எப்படி எழுதுகிறேன்- லா ச ரா

இதைப் பழைய குமுதம் இதழொன்றில் படித்தேன்:

எப்படி எழுதுகிறேன்?
– லா.ச.ரா.

தெருவில் ஒரு தரம் நடந்து விட்டு வந்தால், சிறுகதைக்கு விஷயம் கிடைத்த மாதிரிதான்.

ஆளுக்கு ஆள், வேளைக்கு வேளை, காட்சிகள், சம்பவங்கள், பேச்சுகள், கேட்கும் குரல்கள், பாதிப்பு விதம் விதம்.

கதையம்சம் என்று தனியாகத் தேட வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

எந்தக் காட்சி, எந்த ஓசையில், ஒரு அற்ப அம்சத்தில், கண், செவி, இதயம், மனம் என்று நெகிழ்ச்சி காண்கிறதோ, அங்கேயே கதை பிறந்து விட்டது.

பல சமயங்களில், சம்பவம் அறிவுபூர்வமாகவே அடையாளம் காட்டும்.

அதை அப்படியே நினைவில் ஊறப்போட்டுச் சிந்திக்கச் சிந்திக்க வெளியீட்டுக்கு விரிவு கொடுத்தால் போதும். எழுதும் கட்டத்துக்கு அது தயாராவது எழுத்தாளனின் மனப்பான்மை, எண்ணத்தின் தீவிரத்தன்மையைப் பொறுத்தது.

என்னைப் பாதித்த எழுத்தாளர் யார்? இந்தக் கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது.

Hemingway: அமெரிக்க எழுத்தாளன். அவனுடைய சம்பாஷனை முறை கேள்வி, பதில்- குட்டிக் குட்டி வாக்கியங்கள்- (yes, no, yes, yes; no) ஒரே வார்த்தை. திரும்பத் திரும்ப அதே வார்த்தை. ஆனால் ஒவ்வொரு சமயமும் தனித்தனி வெவ்வேறு அர்த்த நயம். இது தவிர வரிகளிடையே வேணுமென்று சொல்லாது விட்டு, படிப்பவன் மனதில் எதிரொலிக்கும் விட்டுப்போன வாக்கியங்கள்.

இவன் பாணியைக் காப்பியடிக்க பெரிதும் முயன்றிருக்கிறேன்.

Tolstoy: இவன் ஒரு அவதார புருஷன். இவன் எழுத்தின் எளிமையிலும் கலையம்சத்திலும் moral attitudeலும் இவனை நெருங்க முடிந்தவர் அதிகம் இல்லை. நம் நாட்டு முனிவர்களால்தான் முடியும்.

ஆனால் சென்ற பல வருடங்கள் என்னைப் பாதித்திருப்பவர்: ராமகிருஷ்ண பரமஹம்சர். இலக்கிய ரீதியில்தான் சொல்கிறேன். பெரிய பெரிய விஷயங்களைச் சுலபமாக விளக்கும் வாக்கு வன்மை, அபாரமான எண்ண எளிமை, innocence, அதே சமயத்தில் சொல்லும் விஷயத்தில் ஒரு அதிகாரம், யாவற்றின் மேலும் படர்ந்த கவிதை நயம்- சொல்லிக்கொண்டே போகலாம்.

எப்படியும் என் பொற்கொல்லர் சுத்தியும், உளியும் மேனாட்டிலிருந்து கடன் வாங்கியவையே.

நன்றாக உழை.
நன்றாக உண்.
நன்றாக உறங்கு.
ஆனால் கூடவே பசித்திரு.

அனுபவத்தின் பேரில், இது, எழுத்தைப் பயில்வோனுக்கு என் புத்திமதி. உடல் ஆரோக்கியத்துக்கு மட்டும் அல்ல; எந்தக் கலைக்கும் இந்த சூத்திரம் பொருந்தும்.

——————————-

அண்மையில் நான் என் நண்பர் ஒருவரைப் புகழும் விதமாக, “ஐயா உங்கள் எழுத்து எனக்கு வில்லியம் ட்ரவர் மற்றும் ரேமண்ட் கார்வர் ஆகியவர்களின் எழுத்தை சில விஷயங்களில் நினைவுபடுத்துகிறது.” என்று எழுதினேன். அதற்கு அவர், ஆவ் பாஸ்! உங்க ஊரில எழுத்தாளர்களே கிடையாதா 🙂 என்று என்னை ஸ்மைலிக்கிடமாக்கி விட்டார்.

மெய்யோ பொய்யோ, இந்த மாதிரி மேனாட்டு எழுத்தாளர்களின் சாயலை லாசரா எழுத்தில் அவர் சொன்னாலன்றி கண்டு பிடிப்பது கடினம். ஒரு வேளை அவர் தொழில் நுட்பத்தை மட்டும் அங்கிருந்து எடுத்து வந்தாரோ என்னவோ, அவரது கதைக் களம், அதை விரித்துச் சொல்லும் மன அரங்கம், எல்லாம் நமக்கு மட்டுமே உரியது.

