பண்பாடு வளரவில்லை. எனவே அத்தகைய சமுதாயங்களில் ஒரு பெரிய பிளவு ஏற்பட்டு விட்டது. நவீனம் மதசார்பற்று, சமயத்தை நிராகரிப்பதாக இருக்கிறது. மரபு பழைய விழுமியங்களை விட்டுத்தர மறுக்கிறது. இரண்டுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இல்லை. எனவே ஒரு ஊமை யுத்தம் நடக்கிறது: இந்த இடைவெளியில் வெடிகுண்டுகளும், ராக்கட் லாஞ்சர்களும் கொண்ட மொழியற்ற வன்முறையால் ஒரு பேச்சுவார்த்தை நிகழ்கிறது.

இதைத் தவிர்க்க இரு தரப்பினரும் பேசிக் கொள்ள ஒரு பொதுமொழி தேவைப்படுகிறது. அந்தப் பொதுமொழியை உருவாக்குமுன் தொழில் நுட்பத்துக்கும் சமய நம்பிக்கைக்கும் பொருத்தமே இல்லை, இது இருந்தால் அது இல்லை, அது இருந்தால் இது இல்லை என்ற எண்ணம் மறைய வேண்டும். மதசார்பின்மை முன்னேற்றப் பாதை, ‘முற்போக்கு சக்தி’ என்ற அடிப்படைவாதத்தையும் மதசார்பின்மை ஒரு பண்பாட்டு நசிவு என்ற அடிப்படைவாதத்தையும் தணிக்கத்தக்க ஒரு பார்வை உருவாக்கப்பட வேண்டும். பன்முகப்பட்ட சமூக அமைப்பு, அறிவியல் உண்மைகள் மற்றும் அரசியலமைப்பின் அடிப்படையில் அமைந்த அரசு- இவற்றை சமய நம்பிக்கை உள்ளவர்கள் ஏற்க வேண்டும். அற அடிப்படையிலான அவநம்பிக்கைகளை சமயம் சார்ந்த மொழியில் வெளிபடுத்தும் ஆத்திகர்களின் குரல்கள் மதசார்பற்ற சக்திகளால் நசுக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பு கொடுத்து சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பைச் சேர்ந்தவர்களோடும் சுதந்திர அரசுகள் உரையாட வேண்டும். இது நிகழ சமய நிலைப்பாடுகள் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று ஹேபர்மாஸ் கூறுகிறார்.

எப்படி இந்த மொழிபெயர்ப்பு நிகழ வேண்டும் என்பதை ஒரு கிருத்தவ கோட்பாட்டை வைத்து சொல்கிறார்- கொஞ்சம் சிரமம்தான், தப்பும் தவறுமாக இருந்தாலும் நீங்களே படித்துத் திருத்திக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் சுருக்கித் தருகிறேன்-

கருச்சிதைவுக்கு எதிரான ஆத்திகர்கள், ஆண்டவன் மனிதனைத் தன் பிம்பமாகப் படைத்தான் என்று சொல்கிறார்கள். மற்றொருவர் இல்லாத இடத்தில் அன்பு இல்லை. இருவர் ஒருவரை ஒருவர் வேறாக அடையாளம் காணாத இடத்தில் சுதந்திரம் இல்லை. கடவுள் அன்பே உருவானவன். அவன் மனிதனுக்குப் பூரண சுதந்திரம் தந்திருக்கிறான். மனிதன் கடவுளின் பிம்பமாக இருந்தாலும், அவன் வேறானவன். இந்த வேற்றுத்தன்மையும் கடவுளின் படைப்பே, காப்பாற்றப்பட வேண்டியதே- இந்த வேற்றுத்தன்மை இருக்கும்வரைதான் வழிபாடு இருக்க முடியும். மனிதன் வேறு கடவுள் வேறு என்ற சுதந்திரம் உள்ளவரைதான் கடவுள் சுதந்திரமான மனிதர்களின் கடவுளாக இருக்கிறார். அவனது சுதந்திரத்துக்குத் தடைகள் எழுப்பப்படக் கூடாது. மனிதனுக்கு சுதந்திரமாய் வாழ்வதற்கான சுதந்திரம் தந்து அவர் அவனை சுதந்திரமாய் வாழ நிர்பந்திக்கிறார்- அறத்தின் குரலாகவே அவர் அவன் வாழ்வை நிர்வகிக்கிறார்.

