நினைவின் எச்சங்கள்

சிறுகதை உதவி: வரசித்தன் அவர்கள்.

நேற்று இரவு நான் பஸ்ஸில் வரும்போது ஒரு அழகிய இளம் பெண்ணைப் பார்த்தேன். அவள் தன் முன் இருபதுகளில் இருந்தாள். பஸ் வரக் காத்திருக்கும் நேரத்தில் நான் அவளைப் பார்த்தேன். அவள் எனக்கு இரண்டு வரிசை முன் தள்ளியிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தாள். காத்திருப்பு அறையில் நுழைந்தபோதுதான் நான் அவளைப் பார்த்தேன், வட்ட முகம். கூர்மையான மூக்கு. கையில் ஒரு சாதாரண செல் போன் வைத்திருந்தாள். நான் உள்ளே நுழையும்போது தன் சிறு கண்களால் ( சிறு என்றால் சீனக் கண் அல்ல, வழக்கமாக பெண்களுக்கு விழுங்கி விடுகிற மாதிரி விரிந்த, அகலமான கண்கள் இருக்குமே, அப்படியெல்லாம் இல்லாத கண்) என்னைத் தவிர்த்தாள்.

நான் அவளுக்கு இரண்டு வரிசை பின்னால் அமர்ந்திருந்தேன். அரை மணி நேரம், நான் என்னுடன் வந்திருந்த என் சகோதரன், அந்தப் பெண், மற்றும் சிலர் அங்கே ஒன்றாகக் காத்திருந்தோம். அப்போதுதான் ஒன்று கவனித்தேன். அவள் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு அடுத்த வரிசையில் யாரும் இல்லை. எங்கள் வரிசையில் அவளுக்கு நேர் பின்னே என் சகோதரன், அவன் சிவப்பு சட்டை போட்டிருந்தான். அவனுக்கு வலப்புறத்தில் நான், பச்சை சட்டை போட்டிருந்தேன். நாங்கள் அனைவரும் அந்த அறையின் கண்ணாடி கதவில், சாலைகளில் செல்லும் வாகனங்கள் கண்ணாடிக்கு அந்தப்புறம் எங்களுக்கு நேர்க்கோட்டில் வரும்போது பிரதிபலிக்கப்பட்டோம். நாங்கள் என்றால் நாங்கள் அல்ல. என் பச்சை சட்டையும் என் சகோதரனின் சிவப்பு சட்டையும். அந்தப் பெண் போட்டிருந்த கத்தரிப்பூ நிற சட்டை அடர்ந்த கருநிறம் பூசிய வாகனங்கள் சுட்டும்போது மட்டுமே புலப்பட்டது.

இப்படியே பொழுது போய்க் கொண்டிருக்கும்போது இன்னொன்று கவனித்தேன். அந்தப் பெண் அடிக்கடி, ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறையாவது, தன் சட்டையின் காலர் பகுதியினுள் விரல் விட்டுத் துழாவி, அதை கழுத்தை நோக்கி இழுத்து விட்டுக் கொண்டாள். ஏற்கனவே தன் கழுத்தை சுற்றி அவள் கட்டியிருந்த துப்பட்டா அந்தப் பகுதியை முழுதும் மறைத்திருந்தது. அவளது சட்டையும் முதுகைக் காட்டுவதாயில்லை. ஆனாலும் அவள் இப்படி இழுத்து இழுத்து தன் கழுத்து மற்றும் அதற்குக் கீழிருக்கும் பகுதிகளை மறைத்து கொண்டிருந்தாள். இதனால் அவளது இரு கைகளிலும் சட்டை உயர்ந்து அங்கு வெயில் படாமல் வெளிறிய இடங்களைக் காட்டியது- பைசப்ஸ் என்று சொல்வோமில்லையா, அந்தப் பகுதியை.

லாசரா சொல்கிறார், ” எந்தக் காட்சி, எந்த ஓசையில், ஒரு அற்ப அம்சத்தில், கண், செவி, இதயம், மனம் என்று நெகிழ்ச்சி காண்கிறதோ, அங்கேயே கதை பிறந்து விட்டது,” என்று, எனக்கு அவளது இந்த செய்கை, சரியாக உடை போட்டுக் கொள்ளத் தெரியாத குழந்தையை நினைவுபடுத்தியது- இவ்வளவு சிறுபெண்ணாய் இருக்கிறாளே இவள் என்று என் மனம் வியப்பில் நிறைந்தது. கண்களும் மனமும் நெகிழ்ச்சி கண்டிருந்தாலும் கதை ஒன்றும் அங்கே அப்போது பிறந்திருக்கவில்லை.