லாசராவின் ஒரு கதையின் முடிவு இப்படி போகிறது, இதில் ஹெமிங்வேயையும் டால்ஸ்டாயையும் எப்படி அடையாளம் கண்டு பிடிக்க?-

அவளது அலறலைக் கேட்டுப் பட்சிகள் பயந்து கதறின; மிருகங்கள் மிரண்டோடின; காற்றும் அஞ்சி அலைந்தது. ஆனால், அவன் செவியில் எது ஏறும்? முகத்தில் வெறி நகைக்க, அவன் அவளைத் தொடர்ந்தான். அவளைத் துரத்தத் துரத்த, வேய்க்காடு, அவர்களைச் சுற்றி அடர்ந்தது.

காட்டின் மத்தியில் ஓங்கி வளர்ந்ததோர் ஆலமரத்தை நோக்கி அவள் ஓடினாள்.

ஒரு பக்கம் ஆத்திரம் பொங்கியெழுந்தது. அவனுடைய கால்கட்டை விரலின் அழுத்தத்தில் அண்ட  குலாசலங்களும் குலையுமே! அவனுடைய ஆற்றொணா ஆற்றலைக் கேவலம் ஒரு பெண் குலைப்பதா!

ஓடும் வேகத்தில் அவளது ஆடை புதர்களில் சிக்குண்டு கிழிந்தது. அவளது வெண்தொடை பளீரென மின்னிற்று.

“ஆணை! ஆணை!!- நான் தொழும் தெய்வத்தில் மேல் ஆணை!- தொடாதே! ஐயோ!”

வேர் தடுக்கிற்று. என்னத்தையோ அணைப்பது போன்று கைகளை வீசி குப்புற வீழ்ந்து மூர்ச்சையானாள். தூரத்திலிருந்து அவளை நெருங்குகையிலே, அம்மரத்தடியில் வீற்றிருக்கும் ஒரு மணல் லிங்ககத்தை அவளுடைய கரங்கள் தழுவியிருப்பதைக் கண்டாள்.

அவள் தொழும் தெய்வம்!

அவள் அதை அந்தரங்கத்துடன் நம்பிக் கதறிய அபயத்தின் வேகம் அவனது வேஷத்தை, அவனையறியாமலே உரித்துவிட்டது. அவன் வந்து அவளண்டை நின்றபொழுது, ஜடையும் கங்கையும் சூலமும், மானும் மழுவும், பாம்பும் தாங்கி, பரமசிவனாய் நின்றான். அவன் மனதில் ஆச்சரியம், வெட்கம், துயரம் இன்னும் பல்வேறு உணர்ச்சிகள் பொங்கியெழுந்தன.

அவன் அவளை அழித்தான்; நெற்றிக்கண்ணால் சுட்டு எரித்தான். வேறு வழியில்லை!

சர்வ ஜீவராசிகளும் வாழ்க்கையில் சறுக்கி விழுந்தும், தட்டுத் தடுமாறிச் சேர முயலும் லட்சியத்தின் சிகரம் அவன். அந்த லட்சியத்தின் தோல்வியாய் அவன் இப்பொழுது நின்றான். ஆதலின், அந்த நினைவை அழிக்க, அவளை அழிப்பது தவிர வேறு வழியேது? நெற்றிக்கண்ணைத் திறந்து அவளைச் சுட்டெரித்தான்.

சகலமும் அவனுக்கு அடக்கம்; அவன் அவனது நெற்றிக்கண்ணுக்கு அடக்கம்; தன்னுடன் சமரிட்ட மாறனை எரிக்கவோ, வாதில் வென்ற கீரனை ஒறுக்கவோ, தான் கட்டுக்கடங்காது தெறிக்க முயலும்பொழுது அதை அழிக்கவோ, எதற்கும் திறப்பது நெற்றிக்கண்தான். அது அவனுடைய தோல்வியற்ற வெற்றியின் சின்னம்.

ஆகையால் அவன் அவளைச் சுட்டெரித்தான்.

கல்லையே வெல்லப் பாகாய் உருக்கிய, அந்தக் கண்ணின் வீட்சண்யத்துக்கு மாந்தளிர் போன்ற அவளது சரீரம் எம்மாத்திரம்! இமைப்பொழுதில் அவள் விழுந்த இடத்தில் ஒரு சாம்பற் குவியல் கிடந்தது. அதில் விழுந்து புரண்டு எழுந்தான் பெருமான். அவனுடைய கண்களினின்று இரண்டு எரி நீர்த்துளிகள் கிளம்பி, கண்ணத்தில் வழிந்து, முகவாய்க் கட்டையினின்று உதிர்ந்து கீழே விழுந்து புகைந்து தீ காட்டைப் பற்றியது.

ஸ்நானத்துக்குச் சென்ற மங்களமுகி வேய்ங்காட்டுத் தீயில் மறைந்தாள் என்று வதந்தி சொல்லியது.

(லாசராவின் கதை இங்கே முடிகிறது, நம் கதை வேறு இடத்தில் தொடரும்)

Advertisements

11 thoughts on “எப்படி எழுதுகிறேன்- லா ச ரா

 1. லசரா-வை படிக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கு மிக்க நன்றி.

  ‘நெற்றிக்கன்னுக்கு அடக்கம்’, ‘தீயில் மறைந்தால்’ எழுத்துப்பிழைகளையும் கொஞ்சம் கவனியுங்க. 🙂

  1. எத்தனை பிழைகள்! மகா கேவலமாக இருக்கிறது.

   இதோ திருத்தி விடுகிறேன்.

   சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s