நன்றி மேம்

சண்டே ஸ்பெஷல்!

நன்றி மேம்

(“Thank You, M’am” என்ற Langston Hughes சிறுகதையின் தமிழாக்கம்.)

அவள் ஒரு காத்திரமான பெண்மணி. அவளிடம் இருந்த பர்ஸில் ஆணி சுத்தியலைத் தவிர எல்லாமிருந்தன. அதற்கு நீளமான பிடி இருந்தது. அதை அவள் தன் தோளைச் சுற்றித் தொங்க விட்டிருந்தாள். அப்போது இரவு பதினோரு மணி இருக்கும். அவள் தனியாக நடந்து போய்க் கொண்டிருந்தபோது ஒரு சிறுவன் அவளுக்குப் பின்புறத்திலிருந்து ஓடி வந்து அவளது பர்சைப் பறிக்க முயன்றான். பின்னாலிருந்து அந்தப் பையன் இழுத்த ஒரே இழுப்பில் பர்ஸின் பிடி அறுந்துவிட்டது. ஆனால் அந்தப் பையனின் எடையும் பர்ஸின் எடையுமாகச் சேர்ந்து அவனைத் தடுமாறச் செய்துவிட்டது. அதனால் அவன் நினைத்த மாதிரி அதிவேகத்தில் பறப்பதற்குப் பதிலாக அந்தப் பையன் சாலையின் ஓரத்தில் மல்லாந்து விழுந்தான்; அவனது கால்கள் வானை நோக்கின. அந்த காத்திரமான பெண்மணி உடனே திரும்பி, நீல நிற ஜீன்ஸால் மூடப்பட்டிருந்த அவனது ஆசன இடத்தின் மையத்தில் உதைத்தாள். அதன் பின் அவள் குனிந்து, அந்தப் பையனை அவனது சட்டையைப் பிடித்து தூக்கி நிறுத்தினாள். அவனது பற்கள் தந்தியடிக்கும்வரை அவனை உலுக்கினாள்.

அதன்பின் அந்தப் பெண்மணி சொன்னாள், “என் பர்சை எடு, பிள்ளை, அதை எடுத்து என்னிடம் கொடு”. அவள் இன்னமும் அவனைப் பிடித்திருந்தாள். ஆனால் அவன் குனிவதற்கு வாகாக அவள் குனிந்து கொடுத்தாள். அதன்பின் அவள் சொன்னாள், “இப்போது சொல், இது உனக்கே வெட்கமாக இல்லை?”

அந்தப் பையனின் சட்டை கொத்தாய் இறுகப் பிடிக்கப்பட்டிருந்தது. அவன் சொன்னான், “ஆமாம் மேம்”

அந்தப் பெண்மணி கேட்டாள், “எதற்காக இப்படிச் செய்தாய்?”

பையன் சொன்னான், “தெரியாமல் செய்துவிட்டேன்”

அவள் சொன்னாள், “நீ ஒரு பொய்யன்!”

அதற்குள் வழியாக வந்த இரண்டு மூன்று பேர் அவர்களைக் கடந்து சென்று, நின்று, என்ன நடக்கிறது என்று பார்க்கத் திரும்பி இருந்தார்கள்.

“விட்டால் ஓடிப் போய் விடுவாயா?” என்று கேட்டாள் அந்தப் பெண்மணி.

“ஆமாம் மேம்.” என்றான் பையன்.

“அப்படியானால் நான் உன்னை விடப்போவதில்லை.” என்றாள் அந்தப் பெண்மணி. அவள் தன் பிடியைத் தளர்த்தவில்லை.

“ரொம்ப ஸாரி, லேடி, ஸாரி,” என்று தாழ்ந்த குரலில் சொன்னான் பையன்.

“உம்-ஹும்! அப்புறம் உன் முகம் வேறு அழுக்காக இருக்கிறது. உன் முகத்தைக் கழுவி விடலாமா என்று தோன்றுகிறது எனக்கு. உன்னை முகம் கழுவிக் கொள்ளச் சொல்ல வீட்டில் யாருமில்லை?”

“இல்லை மேம்,” என்றான் பையன்.

“அப்படியானால் இப்போது அதைக் கழுவியாக வேண்டும்,” என்று சொல்லிக் கிளம்பினாள் அந்த காத்திரமான அம்மணி. அவள் தன்னோடு அஞ்சி நடுங்கிய அந்தச் சிறுவனையும் இழுத்துச் சென்றாள்.

