கெட்ட வார்த்தை கிளி மற்றும் இன்ன பிற உல்லாச சங்கதிகள்

ஒரு காலத்தில் வினோதரச மஞ்சரி என்ற தலைப்பில் odd newsகளைத் தொகுத்து தினமும் பதிவுகளாகப் போட்டு ஏமாற்றிக் கொண்டிருந்தேன். அதற்காக ந்யூஸ்வைன் போன்ற பல திரட்டிகள் செய்திகளை என் மின்னஞ்சல் முகவரிக்கே அனுப்பும்படி செய்திருந்தேன். இன்று கிடைத்த செய்திகளின்படி-

வாஷிங்டன் நகரில் பார் ஒன்றில் வழக்கமாக நடக்கும் தங்கமீன் ஓட்டப் பந்தயத்தை மிருக உரிமைக் கழகத்தினரின் ஆட்சேபம் காரணமாக அரசு அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.

1974ல் வாகன விதி மீறல் தொடர்பாக தனக்கு விதிக்கப்பட்ட அபராத தண்டனையை அண்மையில் ரோட் ஐலண்டில் ஒருவர் வழக்கு தொடர்ந்து தள்ளுபடி செய்து கொண்டார்.

தொப்புள் நடனம் ஆடிய காரணத்தால் ஒரு ந்யூ யார்க் நகர பெண்ணின் ஜீவனாம்சத் தொகை பாதிக்குப் பாதி குறைக்கப்பட்டது. அவர் தன் அங்கஹீனத்தைக் காரணம் காட்டி மாதம் 850 டாலர் பெற்று வந்தார். ஆனால் அவர் சுறுசுறுப்பாக தொப்புள் நடனம் ஆட்டும் காட்சிகளை அவரது முன்னாள் கணவன் சாட்சியமாகத் தாக்கல் செய்து தன் முன்னாள் மனைவியின் பொய்யை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு கார் விபத்தில் தனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு பிஸியோ தெரபியாகவே தான் தொப்புலாட்டிப் பிழைப்பதாக டிபென்ஸ் தரப்பு செய்த வாதத்தை நீதிபதி ஏற்க மறுத்தார் என்று தெரிகிறது.

இது நல்ல பிழைப்பாக இருக்கிறது-  கிளென்டேல் நகரில் ஒரு  இளைஞர் – பாட் சல்லிவன் – அங்கு வந்திருந்த பீனிக்ஸ் நகர போலீஸ் நாய் ஒன்றைக் கண்டதும் ஓட்டம் பிடித்தார். அவரை விரட்டிச் சென்ற போலீஸ் நாய் உத்வேக மிகுதியால் அன்னாரைக் கவ்விப் பிடித்தது. அதைத் திரும்பக் கவ்விய பாட் சல்லிவன், தன் குடி உரிமைகளை மீறி மிகையான அதிகாரத்தைப் பயன்படுத்தித் தன்னைக் கைபற்றியமைக்காக கிளென்டேல் நகரசபை 200,000 டாலரும் பீனிக்ஸ் நகரசபை 250,000 டாலரும் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.

———————-

இதைப் படிக்கும்போது இரா முருகனின் செவ்வியல் தன்மை பொருந்திய ஒரு வினோதரசமஞ்சரி நினைவுக்கு வருகிறது:

கெட்ட வார்த்தைக் கிளி

உபயகுசலோபரி.

இவ்விடம் மேற்கு யார்க்ஷயர் பேட்டை ஒன்றில் வெகு விநோதமாக ஒரு கிளி வந்து சேர்ந்திருக்கிறது. யாரோ வார்த்தை சொல்லிக் கொடுத்துப் பழக்கிய கிளி. வாயைத் திறந்தால் ஒரே வசவும் திட்டும்தான் பஷ்பமாகப் பொழிகிறது.

மேற்படிக் கிளியானது பிராந்தியத்திலேயே உயரமான மாதா கோயில் மணிக்கூண்டுக் கோபுரத்துக்குக் குடி பெயர்ந்திருப்பது சான்றோர்களையும் சாது ஜனங்களையும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

அந்த வசதியான உயரத்தில் உட்கார்ந்தபடி, கோவிலில் பூசை வைக்கப் பாதிரியார் நடந்து வரும்போது துரைத்தனத்தார் பாஷையில் “ஊ” என்று தொடங்கி “ஓ” என்ற எழுத்தில் முடியும் ஆபாசமான சொல்லை உரக்கச் சொல்லி அவருக்கு முகமன் கூறுகிறதாம் கிளி.

மேலும் அது, மாதா கோவிலில் பிரார்த்தனை நடக்கும்போது அங்கே கூடியிருக்கும் பக்த ஜனங்கள் எல்லாரையும் வீட்டுக்குச் சடுதியில் புறப்பட்டுப் போய் சிற்றின்ப நுகர்வில் ஈடுபடும்படி வலியுறுத்தியபடி கோவிலுக்குள் குறுக்கும் நெடுக்கும் பறக்கிறதாகவும் பிரஸ்தாபம்.