இத்தகைய ஆத்திகக் கோட்பாடுகளின் விளைவுகளை கணிக்க அவற்றை ஏற்க வேண்டுமென்பதில்லை. கடவுளே ஒருவனுக்குத் தன் சுதந்திரத்தைத் தீர்மானம் செய்து கொள்ளும் உரிமையைத் தந்திருக்கும்போது, இடையில் புக சக மனிதன் யார்?- இந்தக் கேள்வி எழுவது நியாயம்தானே.

இப்படிப் போகிறது ஹாபர்மாசின் உரை. எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் உண்மைகளின் அடிப்படையில் மட்டும்தான் பொதுவெளியில் விவாதங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்கள் வழியான உரை நிகழ்த்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை இவர் கேள்வி கேட்கிறார்- இவற்றை நம்பிக்கைகளின் அடிப்படையில், அறிவியல் மற்றும் வரலாற்று உண்மைகளுக்கு மாற்று வடிவம் தந்து, ஆத்திக மொழியில் நிகழ்த்தலாம்.

என்னவோ போங்க! நான் சொன்னதுல எத்தனை தப்பு இருக்கோ என்னவோ. எதுக்கும் நீங்களே இங்கயும் இங்கயும் போய் படிச்சுக்குங்க. சுட்டியைத் தட்டாட்டி உங்களுக்குத்தான் நஷ்டம்- அதையெல்லாம் வெட்டி ஒட்டுறது நியாயமில்லை, இல்லையா?

(நான் ஹெபர்மாஸ் என்ன சொல்றார்னு எழுதினதைப் படிச்சதும் உங்களுக்கு ‘அடக்கண்ராவியே, இதைச் சொல்றதுக்கு இவன் இது சம்பந்தமா ஜெமொவோ சாருவோ எஸ்ராவோ (இல்லை உங்க ஆளோ) இதைவிட நல்லா சொல்லியிருக்காங்களே, அதை சொல்லக் கூடாதோ?” என்று தோன்றுகிறது இல்லையா? இப்பவே நம்ம ஆளுங்க ஆரம்பிச்சா தேவலை. இல்லாட்டி பத்து வருஷம் கழிச்சும் நாம இப்படியே பல்லை உடைச்சுக்கிட்டு இருக்க வேண்டியதுதான்!)

Advertisements

2 thoughts on “இயங்குமெய்ம்மை அ போஸ்ட்செக்யூலர் – மீள்பார்வை

 1. நீங்கள் இணைத்த கட்டுரைகள் முழுவதும் புரியவில்லை. புரிந்தவரை – போஸ்ட்செக்யூலர் பற்றிய அறிமுகமாக இதை எடுத்துக்கொள்கிறேன். தப்பாக இருக்க அதிக சான்ஸ் உண்டு. நீங்க ஜெமோ, சாருன்னு ஜாலியா எழுதினாலும், செக்யூலர் – போஸ்ட்செக்யூலருக்கு இங்கு வெளிப்படையான வேறுபாடு தெரியப்போவதில்லை. ஒரு உதாரணம்: தமிழ் நாட்டுக்கு புதியவன் ஒரு சில வருடங்கள் தங்கிப்பார்க்க தமிழ் நாட்டுக்கு வருகிறான் – அவன் அரசியல் பிரெக்ஞை உள்ளவனாக இருக்கும் பட்சத்தில் – கடவுள் இல்லைன்னு சொல்ற கட்சிக்கு கோவில் கட்டி கும்பிடும் பக்திமான் கூட்டத்தைப் பார்த்து வியந்திருப்பான், அனைத்து தொழில்நுட்பங்கள் இன்றும் பெயரளவில் மேற்பூச்சுக்களாக மட்டுமே ஊடுருவியுள்ளதை கவனித்திருப்பான். இங்கு zero sum game () இது இரண்டும் இரு தண்டவாளங்கள் என்பது புரிந்திருக்கும். இயங்குமெய்ம்மை – அறிவியல் மெய்ம்மைக்குள் நுழைந்து பல வருடங்கள் ஆகிவிட்டது எனும் பட்சத்தில் பூஜ்யச் சமன்பாடு சாத்தியமா? தருக்க நிலைப்பாடுகள், ஒரே உண்மை-ஒருவனே தேவன் உடைந்துவிட்டது என இயங்குமெய்ம்மையை புரிந்துகொள்ளலாமா? இங்கு பொதுமொழி என்பது அறிவியல்,கடவுள் சித்தாந்தம் இரண்டின் பொதுத்தன்மையை மட்டும் எடுத்து முன்னகரும் விஷயமா? இல்லை அவற்றுள் வேறுபாடுகள் உள்ளன , அவற்றை இப்போது கண்டுகொள்ள வேண்டாம் என்ற முன்முடிவோடு அமைவதா?