அவனைப் பார்த்தால் பதிநான்கு அல்லது பதினைந்து வயது சொல்லலாம். அவனது ப்ளூ ஜீன்ஸ் மற்றும் டென்னிஸ் ஷூவில் காட்டு வில்லோ போல இளைத்திருந்தான்.

அந்தப் பெண்மணி சொன்னாள், “நீ மட்டும் என் மகனாக இருந்திருக்க வேண்டும். எது சரி எது தப்பு என்று புரிய வைத்திருப்பேன். இப்போது உன் முகத்தைக் கழுவுவதையாவது நான் செய்ய முடியும். பசிக்கிறதா?”

“இல்லை மேம்,” என்றான் இழுத்துச் செல்லப்பட்ட பையன். “என்னை நீங்கள் போக விட்டால் போதும்”

“நான் தெருவின் முனை திரும்பியபோது உன் வம்புக்கு வந்தேனா?” என்று கேட்டாள் அந்தப் பெண்மணி.

“இல்லை மேம்”

“ஆனால் நீயாகத்தான் என்னிடம் வந்து சேர்ந்தாய்,” என்றாள் அந்தப் பெண்மணி. “நாமிருவரும் இன்னும் சற்று நேரம் சேர்ந்திருக்கப் போகிறோம். இதை நினைவில் வைத்துக் கொள். நான் உன்னை ஒரு வழி பண்ணி முடிக்கிறேன் பார். தம்பி, அதன்பின் நீ மிசர்ஸ். லூவெல்லா பேட்ஸ் வாஷிங்க்டன் ஜோன்சை மறக்கப்போவதில்லை”

அந்தப் பையனின் நெற்றியில் வியர்வைத் துளிகள் கொப்பளித்தன. அவன் போராடத் துவங்கினான். மிசர்ஸ் ஜோன்ஸ் நின்றாள். அவனைத் தன் முன் சவட்டி இழுத்தாள். அவனது கழுத்தைச் சுற்றி ஒரு ஹால்ப் நெல்சன் பிடி போட்டாள். அவனைச் சாலையில் தொடர்ந்து இழுத்துச் சென்றாள். தன் வீட்டு வாசல் கதவுக்கு வந்ததும், அவனை உள்ளே இழுத்துச் சென்றாள், ஒரு ஹாலைத் தாண்டி வீட்டின் பின் அடுக்கில் சமையல் வசதிகள் உள்ள ஒரு பெரிய அறைக்குள் போனார்கள். அவள் விளக்கைப் போட்டாள். தன் அறைக்கதவை திறந்தே வைத்திருந்தாள். அந்த பெரிய வீட்டின் மற்ற அறைகளில் இருந்தவர்கள் சிரிப்பதையும் பேசுவதையும் பையனால் கேட்க முடிந்தது. அவர்களிள் சிலருடைய கதவுகள் திறந்திருந்தன. அவனுக்கு தானும் அந்தப் பெண்மணியும் தனியாக இல்லை என்பது புரிந்தது; அந்தப் பெண்மணி இன்னும் அவன் கழுத்தை, தன் அறையின் மத்தியில் இறுகப பிடித்திருந்தாள்.

“உன் பெயர் என்ன?” என்று அவள் கேட்டாள்.

“ரோஜர்” என்று பதில் சொன்னான் பையன்.

“அப்படியானால், ரோஜர், நீ போய் அந்த சின்க்கில் முகம் கழுவிக் கொண்டு வா,” என்றாள் அந்தப் பெண்மணி. அவள் தன் பிடியைத் தளர்த்தினாள்= ஒரு வழியாக. ரோஜர் அந்தப் பெண்மணியைப் பார்த்தான்- வாசல் கதவைப் பார்த்தான்- சின்க்குக்குப் போனான்.

“சூடாகும் வரை தண்ணீர் போகட்டும்,” என்றாள் அவள், “இந்தா, சுத்தமான துண்டு”

“என்னை ஜெயிலுக்கு அனுப்பப் போகிறீர்களா?” என்று கேட்டான் பையன். சின்க்கில் குனிந்தான்.

“உன் இந்த முகத்தை வைத்துக் கொண்டு உன்னை எங்கேயும் கூட்டிப் போக மாட்டேன்,” என்றாள் அந்தப் பெண்மணி. “நான் பாட்டுக்கு ஒரு வாய் சமைத்து சாப்பிட வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறேன், நீயானால் என் பர்ஸைப் பிடுங்குகிறாய்! இவ்வளவு நேரமாகியும் நீ சாயந்தரம் சாப்பிட்டிருக்க மாட்டாயே? சாப்பிட்டாயா என்ன?”