அவள் தனியாக வந்திருந்தாள். வழியனுப்ப யாரும் வரவில்லை. ஒரு லிட்டர் மாஜா பாட்டிலில் தண்ணீர் வைத்திருந்தாள். இந்த சாட்சியங்களின் அடிப்படையில் அவள் கோவையில் வேலை செய்யும் இடத்திலிருந்து வார விடுமுறைக்கு ஊர் திரும்புகிறாள் என்று முடிவு செய்தேன். பஸ்ஸில் ஏறும்போதுதான் கவனித்தேன், அவள் நல்ல உயரம் என்று. இப்போது அவள் இன்னும் ஒல்லியாகத் தெரிந்தாள். முதலில் அவளது இடப்பக்க இருக்கை காலியாக இருந்தது, பயண முடிவு வரை அது நிரப்பப்படவே இல்லை- தன் அருகில் யாரும் வந்து அமர்ந்து தொல்லை தரக்கூடாது என்று இரண்டு டிக்கெட்டாய் எடுத்து விட்டாள் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். எனக்கருகில் அமர்ந்திருந்த ஒரு விடலைப் பையன் அவளிடம் சென்று அருகே அமர அனுமதி கேட்டுத் தோற்றுப் போய் வந்தான், “முதுகு வலிக்குதுண்ணா. சும்மா இருக்கற சீட்ல உக்காரக்கூட அவ விட மாட்டேங்கறா…” என்று என்னிடம் புலம்பினான் அவன். தன் செல் போனில் அவன் அடிக்கொரு தரம் மேய்ந்த இளம் பெண்களின் படங்களை ஓரக்கண்ணால் பார்த்திருந்த எனக்கு, அந்தப் பெண்ணின் செய்கை சரியானதாகவே பட்டது.

பஸ்ஸில் அவள் எனக்கு மூன்று வரிசைகள் முன்னிருந்தாள். அவளது தலையின் உச்சி மட்டுமே தெரிந்தது. பஸ்ஸில் விளக்கை அணைத்தபின் அதுவும் தெரியவில்லை. ஆனால் அந்த இருட்டிலும் அவள் தன் சட்டையைக் கழுத்துப் பகுதி வரை மேலிழுத்துக் கொண்டிருப்பாள் என்று நினைத்துக் கொண்டேன், அவள் தன் சட்டைகளுக்கு நீளமாகக் கை வைத்துக் கொள்ளவேண்டும்.

பஸ்சின் கடைசி இருக்கையில் நான். பஸ் மேடேறி இறங்கும் போதெல்லாம் என் அரைத் தூக்கத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டேன். இப்படி ஒரு தடவை நான் என் கோழித் தூக்கத்தில் இருந்து அலறிப் பிடித்து எழுந்தபோது எனக்கு விழிப்பு நன்றாக வந்து விட்டது. பொழுது போவதற்காக, நான் லாசரா வில்லியம் ட்ரெவர் போன்றவர்கள் எல்லாம் கண்ணில் தென்பட்டவர்கள் மனதில் விழுந்ததும் அவர்களைப் பற்றி கதை எழுதுகிறார்களே, நமக்கு இந்த மாதிரி இலக்கியத்தரமான கற்பனை ஏன் வரமாட்டேன் என்கிறது என்று நினைத்துக் கொண்டே வந்தேன்.

அவள் மறு நாள் காலை தன் வீட்டுக்குப் போய்ச் சேர்வாள். எப்படியும் அப்போது ஏழு மணி ஆகியிருக்கும். அவளது அம்மா, காலை ஐந்து மணியிலிருந்தே தன் பெண் வருகைக்காகக் காத்திருப்பாள். அவளது அண்ணன், அவனும் உயரமாக, இளைத்தவனாக இருபான். அவன் குளித்து முடித்து விட்டு தி ஹிந்து படித்துக் கொண்டிருப்பான். அவளது அண்ணி, குள்ளமாக, குண்டாக இருப்பாள், சரியான கோபக்காரி- இந்தப் பெண் வரப்போவதையும், அவளைத் தன் புருஷனும் மாமியாரும் சந்தோஷமாக வரவேற்கப்போவதையும் நினைத்து குமுறிக் கொண்டிருப்பாள்.

