அறத்தாறு

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

பரிமேலழகர் உரை:

அறத்து ஆறு இது என வேண்டா – அறத்தின் பயன் இது என்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா; சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை – சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும். (பயனை ‘ஆறு’ என்றார், பின்னது ஆகலின். ‘என’ என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், ‘பொறுத்தானோடு ஊர்ந்தானிடை’ என்றதனால் காட்சியளவையும் பெற்றாம். உணரப்படும் என்பது சொல்லெச்சம். இதனான் அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது. தன்னானே உணரப்படும். (பயனை ‘ஆறு’ என்றார், பின்னது ஆகலின் ‘என’ என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், ‘பொறுத்தாணோடு ஊர்ந்தானிடை’ என்றதனால் காட்சியளவையும் பெற்றாம், உணரப்படும் என்பது சொல்லெச்சம். இதனான் அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது.

திருக்குறள் வலைதளம்.

இந்தக் குறளுக்குப் பல பேர் இரண்டு விதமான பொருள் சொல்கிறார்கள்- ஒரு தரப்பு, அறத்தின் பயன் இதுவென்று எதையும் சொல்ல வேண்டாம், பல்லக்கில் போகிறவனையும் பல்லக்கை சுமப்பவனையும் பார்த்தாலே அது தெரிந்துவிடும் என்று சொல்கிறது. இன்னொரு தரப்பு, அறத்தின் பயன் இதுவென்று பல்லக்கை சுமப்பவனிடம் எதையும் சொல்லிக்கொண்டிருக்காதே என்று சொல்கிறது. மூன்றாவது தரப்பு இவை இரண்டுக்கும் தொடர்பில்லாமல் வேறு எதையோ சொல்கிறது. நான்காவது ஐந்தாவது தரப்பெல்லாம் இருக்கலாம்- தவறில்லை. தரப்பு என்ற வகையில் இவை சரியானவையே.

எனக்கு இந்தக் குறளுக்குப் பரிமேலழகர் விளக்கம் குறித்து ஒரு சிறு ஐயம்- தரப்பு பேசுபவர்கள் அனைவரும், “இதனான் அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது,” என்று பரிமேலழகர் தன் விளக்கத்துக்கு முற்றும் சொல்வதை கருத்தில் கொள்ளவேயில்லையே? இந்தக் குறள் அறம் பொன்றாத் துணை என்றுதான் சொல்ல வருகிறதோ?

பரிமேலழகர், அறத்தின் பயன் இது என்று சொற்களால் சொல்ல வேண்டியதில்லை- பல்லக்கில் போகிறவனையும் அதைத் தூக்கிச் செல்கிறவனையும் பார்த்தே தெரிந்து கொள்ளலாம் என்று உரையின் துவக்கத்தில் சொல்லிவிட்டு, இந்தக் குரளில் இவ்வாறு அறம் அழியாத்துணை என்று தெளிவிக்கப்பட்டது என்று முடிக்கிறார்.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் அறத்தின் பயன் இது அது என்று எதையும் எடை போட்டு சொல்ல வேண்டாம், அறமே அறத்தின் பயன் (“..அறம் பொன்றாத் துணையாதல் தெளிவிக்கப்பட்டது. தன்னானே உணரப்படும்”, என்கிறார் பரிமேலழகர்). அதன் பயன் எது என்று புறசான்றுகள் தருபவர்கள் ஒரு காட்சியைப் பார்த்தால் போதும் என்கிறார்- பல்லக்கு தூக்குபவனையும் அதில் செல்பவனையும் பாருங்கள். அது போதும்.

இரண்டு பேரையும் பார்த்தால் என்ன தெரிகிறது? பல்லக்கு தூக்குபவன் பல்லக்கில் இருப்பவனை என்றாவது ஒரு நாள் இறக்கிவிட்டுவிட்டு ஓடிப் போய் விடுவான். அறத்தின் பயன் பல்லக்கில் ஏறி உட்கார்வது என்று சொன்னால், அறம் பொன்றாத் துணை என்று சொல்ல முடியுமா என்ன!

அதனால் அறத்தின் பயன் என்று இவ்வுலகில் அடையக்கூடிய செல்வங்களில் எதையும் சொல்லாதீர்கள் நண்பர்களே, அறத்தின் பயன் அறம்தான்- அது தன்னளவிலேயே அழியாத சொத்து என்று சொல்கிறாரோ பரிமேலழகர்?

