சண்டே ஸ்பெஷல்- சிறுகதை ஒன்று

பலப்பிரயோகம்
-வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ்.

அவர்கள் என் மருத்துவமனைக்குப் புதியவர்கள், ஒல்சன் என்ற பெயர் மட்டும்தான் எனக்குத் தெரிந்திருந்தது. உங்களால் முடிந்த அளவு சீக்கிரமாக வாருங்கள், என் மகள் ரொம்பவும் முடியாமல் இருக்கிறாள்.

நான் போய்ச் சேர்ந்ததும் என்னை அவளது தாய் வரவேற்றார். பருமனானவள்.  எப்போதும் திகைத்திருப்பது போன்ற தோற்றம். சுத்தமாக இருந்தாள். மன்னிப்பு கேட்கும் பாவனை. நீங்கள்தான் டாக்டரா? என்று மட்டும் கேட்டு, என்னை வீட்டினுள் விட்டாள். உள்பக்கம், என்று சொன்னாள். மன்னித்துக் கொள்ளுங்கள் டாக்டர், நாங்கள் அவளை சமையலறையில் வைத்திருக்கிறோம், அங்கே கொஞ்சம் கணப்பாக இருக்கிறது. இங்கே சில சமயம் தணுப்பாக இருக்கிறது.

குழந்தை எல்லா ஆடைகளையும் போட்டுக்கொண்டு கிச்சன் டேபிளின் அருகில் தன் அப்பாவின் மடியில் அமர்ந்திருந்தாள். அவர் எழ முயற்சி செய்தார். சிரமப்பட வேண்டாம் என்று நான் கைகாட்டினேன். எனது ஓவர்கோட்டைக் கழட்டிவிட்டு என்ன எப்படி என்று பார்க்கத் துவங்கினேன். அவர்களது தயக்கத்தை என்னால் உணர முடிந்தது. சந்தேகத்துடன் என்னை ஏற இறங்க பார்த்தார்கள். இந்த மாதிரி சமயங்களில் எப்போதும் நடப்பது போல, அவர்கள் தேவைக்கதிகமாக எதுவும் சொல்வதாயில்லை. எல்லாம் நானேதான் சொல்லியாக வேண்டும். அவர்கள் மூன்று டாலர்கள் செலவு செய்வது அதற்குத்தான்.

குழந்தை அதன் சில்லிட்ட கண்களால் என்னை விழுங்கியது, அதன் குத்திட்ட பார்வையில், அதன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இருக்கவில்லை. அவள் அசையவேயில்லை, உள்ளே அமைதியாக இருப்பது போன்ற தோற்றம். வழக்கத்துக்கு மாறான ஈர்ப்பு அவளிடம் இருந்தது, பார்ப்பதற்கு அவள் ஒரு குதிரைகுட்டியைப் போல் திடமாக இருந்தாள். ஆனால் அவள் முகம் சிவந்திருந்தது, அவளுக்கு மூச்சிரைத்தது. கடும் சுரம் இருக்கிறதென்று நான் கண்டுகொண்டேன். தன் தலை நிறைய அற்புதமான சுருட்டை முடி கொண்டவளாக இருந்தாள். விளம்பர நோட்டிஸ்களிலும் ஞாயிற்றுக் கிழமை வெளிவரும் பத்திரிக்கைகளின் புகைப்படப் பக்கங்களிலும் வெளியாகும் குழந்தைகளின் புகைப்படங்களில் இருப்பதுபோல.

மூன்று நாட்களாக அவளுக்குக் காய்ச்சல் இருக்கிறது, என்று அவளது அப்பா ஆரம்பித்தார், எப்படி வந்தது என்று எங்களுக்குப் புரியவில்லை. என் மனைவி அவளுக்கு ஏதேதோ கொடுத்திருக்கிறாள், எல்லாரும் தருவதுதான், ஆனால் அது எதுவும் சரிவரவில்லை. இங்கே நிறைய இடங்களில் காய்ச்சல் வந்திருக்கிறது. அதனால் நீங்கள் அவளைப் பார்த்து என்ன விஷயம் என்று சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம்.

டாக்டர்கள் பலரும் செய்வதைப் போலவே நான் துவக்கப் புள்ளியாக ஒரு கேள்வியை வெள்ளோட்டம் விட்டேன். அவளுக்குத் தொண்டை வலி இருந்ததா?