அவள் வாசல் கதவைத் தட்டுகிறாள். கொஞ்ச நேரம் யாரும் வருவதில்லை. ஆனாலும் அவள் மறுபடியும் கதவைத் தட்டாமல் பொறுமையாக நிற்கிறாள். யாரும் வரப்போவதில்லை என்று நாம் நினைக்கும்போது, மெல்ல அது திறக்கப்படுகிறது.

அவள் உள்ளே போகிறாள், “வா,” என்று சொல்லிவிட்டு அவளது அண்ணன் பேப்பரும் கையுமாக டிவி முன் இருக்கும் சேரில் உட்கார்ந்து மேட்ரிமோனியல் பத்திகளில் தான் தவற விட்ட தன் சந்தோஷத்தின் சாத்தியக்கூறுகளை விட்ட இடத்திலிருந்து தேடத் தொடங்குகிறான்.

“நல்லா இருக்கீங்களாணா?”

“ம்ம்…”

“அண்ணி எப்படி இருக்காங்க?”

“ம்ம்…”

அவள் உபசாரமாக ஏதேதோ கேட்கிறாள். அவளது அண்ணன் ஆர்வமில்லாமல் ம்ம் கொட்டிக் கொண்டிருக்கிறான். இதெல்லாம் சமையலறையை விட்டு வெளியே வராத அவளது அண்ணிக்குக் கேட்கிறது, “தங்கை மேல உள்ளே அத்தனை பாசத்தை வைத்துக் கொண்டு கொரங்கு மாதிரி என்ன ஒரு வேஷம் இந்தாளுக்கு!” என்று மனதுக்கு வைகிறாள் அவள்.

அந்தப் பெண் அண்ணனிடம் பேசிவிட்டு, அம்மாவின் அறைக்குப் போகிறாள். அவளும் தன் மகனுக்கு பயந்துகொண்டு “வா,” என்பதைத் தவிர எதுவும் சொல்வதில்லை. கையில் இருக்கும் பழைய புத்தகம் ஒன்றைக் கண்ணுக்கருகில் வைத்து தன்னை மறைத்துக் கொள்கிறாள்.

இன்னும் ஒரு மணி நேரம். அண்ணி ஆபீஸ் போனதும் அம்மா மெல்ல வெளியே வருவாள், அப்புறம் அண்ணன் உள்ளே வருவான்- அம்மாவின் கவலையும் அண்ணனின் பெருமையும் அவர்களின் சன்னக் குரல் சிரிப்புகளில் அவளைச் சூழும்- அந்த அறையில் இருந்த அம்மாவின் மருந்துகளின் மணம் அதுவரை ஒரு மெல்லிய அன்பின் மாற்றுப் போர்வை போல் அவளைச் சூழ்ந்திருக்கும்.

– என்றெல்லாம் என் கதையை எழுதினேன். எழுதி முடித்தபிறகு பார்த்தால், கதையில் முடிச்சையும் காணோம் தரிசனத்தையும் காணோம்.

திடுக்கிட்டுப் போய் விட்டது. சரி, இது எழுதத் தெரியாதவன், கற்பனை இல்லாத ஒருவன் எழுதிய கதை இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். கதையாவது ஒண்ணாவது, ஒழுங்காக வீடு போய் சேர்ந்து ஒரு நாலு மணி நேரமாவது அடித்துப் போட்ட மாதிரி தூங்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்- என் கழுத்து, அடி முதுகு, காலின் முட்டிகள் எங்கும் நல்ல வலி. அவளது நினைவுகளைப் புறக்கணித்து, போரூரில் இறங்கியவர்கள் காலி செய்த இருக்கை பஸ்சின் முன் பக்கத்தில் காலியாகவே இருந்தது, அங்கே போய் அமர்ந்து கொண்டேன், அங்கிருந்து தலையை இடப்பக்கம் ஒரு நாற்பத்தைந்து டிகிரி திருப்பி ஓரக்கண்ணால் பார்த்தால் அவள் சன்னல் வழியே சென்னையின் சாலையோரக் கடைகளை வெறித்துக் கொண்டிருப்பது தெரியும்.