Advertisements

9 thoughts on “அறத்தாறு

 1. தலைவரே, இந்த குறள் மற்றும் ‘அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரென்றே/செல்வத்தைத் தேய்க்குமாம் படை’ இந்த குறளும் தியான மந்திரம் போல் ஒலித்தபடி உருமாறியதுதான் ஜெயமோகனின் பின் தொடரும் நிழலின் குரல் புத்தகம் என முன்னுரையில் சொல்லியிருப்பார்.

  முதல் குறளுக்கு, நீங்க குறிப்பிட்ட முதல் அர்தத்தைத் தான் அவரும் எடுத்துக்கொள்கிறார். மக்களின் கண்ணீர் தான் அரசையே காலி செய்துவிடும்னு சொல்றார். அரசியல் நிலவரத்தை இப்போதைக்கு அப்போதே சொல்லிவைத்துவிட்டார்.அறத்தோடு இருந்தால் பல ஆண்டுகள் நன்றாக ஆட்சி செய்யலாம் இல்லியா? 😉

  //நான்காவது ஐந்தாவது தரப்பெல்லாம் இருக்கலாம்- தவறில்லை. தரப்பு என்ற வகையில் இவை சரியானவையே.// 🙂 🙂

  1. பாஸ் எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான்.

   அறம் செஞ்சா நீ பல்லக்குல போலாம்னு சொன்னாலும் அப்படிப்பட்ட புண்ணியத்தைப் பொன்றாத் துணைன்னு சொல்ல முடியுமா?

   ஒத்தன் பல்லக்குல இருக்கான், இன்னொருத்தன் அவனைத் தூக்கிக்கிட்டு போறான- அதைப் பாக்கற என்னை மாதிரி அற்ப ஜீவிகள் வேணா, “என்ன புண்ணியம் செஞ்சானோ மகராசன்,”னு ஆச்சரியப்படலாம். ஆனா விஷயம் தெரிஞ்சவங்க, இன்னிக்கு இல்லாட்டி நாளைக்கு அந்த ஆளும் கீழே இறங்க வேண்டி வரும்னு தெரிஞ்சு வெச்சிருப்பாங்க, அற்பப்பய, இவன்தான் ஆட்டம் போடறான்னா, இவனைப் பாத்து நாலு பேர் பிரமிச்சு நிக்கறாங்களே!, அப்படின்னு நொந்து போயிடுவாங்க.

   அந்த ஆளுங்களைப் பாத்துதான் பரிமேலழகர் சொல்றார், “அடேய், அறம் செஞ்சா அது கிடைக்கும் இது கிடைக்கும்னு சொல்றீங்களே, உங்களை என்ன சொல்ல? அதோ பல்லக்குல ஒத்தன் உக்காந்திருக்கான், இன்னொருத்தன் அவனை சுமந்துக்கிடடுப் போறான், அந்த மாதிரி இருக்கு நீங்க அறத்தை இப்படி தூக்கி நிறுத்தறது- பாத்தாலே தெர்ல இது வேலைக்காவாதுன்னு?”.

   ஜெயமோகன் சொன்னார்னா ரைட்டாதான் இருக்கும், எதுக்கும் நம்ம வரசித்தன் சார் வராறா பாப்போம், அவர் என்ன சொல்றார்னு பாத்துட்டு மேற்கொண்டு இந்த விவாதத்தை முன்னெடுத்துப் போலாம்.

   உங்க பின்னூட்டத்துக்கு நன்றி பாஸ். 🙂

   1. திருக்குறளுக்கு தாவிட்டீங்க. அறம் பற்றி ஆய்வு செய்கிறீர்கள் போல.என்னை இழுத்ததால் குறளை கொஞ்சம் படிக்க நேர்ந்தது.
    அதற்கு உங்களுக்கு எனது நன்றி.

    குறளைத்தனியாக எடுத்துப்பார்க்கலாமோ? அல்லது அந்த அதிகாரத்தில் சொல்லவருவது முழுமையாக பார்க்கவேண்டுமா?

    அறம் செல்வம் தரும் என்று இன்னொரு குறளில் வருகிறது.பொன்றாத்துணை என்று முதல் குறளில் வருகிறது.

    மு.வ இன் விளக்கம் எனக்குப்பிடித்திருக்கிறது.

