ஆனந்தம்

சண்டே ஸ்பெஷல்!- Joy – Chekov

ஆனந்தம் – செகாவ்

இரவு மணி பன்னிரெண்டு.

பரபரத்த முகமும் கலைந்த முடியுமாய் மித்யா குல்தரோவ் தன் பெற்றோரின் ப்ளாட்டுக்குள் அவசர அவசரமாக நுழைந்து அதன் அறைகள் அனைத்திலும் விரைந்தோடினான். அவனது பெற்றோர் தூங்கப் போய் விட்டிருந்தார்கள். அவனது சகோதரி படுக்கையில் ஒரு நாவலின் கடைசி பக்கத்தை முடித்துக் கொண்டிருந்தாள். பள்ளி மாணவர்களாக இருந்த அவனது சகோதரர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர்.

“எங்கே போய் விட்டு வருகிறாய்?” என்று அவனது பெற்றோர் திகைப்போடு கேட்டனர். “உனக்கு என்ன ஆயிற்று?”

“ஓ, அதைக் கேட்காதீர்கள்! நான் இதை எதிர்பார்க்கவேயில்லை; இல்லை, நான் இதை எதிர்பார்க்கவேயில்லை! இதை…இதை என்னால் நம்பவே முடியவில்லை!”

மித்யா சிரித்துக் கொண்டே கைநாற்காலி உள்ளழுந்த உட்கார்ந்தான். மிதமிஞ்சிய மகிழ்ச்சியில் அவனால் நிற்கவே முடியவில்லை.

“இதை என்னால் நம்பவே முடியவில்லை! உங்களால் நினைத்தே பார்க்க முடியாது! பாருங்கள்!”

அவனது சகோதரி தன் படுக்கையில் இருந்து குதித்து எழுந்தாள். தன்னை ஒரு போர்வையால் (quilt) போர்த்துக் கொண்டு தன் சகோதரனிடம் சென்றாள். பள்ளிச் சிறுவர்களும் விழித்துக் கொண்டனர்.

“என்ன ஆச்சு? நீ எப்போதும் இருப்பது போல் இல்லையே!”

“அம்மா, நான் அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன், அம்மா! உங்களுக்குத் தெரியுமா, இப்போது முழு ரஷ்யாவுக்கும் என்னைத் தெரியும்! முழு ரஷ்யாவுக்கும்! இதுவரை திமித்ரி குல்தரோவ் என்ற ஒரு குமாஸ்தா பதிவுத்துறையில் இருப்பதை நீங்கள் மட்டும்தான் அறிந்திருந்தீர்கள், இப்போது இது ரஷ்யாவெங்கும் தெரிந்துவிட்டது! அம்மா! கடவுளே!”

மித்யா குதித்தெழுந்தான். அத்தனை அறைகளையும் ஓட்டமாய்ச் சுற்றி வந்து, மீண்டும் அமர்ந்தான்.

“ஏன், அப்படி என்ன நடந்தது? புரிகிற மாதிரி எங்களுக்குச் சொல்லேன்!”

“நீங்களெல்லாம் காட்டு விலங்குகளைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். செய்தித்தாள்களைப் படிப்பதில்லை. அதில் அச்சாகும் விஷயங்களை கவனிப்பதில்லை. செய்தித்தாள்களில் எவ்வளவு சுவையான விஷயங்கள் இருக்கின்றன! ஏதாவது நடந்தால் அது உடனே தெரிந்து விடுகிறது, எதுவும் மறைந்திருப்பதில்லை! நான் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் தெரியுமா! கடவுளே! மக்களால் கொண்டாடப்படுபவர்களின் பெயர்கள் மட்டும்தான் செய்தித்தாள்களில் அச்சிடப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியும். இப்போது அவர்கள் என் பெயரையும் அச்சிட்டு விட்டார்கள்!”

“என்ன சொல்கிறாய்? எங்கே?”

அப்பாவின் முகம் வெளிறிவிட்டது. அம்மா புனிதத் திருவுருவை நோக்கி சிலுவையிட்டு கொண்டாள். பள்ளிச் சிறுவர்கள் படுக்கையில் இருந்து குதித்து எழுந்தார்கள். அவர்கள் அணிந்திருந்த சிறு இரவு உடையில் தங்கள் அண்ணனிடம் சென்றார்கள்.

“ஆமாம்! என் பெயர் அச்சில் வந்து விட்டது! இப்போது முழு ரஷ்யாவுக்கும் என்னைத் தெரிந்து விட்டது! அதன் நினைவாக இந்த செய்தித் தாளை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள் அம்மா! அவ்வப்போது நாம் அதை எடுத்துப் படிப்போம்! பாருங்கள்!”

மித்யா தன் பாக்கெட்டில் இருந்து அந்த செய்தித்தாளின் பிரதியை எடுத்து தன் தந்தையிடம் கொடுத்தான். அவன் தன் விரலால் நீல பென்சிலால் அடையாளமிட்டிருந்த பத்தியைக் காட்டினான்.