அந்தப் பெண் கிண்டி அருகே வரும்போது அவிழ்த்திருந்த தன் முடியைக் கைகளால் முடிந்து கொண்டாள். அடுத்த வரிசையில் இருந்த ஒருவரிடம் கேட்டு, மேலே வைத்திருந்த தன் சிவப்பு நிற ட்ராவல் பாகை பக்கத்துக்கு இருக்கையில் வைத்துக் கொண்டாள்

பஸ் கிண்டி திரும்பி மேம்பாலத்தின் கீழ் இருந்த பஸ் ஸ்டாண்டில் நின்றது. பாக்கைத் தூக்கிக் கொண்டு எழுந்தவள் என்னை உற்றுப் பார்த்தபடி என் இருக்கை நோக்கி நடந்து வந்தாள். அவள் கண்கள் மாத்திரம் என்னில் விழுந்து நிலைத்து நின்றன.

எனக்கு நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. அவள் பார்வையை தாங்க முடியாமல் உடனே கண்களைத் தாழ்த்திக் கொண்டேன். என்னைக் கடந்தபோது மடிக்கப்பட்ட காகிதம் ஒன்று என் மடியில் விழுந்தது. நான் தலையை உயர்த்திப் பார்க்க, அவள் என்னைக் கடந்து போனாள். என்னை ஒரு முறைகூட திரும்பிப் பார்க்காமல் கீழிறங்கி அங்கே நின்றுக் கொண்டிருந்த ஆட்டோக்களின் வரிசையைத் தாண்டி நடந்து மறைந்து போனாள்.

நான் விறைத்துப் போயிருந்தேன். எழுத நினைத்த கதை மறந்தே போய் விட்டது. மடியில் கிடந்த காகிதத்தை எடுத்து கையில் பொத்திக் கொண்டேன். உள்ளங்கை வியர்த்து நான் கையில் பொத்தி வைத்திருந்த காகிதம் நனையத் தொடங்கியிருந்தது. காகிதத்தின் ஸ்பரிசம் சட்டென்று கை வழியே பரவி மேலும் கற்பனைகளைக் கிளறத் தொடங்கியது.

அண்ணியும் அண்ணாவும் மருந்து மண அம்மாவும் கதையிலிருந்து நழுவி விழுந்தார்கள். நான் வேறொரு கதைக்குள் பிரவேசித்துக் கொண்டிருந்தேன்.

என் கதையின் முடிவு என்னவாயிருக்கும் என்ற ஆவல் இல்லை. அதையும் கடந்த ஒன்று. என்னில் தைத்து என்னைக் கடந்து சென்ற அவளின் பார்வை ஒரு இனிமையான கொடுக்கையும் கூட விட்டுச் சென்றிருந்தது.

ஏன் அவள் முதலில் தன் பார்வையை எறிந்து பின் என் மேல் காகிதம் எறிந்து சென்றாள்?

இது ஒரு சிறுகதையின் முடிவா? அல்லது ஒரு தொடர்கதையின் முதலாவது அத்தியாயமா?

காகிதத்தில் என்ன?

அவளது முகவரி ? அல்லது இலக்கம் ? ஆபத்தில் இருக்கிறாளா? பஸ்ஸில் இருந்த அத்தனை கூட்டத்தில் அவள் தனக்கு உதவக்கூடிய ஒரு ஹீரோவின் முகத்தை என்னிடம் அடையாளம் கண்டு கொண்டாளா?

காகிதத்தைப் பிரித்துப் படிக்க கையை விரித்தேன். பஸ்ஸில் எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிற உணர்வு.

ஒரு வேளை இப்போதுகூட அவளுடைய எதிரிகளில் யாராவது என்னையும் வேவு பார்த்துக் கொண்டிருப்பார்களோ?

நான் தாமதிக்க விரும்பவில்லை. அடுத்த ஸ்டொப்பில் இறங்கிவிட்டேன். தன் நரைமுடிக்கு கருப்புச் சவரி வைத்துக் கொண்டை போட்டிருந்த ஒரு பெண்மணி மாத்திரம் என்னோடு கூட இறங்கி என்னைத் தாண்டி நடந்து போனாள்.

பஸ் புறப்பட்டுப்போன பின்னால் ஆரும் அவதானிக்கிறார்களா என்று தலையைச் சுழற்றிப் பார்த்து விட்டு நிழல் குடையில் ஒதுங்கி என் கைக்குள் பொத்தி வைத்திருந்த காகிதத்தை எடுத்தேன்.

அது முகத்தை ஒற்றிக் கொள்வதற்கு பயன்படுத்தப்படும் திசுக்காகிதம். ஒரு மருந்துச் சரையை போல மடிக்கப்பட்டிருந்தது. மிண்ட் வாசனை தெளிக்கப்பட்ட காகிதம்.

அதன் மடிப்புகளை அடுக்குகளை விரித்து நீட்டினேன். எழுத்தோ வசனமோ எதுவுமில்லை.