பெற்றோர் இருவரும் ஒன்றாக பதில் சொன்னார்கள், இல்லை… இல்லை, தனக்குத் தொண்டை வலிக்கவில்லை என்று சொல்கிறாள்.

உனக்குத் தொண்டை வலிக்கிறதா? என்று அம்மா தன் குழந்தையிடம் கேட்டாள். ஆனால் அந்த சிறு பெண்ணின் முகபாவம் மாறவில்லை, என் முகத்தைவிட்டுத் தன் கண்களை அவள் அகற்றவுமில்லை.

நீங்கள் பார்த்தீர்களா?

பார்க்கப் பார்த்தேன், என்றால் அந்த அம்மா, ஆனால் என்னால் பார்க்க முடியவில்லை.

நிலைமை எப்படி இருந்ததென்றால் அந்தக் குழந்தை சென்று கொண்டிருந்த பள்ளியில் நிறைய டிப்தீரியா கேஸ்களை அந்த மாதம் நாங்கள் கவனித்திருந்தோம். யாரும் இதுவரை அதைப் பற்றி இன்னும் பேச்செடுக்கவில்லை என்றாலும் நாங்கள் அனைவரும் அதைத்தான் நினைத்துக் கொண்டிருந்தோம், .

சரி, என்று நான் சொன்னேன், முதலில் தொண்டையைப் பார்த்துவிடலாம் என்று நினைக்கிறேன். நான் எனக்குத் தெரிந்த வகையில் தேர்ந்த டாக்டர் சிரிப்பு சிரித்தேன். குழந்தையிடம் அவளது பெயரைக் கேட்டுவிட்டு, உன் வாயைக் கொஞ்சம் திற மதில்டா, உன் தொண்டையைப் பார்க்கலாம், எங்கே காட்டு என்றேன்.

ஒன்றும் நடக்கவில்லை.

வாம்மா, என்று தாஜா செய்தேன், வாயைக் கொஞ்சம் ஆவென்று திறந்து காட்டேன், நான் பார்க்க வேண்டும். பார், என்றேன், என் இரு கைகளையும் அகட்டிக் காட்டி, என் கைகளில் எதுவும் இல்லை. வெறுமே ஆவென்று திறந்து காட்டேன், நான் பார்க்க வேண்டும்.

எவ்வளவு நல்ல மனிதர், என்று அவளது அம்மா சொன்னாள். அவர் உன்னிடம் எவ்வளவு அன்பாக இருக்கிறார் பார். வாம்மா, அவர் சொன்னபடி செய். அவர் செய்வது எதுவும் வலிக்காது.

அதைக் கேட்டதும் நான் என் பற்களை நெரித்தேன். அவர்கள் ‘வலி’ என்ற சொல்லை மட்டும் சொல்லாமல் இருந்திருந்தால் ஏதேனும் செய்யலாம். ஆனால் நான் அவசரப்படாமல், கோபப்படாமல் நிதானித்துக் கொண்டேன். அமைதியாகவும் மெதுவாகவும் பேசிக்கொண்டு மீண்டும் அந்தக் குழந்தையிடம் போனேன்.

என் சேரை அருகே நகர்த்தியதும் திடீரென்று என் கண்களைக் கீற ஒரு பூனையைப் போன்ற அசைவில் அவளது இரு கைகளும் தன்னிச்சையாய்ப் பாய்ந்தன. அவள் என் கண்களைத் தொட்டும் இருப்பாள். என் கண்ணாடியை பறக்கடித்தாள், என்னிடமிருந்து பல அடிகள் தள்ளி சமையலறையின் தரையில் அது விழுந்தது, உடையவில்லை.

சங்கடத்தில் அவர்கள் இருவரும் கூனிக் குறுகிப் போனார்கள், என்னிடம் மன்னிப்பு கேட்டார்கள். கெட்ட பெண்ணே, என்றாள் அந்த அம்மா, அவளைத் தூக்கி அவளது ஒரு கையை பலமாக உலுக்கினாள். என்ன செய்திருக்கிறாய் பார். எவ்வளவு நல்ல மனிதர்….. . .

