கதையா, இது கதையா?

வணக்கம் நண்பர்களே.

லாசரா, எப்படி எழுதுகிறேன், என்ற சிறு குறிப்பில் சொன்ன சிறு விஷயம் இது- “தெருவில் ஒரு தரம் நடந்து விட்டு வந்தால், சிறுகதைக்கு விஷயம் கிடைத்த மாதிரிதான். ஆளுக்கு ஆள், வேளைக்கு வேளை, காட்சிகள், சம்பவங்கள், பேச்சுகள், கேட்கும் குரல்கள், பாதிப்பு விதம் விதம். கதையம்சம் என்று தனியாகத் தேட வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எந்தக் காட்சி, எந்த ஓசையில், ஒரு அற்ப அம்சத்தில், கண், செவி, இதயம், மனம் என்று நெகிழ்ச்சி காண்கிறதோ, அங்கேயே கதை பிறந்து விட்டது.”

நான் மேற்சொன்ன வில்லியம் ட்ரெவருக்குக்கூட இந்த அபிப்பிராயம் இருப்பதாகத் தெரிகிறது- தன் அனுபவத்தை, தனக்குத் தெரிந்ததை வைத்து எழுதுவதைவிட கற்பனையில்தான் எழுத்துப் பிறக்கிறது என்று சொல்கிற ட்ரெவர், தன் மனம் பாத்திரங்களாலும் அவற்றின் கதைகளாலும் நிறைந்திருக்கும், எப்போதும் அது எதையாவது செய்துகொண்டிருக்கும் என்கிறார்: “நான் இல்லாதவர்களோடு வாழ்கிறேன். நான் அவர்களைப் பற்றி எழுத வேண்டும், ஆனால் அதற்கான அவகாசம் எனக்கு இல்லை. இன்னும் இன்னும் குறைவான நேரமே எனக்குக் கிடைக்கிறது”

ட்ரெவர் சொல்வது இது, இந்த விஷயத்திலும் அவர் லாசரா சொல்வதை எதிரொலிக்கிறார்: “நான் மனிதர்களைப் புரிந்து கொள்ள நினைக்கிறேன்; நான் அவர்களை அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஏன், எப்படி வாழ்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அதோ அங்கே இருக்கும் பெண்ணைப் பார்க்கும்போது, அவள் ஏன் இப்படியானாள், அவளுக்கு அப்படி என்ன நேர்ந்திருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன், ” என்கிறார்.

நானும் பாருங்கள், நேற்று பஸ்ஸில் வரும்போது ஒரு பெண்ணைப் பார்த்தேன். அவளது வயது இருபதிலிருந்து இருபத்தைந்துக்குள் இருக்கும். பஸ் வரக் காத்திருக்கும் நேரத்தில் எனக்கு இரண்டு வரிசை முன் தள்ளியிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தாள். காத்திருப்பு அறையில் நுழைந்தபோது அவளைப் பார்த்தேன், வட்ட முகம். கூர்மையான மூக்கு. கையில் செல் போன் வைத்திருந்தாள். நான் உள்ளே நுழையும்போது தன் சிறு கண்களால் ( சிறு என்றால் சீனக் கண் அல்ல, வழக்கமாக பெண்களுக்கு விழுங்கி விடுகிற மாதிரி விரிந்த, அகலமான கண்கள் இருக்குமே, அப்படியெல்லாம் இல்லாத கண்) என்னைத் தவிர்த்தாள்.

நான் அவளுக்கு இரண்டு வரிசை பின்னால் அமர்ந்திருந்தேனா, அரை மணி நேரம், நான் என்னுடன் வந்திருந்த என் சகோதரன், அந்தப் பெண், மற்றும் சிலர் அங்கே காத்திருந்தோம். அப்போதுதான் ஒன்று கவனித்தேன். அவள் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு அடுத்த வரிசையில் யாரும் இல்லை. எங்கள் வரிசையில் அவளுக்கு நேர் பின்னே என் சகோதரன், சிவப்பு சட்டை போட்டிருந்தான். அவனுக்கு வலப்புறத்தில் நான், பச்சை சட்டை போட்டிருந்தேன். நாங்கள் அனைவரும் அந்த அறையின் கண்ணாடி கதவில், சாலைகளில் செல்லும் வாகனங்கள் கண்ணாடிக்கு அந்தப்புறம் எங்கள் நேர்க்கோட்டில் வரும்போது பிரதிபலிக்கப்பட்டோம். நாங்கள் என்றால் நாங்கள் அல்ல. என் பச்சை சட்டையும் என் சகோதரனின் சிவப்பு சட்டையும். அந்தப் பெண் போட்டிருந்த ஊதா நிற சட்டை அடர்ந்த கருநிறம் பூசிய வாகனங்கள் சுட்டும்போது மட்டுமே புலப்பட்டது.