சப்பிச் சாறிழந்த ஒரு சூயிங்கம் தாளில் ஒட்டிக் கிடந்தது.

அவளைப்பற்றிய என் விவரணையில் அவள் எதையும் மென்று கொண்டிருந்ததாக நான் குறித்துக் கொள்ளவில்லையே? அவள் எதையும் மெல்லவில்லையே? என் நினைவுகளின் தடத்தில் மெல்ல ஊர்ந்து அந்த இரவின் நிகழ்வுகளைத் துப்பறிந்தேன்.

எனக்குப் பக்கத்தில் இருந்த அந்த இளம் பையனின் தாடையின் எருமை மாட்டு அசைவு என் நினைவுக்கு வந்தது- மொச்சு மொச்சென்று மென்று அவன் பலூன் விட்டு உதட்டில் மிச்சமிருந்த அதன் எச்சங்களை நாவால் வழித்து மீள்பலூன் விட்டபடி என்னுடன் பயணித்திருந்தான், இரவும் அதிகாலையும் நான் அவனை அவதானித்திருந்த கணமெல்லாம்.

10 thoughts on “நினைவின் எச்சங்கள்

 1. ஒரு நாடகப்பட்டறை ஒன்றில் எல்லோரும் வட்டமாக இருந்துகொண்டிருந்தோம்.ஒரு ஆள் ஒரு கதையின் முதல் வரியைச்சொல்ல அடுத்தவர் இன்னொரு வசனம் சேர்க்கவேண்டும்.கதை சுற்றி வர வளர்ந்துகொண்டே வரும்.அதுவும் எதிர்பாராத திடுக் திருப்பங்களோடு.

  அப்படி வளர்ந்துவந்த கதையில் ஒரு இளைஞன் ஒரு யுவதி இருவரும் சந்திக்கிறார்கள்.மழைவருகிறது. ஒரு மரத்தின் கீழ் ஒதுங்குகிறார்கள்.
  இப்படி ரொமாண்டிக்காக போகத்தொடங்கியிருந்தது
  ஆனால் அடுத்த வசனத்தைச்சொன்னவர்.

  ’’அவர்கள் அண்ணாந்து பார்த்தார்கள் மரத்தில் ஒரு குரங்கு இருந்தது’’
  என்று கதைக்குள் ஒரு குரங்கைக்கொண்டுவந்துவிட்டார்.
  அடுத்து நான்:
  ”எனக்கு குரங்கைப்பார்த்தாலே உங்கள் ஞாபகந்தான் வரும் “ என்று அவள் சொன்னாள்.இப்படி காமேடிட்ராக்கில் இழுக்கப்பார்த்தேன்

  அடுத்தவர் உடனே சமாளித்து ரொமாண்டின் ட்ராக்கில் இழுக்கப்பார்த்தார்:

  ’நீங்கள் டிராமாவில் குரங்கு வேசம் போட்டது ‘’ என்று மேலும் அவள் சொல்ல இருவரும் சிரித்தார்கள்’’

  ஆனால் கதை நீடிக்கவில்லை
  அடுத்துவந்தவர்:

  ’இதெல்லாம் ஒரு கதையா ‘ என்று சொல்லியபடி சுந்தரம் புத்தகத்தை மூடினான்.’’ என்று சொல்லி கதைச்சுற்றை முடித்துவிட்டார்.

  சுவாரசியம் இப்படி ஒருவர் தொடங்க மற்றவர் இழுப்பது.

  உங்கள் கதைக்கு இப்படி ஒரு தலைப்பை விழுத்தினால் கதை எப்படிப்போகும்

  ’ஒரு கதைக்காக…ஒரு கொலை!’

  1. ஆமாம், அந்தப் பெண்ணின் அண்ணன் உண்மையில் ஒரு பெரிய தாதாவாம். அவள் அழுதுக் கொண்டே போய் அண்ணனிடம் போட்டுக் கொடுத்து விட்டாள். அவள் வந்த பஸ்சின் பயணிகள் லிஸ்டை சோதித்து கடைசி வரிசையில் இருந்தவனது மின் அஞ்சல் வழியாக (அவன் பெருமைக்காக தன் ப்ளாக் முகவரியை சிக்நேச்சராக வைத்திருந்தது தப்பாப் போச்சு) இந்த ப்ளாகில் நட்பாஸ் மற்றும் வரசித்தன் என்கிற இருவரும் தன்னையும் தன் தங்கையையும் தன் குடும்பத்தையும் பற்றி மோசமாக எழுதியிருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு ஐபி அட்ரசைத் தேடிப் பிடித்து விட்டான். இப்போ ஆட்டோவில் ஆள் வந்து கொண்டே இருக்கிறார்களாம். ஒடுங்கோ டொக்டர் ஒடுங்கோ – ஒரு கதைக்காக இரு கொலை விழப் போகிறது!

