இது வேற வாய்….

கடந்த பதிவு குறித்து நண்பர் ஒருவருக்கு அளித்த பதில்… அதில் தெரியும் தொனிக்கும் கடந்த பதிவில் இருக்கும் தொனிக்கும் ஒரு நுட்பமான வேறுபாடு இருப்பதாக நான் சந்தேகிப்பதால்,  சென்ற பதிவைப் படித்து ரசித்த அன்பர்களின் சிறப்பு கவனிப்புக்கு இங்கே- 

உங்களுக்கே தெரியும், நான் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் எதையாவது சொல்லிவிட்டு கோபம் தணிந்தபின் பேக் அடித்துவிடுவேன் என்று… அதனால் நான் எழுதியதைப் பற்றி என்னாலேயே சரியாக விளக்கம் சொல்ல முடியாது…

நான் நினைத்ததை சொல்கிறேன்:

எனக்கு இதுதான் பிரச்சினையா இருக்கு- நீங்க ஒரு எழுத்தாளர் தன் மொழிக்கு என்ன செய்தார் என்பதை அவர் தொட்ட சிகரங்களை வெச்சு கணக்கு பண்ணுவீங்களா, அவரோட தோல்விகளை டாலி பண்ணி கணக்கு பண்ணுவீங்களா?

சுஜாதா திஜா. ரசிகர்கள் சிகரங்களைதான் நினைவில் வெச்சுக்கறாங்க (வேணும்னுட்டுதான் அவங்களை வாசகர்கள்னு சொல்லலை). எனக்கு அது தப்பா தெரியல. அவங்க ஒண்ணும் சுஜாதாவுக்கும் திஜாவுக்கும் கோவில் கட்டி கும்பிடப் போறதில்லையே? தங்களுக்குப் பிடிச்சதை பாராட்டறாங்க. பிடிக்காததைப் பாக்கும்போது சைலண்டா தலையைக் குனிஞ்சுகிட்டு போயிடறாங்க. தப்பா?

தோல்விகளைப் பேசட்டும். அவசியம் பேசணும். ஆனா, பாராட்டும்போதே அங்கங்க ஒரு தட்டு தட்டிகிட்டே இருக்கக் கூடாது இல்லையா? என் மனைவி சொல்லுவாங்க, “செருப்பால அடிச்சு சோறு போடற மாதிரி”ன்னு.

அப்படி செய்யக்கூடாது, இல்லியா?

மனசுக்கு கஷ்டமா இருக்கு. ரெண்டு நாளா வேணாம்னுதான் பாத்தேன். அப்பறம் ஆத்தாமை தாங்காமதான் இதை எழுதினேன்.

திஜா பத்தி, அவரோட அறவுணர்வு பத்தி, அங்க இருக்கற சில விஷயங்களைப் பாருங்க. அதைவிட இன்னும் பல எழுதலாம்.

அவர் ஒண்ணும் இலக்கியம்னா என்னன்னே தெரியாம எழுதல: ஆனா ஜெ என்ன சொல்றார் பாருங்க:

“ஒரு நாவல் உருவாக்கியாக வேண்டிய ஆழமான அக நெருக்கடியை உருவாக்காமல் எளிய கிளர்ச்சியையும், சரளமான வாசக ருசியையும் மட்டுமே ஜானகிராமனின் நாவல்கள் அளிக்கின்றன. நாவல் என்ற சவாலை அவர் சந்திக்கவே இல்லை. அதை அவர் அறிந்திருந்தாரா என்பதே தெரியவில்லை”

இது நியாயமா சொல்லுங்க. அவர் எழுதின ஒரு நாவல், அவர் சொல்ற மரப்பசுவை எடுத்துக்குவோம், அதில அக நெருக்கடி உருவாகலைன்னு வெச்சுக்குவோம். ஆனா, என் சமூகத்துக்கு நான் கொடுத்த தண்டனைன்னு திஜா பீல் பண்ணி சொல்றார், அந்த நாவலை அவர் எளிய கிளர்ச்சிக்கும் சரளமான வாசக ருசிக்கும் மட்டுமா எழுதினார்?

சில நாவல்கள்னு சொன்னா பிரச்சினை இல்லை. மொத்தமா டிஸ்மிஸ் பண்ணினா எப்படிங்க ஏத்துக்க முடியும்?

அதே மாதிரி, “ அவரது நிரந்தரமான வாய்ப்பாடை ஆதாரமாகக் கொண்டு…” என்று எழுதுகிறார். எது அந்த ஜானகிராமனின் நிரந்தரமான வாய்ப்பாடு?

