யன்னல்

(நம் நண்பர் வரசித்தன் அவர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார் என்ற நம்பிக்கையில் அவரது யன்னல் என்ற சிறுகதையை இங்கு மீள்பதிவு செய்கிறேன்)

O0O0O0O0

கனவிலிருந்து விழித்தபோது கனவில் கண்ட இருள் அறையில் பரவியிருப்பதை உணர்ந்தேன்.

அன்றும் இவ்வாறேதான். ஒரு கனவிலிருந்து விழித்தபோது அறை சுருங்கி ஒரு பெட்டியாக மாறியிருப்பதான பிரமை தொடர்ந்து இருந்தது. பெட்டியைப் பிய்த்துக் கொண்டு ஓடுவதற்கான முயற்சியில் நான் சிறிது நேரம் ஈடுபட்டிருந்தேன்.

அறையில் இருந்து படித்துக் கொண்டிருந்த வாசு என்னைத் திரும்பிப் பார்த்துக் கொண்டேயிருந்தான் ஒன்றுமே பேசவில்லை

அவனும் நானும் பேசுவதை நிறுத்திக் கொண்டு சில மாதங்களாயிருக்குமென்று நினைக்கின்றேன். ஒரு அறையில் இருந்துகொண்டு எப்படிப் பேசாதிருக்கிறோமென்று எனக்கு ஆச்சரியமாயிருக்கும். அப்படித் தோன்றுவதுகூட மிகச் சில பொழுதுகளில்தான். அவன் என்னோடு பேசுவதற்கு எந்த முயற்சியும் எடுத்துக் கொள்வதில்லை.

அது ஒரு பழைய குவாட்டர்ஸ். தடித்த சுவரும் யன்னலின் ஓராள் ஏறியிருக்கக்கூடியதுமான அகன்ற விளிம்பில் எங்கள் சிறு பொருட்களைப்பரப்பி வைத்திருந்தோம். சீப்பு, மல்லிகை மணக்கும் ஒரு பவுடர் ரின். என்னுடைய சீப்பு ஊதா நிறம். சீப்பு மாத்திரமல்ல பிரஷும்தான். அவனுடையது நீல நிறம்.

அன்றிரவு மூச்சுத் திணறிய கனவு வந்தபோதும் அவன் அறையில் இருந்தான். நான் பதகளித்து ஓடி யன்னலில் இருந்து வெளியில் பார்த்துக் கொண்டிருந்த அவனைத் தள்ளி தலையை வெளியில் நீட்டி மூச்சை உள்ளே இழுத்தேன். காற்று குளிர் ஏறிப் போயிருந்தது அன்றைக்கு. திறந்த யன்னலூடாக தூரத்து வைத்தியசாலையின் விளக்குகள் தெரிந்தன. இரவு அடர்ந்து வெளியில் கிடந்தது. சில நிமிடங்களுக்குப் பின்னர்தான் என்னுள்ளும் குளிர் பரவி அமைதி உள்ளேயும் சில்லிடத் தொடங்கியது.

என்னுடைய திணறல் பதற்றம் எதையும் அவன் கவனித்ததாக தெரியவில்லை. அவன் எதையுமே பேசாமல் தன் கட்டிலில் போய் உட்கார்ந்து கொண்டிருந்தான்.

காற்று மலைகளுக்கிடையில் கூவும் சத்தமும் தூரத்தே எங்கோ ஜெனெரேட்டர் ஓடும் சத்தமும் கேட்டுக் கொண்டே இருந்தது அறையில் குளிர் பரவத் தொடங்க யன்னலை இழுத்து மூடினேன்.

அவனுடையதும் என்னுடையதுமான கட்டில் விளக்குகளின் ஒளித் தடுப்பின் நிழல்கள் சந்தித்த இடத்தில் அறை இருளாய்க் கிடந்தது. அவன் கண்களைச் சந்திப்பதை தவிர்ப்பதற்காக சுற்றிக்கொண்டு அந்த இருளினூடாக என் கட்டிலுக்குத் திரும்பினேன். உட்கார்ந்து பெருமூச்சு விட்டுக்கொண்டு கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். காலை மூன்று மணியாகிக் கொண்டிருந்தது.

காலை மூன்று மணிக்கு யன்னலில் நின்று என்ன செய்கிறான் என்று யோசனை உடனே தோன்றி மறைந்தது.

எதையும் எனக்கு கேட்கத் தோன்றுவதில்லை. வார்த்தைகள் உள்ளிழுக்கப்பட்டுவிடுவது போல. பேசுவது அந்த இரவின் மௌனத்தை பெரிய கண்ணாடி விழுந்து சிதறுவது போல உடைக்கும் என்று மனதில் தோன்றி உடல் கூசியது. கேட்டாலும் என் குரல் அவன் காதில் விழாதவாறு வார்த்தைகள் பிரிந்து அர்த்தமற்ற ஒலிகளாய் சிதறி அறையெங்கும் பரவும் போலத் தோன்றியது. உச்சரிக்கப்பட்டுக் காற்றில் விடப்படுகிற வார்த்தைகள் பற்றிய பயம் எனக்கு எப்படி வந்ததென்று ஞாபகமில்லை.