 2. பெண்ணின் அண்ணன் வருவது இருக்கட்டும்… கதையைப்படித்துவிட்டு பொறுக்க முடியாமல் ஒரு தீவிரவாசகர் வெறிகொண்டு…ஒரு கதைக்காக..

  அண்ணன் வந்தாலும் ’’’(’நட்)பாஸ்” கதையை முடிக்கட்டா?’’என்று நாங்கள் பேசிக்கொள்வதைக்கேட்டு பாஸ் …உங்க பின்னால் ஒரு பெரிய தாதா கூட்டம் இருப்பதாக நினைக்கக்க்கூடும்.

  அது சரி பஸ் டிக்கட்டு பதிவு ஐயும் பதிவுபோடுவதாக நினைத்து நட்பாஸ் பிரபல பதிவர் அப்படின்னு பயணிகள்லிஸ்ட்டிலை எழுதீட்டாங்களா

  🙂 சரி இத்துடன் நிறுத்தலாம்.

  நன்றி இப்படி கதைஅளக்க இடமளித்தமைக்கு

  1. பெண்ணின் அண்ணன் ஆள் வைத்து அடித்தாலும் அடிக்காவிட்டாலும் மறைந்த மாமேதை லாசராவின் ஆவி நம்மை மன்னிக்கவே மன்னிக்காது…

 3. உண்மைதான் .உங்கள் எழுத்து பற்றிய தேடலூடாக லாசராவின் எழுத்து பற்றிய நுணுக்கமான பார்வையை அனுபவித்து உணர்ந்து எழுதியிருந்தீர்கள். அது எழுத்து பற்றிய ஒரு நல்லபார்வை அளிக்கிறது. நல்ல இலக்கியத்தேடலுக்கான பதிவு.உங்கள் மூலம் அவர் பேசினார்.

  இந்தப்பார்வையை இப்படி கதைக்கிளர்ச்சியினூடாக மேலோட்டமாக்கி இழுத்துவந்தது நோக்கத்துக்கு பொருத்தமில்லாத எதிர்வினை.

  மன்னித்துவிடுங்கள்.

  1. எதற்கு மன்னிப்பு?

   லாசரா சொன்னதை நீங்கள் செய்து காட்டினீர்கள். அதற்காக நான் நன்றிதான் சொல்ல வேண்டும்.

   ஆழம் மேலோட்டம் எல்லாம் மனம் சார்ந்த விஷயங்கள்- எழுதியவனும் படிப்பவனும் மட்டுமே அறிந்த ஒன்று. ஒரு தேர்ந்த எழுத்தாளரான உங்களுக்குத் தெரியாததா என்ன இந்த சாதாரண விஷயம்!

   என்னைக் கையைப் பிடித்து கதை எழுத வைத்த ஆசானுக்கு என் நன்றிகள் 🙂

 4. ஆனாலும் கொஞ்சம் ஓவர் சார்.

  மனம் சார்ந்த விஷயங்கள்தான்

  உங்களை எழுதவைத்தது எதுவோ அதுவே உங்களை இழுத்துச்செல்லுகிறது.
  புனைவை நோக்கி நகருகிறீர்கள்.
  கிள்ளிக்கொடுப்பதில்லை நீங்கள் எதையும் அள்ளிக்கொடுப்பவர் அதுக்காக இப்படியா கடவுளே

  1. வரசித்தன் சார், யார் இந்த கிரி? நம்ம கதைக்குள்ள எப்ப, எப்படி வந்தார்? அந்தப் பொண்ணோட அண்ணனா இருப்பாரோ? ஏதோ பட்டனை அழுத்தினதா சொல்றாரே, நமக்கு கண்ணி வெடி வெச்சுட்டாரோ?

   இப்படி யார் யாரோ வந்து திடுக்கிடும் திருப்பங்களை செய்யறதைப் பாத்தா பின்னூட்டப் பெட்டியை மூடறதுதான் நமக்கு சேஃப்னு தோணுது, என்ன சொல்றீங்க?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.