கடவுளே, என்று நான் குறுக்கிட்டேன். அவளிடம் என்னை நல்ல மனிதன் என்று சொல்லாதீர்கள். அவளுக்கு டிப்தீரியா இருந்து அவள் இறக்கக்கூடும் என்பதால் அவளது தொண்டையைப் பார்க்க நான் வந்திருக்கிறேன். அதெல்லாம் அவளுக்குத் தெரியாது. இதோ பார், என்றேன் குழந்தையிடம், நாங்கள் உன் தொண்டையைப் பார்க்கப் போகிறோம். நான் சொல்வதைப் புரிந்து கொள்ளும் வயது உனக்கு வந்துவிட்டது. நீயாகவே வாயைத் திறக்கிறாயா அல்ளது நாங்கள் திறக்க வைக்கட்டுமா.

அசையவில்லை. அவளது முகபாவம்கூட மாறவில்லை. ஆனால் அவளுக்கு மேலும் மேலும் விரைவாக மூச்சிரைக்க ஆரம்பித்துவிட்டது. அடுத்தது ஆரம்பித்தது யுத்தம். நான் அதைச் செய்தாக வேண்டும். அவளது தொண்டையை அவளைக் காப்பாற்றுவதற்காகவே கல்ச்சர் எடுத்தாக வேண்டும். ஆனால் அதற்குமுன் அவளது பெற்றோர்களிடம் நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டேன். ஆபத்தை விளக்கினேன். இதற்கான பொறுப்பை நீங்கள் எடுத்துக்கொள்வதானால் தொண்டையை சோதிக்க வேண்டும் என்று நான் கட்டாயப்படுத்த மாட்டேன் என்றும் சொன்னேன்.

டாக்டர் சொல்வதைச் செய்யாவிட்டால் அப்புறம் நீ ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டியிருக்கும், என்று அம்மா அவளைக் கடுமையாக எச்சரித்தாள்.

ஓ, அப்படியா? என்று நான் எனக்குள் சிரித்துக் கொள்ள வேண்டியதாக இருந்தது. அதற்குள் நான் இந்த அடங்காத குட்டியை நேசிக்கத் துவங்கி விட்டிருந்தேன், எனக்கு அவளது பெற்றோர் ஒரு பொருட்டாக இல்லை. அதைத் தொடர்ந்த போராட்டத்தில் அவர்கள் மேலும் மேலும் தாழ்ந்து, நொறுங்கி, ஓய்ந்து போனார்கள். என் பொருட்டு ஏற்பட்டிருந்த பீதியால் மிதமிஞ்சிய உத்வேகமடைந்து அவள் மகோன்னதமான சிகரங்களைத் தொட்டாள்.

அவளது அப்பா ஆனமட்டும் முயற்சி செய்தார். அவர் நல்ல பலசாலி ஆனால் அவளோ அவரது மகள். தன் பெண் நடந்து கொள்ளும் விதம் குறித்த வெட்கமும் அவளுக்கு வலிக்கும் என்ற அச்சமும் நான் வெற்றியைத் தொடக்கூடிய முக்கியமான தருணங்களில் அவரது பிடியைத் தளர்த்தின. எனக்கு அவரைக் கொன்று விடவேண்டும் என்று ஆத்திரம் வந்தது. ஆனால் அவளுக்கு டிப்தீரியா இருக்கலாம் என்ற அவரது பயம் என்னை இன்னும் இன்னும் முயற்சி செய்யச் சொல்லும்படி அவரைப் பேச வைத்தது. அவர் மயங்கி விழும் அளவுக்கு களைத்துவிட்டார். என்ன நடக்குமோ என்ற கவலையில் அவளது அம்மா எங்களுக்குப் பின்னால் முன்னும் பின்னும் கைகளை உயர்த்தியும் தாழ்த்தியும் நகர்ந்தாள்.

உங்கள் முன்னால் மடியில் அவளை உட்கார வையுங்கள், என்று நான் உத்தரவிட்டேன், அவளது இரு கைகளையும் பிடித்துக் கொள்ளுங்கள்.

அவர் அதைச் செய்ததும் அந்தக் குழந்தை அலறியது, வேண்டாம், எனக்கு வலிக்கிறது, என் கையை விடுங்கள். கையை விடுங்கள் என்று சொல்கிறேனில்லை, விடுங்கள். அவள் பயங்கரமாக கூக்குரலிட்டாள், ஹிஸ்டீரியா வந்த மாதிரி அலறினாள். நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்! என்னைக் கொலை செய்கிறீர்கள்!

