குழந்தை செய்த முதல் குற்றம்

சன்டே ஸ்பெஷலாக இன்று டொனால்ட் பார்தேல்ம் எழுதிய ஒரு சிறுகதை. சின்னஞ்சிறு கதை என்று சொல்ல வேண்டும்.

—————————————-

குழந்தை செய்த முதல் குற்றம் தன் புத்தகங்களின் பக்கங்களைக் கிழித்ததுதான். அதனால் ஒவ்வொரு முறை அவள் ஒரு பத்தகத்தின் பக்கத்தைக் கிழிக்கும்போதும் நான்கு மணி நேரம் மூடப்பட்ட கதவுகளின் பின் அவள் தன் அறையில் தனியாக இருக்க வேண்டும் என்ற விதிமுறையை உருவாக்கினோம். துவக்கத்தில் அவள் தினம் ஒரு பக்கத்தைக் கிழித்துக் கொண்டிருந்தாள். விதிமுறை நன்றாகவே வேலை செய்து கொண்டிருந்தது, ஆனாலும்கூட மூடப்பட்ட கதவுக்குப் பின்னிருந்து வந்த அழுகையும் அலறலும் எங்களை நிலைகுலையச் செய்தது என்பதையும் சொல்ல வேண்டும். இது நீ கொடுத்தாக வேண்டிய விலை என்று நாங்கள் நியாயப்படுத்திக் கொண்டோம், அல்லது கொடுக்கப்பட வேண்டிய விலையின் பகுதி என்றும் ஏற்றுக் கொண்டோம். ஆனால் அவளது பிடியின் வலு மேன்மையடைந்ததும் அவள் ஒரே சமயத்தில் இரு பக்கங்களைக் கிழிக்கலாயினாள். அதனால் அவள் தன் அறையில் மூடப்பட்ட கதவுக்குப் பின் எட்டு மணி நேரம் தனித்திருக்க வேண்டியதாயிற்று. இதனால் அனைவருக்கும் பிரச்சினை இரட்டிப்பானது. ஆனால் அவள் இப்படி செய்வதை மாற்றிக் கொள்வதாயில்லை. காலம் செல்லச் செல்ல மூன்று அல்லது நான்கு பக்கங்களை அவள் கிழிக்கும் நாட்களும் வந்தன. இதனால் அவள் தொடர்ந்து பதினாறு மணி நேரம் வரை தன் அறையில் தனித்திருக்க வேண்டியதாயிற்று. அவள் வேளாவேளைக்குசாப்பிட முடியவில்லை, என் மனைவியின் கவலைகள் கூடின. விதிமுறை என்று ஒன்றை வைத்தால் அதைத் தளர்த்திக் கொள்ளாமல் தொடர வேண்டும் என்பது என் கருத்தாக இருந்தது, இல்லாவிட்டால் அவர்கள் தவறான பாடம் கற்றுக் கொள்ளக் கூடும். அந்தக் கட்டத்தில் அவளுக்குப் பதினான்கு அல்லது பதினைந்து மாதங்கள் ஆகியிருந்தது ஒரு மணி நேரம் போல கத்திவிட்டு அவள் தூங்கி விடுவது பெரும்பாலும் வழக்கம். அது எங்களுக்கு ஒரு கருணையாக இருந்தது. அவளது அறை அழகாக இருந்தது. மரத்தாலான ஒரு ஆடும் குதிரை இருந்தது, நூற்றுக்கணக்கான பொம்மைகளும் பஞ்சு பொதித்த மிருகங்களும் இருந்தன. நீ உன் பொழுதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதானால் அந்த அறையில் எவ்வளவோ செய்யலாம், புதிர்கள் அது இது என்று இருந்தன. ஆனால் துரதிருஷ்டம் என்னவென்றால் அவளது அறைக் கதவைத் திறந்து பார்த்தால் உள்ளே இருக்கும்போது அவள் இன்னும் சில புத்தகங்களின் பக்கங்களைக் கிழித்திருப்பாள், அந்தப் பக்கங்களையும் நியாயப்படி கணக்கில் சேர்க்க வேண்டியிருக்கும்.