    எல்லா அறன் வலியுறுத்தும் குறள்களும் எதிர்காலம் பற்றிப்பேசுகின்றன. அதாவது அறம் செய்தால் நன்மை அது சிறப்பு அது உயர்ந்தது இப்படி.அறம் என்பதை ஒரு சிறப்பாக தகுதியாக தோன்றவைக்கிறார் வள்ளுவர்.அதாவது quality ஆக .மனிதர்கள் குவாலிட்டியை -தரத்தை நேசிக்கிறார்கள். அழகு ஒரு குவாலிட்டி.
    படிப்பு ஒரு குவாலிட்டியாக வளர்ந்துவிட்டது.
    ஒரு காலத்தில் வீரம் ஒரு தகுதி
    அறம் நிலவ வேண்டுமானால் அது ஒரு தகுதியாக சமூகத்தில் நோக்கப்படவேண்டும்.அதனால்தான் குறள் சிறப்புப்பற்றிப்பேசுகிறது

    அறம் செய்யாவிட்டால் நாசமாய்ப்போவாய் என்று பேசும் குறள் இருக்கிறதா இந்த அதிகாரத்தில்? சொல்லவில்லை. அறம் செய்யாததனால்தான் நீ கீழ்நிலையில் இருக்கிறாய் என்றும் சொல்லவுமில்லை.

    ஆனால் இந்த ஒரு குறளை பல்லக்குத்தூக்கி பல்லக்கு பயணி உள்ள நிலை வேறுபாடு அறத்தின் விளைவு என்றால் பின்னோக்கிப்பார்க்கிற எதிர்மறைப்பார்வை வந்துவிடுகிறது

    குறள் அதிகாரத்தின் போக்கைப்பார்த்தால் வள்ளுவர் இன்றைய நிலையைப்பார்த்து முன்னே செய்த அறத்தின் விளைவு என்று நினையாதே என்கிறார் போல இருக்கிறது.

    அது கொஞ்சம் சரியாகப்படுகிறது போல இருக்கிறது.

    குறளின் நோக்கம் முழுமையாக அறத்தை மேம்படுத்துவதென்றால் இன்றைய நிலைக்கு நீ நேற்றுசெய்த அறம் காரணம் என்ற கருத்தை உருவாக்குவது அறத்தின் அழிவுக்கு இட்டுச்செல்லும்.
    துன்பப்படுவர்களின் துன்பம் நியாயப்படுத்தப்பட்டுவிடும். இவர் படுகிற துன்பம் இவர் முன்பு அறம் தவறியதனால் ஏற்பட்டது என்று துன்பப்படுவர்களுக்கு உதவும் அறத்தை விட்டுவிடுவோம்.

    பசியோடு வருகிறவன் இவன் பசிக்குக்காரணம் இவன் முந்தைய அறப்பிறழ்வுக்கான தண்டனை ஏன் பசித்தவனுக்கு அன்னமிடவேண்டும்.?

    தர்க்கரீதியாக மனத்தில் அறம் செய்தவர்கள் எல்லோரும் நன்றாக இருப்பார்கள் என்றால் இன்றைக்கு கீழ்நிலையில் இருப்பவர்கள் அறமற்றவர்களா என்ற கேள்வி எழும்.

    அதற்குத்தான் அவர் பதிலளிக்கிறார்.

    victim blaming.just world phenomenon இப்படி இரண்டு கருதுகோள்களை படிக்கநேர்ந்தது.

    உலகின் ஏற்றத்தாழ்வுகள் அறத்தின் விளைவே என்ற கருத்தை நம்புவதே just- world phenomenon.
    ”அவன் செய்த பாவத்துக்கு அனுபவிக்கிறான்” என்று சொல்வது.
    இதனோடு தொடர்புபடுத்தலாம் போலிருக்கிறது

    வள்ளுவர் ‘ உன் பார்வையில் தோன்றுகிற ஏற்றத்தாழ்வுக்கு காரணமாக அறத்தை இழுக்காதே என்பது பொருத்தமாக இருக்கும் போலிருக்கிறது.ஏனன்றால் இழுப்பது அறமில்லை அப்படி இழுப்பது அறத்தை உய்விக்காது.

    அறம் செல்வம் தரும் பொன்றாத்துணை இப்படிச்சொல்லி அறத்தை ஊக்குவிக்கிறார்.அவை ஊக்குவிப்பு வார்த்தைகள்.

