மன்னர் மகிழ்ந்திட மாயமே செய்யவோ?

சுருங்கிய கூடென, சொல்லொலி குன்றி,
அரசவைப் பரிவா ரங்களின் இடையில்
மெதுவே விலகி மனையகம் நோக்கி
பையவே பையவே பாரர சிருந்து
செய்வது மாயவன் பெருவெளிப் பெயர்ச்சியே!

நான் இதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று எடுத்து வைத்திருந்தேன், ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பது போல் தோன்றுகிறது: இத்தனை நாட்களாகியும் எதுவும் செய்யவில்லையென்றால், இனி கையில் எடுத்துத் தொடரப் போவதில்லை- எனவே சில சிறு குறிப்புகளோடு இந்தப் பதிவை முடித்துவிட வேண்டியதுதான்.

மேற்கண்ட வரிகளை மொழிபெயர்த்தவர் இராமகிருட்டிணன் அவர்கள் என்று நினைக்கிறேன்.

இந்தக் கவிதையில் வரும் சீட்டோ, அல்லது சைடெக் ஒரு மந்திரவாதி. 1400ம் ஆண்டு வாக்கில், போஹீமியப் பேரரசர் வேன்செஸ்லா அவர்களின் சபையில் அவரது வித்தைகளை செய்து காட்டியவர்: வால்நட் கூடுகளில் செய்யப்பட்ட வாகனத்தில் ஏறி பயணிப்பார். அதை இரண்டு பழக்கப்படுத்தப்பட்ட வண்டுகள் இழுத்துச் செல்லும். அவரிடம் ஒரு சேவல் இருந்தது, எவ்வளவு கனமான மரத்தூணில் கட்டி வைத்தாலும் அதை வைக்கோலை எடுத்துச் செல்வது போல் தன்பின் இழுத்துச் செல்லுமாம். மந்திரவாதி சீட்டோ, வைக்கோல் புற்களை பன்றிகளாக மாற்றி விற்று விடுவாராம்- இவரது வித்தைகளே பிற்காலத்தில் பாஸ்ட் செய்தனவாக சொல்லப்பட்டன என்கிறது இந்தப் புத்தகம்.

மந்திரவாதி சீட்டோ என்ற இந்தக் கவிதையை எழுதியவர் மிரோஸ்லாவ் ஹோலுப் என்ற யூகோஸ்லாவிய கவிஞர். இவர் கவிஞர் மட்டுமல்ல. அறிவியல் மற்றும் மருத்துவம் படித்தவர். ஆய்வுக்கூடத்தில் பணி புரிந்தவர். கம்யூனிச அராஜகத்தின் பன்முக அடக்குமுறையையும் அனுபவித்த இவர், அறிவியல் குறித்த கவிதைகள் அரசியலாக்கப்படாது என்ற நம்பிக்கையில் அறிவியலைப் பாடும் கவிதைகள் எழுதியுள்ளார்.

மந்திரவாதி சீட்டோ என்ற இந்தக் கவிதை, எத்தகைய சாகசக்காரனாலும் சில யதார்த்தங்களை மாற்ற முடியாது என்று சொல்கிறது என்று நினைக்கிறேன். ஸ்டாலின் பூலோகத்தில் சொர்க்கத்தையே நிறுவி விட்டதாகப் பறைசாற்றிக் கொள்ளட்டுமே, உண்மையின் குரலை அவனால் முடக்க முடியாது- என்றாவது ஒரு நாள், அதன்முன் அவன் தலை குனிந்துதான் ஆக வேண்டும் என்பதை மறைமுகமாக இந்தக் கவிதையில் சுட்டிக் காட்டுகிறார் என்று நினைக்கிறேன். இந்தக் கவிதையை இப்போது முழுமையாகப் படித்துப் பாருங்கள்-

“மன்னவர் மகிழ்ந்திட, மாயமே செய்யவோ?
நீரினை மதுவாய் மாற்றவா? சொல்லுக!
நுணலெலாம் காற்படை நூறி உருக்கவா?
பூச்சிகள் பொதியிலார்? இதுவென்ன பெரிசு?
எலியெலாம் அமைச்சென எட்டியே செய்யவோ?”
குனிந்தவன் வணக்கம் கூடியே பார்த்தால்,
நகக்கணில் தெய்சிகள் என்னமாய் வளருது?
பரலும் பறவையோ தோளிலே அமருது!

அங்கே,
அரசர் சொல்லுவார்:

“வேறெதும் ஒன்றைக் கருத்திலே கொண்டுவா!”
“கறுத்ததாய் விண்மீன்”; கருத்திலே மலருது;
“உலர்நீர்?” எண்ணினான்; உவந்தே ஓடுது
“வைக்கோற் கரைகளே வழிவிடும் ஆறெதோ?”
வியக்குற கண்முனே விரிவதைக் காட்டினான்.

அப்பொழுது அங்குறும் மாணவன் கேட்டனன்;
“ஒன்றின் மேற்படும் சைன்மதி தருவிரோ?”

சீட்டோ முகமோ வெளிறியே போனது;
மன்னுக, இளைஞனே! மாற்றமே செய்யணேன்;
சைன்மதிப் பென்றுமே இடையுறு நிலைதான்.
அடுநிலை ஒன்றுடன் நொய்நிலை ஒன்றுமாய்;
அதைமட் டொன்றும் விதக்கவே முடியேம்;

சுருங்கிய கூடென, சொல்லொலி குன்றி,
அரசவைப் பரிவா ரங்களின் இடையில்
மெதுவே விலகி மனையகம் நோக்கி
பையவே பையவே பாரர சிருந்து
செய்வது மாயவன் பெருவெளிப் பெயர்ச்சியே!

கருப்பு நட்சத்திரம். உலர்ந்த நீர். இவற்றை நினைத்த மாத்திரத்தில் தோற்றுவித்த மந்திரவாதி சீட்டோ, sine value > 1 என்பதை நிகழ்த்திக்காட்ட முடியுமா என்ற சவாலில் தோற்று, பையவே பையவே பெருவெளிப் பெயர்ச்சி செய்கிறான்- தோற்றங்களை மாற்றலாம், ஆனால் அவற்றுக்கு அடிப்படையாக இருக்கிற விதிகளில் கை வைக்க முடியாது: என்றாவது ஒரு நாள் அது தன் வேலையைக் காட்டி விடும்.

ஹோலுப் இதை ஏன் எழுதினார் என்று தெரிகிறது- ஆளும் கம்யூனிச சர்வாதிகாரத்தை, எங்களுக்கும் எதையும் செய்யும் வல்லமை இருக்கிறது என்ற அதன் ஆணவ அதிகார மாயையை ஒரு தொன்மப் படிமத்தைச் சொல்லி எள்ளி நகையாடுகிறார்.

கவிதை இங்கே இருத்து நகல் எடுக்கப்பட்டது: வளவு
image credit : ceskaposta

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s