“இதைப் படியுங்கள்!”

அப்பா தன் கண்ணாடியைப் போட்டுக் கொண்டார்.

“படித்துப் பாருங்கள்!”

அம்மா புனிதத் திருவுருவை நோக்கி சிலுவையிட்டு கொண்டாள். அப்பா தொண்டையைக் கனைத்து படிக்கத் தொடங்கினார்: “டிசம்பர் மாதம் இருபத்தொன்பதாம் தேதி மாலை பதினோரு மணி அளவில் திமித்ரி குல்தரோவ் என்ற பெயர் கொண்ட பதிவுத்துறை குமாஸ்தா…”

“பார்த்தீர்களா, பார்த்தீர்களா! மேலே படியுங்கள்!”

“திமித்ரி குல்தரோவ் என்ற பெயர் கொண்ட பதிவுத்துறை குமாஸ்தா, சிறு ப்ரோன்னையாவில் உள்ள கொஜிஹின் கட்டிடங்களில் உள்ள ஒரு சாராயக் கடையிலிருந்து குடிபோதையில் வெளிவரும்போது…”

“நானும் செம்யோன் பெத்ரோவிச்சும்…. எல்லாவற்றையும் உள்ளபடியே விவரித்திருக்கிறார்கள்! தொடருங்கள்! கேளுங்கள்!”

“குடிபோதையில் வெளிவரும்போது யூநோவ்ஸ்கி மாவட்டத்தில் உள்ள துரிகினோ என்ற கிராமத்தைச் சேர்ந்த குடியானவர் இவான் த்ரோடோவ் என்பவர் ஓட்டி வந்த பனிச்சறுக்கு வாகனத்தை இழுத்து வந்த குதிரையின்கீழ் வழுக்கி விழுந்தார். அதனால் மிரண்ட குதிரை, குல்தரோவைத் தாண்டி அவர் மீது பனிச்சறுக்கு வண்டியையும் அதிலிருந்த மாஸ்கோ நகர இரண்டாம் கில்டைச் சேர்ந்த வணிகர் ஸ்டீபன் லூகோவ் என்பவரையும் தெருவில் இழுத்துச் சென்றது. அந்தக் குதிரையை அங்கிருந்த வீடுகளின் காவலர்கள் தடுத்து நிறுத்தினர். முதலில் உணர்வற்ற நிலையில் இருந்த குல்தரோவ் காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு மருத்துவர் ஒருவரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்மண்டையில் அவருக்கு ஏற்பட்ட காயம்…”

“அது வண்டியின் தண்டால் (shaft) ஏற்பட்ட காயம் அப்பா! படியுங்கள்! இன்னம் இருப்பதையும் படியுங்கள்!”

“பின் மண்டையில் அவருக்குப் ஏற்பட்ட காயம் ஆபத்தானதாக இருக்கவில்லை. இந்த சம்பவம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. காயப்பட்ட நபருக்கு மருத்துவ உதவி அளிக்கப்பட்டது…”

“குளிர்ந்த தண்ணீரால் என் பின்மண்டைக்கு ஒத்தடம் தரச் சொன்னார்கள். இப்போது படித்து விட்டீர்கள்தானே? ஆ! பார்த்தீர்களா? ரஷ்யாவெங்கும் என் பெயர் பரவி விட்டது இப்போது! இங்கே கொடுங்கள்!”

“நான் மகரோவ்கள் வீட்டுக்குப் போய் இதை அவர்களுக்குக் காட்ட வேண்டும்… இவானித்ஸ்கிகளுக்கும் காட்டியாக வேண்டும், நடாஸ்யா இவனோவாவுக்கும் அனிசிம் வஸ்ஸிலியிட்ச்சுக்கும்…. நான் ஓடிப் போக வேண்டும்! போய் வருகிறேன்!”

மித்யா தன் சேவல் கொண்டை வைத்த குல்லாவை தலையில் போட்டுக் கொண்டான், வெற்றியின் எக்காளக் களிப்புடன், தெருவுக்கு ஓடினான்.

Advertisements

4 thoughts on “ஆனந்தம்

  1. ஆனந்தம் நன்றி

    செகாவ் இன் சிறுகதைகள் மிகவும் பிடித்தவை.
    பிரபலமானவை.எங்கள் பாடப்புத்தகத்தில் (10 ம்ஆண்டு)misery என்ற கதையை மொழிபெயர்த்துபோட்டிருந்தார்கள். 9ம் ஆண்டு ஆங்கிலப்பாடப்புத்தகத்தில் sneeze கதை.

    மூன்றுகதைகளும் வெவ்வேறான உணர்ச்சிகளை வாழ்க்கையின் அபத்தப்பின்னணியில் காட்டுகின்றன.

    1. செகாவின் கதைகள் பற்றிய உங்கள் எண்ணத்தை ஒரு சிறு கட்டுரையாக எழுதலாமே? பயனுள்ளதாக இருக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s