குழந்தையின் பெயர் பார்ன் டான்ஸிங். நாங்கள் குழந்தைக்கு எங்கள் வைனில் கொஞ்சம் கொடுத்தோம், சிவப்பு, வெளுப்பு, நீலம், எல்லாமே. சீரியசாக அவளிடம் பேசவும் செய்தோம். அது எதுவும் எந்த நன்மையையும் செய்யவில்லை.

அவள் நிஜமாகவே புத்திசாலியாக வளர்ந்தாள் என்பதை நான் சொல்லியாக வேண்டும். தனது அறைக்கு வெளியே இருக்கும் அதிசய தருணங்களில் அவள் தரையில் விளையாடிக் கொண்டிருப்பதை நீங்கள் பார்த்தீர்களானால் அவளுக்குப் பக்கத்தில் ஒரு புத்தகம் இருக்கும். அது திறந்து கிடக்கும். நீங்கள் அதைப் பரிசோதித்துப் பார்த்தீர்கள் என்றால் எல்லாமே ஒழுங்காக இருப்பது போல் தெரியும். அதன்பின் நீங்கள் கூர்ந்து கவனிக்கும்போதுதான் ஒரு பக்கத்தின் ஒரு சிறு மூலை கிழிந்திருப்பதைப் பார்ப்பீர்கள். புழக்கத்தில் ஏற்படுகிற சாதாரண கிழிசல் போலவே இருக்கும், ஆனால் எனக்குத் தெரிந்திருக்கும் அவள் என்ன செய்திருப்பாள் என்று. அவள் அந்த பக்கத்தின் மூலையில் இருக்கிற சிறு காகிதத்தைக் கிழித்து விழுங்கியிருப்பாள். எனவே அதையும் கணக்கில் எடுத்துக்கொண்டாக வேண்டும், எடுத்துக் கொள்ளவும் செய்தேன். உங்களிடம் முரண்டு பிடிக்க குழந்தைகள் எவ்வளவு தூரமும் செல்லும். நாம் மிகவும் கடுமையாக இருக்கிறோமோ என்று என் மனைவி சந்தேகப்பட்டாள், குழந்தை எடை குறைந்துகொண்டே வந்தாள். ஆனால் நான் குழந்தை வெகு காலம் வாழ வேண்டியிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டினேன். அவள் தன் வாழ்வை மற்றவர்களோடு சேர்ந்து வாழ்ந்தாக வேண்டும், உலகில் ஏராளமான விதிகள் இருக்கின்றன, அவள் விதிகளைக் கடைபிடிக்கப் பழகாவிட்டால் ஆளுமைக் குணங்கள் எதுவும் இல்லாமல், அனைவராலும் வெறுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு தனிமையில் அவள் வாழ வேண்டியிருக்கும் என்பதையெல்லாம் விளக்கினேன். ஒரே ஒரு முறை அதிகபட்சமாகத் தொடர்ந்து எண்பத்து எட்டு மணி நேரம் அவளை அவளது அறையில் தனித்திருக்கச் செய்தோம். இருபத்து ஐந்து பக்கங்களுக்கான கணக்கு தீர இன்னமும் பன்னிரெண்டு மணி நேரம் அவள் எங்களுக்கு மிச்சம் வைத்திருந்தபோதும் என் மனைவி ஒரு கடப்பாரையைக் கொண்டு கதவைப் பெயர்த்து அந்த தண்டனையை முடிவுக்குக் கொண்டு வந்தாள். அதன்பின் நான் அந்தக் கதவைக் கீளோடு பொருத்திவிட்டு அதற்கு ஒரு பெரிய பூட்டைப் போட்டேன். அதற்கான திறப்பில் காந்தத் தகடைப் பொருத்தினால் மட்டுமே திறக்கக்கூடிய பூட்டு அது. அந்த காந்தத் தகடை என்னிடமே வைத்துக் கொண்டேன்.