கல்கி சொன்னதா கரிச்சான்குஞ்சு சொல்றாரே,

… கல்கியை மிகவும் பாதித்திருக்க வேண்டும். அவர் தன் பேச்சில் இதையே பல தடவை தன் கிறிச்சுக் குரலில் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார். “ஆமாம் டூமாஸ் (டூமா), ஸ்காட் முதலியவர்கள் எனக்குக் குருநாதர்கள். மனித வாழ்க்கையில் மிகவும் ஒளி மறைவுச் சங்கதிகளான ஆண் பெண் உறவு சங்கதிகளை எழுதுவது பெரிய இலக்கியமாகிவிடுமோ?” என்றெல்லாம் அங்கலாய்த்துக் கொண்டார்.”

இதுவா?

இப்படி அதிரடியா ஜானகிராமனின் எழுத்துல நிரந்தரமான வாய்ப்பாடு இருக்குன்னு சொல்றது முறைதானா? அவ்வளவுதானா அவர்?

—————————————-

இதுவரைக்கும் நான் இலக்கியம் விமரிசனம்னு அந்த பக்கம் இந்த பக்கம் வந்தாலே, அது ஜெ செய்த விமரிசனத்துக்கு எதிர்வினையாதான் இருக்கும். நீங்களே கவனிச்சிருப்பீங்க. மத்தவங்க யார் என்ன சொன்னாலும் என்னை பாதிக்கறதில்லை.

ஆனா நாம உயர்வா மதிக்கற ஒருத்தர் இந்த மாதிரி பேசும்போது என்ன செய்யணும்?

எனக்கான தீர்வு இந்த மாதிரி எழுதி தீத்துக்கறது. நான் ஒண்ணும் இலக்கிய கோட்பாடுகளையோ என் ரசனையையோ என் மதிப்பீடுகள் விழுமியங்கள் அப்படின்னு எதையும் யாருக்கும் வற்புறுத்தி எழுதல.

சும்மாக் கிடைக்குதேன்னு ஒரு ப்ளாக். அதைப் படிக்க மிஞ்சிப் போனா பத்து பேர். அவங்களை முன்வைத்து ஒரு வாசகனா எப்படி ரியாக்ட் பண்ணத் தோணுதோ, அப்படி ரியாக்ட் பண்றேன்- அதையும் நான் டிவிட்டர்லயோ, பஸ்லயோ, இன்ட்லிலயோ ஷேர் பண்றதில்ல. உங்களுக்கு உயர் இலக்கியத்தில ஆர்வம் இருந்தா என்னையெல்லாம் கண்டுக்கவே வேணாம்.

என் நண்பர்கள் ஓரிருவர் தவிர யாரும் கண்டுக்கறதும் இல்லை. இதுதான் உண்மை. இது ஒரு சாதாரண வாசகனின், சாதாரண லட்சியங்கள் (அப்படின்னா ஜீரோ லட்சியங்கள்) உள்ள ஒரு சாதாரணனின் சாதாரண அவுட்பர்ஸ்ட். அதுக்கு மேல இதுக்கு என்னளவிலேயே எந்த மதிப்பும் கிடையாது.

நன்றி.

—————————

அன்றைக்கு மேடையேறி கல்கிக்கு சவால் விடற மாதிரி ஜானகிராமன் பேசினார்னு கரிச்சான்குஞ்சு சொல்ற கட்டுரையை நீங்கள் படித்தால், அவரே அடுத்து, “ ஜானகிராமனும் பிற்காலத்தில் இதையெல்லாம் “காம்ப்ரமைஸ்” செய்துகொள்ளும் பக்குவம் பெற்றுவிட்டான்.” என்று எழுதறதைப் பாக்கலாம்.. கரிச்சான்குஞ்சு தன் தோற்றத்தில்கூட எந்த காம்ப்ரமைஸும் செய்து கொள்ளாதவர், அதனால் பக்குவம் என்பதை அவர் உயர்ந்த பொருளில் சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.

ஜானகிராமன் காம்ப்ரமைஸ் செய்து கொண்ட எழுத்தாளர் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அதே போல், அவர் எழுதியது எதையும் திட்டக் கூடாது என்றும் யாரும் சொல்ல முடியாது.

எனக்கு ஜெவின் நோக்கம் புரியாமல் இல்லை: ஆனால் அவர் ஜானகிராமனின் குறைகளை முன்வைப்பதில் காட்டும் வேகம், அதைவிட அவர் பொதுமைப்படுத்தி சொல்லும் சில வாக்கியங்கள், ஜானகிராமனின் ஒட்டுமொத்த எழுத்தின் தரத்தின் மீதே சந்தேகமெழுப்புவதாக உள்ளன.

 

Advertisements