நீட்டி முழக்கிய நிரந்தரமான வாய்ப்பாடு.

எப்படியும் யாருக்கும் எதுவும் புரியப்போவதில்லை, இருந்தாலும் இதைப் படித்துவிட்டு இதைப் படிக்க வந்தால் நன்றாக இருக்கும்.

வருத்தம்- துயரம்- ஜெயமோகன் பதிவு- கோர்வையாகப் படிக்க முடியவில்லை.

“ஒரு நாவல் உருவாக்கியாக வேண்டிய ஆழமான அக நெருக்கடியை உருவாக்காமல் எளிய கிளர்ச்சியையும், சரளமான வாசக ருசியையும் மட்டுமே ஜானகிராமனின் நாவல்கள் அளிக்கின்றன. நாவல் என்ற சவாலை அவர் சந்திக்கவே இல்லை. அதை அவர் அறிந்திருந்தாரா என்பதே தெரியவில்லை.”

அப்படியானால், மகத்தான என்ன மகத்தான, மண்ணாங்கட்டிகளுடன்கூட அன்னாரின் நாவல்களை ஒப்பிட முடியாது. ஆங்கிலத்தில், be grateful for small mercies என்று சொல்வார்களே, அதை நாம் மறக்கக்கூடாது-

“மகத்தான வங்க, கன்னட, இந்தி, உருது நாவலாசிரியர்களுடன் ஜானகிராமனை ஒப்பிடவே முடியாது.”

நாவலின் சவால் என்னவென்றே தெரிந்திருக்குமா இவருக்கு எனும்படியான நாவல்களை எழுதிய ஒருவரை மகத்தான வங்க, கன்னட, இந்தி, உருது நாவலாசிரியர்களுடன் ஒப்பிட்டுப் பாராட்டியமைக்கு நன்றி சார்- இவர்களுடன் ஒப்பிடப்படுவது சாதாரணமான விஷயமா என்ன!

இத்தனைக்கும், பெரும் சலிப்பை ஏற்படுத்தும் அவரது சில நாவல்கள்,

“நடுத்தர வர்க்க வாசகர்களை அதிகம் சீண்டாமல், ஒழுக்கவியல் சார்ந்த கலவரம் அடையச் செய்து கவனம் பெறுவதற்கான முயற்சிகள் மட்டுமே…”

அது மட்டுமல்ல, அந்த நாவல்களில் (‘செம்பருத்தி, மலர்மஞ்சம், அன்பே ஆரமுதே போன்ற’ எத்தனை நாவல்கள் என்று குறிப்பிடப்படவில்லை- “ஒரு நாவல் உருவாக்கியாக வேண்டிய ஆழமான அக நெருக்கடியை உருவாக்காமல் எளிய கிளர்ச்சியையும், சரளமான வாசக ருசியையும் மட்டுமே ஜானகிராமனின் நாவல்கள் அளிக்கின்றன” என்று ஜெயமோகன் அவர்கள் பொதுமைப்படுத்தி எழுதியிருப்பதால், தி ஜானகிராமனின் பக்தர்களால் பெரிய அளவில் பேசப்படும் அம்மா வந்தாள், மரப்பசு, அப்புறம் இன்னொன்று சொல்வார்களே, என்ன அது, அதில்கூட பாபு என்ற பெயரில் ஒரு ஹீரோ வருவானே, சினிமாவாகக்கூட வந்ததே- ஆ, ஆமாம், மோகமுள், அவை அனைத்திலும்) “அவரது மேதமைக்கான தடயங்கள் ஆங்காங்கே இருந்தாலும் அவை அடிப்படையில் அவரது நிரந்தரமான வாய்ப்பாடை ஆதாரமாகக் கொண்டு அந்தந்த வாரம் மனதுக்குத் தோன்றுவது போல நீட்டி, நீட்டி எழுதப் பட்டவை

தி ஜானகிராமன் நீட்டி முழக்கிய நிரந்தரமான வாய்ப்பாடு.

குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இரட்டை கோபுரங்களாக அவர்தம் பிக்மி பக்தர்களால் கட்டமைக்கப்படும் சுஜாதா மற்றும் தி ஜானகிராமன் ஆகிய இருவருக்கும் உரிய இடம் எது என்று கண்டுபிடித்து அங்கே அவர்களை அமர்த்தியிருக்கிறார் ஜெயமோகன் அவர்கள் என்று நினைக்கிறேன்.

இவர்கள் இருவரும் மட்டமான தொடர்கதைகளை எழுதிய உலகத்தரம் வாய்ந்த சிறுகதை எழுத்தாளர்கள். இதில் சண்டை போடுவதற்கு ஒன்றுமில்லை. கறாரான விமர்சனப் பார்வை.

இத்தகைய கறாரான விமரிசனப் பார்வைதான் நமக்கும் வேண்டும்.

சுஜாதா பக்தர்களே, தி ஜானகிராமன் பக்தர்களே, ஜெயமோகன் வாசகர்களே, நம் எல்லாருக்கும் சொல்கிறேன்- ஒரு எழுத்தாளன் தொட்ட சிகரங்களை மட்டும் நாம் கணக்கில் எடுத்துக் கொண்டு அவன் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பை முடிவு செய்யக் கூடாது. அவனை உலக அளவில் பாராட்டும்போதே, அதே மூச்சில், அவனது அற்பத்தனமான தோல்விகளையும் சுட்டிக் காட்ட வேண்டும்- அவை அவனது சிறுகதைகளில் நிகழ்ந்திருக்கலாம், தொடர்கதைகளில் நிகழ்ந்திருக்கலாம், கவிதைகளில், நாவல்களில், நாடகங்களில், தொலைக்காட்சித் தொடர்களில், ஏன், அவனது திரைக்கதைகளிலும் நிகழ்ந்திருக்கலாம். ஒரு கறாரான வாசகன் இலக்கியம் படைத்தவர்கள் தொட்ட உச்சங்களைப் பேசும்போது, மீண்டும் மீண்டும் அவர்களது வீழ்ச்சிகளை அடிக்கோடிட்டுக் காட்ட மறக்கக் கூடாது.

இதுதான் நமக்குக் கிடைத்திருக்கும் பாடம். மனிதன் மகோன்னதமானவனல்ல. அடிப்படையில் அவன் ஒரு அற்பன். இந்த அற்பனுக்கும் மகோன்னதமான தரிசனங்கள் சாத்தியமாவதைப் பேசுவதுதான் இலக்கியம். வீழ்ச்சிகளைப் பேசும்போது வலிக்கிறது என்று சொல்பவர்கள், சிகரங்களை அடைவதன் வலியை அறியாதவர்கள்- அதன் பேருண்மையை மலினப்படுத்த நினைப்பவர்கள்.

ஜெயமோகன் அவர்களிடம் கேள்வி கேட்ட அப்பாவி, வெங்கட் சாமிநாதனின் இந்த மேற்கோளைச் சுட்டிக் காட்டியே தன் கேள்வியைக் கேட்டார்:

“தமிழ் இலக்கிய உலகம் இவ்வகையில் அவரை உணர்ந்ததில்லை. இனங்கண்டு கொண்டதில்லை. தமிழ் இலக்கிய உலகுக்கு அவர் ஒரு காலத்திய (அறுபதுக்கும் முந்திய) ஸ்வாரஸ்யமாக காதல் கதைகள் எழுதும் தொடர்கதை எழுத்தாளர்.”

இதைத் தொடர்ந்து, வெங்கட் சாமிநாதன்,  இந்தப் பத்திக்கு அடுத்த பத்தியின் முதல் வாக்கியத்தில் இப்படி எழுதுகிறார், “தமிழின் இன்றைய உலகுக்கு இதையும்விட பன்மடங்கு அதிகம் கொச்சைப்படுத்தும் திறன் உண்டு” என்று.  அன்றைக்கு அதைப் படித்தபோது, “இதைவிட மோசமாக வேறு என்ன சொல்லிவிட முடியும்?” என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. வெங்கட் சாமிநாதன் மிகையுணர்வோடு எதிர்வினையாற்றுபவர் என்று சொல்கிறார் ஜெயமோகன் அவர்கள். ஜெயமோகன் அவர்கள் சொல்வதால் அது சரியாகத்தான் இருக்கும்.