அவள் தாங்குவாளா டாக்டர், என்றாள் அவளது அம்மா.

நீ வெளியே போ, என்றார் தன் மனைவியிடம் அவளது கணவன். அவள் டிப்தீரியாவில் சாக வேண்டும் என்று நீ ஆசைப்படுகிறாயா?

வாருங்கள், இப்போது அவளைப் பிடித்துக் கொள்ளுங்கள், என்றேன்.

அடுத்து நான் குழந்தையின் தலையை என் இடது கையால் பிடித்துக் கொண்டு மரத்தாலான அந்த நாக்கை அழுத்தும் கருவியை (tongue depressor) அவளது பற்களுக்கிடையில் செலுத்தப் பார்த்தேன். அவள் போராடினாள், கிட்டித்த பற்களுடன், உயிர்போகிற மாதிரி! இப்போது எனக்கும் ஆத்திரம் வந்திருந்தது- அந்தக் குழந்தையிடம். நான் என் கோபத்தை அடக்கிக் கொள்ள முயற்சி செய்தேன், அது என்னால் முடியவில்லை. சோதிப்பதற்காக தொண்டையை எப்படி திறக்க வேண்டும் என்பதை அறிந்தவன்தான் நான். என்னால் முடிந்ததைச் செய்தேன். இறுதியில் கடைசி பற்களுக்குப்பின் அந்த மர ஸ்பாட்டுலாவை நுழைத்து, அவளது வாய்க்குள் செலுத்தும் கட்டத்தில் அவள் ஒரு கணம் தன் வாயைத் திறந்து நான் எதையும் பார்ப்பதற்குமுன் அதை அழுத்தி மூடிக் கொண்டாள். நான் வெளியே எடுப்பதற்குள் அந்த மரத் துண்டைத் தன் கடைவாய் பற்களால் கடித்துத் துண்டு துண்டாக்கி விட்டாள்.

உனக்கு வெட்கமாக இல்லை, என்று அந்த அம்மா அவளைப் பார்த்து கத்தினாள். டாக்டரின்முன் இப்படி நடந்துகொள்ள உனக்கு வெட்கமாக இல்லை?

நல்ல மழுங்கிய பிடியுள்ள ஸ்பூன் எதையாவது கொண்டு வாருங்கள், என்று நான் அந்த அம்மாவிடம் சொன்னேன். இதை முடித்தாக வேண்டும். குழந்தையின் வாயில் ஏற்கனவே ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அவளது நாக்கு வெட்டுப்பட்டிருந்தது, அவள் காட்டுத்தனமாக, ஹிஸ்டீரிக்கலாக கதறிக் கொண்டிருந்தாள். நான் அப்போது நிறுத்தி ஒரு மணி நேரம் அல்லது அதன் பின் வந்திருக்க வேண்டுமோ என்னவோ. அதுதான் சரியாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த மாதிரி கேஸ்களில் சரியாக கவனிக்கப்படாமல் குறைந்தது இரண்டு குழந்தைகள் படுக்கையில் இறந்து கிடந்ததை நான் பார்த்திருந்தேன். இப்போதே டிப்தீரியாவா இல்லையா என்று தீர்மானித்தால்தான் உண்டு என்று முடிவு செய்தவனாய் நான் மீண்டும் களத்தில் இறங்கினேன். ஆனால் இதில் எது மோசமென்றால், நானும் இப்போது அறிவிழந்துவிட்டிருந்தேன். எனக்கிருந்த கோபத்தில் நான் அந்தக் குழந்தையை இரண்டாகக் கிழித்திருப்பேன், அதை சந்தோஷமாகவும் செய்திருப்பேன். அவளைத் தாக்குவது அத்தனை ஆனந்தமாக இருந்தது. என் முகம் களிப்பில் தகித்தது.

இந்த நாசமாய்ப் போன குட்டிப் பிசாசை அதன் முட்டாள்தனத்தில் இருந்து காப்பாற்றியாக வேண்டும் என்று இந்த மாதிரி சமயங்களில் சொல்லிக் கொள்கிறோம். அவளிடமிருந்து மற்றவர்களைக் காப்பாற்றியாக வெண்டும். இது ஒரு சமூகக் கடமை. இது எல்லாமும் உண்மைதான். ஆனால் தன் தசையாற்றலை வெளிப்படுத்துவதற்கான தாபத்தில் வளர்ந்த குருட்டு ஆத்திரம், பெரியவர்களுக்குரிய வெட்கம், இவைதான் நம்மை செலுத்துகின்றன. கடைசி வரை போக வேண்டியதுதான்.