இப்படியே பொழுது போய்க் கொண்டிருக்கும்போது இன்னொன்று கவனித்தேன். அந்தப் பெண் அடிக்கடி, ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறையாவது, தன் சட்டையின் காலர் பகுதியுனுள் விரல் விட்டுத் துழாவி, அதை கழுத்தை நோக்கி இழுத்து விட்டுக் கொண்டாள். ஏற்கனவே அவள் கழுத்தை சுற்றி அவள் கட்டியிருந்த துப்பட்டா அந்தப் பகுதியை முழுதும் மறைத்திருந்தது. அவளது சட்டையும் முதுகைக் காட்டுவதாயில்லை. ஆனாலும் அவள் இப்படி இழுத்து இழுத்து தன் கழுத்து மற்றும் அதற்குக் கீழிருக்கும் பகுதிகளை மறைத்து கொண்டிருந்தாள். இதனால் அவளது இரு கைகளிலும் சட்டை உயர்ந்து அங்கு வெயில் படாத இடங்களைக் காட்டியது- பைசப்ஸ் என்று சொல்வோமில்லையா, அந்தப் பகுதியை.

லாசரா சொல்கிறாரே, ” எந்தக் காட்சி, எந்த ஓசையில், ஒரு அற்ப அம்சத்தில், கண், செவி, இதயம், மனம் என்று நெகிழ்ச்சி காண்கிறதோ, அங்கேயே கதை பிறந்து விட்டது,” என்று, எனக்கு அவளது இந்த செய்கை, சரியாக உடை போட்டுக் கொள்ளத் தெரியாத குழந்தையை நினைவுபடுத்தியது. என் பையன்கூட புது பாண்ட் போட்டுக் கொண்டால், அது சரியாக இடுப்பில் நிற்க வேண்டுமே என்ற கவலையில் நெஞ்சு வரை இழுத்து விட்டுக் கொள்வான். கண்களும் மனமும் நெகிழ்ச்சி கண்டிருந்தாலும் கதை ஒன்றும் அங்கே அப்போது பிறக்கவில்லை.

அவள் தனியாக வந்திருந்தாள். ஒரு லிட்டர் மாஜா பாட்டிலில் தண்ணீர் வைத்திருந்தாள். இதையெல்லாம் கொண்டு அவள் வார விடுமுறைக்கு கோவையில் தான் வேலை செய்யும் இடத்திலிருந்து ஊருக்குத் திரும்புகிறாள் என்று முடிவு செய்தேன். பஸ்ஸில் ஏறும்போதுதான் கவனித்தேன், அவள் நல்ல உயரம் என்று. இப்போது அவள் இன்னும் ஒல்லியாகத் தெரிந்தாள். முதலில் அவளது இடப்பக்க இருக்கை காலியாக இருந்தது, பயண முடிவு வரை அது நிரப்பப்படவே இல்லை- தன் அருகில் யாரும் வந்து அமர்ந்து தொல்லை தரக்கூடாது என்று இரண்டு டிக்கெட்டாய் எடுத்து விட்டாள் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். பஸ்ஸில் அவள் எனக்கு மூன்று வரிசைகள் முன்னிருந்தாள். அவளது தலையின் உச்சி மட்டுமே தெரிந்தது. பஸ்ஸில் விளக்கை அணைத்தபின் அதுவும் தெரியவில்லை. ஆனால் அந்த இருட்டிலும் அவள் தன் சட்டையைக் கழுத்துப் பகுதி வரை மேலிழுத்துக் கொண்டிருப்பாள் என்று நினைத்துக் கொண்டேன், அவள் தன் சட்டைகளுக்கு நீளமாகக் கை வைக்கச் சொல்ல வேண்டும்.