நான் அதை நம்ப மாட்டேன்.

———————————–

எங்கே ஜானகிராமன்?

தி ஜானகிராமனைப் பற்றி எழுதுகிறார் கரிச்சான்குஞ்சு:

“அமரர் கு.ப.ரா.”வாம். பெரிய கண்றாவி. அவர் அந்த நாட்களில் அடைந்த கஷ்டங்கள், வறுமை, ஏமாற்றங்கள் உரிய மதிப்பைத் தர மறுத்த மறுதளித்த இலக்கிய ஆஷாடபூதிகள் ஆகியவற்றால் அவர் மனம் புண்பட்டு இறந்தார். தகுந்த சத்துணவும், மருந்துகளும் பெற இயலாத வறுமை – மானம் அவரைக் கொன்றது. ஜானகிராமன், அவர் இறந்தபின் இதைச் சொல்லிச் சொல்லி வருந்துவான். இதில் இன்னுமொரு விசேஷமும் உண்டு. கு.ப.ரா. பற்றி எங்கள் மூலம் முன்பு ஜானகிராமனுடைய தந்தை கேள்விப்பட்டிருந்தார். ஜானகிராமன் அவருடன் பழகுவது தரித்ர்யத்தைத் தழுவும் முயற்சி என்று அவர் கசந்துகொண்டதுண்டு. கு.ப.ரா. இறந்த பிறகு ஜானகிராமனிடம் நேரிடையாக இதைத் தகப்பனார் கூறத் தொடங்கினார். “கதை எழுதுவது என்றார் கார் வைத்துக் கொண்டிருக்கும் கல்கி மாதிரி ஆக முயலுதல் வேண்டும். பணமும் இல்லை, புகழும் இல்லை, இதென்ன தரித்திரக் கும்பல்,” என்ற அளவுக்குப் போய்விட்டார் …”

இன்று எங்கே அந்த ஜானகிராமன்?

இந்த ஜானகிராமன்தான் இதையும் செய்தது:

கோயம்புத்தூரில் நடந்த முதல் எழுத்தாளர் மகாநாட்டுக்கு நாங்கள் சென்றிருந்தோம். “வசந்தம்” என்று பத்திரிகை நடத்திய ஆர்.திருஞானம், “ரதி” ஆர்.ஷண்முக சுந்தரம் இருவரும் ஜி.டி.நாயுடு, ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் ஆகியோர் ஆதரவுடன் நடத்தியது அது. மிகவும் நல்ல ஏற்பாடுகள். கல்கி தலைமை. எழுத்தாளர் ஒவ்வொருவரும் மேடைக்கு வந்து தங்களைத் தாமே அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். ஜானகி என்னையும் இழுத்துக்கொண்டு மேடைக்குப் போனான். “நாங்கள் புத்தம் புதிய எழுத்தாளர்கள் – தமிழ் இலக்கியத்தின் பர்னாட் ஷாவாக மலரப் போகிறவர்கள்,” என்று தொடங்கினான். ஒரே கை தட்டல். “நாங்கள் எழுதும் ஒவ்வொரு வாக்கியமும் ‘ஒரிஜினல்’,’” என்றதும் ஆரவாரம் அதிகம் ஆயிற்று. விஷயம் என்னவென்றால் அப்போது கல்கி, ஸி.என்.அண்ணாத்துரையை பர்னாட்ஷா என்று எழுதியிருந்தார். புதுமைப்பித்தன், “ரஸமட்டம்” வைத்துக் கல்கி எழுத்தின் மூலங்களைக் காட்டிச் சாடியிருந்தார். ஜானகிராமன் அறிமுக வார்த்தைகள் கல்கியை மிகவும் பாதித்திருக்க வேண்டும். அவர் தன் பேச்சில் இதையே பல தடவை தன் கிறிச்சுக் குரலில் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார். “ஆமாம் டூமாஸ் (டூமா), ஸ்காட் முதலியவர்கள் எனக்குக் குருநாதர்கள். மனித வாழ்க்கையில் மிகவும் ஒளி மறைவுச் சங்கதிகளான ஆண் பெண் உறவு சங்கதிகளை எழுதுவது பெரிய இலக்கியமாகிவிடுமோ?” என்றெல்லாம் அங்கலாய்த்துக் கொண்டார்.