    அவருடைய நோக்கம் அறத்தை தகுதியான இயல்பாய் சமுகத்தில் பேணுதல்.

    வள்ளுவர் காலத்திலும் அறம் என்பது பிழைக்கத்தெரியாதவனின் வழி என்றிருந்திருக்குமோ என்னவோ

    பரி மேல் அழகர் விளக்கத்தில் வருகிற பொன்றாத்துணை இன்னொரு குறளில் வருகிறது

    குறிப்பு:இதயம் பேத்துகிறதில் முன்பு இந்தக்குறள் படித்திருந்தேன்.

    1. //குறள் அதிகாரத்தின் போக்கைப்பார்த்தால் வள்ளுவர் இன்றைய நிலையைப்பார்த்து முன்னே செய்த அறத்தின் விளைவு என்று நினையாதே என்கிறார் போல இருக்கிறது.//

     நான் நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், இதை இப்படி பார்க்கலாமா என்று சரிபார்த்துச் சொல்லுங்கள்-

     உங்கள் மகன் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். ஒரு சுருக்கமான உரையாடல் (கற்பனையில் விரித்துக் கொள்ளுங்கள்) 🙂 :

     “ஏம்பா கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்கறே? ஒரு நல்ல பொண்ணாப் பாத்து கட்டிக்கோடா- அவ உனக்கு என்னிக்கும் துணையா இருப்பா…”

     “ப்ச்… அதனால என்னப்பா பிரயோசனம்? என்னோட சுதந்திரம் போயிடும், பொறுப்பு அதிகமாயிடும், இஷ்டப்படி இருக்க முடியாது, ஒரே டென்ஷன்”

     “அப்படி சொல்லாதப்பா. கல்யாணம் பண்ணிக்கிட்டு நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஜாலியா இருக்கலாம்ல?”

     “எங்க? புள்ள பொறந்ததும் என்னைக் கண்டுக்கவா போறா?”

     “அப்படி சொல்லாதப்பா. அப்பவும் நாக்குக்கு ருசியா ஆக்கிப் போடுவாளே?”

     “எங்க? நாப்பது தாண்டினதும் சுகர் கொலஸ்டிரால் ப்ரெஷர்னு மாத்திரையத்தானே சாப்பிடப் போறேன்?”

     “அப்படி சொல்லாதப்பா. அப்பவும் வயசான காலத்துல உனக்கு வெந்நீர் வெச்சு ஆசையா கவனிச்சுப்பாளே?”

     “எங்க? எனக்கு முன்ன அவ செத்துட்டா என்னை எவ பாத்துக்கப் போறா?”

     “அப்படி சொல்லாதப்பா. கட்டிக்கிட்ட புதுசுல உனக்கு சந்தோஷம் கொடுத்து புள்ளையப் பெத்துத் தந்து, நாக்குக்கு ருசியா ஆக்கிப் போட்டு, வேளா வேளைக்கு உனக்கு ஆசை ஆசையா ஒத்தாசை செஞ்சு நல்ல துணையா இருந்தவ செத்தாதான் என்ன? அவளோட நினைவுகள் உனக்குத் துணையா இருக்காதா?”

     ( இன்று என் அலுவலகத்தில் ஒரு பெண்மணியுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு தன் சித்தி (மாற்றாந்தாய்) மீது தன்னைத் தன் சிறு வயதில் அவர் கொடுமைப்படுத்தினார் என்று கோபம்-, அவர் சொல்கிறார், “என் சித்தி எங்க அப்பாவுக்கு என்ன மந்திரம் போட்டு மயக்கினாளோ தெரியல, அவ செத்து எட்டு வருஷம் ஆச்சு, இப்பவும் எந்தக் கல்யாணத்துக்குப் போனாலும் மொய் வெக்கும்போது சித்தி பேர்லதான் மொய் வேக்கறார்- எப்பப் பாரு, “தனம் சொல்லும் தனம் சொல்லும்”னு மூச்சுக்கு மூச்சு அவ பேரையே சொல்லிக்கிட்டிருக்கா,” என்று)

     அறம் அத்தனை செல்வங்களையும் தரலாம், தராமல் இருக்கலாம்- ஆனால் அறம் நமக்கு கொள்கையாக, ஆதர்சமாக இல்லாமல் உயிர்ப்புள்ள ஒன்றாக இருந்தால், அறம்தான் அறத்தின் பயன்: அறத்தால் நாம் பிழைக்க முடியாமல் போனாலும், அறம் நம் அன்புக்குரியவர்களை அழ வைத்தாலும், அறம்தான் நம் பொன்றாத் துணையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

     1. ஏற்றுக்கொள்கிறேன்.