“என் வீட்டில் யாருமில்லை.” என்றான் பையன்.

“அப்படியானால் நாம் சேர்ந்து சாப்பிடலாம்,” என்றாள் அந்தப் பெண்மணி. “உனக்கு பசிக்கிறது, அல்லது பசி தாங்க முடியவில்லை. அதனால்தான் என் பர்ஸைப் பிடுங்க வந்தாய் என்று நினைக்கிறேன்”

“எனக்கு நீல கலர் suede shoes வேண்டும் என்று ஆசைப்பட்டேன்,” என்றான் பையன்.

“suede ஷூஸ் வாங்க என் பர்ஸை நீ பிடுங்கியிருக்க வேண்டியதில்லை,” என்றாள் மிசர்ஸ். லூவெல்லா பேட்ஸ் வாஷிங்க்டன் ஜோன்ஸ். “என்னைக் கேட்டிருக்கலாம்.”

“மேம்?”

முகத்தில் தண்ணீர் சொட்ட, பையன் அவளைப் பார்த்தான். அங்கே நீண்ட மௌனம் நிலவியது. அவன் முகத்தைத் துடைத்துக் கொண்டதும். வேறென்ன செய்வது என்று தெரியாமல், மீண்டும் முகம் துடைத்துக் கொண்டதும், அடுத்து வேறென்ன செய்வது என்று திரும்பித் திரும்பிப் பார்த்தான். கதவு திறந்திருந்தது. ஹால் வழியாக ஒரே ஓட்டமாக ஒடி விடலாம். அவன் ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு என்று ஓடலாம்!

அந்தப் பெண்மணி படுக்கையில் உட்கார்ந்திருந்தாள். சிறிது நேரம் கழித்து அவள் சொன்னாள், “நானும் ஒரு காலத்தில் இளமையாக இருந்தேன். எனக்குக் கிடைக்காத பொருட்களுக்கு ஆசைப்பட்டேன்.”

இப்போது இன்னொரு நீண்ட மௌனம். பையன் வாய் திறந்து மூடினான். முகத்தை சுளித்துக் கொண்டான், தான் ஏன் முகம் சுளிக்கிறோம் என்பதை அறியாமலேயே.

அந்தப் பெண்மணி சொன்னாள், “அம்-ஹூம்! ஆனால் என்று என்னவோ சொல்வேன் என்று நீ நினைத்தாய், இல்லையா? ஆனால் யாருடைய பர்சையும் திருடியதில்லை என்று நான் சொல்வேன் என்று நீ நினைத்தாய். கேள், அதைச் சொல்லப் போவதில்லை நான்.” மௌனம். நீண்ட அமைதி. “நான் என்னென்னவோ செய்திருக்கிறேன். அதையெல்லாம் உன்னிடம் சொல்ல மாட்டேன். அதைக் கடவுளுக்கும் சொல்ல மாட்டேன், அவருக்கு ஏற்கனவே தெரிந்திருக்காவிட்டால். உட்கார். உனக்கு சாப்பிட்ட ஏதாவது செய்கிறேன். அந்த சீப்பால் தலை சீவிக் கொள், பார்க்க லட்சணமாக இருப்பாய்”

அந்த அறையில் திரைக்குப் பின் இன்னொரு மூலையில் ஒரு காஸ் அடுப்பும் குளிர்சாதனப் பெட்டியும் இருந்தன. மிசர்ஸ் ஜோன்ஸ் எழுந்து திரைக்குப் பின் போனாள். அவன் இப்போது ஓடப் போகிறானா என்று அந்தப் பெண்மணி கவனிக்கவில்லை, தான் தன் படுக்கையில் வைத்திருந்த பர்சையும் கவனிக்கவில்லை. அவள் நினைத்தபோது தன் ஓரக்கண்ணால் அவன் இங்கிருப்பதை சுலபமாகப் பார்க்க முடியும். அவளது நம்பிக்கை பொய்ப்பிப்பதை அவன் மெய்ப்பிக்க விரும்பவில்லை. அந்தப் பெண்மணி தன்னை சந்தேகப்படக்கூடாதென்று விரும்பினான்.

“உங்களுக்கு யாராவது கடைக்குப் போக வேண்டியிருக்கிறதா, என்ன,” என்று கேட்டான் பையன். “பால் அல்லது வேறு ஏதாவது வாங்கி வர வேண்டுமா?”