வாசு என்னிடமிருந்து வார்த்தைகளை பிடுங்கிக் கொள்வதில்லை. பேசுவதற்கான பிரியமற்றவனாகவே இருந்தான். அறையின் இரு பக்கத்து சுவர்களைப் போலவே நாங்கள் இருந்தோம்.

கட்டிலில் சரிந்து என் விளக்கை அணைத்தேன். மீண்டும் போர்வை இழுத்து மூடியபோது கமரா கண் சிமிட்டுவது போல அவனைப் பார்த்து விட்டேன்.

கட்டிலில் கால்களைச் சேர்த்து சுவரோடு சாய்ந்து உட்கார்ந்திருந்தான். படிக்கும் பல்ப்பின் மேல் கவிந்திருந்த விளக்கின் தடுப்பு நிழல் அவன் கண்களை மறைத்திருந்தது.

உதடுகளும் மெல்லிய வரி மீசையும் ஒரு பக்கம் ஒளியூட்டப்பட்டிருந்தது. மெல்லிய ஒடுங்கிய முகம் கூர்மையான உடைந்து விடலாமென்று தோன்றுகிற மூக்கு. பெரிய உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன.ஏதோ சத்தமின்றி உச்சரிப்பது போலவும் தோன்றியது. நடுங்குவதைப் போலவும் தோன்றியது. வெளிச்சத்தில் தெரிந்த கன்னப் பகுதியில் கோடாய் ஈரம் பளபளத்தது. விளக்கொளியின் நிழலில் அழுது கொண்டிருப்பவனின் ஓவியம் போலத் தோன்றினான்.

தலை வரை போர்வையை இழுத்துக் கண்களை மூடிக்கொண்ட பின்பும் அவனுடைய அரையிருளில் மூழ்கிய தோற்றம் மனத்தில் படமாய்த் தோன்றிக் கொண்டிருந்தது. அழுகிறானா என்று உற்றுக் கேட்டேன். கடிகாரத்தின் முள்ளின் ஒலி மட்டும் காதில் விழுந்து கொண்டிருந்தது. இரவு சலனமின்றித் தொடர்ந்தும் கிடந்தது. வழமை போலவே சட்டென்று உறங்கிப் போனேன்.

காலையில் வாசுவை நான் காணவில்லை. காலையென்றென்ன மாலையாகி இருண்டும் அவன் வரவில்லை. பேசிக் கொள்வது நின்று விட்டதிலிருந்து அவன் போகுமிடம் ஒன்றும் சொல்லிக் கொள்வதில்லை.
.
ஒரு வாரம் ஓடியும் அவன் திரும்பவில்லை. சில வேளை அவன் இப்படித்தான். ஒரு வாரம் இரண்டு வாரம் அறைக்கு வராமல் இருந்திருக்கிறான்.

அவனுடைய கட்டில் விரித்தபடியே இருக்கும். மடிப்புகளில்லாமல் அழுத்திவிட்டது போல நீல விரிப்பில் அவனுடைய சில பொருட்களை வைத்திருப்பான். கட்டிலுக்குக் கிழே அவன் ஒரு பை இருந்தது. காது வளைந்த வெளிறிய பையைக் காணவில்லை.

வாசு மலைத் திருப்பத்திலிருந்த அலுவலகத்தில்தான் வேலை செய்தான். என்ன வேலை செய்தான் என்றுகூட நான் கேட்டதில்லை. கேட்கத் தோன்றவில்லை அவன் என்னைக் கேட்டதாகவும் ஞாபகமில்லை. கூட இருக்கிற ஆறு மாதத்தில் தொடக்கத்தில் பேசிக் கொண்டோம்.அதுவும் சில வார்த்தைகள்.

கனவில் வந்த இருட்டு மெல்லக் கலைந்து போக அறை பிரகாசமாவது போலிருந்தது. மதியப் பொழுது சாய்ந்து விட்டது.

கதவில் மென்மையாக யாரோ தட்டினார்கள்.

அவனைத் தேடியோ என்னைத் தேடியோ யாரும் வந்ததில்லை. நான் எழுந்து ஓடிச் சென்று கதவைத் திறந்தேன்.

மெலிந்த சிறு உருவமான வயோதிபப் பெண் நின்றிருந்தாள். காற்று கொண்டு வந்து ஒதுக்கிய சருகு போலிருந்தாள். கண்கள் உள்ளிறங்கி முகம் ஒடுங்கி கன்ன எலும்புகளின் பின்னால் தெரிந்த கண்கள் இன்னொரு உலகத்தின் வாசல் போலத் தோன்றின. மெல்லிய நீல வெளிறிப் போன சேலையும் மை நீலத்தில் சட்டையும் அணிந்திருந்தாள்

‘’நான் வாசுவின் அம்மா’’

மிக மெல்லிய குரலில் காற்றும் அசையாத வண்ணம் அவள் பேசினாள்.