பஸ்சின் கடைசி இருக்கையில் நான். மேடேறி இறங்கும்போதெல்லாம் என் அரைத் தூக்கத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டேன். ஒரு கோழித் தூக்கத்தில் இருந்து எழுந்த போது விழிப்பு நன்றாக வந்து விட்டது. பொழுது போவதற்காக, நான் லாசரா வில்லியம் ட்ரெவர் போன்றவர்கள் எல்லாம் கண்ணில் தென்பட்டவர்கள் மனதில் விழுந்ததும் அவர்களைப் பற்றி கதை எழுதுகிறார்களே, நமக்கு இந்தக் கற்பனை ஏன் வரமாட்டேன் என்கிறது என்று நினைத்துக் கொண்டே வந்தேன்.

அவள் மறு நாள் காலை தன் வீட்டுக்குப் போய்ச் சேர்வாள். எப்படியும் அப்போது ஏழு மணி ஆகியிருக்கும். அவளது அம்மா, காலை ஐந்து மணியிலிருந்தே தன் பெண் வருகைக்காகக் காத்திருப்பாள். அவளது அண்ணன், அவனும் உயரமாக, இளைத்தவனாக இருந்தான் குளித்து முடித்து விட்டு பேப்பர் படித்துக் கொண்டிருப்பான். அவளது அண்ணி, குள்ளமாக, குண்டாக இருப்பாள், சரியான கோபக்காரி- இந்தப் பெண் வரப்போவதையும், அவளைத் தன் புருஷனும் மாமியாரும் சந்தோஷமாக வரவேற்கப்போவதையும் நினைத்து குமுறிக் கொண்டிருப்பாள்.

அவள் வாசல் கதவைத் தட்டுகிறாள். கொஞ்ச நேரம் யாரும் வருவதில்லை. ஆனாலும் அவள் மறுபடியும் கதவைத் தட்டாமல் பொறுமையாக நிற்கிறாள். யாரும் வரப்போவதில்லை என்று நாம் நினைக்கும்போது, மெல்ல அது திறக்கப்படுகிறது.

அவள் உள்ளே போகிறாள், “வா,” என்று சொல்லிவிட்டு அவளது அண்ணன் பேப்பரைத் தூக்கிக் கொண்டு டிவி முன் இருக்கும் சேரில் உட்கார்கிறான்.

“நல்லா இருக்கீங்களாணா?”

“ம்ம்…”

“அண்ணி எப்படி இருக்காங்க?”

“ம்ம்…”

அவள் உபசாரமாக ஏதேதோ கேட்கிறாள். அவளது அண்ணன் ஆர்வமில்லாமல் ம்ம் கொட்டிக்கொண்டிருக்கிறாள். இதெல்லாம் சமையலறையை விட்டு வெளியே வராத அவளது அண்ணிக்குக் கேட்கிறது, “உள்ளே அத்தனை தங்கைப் பாசத்தை வைத்துக் கொண்டு குரங்கு மாதிரி என்ன ஒரு வேஷம் இந்தாளுக்கு!” என்று மனதுக்கு வைக்கிறாள் அவள்.

அந்தப் பெண் அண்ணனிடம் பேசிவிட்டு, அம்மாவின் அறைக்குப் போகிறாள். அவளும் தன் மகனுக்கு பயந்துகொண்டு “வா,” என்பதைத் தவிர எதுவும் சொல்வதில்லை. கையில் இருக்கும் பழைய புத்தகம் ஒன்றைக் கண்ணுக்கருகில் வைத்து தன்னை மறைத்துக் கொள்கிறாள்.

இன்னும் ஒரு மணி நேரம். அண்ணி ஆபீஸ் போனதும் அம்மா மெல்ல வெளியே வருவாள், அப்புறம் அண்ணன் உள்ளே வருவான்- அம்மாவின் கவலையும் அண்ணனின் பெருமையும் அவர்களின் சன்னக் குரல் சிரிப்புகளில் அவளைச் சூழும்- அந்த அறையில் இருந்த அம்மாவின் மருந்துகளின் மணம் அவளை அதுவரை ஒரு மெல்லிய போர்வை போல் சூழ்ந்திருக்கும்.