“எனக்கு எதுவும் வேண்டியில்லை,” என்றாள் அந்தப் பெண்மணி, “உனக்கு சர்க்கரைப் பால் வேண்டுமேன்றாலொழிய கடைக்குப் போக வேண்டியதில்லை. இதோ இந்தக் கேனில் இருக்கிற பாலை வைத்து கொக்கோ செய்யப்போகிறேன்”

“அதுவே போதும்,” என்றான் பையன்.

அவள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த பன்றிக்கறியோடு லைமா பீன்ஸ் சேர்த்து சூடாக்கினாள். கொக்கோ கலந்தாள். மேசையில் எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள். நீ எங்கே இருக்கிறாய், உன் பெற்றோர் யார் என்று எந்த சங்கடமான கேள்வியையும் அவள் அந்தப் பையனிடம் கேட்கவில்லை. அதற்கு பதிலாக அவள் ஹோட்டலில் இரவு நெடுநேரம் திறந்திருக்கும் அழகு நிலையத்தில் தான் செய்யும் வேலையைப் பற்றிப் பேசினாள். என்ன வேளை, எப்படிப்பட்ட பெண்கள் வந்து போகிறார்கள், சுருட்டை முடிகள், சிவந்த முடிகள், ஸ்பெயின்காரிகள். அதன் பின் அவள் தனது பத்து சென்ட் கேக்கில் பாதியை அவனுக்கு வெட்டித் தந்தாள்.

“இன்னும் கொஞ்சம் சாப்பிடு, பிள்ளை,” என்றாள் அவள்.

அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் அவள் எழுந்தாள். “இந்தா, இந்த பத்து டாலரை எடுத்துக் கொள். உனக்கு வேண்டிய நீல ஸ்யூட் ஷூக்கள் வாங்கிக்’ கொள். என்னுடைய பர்ஸையோ வேறு யாருடைய பர்ஸையோ பிடித்திழுக்கிற தவறை இனி இன்னொரு முறை செய்யாதே- அப்படி கிடைக்கும் ஷூக்கள் உன் பாதங்களைப் பொசுக்கிவிடும். இப்போது நான் ரெஸ்ட் எடுக்கப் போகிறேன். இனியாவது நீ ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன், இனி எப்போதும்”

அவள் அவனை ஹால் வழியாகக் கதவுக்குக் அழைத்துப் போய் திறந்தாள். “குட்நைட்! ஒழுங்காக இரு, பிள்ளை!” என்றாள் அவள் சாலையைப் பார்த்தபடி.

படிகளில் கீழிறங்கி கதவடியில் நிற்கிற அந்த காத்திரமானப் பெண்மணியைப் பார்க்கும்போது, “நன்றி மேம்” என்பதைத் தவிர வேறு ஏதாவது சொல்ல வேண்டும் என்று அந்தப் பையன் நினைத்தான், ஆனால் அவனால் அப்படி எதுவும் சொல்ல முடியவில்லை. அவள் கதவை அடைப்பதற்குள் “நன்றி” என்பதைத்தான் சொல்ல முடிந்தது. அதன்பின் அவன் அவளை மீண்டும் பார்க்கவில்லை.

(கடைசியாகப் பார்த்தால் இது வெட்டி வேலையாகப் போய் விட்டது- எஸ். ஷங்கரநாராயணன் இந்தச் சிறுகதையை ஏற்கனவே சொல்வனம் இணைய இதழில் “நன்றி அம்மணி” என்ற பெயரில் மொழி பெயர்த்துவிட்டார்.  விதி வலியது!)

6 thoughts on “நன்றி மேம்

 1. நல்ல கதை. மொழிபெயர்த்து அளித்தமைக்கு நன்றி.

  எளிமையான வார்த்தைகள்.ஆங்கிலத்தில் படிக்க இன்னும் எளிமை ;ஜட்ஜ்மெண்ட் இல்லாத எழுத்து.
  எழுத்தில் எழுத்தாளரைதெரியவில்லை.

  1. மிக்க நன்றி. நீங்கள் இணையத்தில் எதாவது ஒரு நல்ல கதையை ஆங்கிலத்தில் படித்தால் சொல்லுங்கள் முழி பெயர்த்துவிடலாம் 🙂

  1. தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ஐயா.

   கதை உங்களுக்குப் பிடித்திருப்பது குறித்து பெருமகிழ்ச்சியடைகிறேன்.

   நன்றி.

  1. ஜி இங்க எத்தனையோ பதிவு எழுதி இருக்கேன் இதை மட்டும் நல்ல பதிவுன்னு சொல்றீங்களே ஏன்? அதே மாதிரி வாழ்த்துகள் எதற்காக? நான் ரொம்பவே கன்ப்யூசுடு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s