நான் வழி விட்டேன். அவள் உள்ளே மெல்ல நடந்து வந்தாள்.

பிரம்புக் கதிரையில் விளிம்பில் உட்கார்ந்து கொண்டபோது அவள் இன்னும் சிறுத்து விட்டது போல தோன்றியது.

’அவன் உங்களுக்கு ஒண்டும் சொல்லவில்லையே’’

நான் ஒன்றும் பேசவில்லை.
.
அவள் எனக்கு எல்லாந் தெரிந்திருப்பதாக நினைத்து பேசத் தொடங்கினாள். பேசத் தொடங்க அவள் கண்களில் கண்கள் பளபளத்து கண்ணீர் தளும்பியது.

அது கடலைப் போல நீல நிறமாயிருந்தது. இன்னொரு உலகத்திலிருந்து திரண்டு வருமாப்போல இருந்தது. அவள் பேசுகிற வார்த்தைகள் எதுவும் எனக்குப் புரியவில்லை. காது அடைத்துக் கொண்டுவிட்டது. கண்களை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன். வார்த்தைகள் கண்ணீரில் மிதந்தன. பேசப் பேச வார்த்தைகள் சேர்ந்து பெருக்கெடுத்து அவை அலையாக பொங்கின. அவள் குலுங்கியிருக்க வேண்டும்.

கண்ணீர் உடைந்து கன்னத்தில் வழிய அவள் விம்மினாள்.

பேச்சு நின்று புறங்கையால் கண்களைத் துடைத்தபடி, ‘தம்பியின்ரை பொருட்களைத் தாறீங்களா’’

அவள் அழுத்திக் கேட்கத்தான் என் மனம் அவள் கண்களிலிருந்து அறுத்துக்கொண்டது. நான் விருட்டென்று எழுந்தேன்.

வாசுவின் பொருட்கள் அதிகமில்லை. வெளிறிப் போன பையைத் தூக்கிக் கொண்டு அவள் ஒடுங்கிய பலகைப் படிக்கட்டில் மெல்ல மெல்ல இறங்கினாள். நான் கதவில் சாய்ந்து நின்று அவள் இறங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இறங்கி நின்று திரும்பி நிமிர்ந்து என்னை ஒரு முறை பார்த்தாள். மாலைச் சூரியனின் வெளிச்சம் கதவின் வழியாக அவள் முகத்தில் விழுந்து, நிழல் முகத்திலிருந்து இறங்கி கீழ்தளம் முழுவதும் நீண்டிருந்தது.

அவள் நடந்து பார்வையிலிருந்து மறைந்தபின் அறைக்குத் திரும்பினேன்.

அறையெங்கும் மெல்லிய நீலம் பரவியிருந்தது போல தோன்றியது. கண்ணீரிலிருந்து சிதறிய வார்த்தைகள் அருவமாகி அறையெங்கும் மிதந்து கொண்டிருப்பது போல அதை நான் மூச்சோடு உள்ளே இழுத்துக் கொண்டிருப்பதான உணர்வு எழுந்தது.

எனக்கு மூச்சுத் திணறத் தொடங்கியது கனவில் வருவது போலவே. அந்தரித்து ஓடி யன்னலை அடித்துத் திறந்தேன்.

காற்று குளிர்க்கையால் கன்னங்களை வருடியது. வானம் வெளித்து நீலம் எங்கும் பரவிக் கிடந்தது.

Advertisements

10 thoughts on “யன்னல்

  1. எதையேனும் திருத்த வேண்டுமானால் சொல்லுங்கள், திருத்தி விடுகிறேன்.

   எந்த திட்டமுமில்லாமல் இந்த சிறுகதைகளுக்கு ஒரு வரிசை உருவாகிறது- அதில் உங்கள் கதையையும் சேர்க்கிறேன்.

   முதல் மூன்று கதைகள்- வழிக்கு வராத குழந்தைகள்.

   அடுத்த மூன்று கதைகள்- குறுகிய அறைகள் …

   :))

  1. நிஜமாகவே ஒற்றுமை இருக்கிறது 🙂 இந்தக் கதைகளை வகைப்படுத்தவே ஒரு பக்கம் திறக்க வேண்டும் போலிருக்கிறது…

  1. சிறுகதைகள் என்ற தலைப்பில் பக்கத்தில்தானே இருக்கு…

   ஒரு முறை பார்த்துவிட்டு அலறுங்களேன் 🙂

  1. இல்லாம பின்னே? உள்ளே வெளியே வரிசையில் தர்பர் மற்றும் வரசித்தன் வரிசையில் உலகின் மற்றொரு தலைசிறந்த சிறுகதை எழுத்தாளரும் சேரவிருக்கிறார்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s