– என்றெல்லாம் என் கதையை எழுதினேன். எழுதி முடித்தபிறகு பார்த்தால், கதையில் முடிச்சையும் காணோம் தரிசனத்தையும் காணோம்.

திடுக்கிட்டுப் போய் விட்டது. சரி, இது எழுதத் தெரியாதவன், கற்பனை இல்லாத ஒருவன் எழுதிய கதை என்று நினைத்துக் கொண்டேன்.

அந்தப் பெண் பூந்தமல்லி வந்ததும், அவிழ்ந்திருந்த தன் முடியைக் கைகளால் முடிந்து கொண்டாள். அடுத்த வரிசையில் இருந்த ஒருவரிடம் கேட்டு, மேலே வைத்திருந்த தன் சிவப்பு நிற ட்ராவல் பாகை பக்கத்துக்கு இருக்கையில் வைத்துக் கொண்டாள். சத்தமில்லாமல் பஸ் கிண்டி திரும்பி நின்றதும் அங்கே இறங்கி கொண்டாள். நானும் அங்கேயே இறங்கியிருந்தால் உதயம் அசோக் பில்லர் வடபழனி மார்க்கமாகப் போயிருக்கலாம். மாறாக அதைத் தவறவிட்டு, அவசர அவசரமாக கிண்டி தொழிற்பேட்டையில் இறங்கி, எந்தப் பேருந்தில் ஏறிச் செல்வது என்று விழித்து நின்றேன்.

Advertisements

6 thoughts on “கதையா, இது கதையா?

 1. அன்புள்ள நட்பாஸ்
  அன்று பஸ்ஸில் பிரயாணம் செய்த பெண் நான்தான்.
  உங்கள் சகோதரனும் நானும் ஒருத்தரை ஒருத்தர் நேசிக்கிறோம்.
  அன்று எப்படியும் உங்களிடம் அறிமுகப்படுத்திவிட நினைத்தார். ஆனால் உங்கள் பார்வையைப்பார்த்ததும் பயந்து இறுதிவரை அவர் அறிமுகப்படுத்தவில்லை.
  சொல்லாமலேயே பஸ் ஏற்றிவிட்டுப்போய்விட்டார்.
  என்னைப்பார்க்காமல் உங்கள் சகோதரனைப்பார்த்திருந்தீர்களென்றால் அவருடைய திருட்டு முழி புரிந்திருக்கும்

  இப்படிக்கு

  சுலோச்சனா

  பின்குறிப்பு:என் கழுத்துப்பகுதியில் ஒரு சூட்டுப்பரு சட்டையின் உள்மடிப்பு உராயும் போது வலிக்கத்தொடங்கிவிட்டது.அதனால்தான் அடிக்கடி இழுத்துவிட்டுக்கொண்டேன்

  (உங்கள் சோதரம் என்னை மன்னிக்கட்டும் 🙂 )

  1. என் சோதரம் சுலோச்ச்சனாவையும் உங்களையும் மன்னிப்பது இருக்கட்டும்; என் சோதரி உங்கள் மூவரையும் மன்னிப்பார்களா பார்க்கலாம். (இந்த லச்சனத்துல அவருக்கு ஒரு பெண் குழந்தை வேற இருக்கு!)

   1. ஸாரி சார் மேலே எழுதிய பதிவு
    கதையாகப்பார்த்தேன். நீங்கள் சோதரம் எல்லோரும் பாத்திரங்கள்..
    சோதரிக்கு தெரியப்படுத்துங்கள் ..மன்னித்துவிடுங்கள்

    கதையை மாத்திடுவோம்.

