சேனைக் கிழங்கு பட்டை வறுவல்

ஒவ்வொரு நாளும் காய் வெட்டும் வேலை அவனுடையது- அன்று சேனைக்கிழங்கு நறுக்கும்போது ஞானப்பிரகாசனுக்கு சுந்தரவதனத்தின் நினைவு வந்தது.

ஞானத்தின் மனைவி குமுதம் சிநேகிதியுடன் வந்திருந்த இலவச இணைப்பை சேனைக்கிழங்கு மற்றும் அரிவாள்மனையுடன் அவன் காலைடியில் வைத்திருந்தாள்- இந்தியன் எக்ஸ்பிரஸ் (தி ந்யூ- துல்லியமான விவரணைகள் தேவைப்படுவோரின் சிறப்பு கவனத்துக்கு) நாளிதழில் இருந்து தலையை வெளியே நீட்டினான் ஞானம்.

“இது என்ன?”

“படத்துல போட்டிருக்கற மாதிரி சேனைக் கிழங்கை வெட்டிக் குடுங்க”

ஞானம் அந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்துப் பார்த்தான்- சேனைக் கிழங்கு பட்டை வறுவல். பொன்னிற செவ்வடிவ சேனைக்கிழங்குத் துண்டங்கள் மசாலாவில் புரண்டிருந்திருந்தன- ஆங்காங்கே தெரிந்த எண்ணை மினுக்குக்கு அவன் நாக்கில் எச்சிலூறியது.

சுந்தரன் ஒரு காரியரில்தான் தன் மதிய உணவைக் கொண்டு வருவான். அதில் ஒரு குழம்பு, ஒரு ரசம், ஒரு பொறியல், வெறும் சாதம் மற்றும் ஒரு அப்பளம் இருக்கும். பிளாஸ்டிக் பாட்டிலில் மோர்.

அது அந்தக் காலம். இப்போது சுந்தரன் வேலைக்கு வருவதே அபூர்வமாக இருக்கிறது. படுத்த படுக்கையாக இருக்கும் தன் அம்மாவுடன் தனியாக இருக்கிறான்.

அவன் கொண்டு வரும் சேனைக் கிழங்கு பொறியல் இந்த மாதிரிதான் இருக்கும். காத்திரமான மொறுமொறுவென்றிருக்கும் சேனைச் செவ்வகங்கள் ஒவ்வொன்றையும் குறுக்கு வெட்டாக ஒரு ஸாண்ட்விச்சைப் பிரிக்கிற மாதிரி பிரித்து விடலாம். அவ்வளவு நன்றாக வேக வைத்திருப்பார்கள். அது மெல்லிய அடுக்குகளாகப் பிரிந்து வரும். அதனுடன் கலந்த மசாலா சுவை…

அப்போதெல்லாம் சுந்தரன் தன் அண்ணனுடன் இருந்தான், அவனுடைய அண்ணி மிக நன்றாக சமைப்பார்கள். ஒரு நாள் மதியம் ஞானம் சுந்தரனின் மடிப்பாக்கம் வீட்டுக்குப் போனபோது அங்கே அடுத்த தெருவில் இருந்த சுந்தரனின் அக்காவும் அவனது அம்மா அண்ணியும் சமையலறையில் கூட்டமாக எதையோ செய்து கொண்டிருந்தார்கள். ஞானம் பிளாஸ்டிக் கவரில் சுற்றி வைத்திருந்த ஆன்ம போதத்தை வெளியே எடுக்கவேயில்லை. சுந்தரனின் அண்ணனுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்யும் அவரது மச்சானிடம் நாட்டு நடப்பையெல்லாம் பேசி விட்டு, அண்ணி செய்து கொடுத்த வாழைக்காய் மற்றும் வெங்காய பஜ்ஜி சாப்பிடக் கிடைத்திருந்தாலும், அதிருப்தியுடன் திரும்பினான். அப்புறம் சுந்தரன் அம்மாவைக் கூட்டிக் கொண்டு தனியாக போய் இருக்கும்படி நேர்ந்து விட்டது.

அதுவரை சுந்தரன் இந்த மாதிரியான சேனைக்கிழங்கு எப்போது கொண்டு வந்தாலும் அதில் பாதிக்கும் மேல் ஞானத்துக்குதான் கிடைக்கும். இப்போது அவன் தனியாகத்தான் சாப்பிடுகிறான்.

சேனைக் கிழங்கின் வடிவம் உருண்டைபோல் இருந்தாலும் கரடு முரடானது. அதன் மேற்புறத்தின் கட்டைத் தோல் சில கிழங்குகளில் நிறைய இடங்களில் ஆழ இறங்கியிருக்கும். இது அப்படிப்பட்ட ஒரு கிழங்கு. பீலரைக் கொண்டு சேனைக் கிழங்கின் தோலை செதில் செதிலாக சீவும்போது முரண்டிருந்த இடங்கள் சமன்படுத்தப்பட்டன; பீலரின் கூர் முனை கொண்டு காய்த்து கெட்டித்திருந்த பகுதிகளை ஞானம் அகழ்ந்தெறிந்தான்.

எந்த ஒரு வட்ட வடிவான சேனைக்கிழங்கையும் குறிப்பிடத்தக்க அளவு கொண்ட நேர்த்தியான செவ்வகங்களாக வெட்டுவது அவ்வளவு எளிதில்லை என்று ஞானத்துக்குத் தெரிந்தது. அது புரியாத அவன் மனைவி அதிருப்தியுடன் என்னவோ முணுமுணுத்துக் கொண்டே சேனைக் கிழங்கை எடுத்துக் கொண்டு போனாள்.

Advertisements