“கோவிலில் பிரார்த்தனையோ, கல்யாணமோ நடக்கும்போது இந்த ஐந்து இப்படியான துர்ச்செயல்களில் ஈடுபட்டால் தாழ்வில்லைதான். இந்தக் கூத்துக்குச் சிரிப்பாய்ச் சிரிக்கிற யுவன்களும் யுவதிகளும் அனேகம் பேர் இருக்கிறார்கள். ஆனால் அந்தோ, சாவுச்சடங்கு நடக்கும்போதும் கிளி பறந்து வந்து வசவு மழை பொழிகிறதே, என் செய்வோம்?” என்று ஊர்ப் பிரமுகர்களும் வெகுஜனங்களும் பிரலாபிக்கிறார்களாம். ராஜாங்கப் பிரதிநிதிகளும் உத்தியோகஸ்தர்களும் வழக்கம் போல் இதையெல்லாம் காதில் வாங்காமல் அவரவருக்கு ஸ்வபாவமான காரியங்களில் மூழ்கிக் கிடக்கிறார்களாம்.

இதைப் படிக்கும் கனவான்களும் நற்பெண்டிரும் ஸ்ரீரங்கத்தாராகிய சுஜாதா என்ற ப்ரக்யாதி பெற்ற பண்டிதர் இயற்றிய விநோதரச வேடிக்கைக் கதை ஒன்றில் இங்ஙனம் கெட்ட வார்த்தை சொல்லும் ஒரு கிளியை மையமாக வைத்து எழுதியிருப்பதை அறிவீர்கள் அல்லவோ?

அது நிற்க.

மேற்கு யார்க்ஷயர் கிளி குறித்து யாம் யாத்த வெண்பா ஒன்றை இங்கே இட உத்தரவு வேண்டுகிறேன். சொற்குற்றம், பொருட்குற்றம் காண்கில் ஐயன்மீர் மன்னிப்பீராக.

கோயில் மணியின் குரலும் ஒடுங்கிட
வாயில் அழுகை உயர்ந்திடும் சாவில்
அசைவு மறந்த சடலம் சிரிக்க
வசவு மொழியும் கிளி.

—-

மேற்படி சங்கதி இந்தப் புத்தகத்தில் இருக்கிறது- ராயர் காப்பி கிளப்

Advertisements

6 thoughts on “கெட்ட வார்த்தை கிளி மற்றும் இன்ன பிற உல்லாச சங்கதிகள்

  1. தகவலுக்கு நன்றிங்கண்ணா! 🙂

   இரண்டுமே நான் இதுவரை படித்ததில்லை- அல்லது இரண்டும் ஒன்றா? கட்டாயம் தேடிப் படித்து படிக்கிறேன்.

   டாக்டர் சார் அதைப் பத்திதான் சொன்னாரான்னு தெரியலை- அவர் இங்கிருந்து திரும்பிப் பார்க்காமல் ஒடிப் போய் விட்டதாகத் தெரிகிறது.

   1. 🙂 சார் உங்களைச்சுற்றித்தான் ஓடுகிறேன்.முதல்வட்டம் இல்லாவிட்டால் அடுத்தவட்டம் …பார்த்துவிட்டேன்

    உங்கள் பதிவைப்படித்ததிலிருந்து ’கெட்ட கிளிக்கனவு’ …இல்லை…ஏற்கனவே வந்துகொண்டிருந்த கிளிக்கனவு கெட்டுப்போய் வருகிறது.

    சிறுவயதில் படித்தகதை.
    கதை தோராயமாக இப்படி:
    நன்றாக பேசும் ஒரு கிளி இருந்தது.மன்னன் அதையறிந்து கிளியை மேலும் அறிவூட்டும் படி பண்டிதர்களுக்கு கட்டளையிட்டான்.அவ்ர்கள் கூடி கிளிக்கு பாடம் சொல்லிக்கொடுத்தார்கள். கிளி செத்துப்போய்விட்டது.
    பிறகு..
    ‘செத்துப்போன கிளியை அழுத்திப்பார்த்தார்கள் உள்ளே ஏட்டோலைகள் சரசரத்தன.’ …. இப்படி முடிவதாக ஞாபகம்.

    இந்தக்கதை பழைய தமிழ்ப்பாடப்புத்தகத்தில் இருந்து படித்தேன்.கட்டுரைகள் செய்யுள் கதைகள் என வருகிற தொகுப்பு..
    70களில் நிலவிய பாடத்திட்டம்.ஊருக்குப்போனால் கிடைக்கும்.

    ஜெமோ வின் கிளிக்கதை நானும் படிக்கவில்லை. நகைச்சுவை போலத்தோன்றுகிறது.

    1. கிளிக்கதை நன்றாக இருந்தது.

     (என்னைச் சொல்லலியே? – இதற்கான விடை நமக்குள் இருக்கட்டும்!)

     இப்படி நாலு வரி கதையில் நாற்பதாண்டு கால வாழ்வில் நான் கற்றுக் கொண்ட பாடத்தைப் போகிற போக்கில் சொல்லி விட்டீர்களே!

     நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s