      ஆனால் அறம் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது.ஆட்சிக்கு ஆட்சிக்கு வேறுபடுகிறது.இடத்துக்கு காலத்துக்கு ..சாதிக்கு மதத்துக்கு..பண்பாட்டுக்கு தேவைக்கு..

      மருத்துவருக்கு எதிக்ஸ் இருக்கிறது.அதை கடைப்பிடிப்பது மருத்துவரின் அறம் ஆகிறது.

      சமூகத்தில் ஒரு மரபு ஒழுங்கு இருக்கிறது.
      ஆனால் ஒரு சமுகத்தில் அறம் எனப்படுவது மற்ற சமுகத்தின் கழுத்தை திருகுவதாகவும் இருக்கிறது.

      தனிப்பட்ட வகையில் ஒருவர் கொண்ட ஒரு நம்பிக்கைக்காக அவர் தன்னளவில் அறம் என்று நினைப்பதற்காக வாழ்தல் அது மற்றவர்களை துன்புறுத்தினாலும்?
      அப்படி வாழ்ந்தால் அவர் திருப்தியடைவார் ஆனால்?

      ஒரு மனிதன் தன் பாத்திரங்களைச்சரியாகச்செய்தல்தான் அறம் என்று எனக்குத்தோன்றுகிறது

      மாணவன் ,மகன்,சகோதரன், தந்தை ,மாமன்,மச்சான், நண்பன், சமூகப்பொறுப்பு அயலவன்,உறவினன்,தொழிலில் தன்னுடைய பணி,நாட்டின் குடிமகன்,சக பயணி,சக மனிதன்

      இப்படி வாழ்நாளினூடாக நாம் ஏற்கும்பாத்திரங்களை திறம்படச்செய்தல் ,செய்ய முனைதல் தான் அறம்.

      ஆனால் நாம் ஏற்கும் பாத்திரங்களுக்கிடையில் ஏற்படுகிற முரண்பாடுகள்தான் வாழ்க்கை அது போராட்டம்.
      ஒரு பாத்திரத்தைச்சிறப்பாகச்செய்தவன் மற்றப்பாத்திரத்தில் பழியேற்று துக்கத்தோடு இறக்கிறான்.

      தன் குடும்பம் பட்டினி கிடக்கிறதே என்று திருடினால் ஒரு பாத்திரத்தைக்காக்க நல்ல குடிமகன் என்ற பாத்திரத்தை அவன் இழக்கிறான்.

      அறத்தில் ஏற்றத்தாழ்வுகள் ….

      உங்கள் உதாரணத்தில் சிற்றன்னை பாத்திரத்தை மகள் ஏற்றுக்கொள்ளவில்லை.மனைவி பாத்திரத்தைக்கணவன் ஏற்றுக்கொண்டிருக்கிரார்.

      இப்படி நிலை இருக்கும்போது அறத்தை எப்படி பொதுமைப்படுத்துவது.

      இன்னொரு பார்வையில்
      ஒரு பாத்திரத்துக்காக மற்றபாத்திரமெல்லாவற்றையும் காவு கொடுப்பது அதை நாம் இலட்சியம் என்கிறோம்.
      அப்படி இலட்சியத்துக்காக வாழ்வதையும் அறம் என்று சொல்லலாம்.

      நாட்டுக்காக குடும்பத்தை கைவிடலாமா?. குடும்பத்துக்காக நாட்டைக்கைவிடலாமா?. இதில் எந்த அறம் சிறந்தது?

      எல்லாம் ஒரே குழப்பமாயிருக்கிறது .அறம் என்று ரொம்ப அலட்டிக்கொள்ளாமல் ஓரளவுக்கு நல்லவனாக வாழ்வதே அறம்?

      ஆக
      துறவறமே நல்லது சார்
      ஒரே ஒரு பாத்திரம் அட அங்கும் குரு என்ற பாத்திரம் வந்து பிறகு சிஷ்யைகளும் வந்துவிடுகிறார்களே.