அறிவற்ற ஒரு இறுதி தாக்குதலில் நான் அந்தக் குழந்தையின் கழுத்தையும் தாடைகளையும் தோற்கடித்தேன். கனமான அந்த வெள்ளி ஸ்பூனை அவள் பற்களைத் தாண்டித் திணித்தேன்,  மூச்சு முட்டுகிற வரை அவரது தொண்டைக்குள் செலுத்தினேன். அது அங்கே இருந்தது- அவளது இரண்டு டான்ஸில்களும் படலம் போர்த்திருந்தன. இந்த தன் ரகசியத்தை என்னிடமிருந்து காத்துக்கொள்ளவே அவள் வீரத்துடன் போராடியிருக்கிறாள். மூன்று நாட்களாகத் தன் தொண்டை வலியை மறைத்து வைத்துக் கொண்டிருந்திருக்கிறாள். இந்த முடிவைத் தவிர்ப்பதற்காகவே தன் பெற்றோரிடம் பொய் சொல்லி வந்திருக்கிறாள்.

இப்போது அவளுக்கு உண்மையாகவே ஆத்திரம் வந்துவிட்டது. இதுவரை அவள் தன்னைக் காத்துக் கொள்ளப் போராடியிருந்தாள். இப்போது அவள் தாக்க ஆரம்பித்தாள். தன் அப்பாவின் மடியை விட்டிறங்கி என்மேல் பாய முயன்றாள். தோல்வியின் கண்ணீர் அவள் கண்களை மறைத்தது.

ஆங்கில மூலம் இங்கே

9 thoughts on “சண்டே ஸ்பெஷல்- சிறுகதை ஒன்று

  1. அடடா! பிழைகளைச் சுட்டிக் காட்டுவீர்கள் என்று எதிர்பார்த்தால் இப்படி சொல்லி விட்டீர்களே!

 1. அட நீங்கள் அப்படிச்சொன்னதால் மூலத்தையும் பெயர்ப்பையும் மீண்டும் படித்தேன்.

  தாய்..பெண்ணைப்பற்றிய விபரிப்பை ஒரு வாக்கியத்தில் கொண்டுவர முடியாதா ?

  ’’அவர்கள் எனக்குப் புதியவர்கள், ஒல்சன் என்ற பெயர் மட்டும்தான் எனக்குத் தெரிந்திருந்தது. உங்களால் முடிந்த அளவு சீக்கிரமாக வாருங்கள், என் மகள் ரொம்பவும் முடியாமல் இருக்கிறாள்.’’

  மூலக்கதையில் முதல் வசனத்திலேயே ஒரு டாக்டர் கதைசொல்வதாக உணரமுடிகிறது.

  எப்படி மொழிபெயர்க்கிறீர்கள்? எனக்கு அனுபவமில்லை.

  வசனத்துக்கு வசனமா? அல்லது மனதில் தோன்றும் காட்சியா?

  பெண் ,டாக்டரை (வாசலில்) சந்தித்து (கதவைத்திறந்து) ‘டாக்டரா” என்று மட்டும் கேட்டு உள்வரவிட்டு ‘உள்பக்கம்’ என்று தொடர்ந்தாள்……??.

  சிக்கல்தான் சார். சொற்களைச்செதுக்கி பொருத்தவேண்டும்

  இதை மேலும் அலச ஸ்பெஷலிஸ்ட் 🙂 வரவேண்டும்

  மொழிபெயர்ப்பும் ஒரு மனப்பழக்கம்.தொடர்ந்து எழுதுங்கள்.

  1. நல்ல சோத்துக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வார்கள், நீங்கள் இப்படி ஒரு பத்தியிலேயே மொழிபெயர்ப்பின் சிக்கல்களை சொல்லி விட்டீர்கள்.

   “The supreme authority of the translator”, Milan Kundera complains in Testaments Betrayed, “should be the author’s personal style. But most translators obey another authority, that of the conventional version of ‘good French, or German or Italian’.”” என்ற விஷயத்தை நான் நினைவில் வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.