    அந்தப் பெண் பூந்தமல்லி வந்ததும், அவிழ்ந்திருந்த தன் முடியைக் கைகளால் முடிந்து கொண்டாள். அடுத்த வரிசையில் இருந்த ஒருவரிடம் கேட்டு, மேலே வைத்திருந்த தன் சிவப்பு நிற ட்ராவல் பாகை பக்கத்துக்கு இருக்கையில் வைத்துக் கொண்டாள்

    பஸ் நின்றதும் பாக்கைத்தூக்கிக்கொண்டு எழுந்தவள் என்னை உற்றுப்பார்த்தபடி இன் இருக்கை நோக்கி நடந்துவந்தாள்.அவள் கண்கள் மாத்திரம் என்னில் விழுந்து நிலைத்து நின்றன.
    எனக்கு நெஞ்சு படபடக்கத்தொடங்கியது.அவள் பார்வையைதாங்க முடியாமல் உடனே கண்களைத்தாழ்த்திக்கொண்டேன்.
    என்னைக்கடந்தபோது மடிக்கப்பட்ட காகிதம் என் மடியில் விழுந்தது.நான் தலையை உயர்த்திப்பார்க்க அவள் என்னைக்கடந்து பின் கதவை அடைந்துவிட்டிருந்தாள்.
    திரும்பிப்பார்க்காமலேயே உடனே இறங்கி மறைந்துவிட்டாள்.

    நான் விறைத்துப்போயிருந்தேன் எழுத நினைத்த கதை மறந்தேபோய்விட்டது.மடியில் கிடந்த காகிதத்தை எடுத்துக்கையில்பொத்திக்கொண்டேன்
    உள்ளங்கைவியர்க்கத்தொடங்கி,கையில் பொத்தி வைத்திருந்த காகிதம் நனையத்தொடங்கியிருந்தது.
    காகிதத்தின் ஸ்பரிசம் சட்டென்று கைவழியே பரவி மேலும் கற்பனைகளைக்கிளறத்தொடங்கியது.
    அண்ணியும் அண்ணாவும் மருந்து மண அம்மாவும் கதையிலிருந்து நழுவி விழுந்தார்கள்.
    நான் கதைக்குள் பிரவேசித்துக்கொண்டிருந்தேன்.

    என்கதையின் முடிவு என்னவாயிருக்கும் என்ற ஆவல் அல்ல.அதற்கு மேலாகவும் ஒன்று. என்னில் தைத்து கடந்து சென்ற அவளின் பார்வை ஒரு இனிமையான கொடுக்கையும் கூட விட்டுச்சென்றிருந்தது.
    ஏன் பார்வையை எறிந்து பின் காகிதம் எறிந்து சென்றாள்.

    சிறுகதையின் முடிவு நிகழ்கிரதா? அல்லது ஒரு தொடர்கதையின் முதலாவது அத்தியாயமா?
    காகிதத்தில் என்ன?
    அவளது முகவரி ? அல்லது இலக்கம் ? ஆபத்தில் இருக்கிறாளா?
    பஸ் கூட்டத்தில் எனக்குத்தான் அவள் ஒரு உதவக்கூடிய முகம் இருக்கிறதென்று கண்டுகொண்டாளா?

    முதலில் பிரித்துப்படிக்கத்தான் நினைத்தேன்.காகிதத்தைப்பிரித்துப்படிக்க கையைவிரித்தேன்.பஸ்ஸில் எல்லோரும் என்ன்னையே பார்த்துக்கொண்டிருக்கிற உணர்வு.

    ஒரு வேளை அவளுக்கு எதிரான யாராவது என்னையும் பார்த்துக்கொண்டிருப்பார்களோ?

    நான் தாமதிக்க விரும்பவில்லை.அடுத்த ஸ்டொப்பில் இறங்கிவிட்டேன். நரைமுடிக்கு கருப்புச்சவரிவைத்துக்கொண்டைபோட்டிருந்த ஒரு பெண்மணி மாத்திரம் என்னோடு கூட இறங்கி நடந்துபோனாள்.

    பஸ்புறப்பட்டுப்போனபின்னால் ஆரும் அவதானிக்கிறார்களா என்று தலையைச்சுழற்றிப்பார்த்து விட்டுநிழல்குடையில் ஒதுங்கி கைக்குள் பொத்திவைத்திருந்த காகிதத்தை எடுத்தேன்.

    அது முகத்தை ஒற்றிக்கொள்வதற்கு பயன்படுத்தப்பட்டும் திசுக்காகிதம் ஒரு மருந்துச்சரையைபோல மடிக்கப்படிருந்தது.
    வாசனைதெளிக்கப்பட்டது.
    அதன் மடிப்புகளை அடுக்குகளை விரித்து நீட்டினேன்.
    எழுத்தோ வசனமோ ஒருக்கவில்லை

    சப்பிச்சாறிழந்த ஒரு சூயிங்கம் தாளில் ஒட்டிக்கிடந்தது.