      1. சிஷ்யைகள் வந்தா என்ன ஸ்வாமி? துறவிக்கு எது பந்த பாசம் பற்று எல்லாம்? எது வருகிறதோ அதை ஏற்றுக்கொண்டு எது போகிறதோ அதைப் போக விட்டு காற்றோடு காற்றாக வாழ்பவனல்லவா உண்மையான துறவி? என்ஜாய்! :))

       நீங்கள் சொல்வதை எல்லாம் யோசித்துப் பார்த்தேன். ஆளுக்கு ஒரு அறம், சாதிக்கு ஒரு அறம், காலத்துக்கு ஒரு அறம் இருக்கிறது என்பது கசப்பான உண்மை. ஆனால் மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது- அறம் என்று ஒன்று இருந்தால் அது அனைவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

       பொதுவாக, எல்லாருக்கும் எது நன்மை தருகிறதோ அதை அறம் என்று சொல்லலாம். அடுத்தபடி, தனி மனிதனைப் பொருத்தவரை, அடுத்தவனுக்குத் தீங்கு செய்யாத நன்மை எது இருக்கிறதோ அதை அறம் என்று சொல்லலாம்.. அடுத்தபடி, ஒருவன் இன்னொருவனுக்கோ அல்லது அவன் வாழும் சமூகத்துக்கோ தீமை செய்யும்போது, அவனை தண்டிப்பதை அறம் என்று சொல்லலாம்- ஆனால், இங்கேயும் இதைத் தாண்டியும் போனால் குழப்பம் வந்துவிடும்.

       நாம் அமைப்புகளை உருவாக்கி வைத்திருப்பதே, இந்த தனி மனித அறம் குறித்த சிக்கல்களைத் தவிர்ப்பதற்குத்தான் என்று நினைக்கிறேன். ஒரு தனி மனிதனாக நீங்கள் உங்கள் தொழிலில் ஒரு தவறு செய்தால் அது மனதை மிகவும் துன்புறுத்தும். ஆனால், உங்கள் தொழில் அமைப்பின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும்போது, அங்கே அனுமதிக்கப்பட்ட அளவில் தவறுகள் நடந்தால், அதற்கு நாம் பொறுப்பில்லை என்று நிம்மதியாகத் தூங்கலாம்.

       அமைப்புகள் வலுவாக இருக்கும்போது தனி மனித அறம் குறித்த சிக்கல்கள் குறைவாக இருக்கும். நலவாழ்வுத் திட்டங்கள் சரியாக நடைமுறைப்படுத்தப்படும் சமுதாயத்தில், பசிக்கோ பாசத்துக்கோ திருட வேண்டிய அவசியம் இருக்காது- ஒரு மனிதனின் குறைந்தபட்ச தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று நினைக்கிறேன்.

       சட்ட அமைப்புகளும் அப்படித்தான். ஒருத்தன் தவறு செய்கிறான், அதனால் அவன் சிறைக்குப் போய், அவனது குடும்பம் கஷ்டப்படுகிறது. இந்த அமைப்பை மறைமுகமாவது ஆதரிக்கும் நாம் இது குறித்து கவலைப்படுவதில்லை. ஆனால், இதுவே நாம் தனி மனிதனாக எடுத்த முடிவால் நடந்தால், எவ்வளவு துன்பமாக இருக்கும்?

       சட்ட அமைப்புகள் சரியாக செயல்படாதபோது, தனி மனிதன் தன் கையில் சட்டத்தை எடுத்துக் கொள்ள நேர்கிறது. அப்போது எழும் அறச்சிக்கல்களுக்குத் தீர்வு கிடையாது. அமைப்புகளைப் பலப்படுத்துவது நவீன சமுதாயங்களில் அவசியமாக இருக்கிறது.

       ஆனால், இதில் இன்னொரு சிக்கல், அமைப்புகள் சர்வ வல்லமை பெற்றுவிடுகின்றன. அந்த அமைப்பில் இருப்பவர்கள், தங்கள் அதிகாரத்தை மனசாட்சி இல்லாமல் பயன்படுத்த முடிகிறது.

       இதை எல்லாம் யோசித்துப் பார்க்கும்போது, அறம் என்பது எப்போதும் எது அறம் என்ற கேள்வியால் வழிகாட்டப்படுவது என்றுதான் சொல்வேன். இது அறம் என்று எனக்கு உறுதி ஏற்பட்டுவிட்டால், அது சர்வாதிகாரத்தில்தான் முடியும்.

       என்று நினைக்கிறன்.

       நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s