இன்று எங்கே அந்த ஜானகிராமன்?

” என் அண்ணாவும், உன்னைப் போன்ற ஜடங்களும் என்னிடம், என் எழுத்தைப் பற்றி, அதன் ஏன், என்ன என்பது பற்றிக் கேட்பது தவறு; வாயை மூடிக்கொள்,” என்று அம்மா வந்தாளை நியாயப்படுத்தி கரிச்சான்குஞ்சுவுக்குக் கடிதம் எழுதிய ஜானகிராமன் இன்று எங்கே?

ஊரில் உள்ள குழந்தைகள் எல்லாம் தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பே பட்டுப் பாவாடை வாங்கி சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும்போது, “தீபாவளி மலர்களுக்கு நாலு கதைகள் எழுதி தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பு வரும் ஊதியத்தில்… அம்மாவுக்கு நூல் புடவை, எங்களுக்குக் கதர் உடுப்புகள், அவருக்கு கதர் வேஷ்டி, ஜிப்பா; இவற்றோடு பாட்டு வாத்தியார், குடும்ப வைத்தியர், நண்பர், வேலைக்காரி எல்லோருக்கும் கதர் / நூல் உடைகள்”  கொடுத்து மகிழ்ந்த ஜானகிராமன் இன்று எங்கே?

என் மரப்பசு என்னைப் பெற்று உருவாக்கிய சமுதாயத்திற்குத் தண்டனை,” என்று எழுதிய ஜானகிராமன் இன்று எங்கே?

தி ஜானகிராமன் நீட்டி முழக்கிய நிரந்தரமான வாய்ப்பாடு.

தி ஜானகிராமன் என்ற மனிதன், தன் நண்பன், தன் உறுப்பாக இருந்தவன் மறைந்ததற்குதான் கரிச்சான்குஞ்சு வருத்தி அஞ்சலி செலுத்துகிறார். ஆனால் உண்மையில் ஒரு எழுத்தாளனாக தி ஜானகிராமன் மறைவது இப்போதுதான்.

ஒரு சாதாரண வாசகனாக அல்ல, தமிழின் இந்தக் காலகட்டத்தின் முதன்மையான எழுத்தாளனாக , இந்தக் காலகட்டத்தின் இலக்கிய மதிப்பீடுகளைத் தீர்மானிப்பவர்களில் ஒருவனாக நின்று”  பேசுபவர் சொல்லிவிட்டார்- தி ஜானகிராமன் நீட்டி முழக்கிய நிரந்தரமான வாய்ப்பாடு.

இனி செலுத்துங்கள் உங்கள் அஞ்சலிகளை.

அப்படியும் அதிகம் பேர் செலுத்த வேண்டியதில்லை மக்களே, ஜானகிராமன் மறைந்தபோது அவரைப் புறக்கணிக்காமல் விவாதித்த அந்த இரண்டாயிரம் இலக்கியவாதிகள் இப்போது நான்காயிரமாக மிகுந்திருப்பார்களா? அவர்கள்தான் இன்றைக்கும் அஞ்சலி செலுத்த வேண்டும்.

கு.ப.ரா என்ன கு.ப.ரா., பாரதியையும் புதுமைப்பித்தனையும் பட்டினி போட்டுக் கொன்ற தமிழ் இலக்கிய உலகம் தன் உயர்ந்த படைப்பாளிகளை மீண்டும் மீண்டும் புறக்கணித்துக்கொண்டே இருந்தது என்ற அவப்பெயரை நீக்க நாளை ஜெமோவுக்கும் அஞ்சலி செலுத்த ஒரு எட்டாயிரம் பேர் தேற மாட்டார்களா?

தமிழ் இலக்கியத்தின் கடைசி சிரிப்பு கரையான்களுக்கே என்றும் உரியது. அன்று ஏட்டுச் சுவடிகளைத் தின்றன. இன்று காகிதத்தைத் தின்கின்றன. நாளை வாழ்ந்தவர்களின் புகழைத் தின்று அழிக்கும்.

இதற்கிடையில்தான் இத்தனையும்.

Advertisements