ஆனால்கூட நிலைமையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கதவைத் திறந்ததும் நரகத்திலிருந்து புறப்பட்ட வௌவாலைப் போல குழந்தை பாய்ந்தோடி வெளியே வந்து நேராக கைக்கெட்டும் தூரத்தில் உள்ள புத்தகத்தை நோக்கியேச் செல்வாள்., நள்ளிரவு நிலவே என்பதோ எதாவதோ ஒன்று. அதைக் கையோடு கை சேர்த்து கிழிக்கத் துவங்கிவிடுவாள். பத்து நொடிகளில் தரையில் நள்ளிரவு நிலவேவின் முப்பத்து நான்கு பக்கங்கள் போல சிதறிக் கிடக்கும். அவை தவிர புத்தகத்தின் அட்டை. நான் கொஞ்சம் கவலைப்படத் துவங்கினேன். மணிக்கணக்கில் அவள் எவ்வளவு கடன்பட்டிருக்கிறாள் என்று கணக்கு பார்த்தேன், வெளியே வரக் கூடுமென்றால், அவள் 1992கு முன் தனது அறையை விட்டு வெளியே வரப் போவதில்லை என்று தெரிந்தது. அவள் வெளிறிப் போகத் துவங்கியிருந்தாள். அவள் பார்க்குக்குப் போய் வாரங்களாகி விட்டிருந்தது. அறச் சிக்கலால் எங்கள் கரங்கள் ஏறத்தாழ நிறைந்திருந்தன.

புத்தகங்களின் பக்கங்களைக் கிழிப்பதில் தவறில்லை என்று அறிவித்து நான்தான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டேன். அது மட்டுமல்ல, கடந்த காலத்தில் புத்தகப் பக்கங்களைக் கிழித்ததிலும் தவறில்லை என்று அறிவித்தேன். பெற்றோராய் இருப்பதில் திருப்தி தரும் விஷயங்களில் அதுவும் ஒன்று- உனக்கு ஏராளமான தீர்வுகள் இருக்கின்றன, ஒவ்வொன்றும் சொக்கத் தங்கம். இப்போது நானும் குழந்தையும் தரையில் அருகருகே அமர்ந்து மகிழ்ச்சியாகப் புத்தகங்களின் பக்கங்களைக் கிழிக்கிறோம். சிலசமயம் தெருவுக்குப் போய் நாங்கள் இருவரும் சேர்ந்து ஏதோ ஒரு காரின் காற்றுக்காப்பை (விண்ட்ஷீல்ட்) விளையாட்டாய் சிதறடிக்கவும் செய்கிறோம்.

Advertisements

8 thoughts on “குழந்தை செய்த முதல் குற்றம்

  1. நன்றி. என் கருத்தை இங்கேயும் ஸஸரிரி கிரி அனுமதித்தால் கதையை அங்கேயும் போடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். நமக்கு விவாதம்தானே சார் முக்கியம் 🙂

  1. பாராட்டுகளுக்கு நன்றி. பையர் உங்கள வழிக்குக் கொண்டு வர என்ன டெக்னிக் வெச்சிருக்கார்னு தெரிஞ்சிக்கலாமா?

 1. தண்டனை என்று கொடுத்தால் குழந்தைகளின் பிடிவாதம் கூடும். அன்பால் தான் திருத்த வேண்டும். நல்ல கதை. எனவே எனது ‘பேஸ் புக்’ பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  நன்றி.

 2. Ha ha ha. Child did nothing wrong. I think the title should have been “The first thing the dad did wrong” becuase it’s look like dad made a mistake of being too strict to his child and later he realized there is no solution for this and he should change himself a flexible person?

  1. மதிப்புக்குரிய அனானி, தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

   குழந்தை செய்த முதல் குற்றம் என்று பெரியவர் சொல்வதை வைத்துப் பார்த்தால், குழந்தை வளர வளர குற்றங்களும் வளர்ந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. இதற்கான தடயம் கார்களின் விண்ட்ஷீல்ட்களை குழந்தை உடைத்து விளையாடுவதைப் பார்க்கும்போது புலப்படுகிறது. இதற்கு குழந்தையின் அப்பாவே உடந்தையாக இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அத்தோடல்லாமல் குழந்தையின் குற்றங்களை அவர் ஊக்குவிக்கவும் செய்வார் போலிருக்கிறது.

   நீங்கள் சொல்வது போல் அப்பாதான் குற்றவாளி என்பதை ஆழ்ந்த மனவருத்தத்துடன் அவதானிக்க வேண்டியிருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s