    அவளைப்பற்றிய என் விவரணையில் அவள் எதையோ மென்றுகொண்டிருந்ததாக நான் குறித்துக்கொள்ளவில்லையே.அவள் எதையும் மெல்லவில்லை.

    எனக்குப்பின்னால் இருந்த ஒரு இளம்பையனின் தாடை அசைந்துகொண்டிருந்ததாக ஞாபகம்.

    1. நான் நம்ம கற்பனை டிவி சீரியல்ல மாட்டிக்கிச்சுன்னு சொல்லாம சொல்ல வந்தா நீங்க அது ஒரு சினிமா தியேட்டருக்குள்ள இருக்கு என்றல்லவா சொல்ல வருகிறீர்கள்…

     இருந்தாலும் நன்றி- உங்களை மாதிரி ஒரு நாலு இலக்கியவாதிகள் பின்னூட்டம் போட்டால் போதும், எனக்கு பதிவுகளுக்கு பஞ்சமே இருக்காது.

     விரைவில் எதிர்பாருங்கள்- “நினைவின் எச்சம்” என்ற சிறுகதையை.

     நன்றி நீங்க நல்லா இருக்கோணும். 🙂

 2. நட்பாஸ்
  எழுத்துப்பற்றிய நல்லதொரு ஆக்கம். உங்கள் சித்திரிப்பு சிந்தனையைக்கூட்டுகிறது

  அலன் மார்ஷல்(Allen Marshall) என்னும் ஆஸ்திரேலிய எழுத்தாளர் தன் வாழ்க்கையை எழுதியிருந்தார்.எழுத்தாளராவதற்கு அவரும் சொல்வது வாழ்க்கையை அவதானிப்பதைத்தான்.
  அவருடைய சொற்களில்.

  Reflection on the reasons for rejection of my stories drove me into a passion of reading and for a while I disregarded the life around me and escaped into books where authors, who had flung themselves into life with wonder and understanding ,ennobled the truth they had found in their searching.
  I was drugged with their pictures while turning my back on my own,those pictures of mine awaiting a pen to release them.But the pen I wielded could only be guided by a thousand of hands I had to yet to clasp.
  Reading could not help me to write.I read Moby Dick, and for days I kept thinking of its sweep and power .I walked past women with tired eyes pushing perambulators in which the faces of babies glowed from amidst a covering of vegetables,past bottle-ohs shouting their presence,past arguing men at hotel corners, past squatting children fondling pups, past lovers: but I was on the sea

  Books illuminate the lessons learnt from the life ,explain what one sees and feels ,give meaning to experience but cannot supply the fuel from which creative work is fired. life does that-living seeing hearing ,absorbing…

  இதைப்படித்தபோது உணர்ந்ததை நீங்கள் இன்னுமொரு எழுத்தாளர்மூலமாக சொல்லியிருக்கிறீர்கள்.
  நீங்களும் சூழலைப்பார்த்து எழுதி இருக்கிறீர்கள்.
  நாங்கள் அவதானிக்காத வாழ்வின் நுணுக்கங்களை ஒரு நல்ல எழுத்தாளன் அவதானித்து சிருஷ்டித்துத்தரும்ப்போது அதில் வாழ்கிறோம்

  நன்றி

  1. மிகச் சரியாக சொன்னீர்கள்- //Books illuminate the lessons learnt from the life ,explain what one sees and feels ,give meaning to experience but cannot supply the fuel from which creative work is fired. life does that-living seeing hearing ,absorbing…//

   ஆனால் எல்லாரும் எழுத்தாளாக முடியுமா?

   முடியாது என்றுதான் தோன்றுகிறது. அது ஒரு அரிய கலை.

   //நாங்கள் அவதானிக்காத வாழ்வின் நுணுக்கங்களை ஒரு நல்ல எழுத்தாளன் அவதானித்து சிருஷ்டித்துத்தரும்ப்போது அதில் வாழ்கிறோம்//

   எத்தனை பேரால் இது முடியும்?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s