  அறிவியலுக்குள் உளவியல், மெய்யியல் கூற்றுகள் நுழைந்ததை பற்றிய சிறு கலந்துரையாடல்:-

  http://www.thinnai.com/?module=displaystory&story_id=60205254

  முத பற்றி இருந்தாலும் நடுப்பகுதிக்கு மேல் அறிவியல், மெய்யம்மை பற்றிய உரையாடல் நீங்கள் கூறும் விஷயத்தைப் பற்றியும் பேசுவது போல் இருக்கு.

  நன்றி.ரா.கிரிதரன்.

  1. புரியவில்லை என்றெல்லாம் தயவு செய்து சொல்லாதீர்கள்- எனக்கு மட்டும் புரிந்ததா என்ன? நான் மொழிபெயர்ப்பு செய்யவில்லை? சில விஷயங்களை வெளியில் சொல்லக் கூடாது- எழுத்தாள அறம் என்று ஒன்று இருக்கில்லை!

   மாடர்னிட்டி முழுசா உள்ள நுழையாதப்பவே போஸ்ட் மாடர்னிட்டி இங்க கொடி நாட்டலையா?

   //ஒரே உண்மை-ஒருவனே தேவன் உடைந்துவிட்டது என இயங்குமெய்ம்மையை புரிந்துகொள்ளலாமா?//

   சூப்பர். சரியான பாயிண்ட் புடிச்சீங்க. ஆனா இதை இப்படி பாக்கணும்-

   //ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ எனும் திருமூலரின் வாசகத்தையே தி.மு.க.வின் கொள்கை ஆக்கியவர்// அண்ணா- நம்ம ஊருக்கு இந்த இயங்குமெய்யியல் எப்பவோ வந்தாச்சு போல இருக்கே!

   சீரியசா சொன்னா, நீங்க தந்த சுட்டி ரொம்ப நல்லா இருக்கு. நாம தளையசிங்கத்தின் மெய்யுள் என்ன சொல்லுதுன்னு படிக்கணும். ஒரு சமயம் இது மேலை நாட்டவர்கள் எந்த திசையில் பயணிக்க நினைக்கிறார்களோ அதில் ரொம்ப தூரம் போயிருக்கலாம்.

   என் பயம் என்னவென்றால் மேற்கில் அறிவியல், கிருத்தவம் மற்றும் இசுலாம் ஆகிய சமயங்களை ஒட்டியே இந்த போஸ்ட் செக்யூலர் விவாதம் நடக்கப் போவுது. நம்ம ஊர் ஆட்களும் அதை அப்படியே இங்க கொண்டு வந்து கொட்டுவாங்களே, அதை நினைச்சா திகிலா இருக்கு.

   //அறிவியல் தத்துவம் இலக்கியம் மெய்யியல் ஆகிய தளங்களை தொட்டுப்பேசும் ஒரே தமிழ் முன்னோடிச் சிந்தனையாளர் தளைய சிங்கம் மட்டுமே . பிறரைப்போல அவர் மேற்கத்திய சிந்தனைகளை தமிழுக்கு இறக்குமதி செய்ய முனையவில்லை . அச்சிந்தனையாளர்கள் அங்கு எதிர்கொண்ட அதே பிரச்சினைகளை தமிழ் சூழலில் நின்று எதிர்கொள்ள முயல்கிறார் . அதில் அவர் அடைந்த வெற்றியும் தோல்வியும் நமக்கு முக்கியமானவை .//

   என்று ஜெயமோகன் சொல்றாரு பாத்தீங்களா, அது முக்கியமா எனக்குத் தெரியுது.

   வருகைக்கும் இடுகைக்கும் நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s