   ஒரு கதையை மொழிபெயர்க்கும்போது, அந்தக் கதையை சொல்பவரின் குரலில் உள்ள உணர்ச்சிகளை நம் மொழியில் கொண்டு வர வேண்டும் என்பதுதான் என் எண்ணம். சொற்கள், காட்சிகள் இரண்டாம்பட்சம்தான்.

   மொழிபெயர்ப்பு என்பது இயல்பான தமிழில் படிக்க எளிமையாக இருக்க வேண்டியதில்லை. அதைச் செய்ய நினைத்தால் தழுவி எழுதுவதே சரியாக இருக்கும். ஒரு நல்ல மொழிபெயர்ப்பு, மூல நூலைச் சுட்டுவதாக இருக்க வேண்டும். தமிழில் படித்து விட்டு ஆங்கிலத்தில் படித்தால் தமிழில் சொல்ல முடியாத விஷயங்கள் சுட்டப்பட்டிருப்பதை அறிய முடிகிறதென்றால் அது நல்ல மொழிபெயர்ப்புதான்.

   ஒரு மொழிபெயர்ப்பின் வேலை கதையை இங்கு கடத்திக் கொண்டு வருவதல்ல; வாசகனை அங்கு அழைத்துச் செல்வது என்று நினைக்கிறேன்.

   :)))

   உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி சார்.

   1. ஒரு கேள்வி

    ஆங்கிலம் படிக்கத்தெரியாதவர்கள் மொழிபெயர்த்தவர் தருவதைத்தானே உண்ர முடியும்.

    மொழியறியாதவர்களுக்குத்தானே மொழிபெயர்ப்பு.மொழிதெரியாத வாசகனை எப்படி அழைத்துச்செல்ல முடியும்?
    முழுவதையும் கொண்டுவருவதுதானே முறை.

    ரஷ்யக்கதைகளை ஆங்கிலத்தில் படிக்கிறோம். தமிழில் நேரடியாக மொழிபெயர்த்த கதைகளும் இருக்கின்றன இல்லையா.
    ரஷ்யமொழியில் நான் இன்னும் படிக்கவில்லை. 🙂 அடுத்த பிறவியில் ரஷ்யாவில் பிறக்க உத்தேசம்

    அடுத்தது நீங்கள் உணருவதற்கும் எழுத்தாளர் உணர்த்தவிரும்பியதற்கும் வேறுபாடு இருக்கிறதென்றால் மொழிபெயர்ப்பில் விட்டுப்போய்விடுமே.
    lost in translation.
    ஏதோ ஒரு பறவை காப்பிப்பழம் உண்டு எச்சமிட எச்சமிட பொறுக்கிச்சேர்த்த காப்பிக்கொட்டையில் வடித்த காப்பி Kopi Luwack சுவை/விலை கூடியதாமே. மொழிபெயர்ப்பில் உள்வாங்கி வெளிவர அழகாகலாமில்லையா.

    1. நியாயமான கேள்வி. இந்த நோக்கத்துக்கு மொழிபெயர்ப்பு சரிப்படாது, தழுவல்தான் சரிவரும்.

     ஒன்று செய்யலாம், நான் மொழிபெயர்க்கிறேன். நீங்கள் அதைத் தழுவி தமிழ் கதையாக எழுதுங்கள் 🙂

     நல்ல வாசிப்பு அனுபவம் கிடைக்கும்- எனக்கு.

     ————————
     இந்தக் கட்டுரையை அவகாசமிருந்தால் படித்துப் பாருங்கள் – http://www.thinnai.com/?module=displaystory&story_id=61101022&format=html

     இதற்கு ஷங்கரநாராயணன் பதிலளித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். எங்கே படித்தேன் என்பது மறந்துவிட்டது. 😦

  2. நீங்கள் குறிப்பிட்ட வாக்கியத்தை, “அவர்கள் என் மருத்துவமனைக்குப் புதியவர்கள், ஒல்சன் என்ற பெயர் மட்டும்தான் எனக்குத் தெரிந்திருந்தது. உங்களால் முடிந்த அளவு சீக்கிரமாக வாருங்கள், என் மகள் ரொம்பவும் முடியாமல் இருக்கிறாள்” என்று மாற்றியிருக்கிறேன். நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s