இரு பத்திகள்

பகலில் அடையாளம் தெரியவில்லை. இரவில் முயற்சி செய்யலாம் என்று ஓர் இரவு நான் சாலை ஓரமாக நடந்தேன். அன்றிரவு டல்பதடோவைக் கார் மோத வந்த இடம் எதுவாக இருக்கும் என்று தேடினேன். சாலையே ஓரிடத்தில் மிக லேசாகத் திரும்பும். அங்கிருந்து தூரத்தில் புதிய விமான நிலையக் கட்டட வேலைகள் நடப்பதைப் பார்க்க முடியும். நான் அந்த இடத்தில் நின்று கொண்டேன். சாலையை விட்டுத் தரையில் இறங்கி ரயில் இருப்புப் பாதை அருகே சென்றேன். நான் சென்ற நேரம் அடுத்தடுத்து சென்னை எழும்பூரிலிருந்து துரித ரயில்கள் தெற்கே சென்று கொண்டிருந்த நேரம். நான் சரளைக் கற்கள் பக்கத்தில் ஒற்றையடிப் பாதையாக இருந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டேன். அது மின்சார ரயில் போகும் பாதைக்கு அடுத்தது. ஐந்து நிமிடத்துக்கொரு முறை கையெட்டும் தூரத்தில் மின்சார ரயில் பெட்டிகளைச் சுமந்து செல்லும் சக்கரங்கள் என்னைத் தாண்டிச் சென்றன. ரயில் பெட்டிகளின் ஜன்னல்கள் வழியாக வெளியே வீசிய வெளிச்சம் சினிமா புரொஜக்டரிலிருந்து வீசும் ஒளிக் கற்றை போல வெட்டி வெட்டி என்னைத் தாண்டி வீசின. நான் ரயில் பாதையின் மிக அருகில் உட்கார்ந்திருந்ததால் அந்தப் பாதையில் போகும் ரயில்களின் வெளிச்சம் என்மீது விழவில்லை. ஆனால் அடுத்து இரு பாதைகளில் சென்ற ரயில்களின் வெளிச்சம் என் மீது விழுந்தது. அந்த ரயில்களில் பயணம் செய்தவர்களில் பலர் என்னைப் பார்த்திருக்கக்கூடும். அந்த ரயில்களின் டிரைவர்கள் என்னை பார்த்திருக்கக்கூடும். ஆனால் நான் உட்கார்ந்திருந்தது ஒருவன் அந்த ரயில்களை அருகாமையிலிருந்து வேடிக்கை பார்ப்பதற்காகவே என்பது போலத் தோன்றியிருக்க வேண்டும். நானும் அசையாமல் இருந்த இடத்திலிருந்தே பூமியை அதிரவைத்து என்னைத் தாண்டிப் போன ரயில்களைப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். எனக்கு என் நினைவுகள் எல்லாம் எங்கோ மறைந்துபோய் அந்த நேரம் முழுக்க முழுக்க ஒரு ரயிலுக்காகவும், அதற்கு அடுத்த ரயிலுக்காகவும் காத்திருப்பதாக இருந்தது. இந்தக் காத்திருப்பது உண்மையில் எவ்வித உலகாயதப் பயனும் இல்லாதது. ஆதலால் என்னுடைய எந்த இந்திரியத்துக்கும் எந்தவிதத் தீனியுமாக முடியாது. காத்திருத்தல், கலந்திருத்தல், அடுத்த ரயிலுக்காகக் காத்திருத்தல்… அந்த வேளையில் எனக்கு நான், என் மனைவி, லலிதா, தல்பதடோ, சிவநேசன்….. எல்லாமே மறந்து போய் விட்டது. நான் அந்த இருப்புப் பாதைகள், ரயில்கள், ஒவ்வொரு முறை ரயில் உருண்டோடும்போதும் நானே அந்த இருப்புப் பாதையாகவும், நானே சக்கரமாகவும், நானே அந்த ரயில் பெட்டிகளாகவும், நானே அந்த பயணிகளாகவும் மாறிவிடுவதுபோல் இருந்தது. அந்த ரயில், இருப்புப் பாதை மட்டுமில்லை, போட்ட சரளைக் கற்களாகவும் நான் மாறிவிடுவது போலிருந்தது. அப்படியே அந்தத் தரையாகவும் மாறிவிடுவது போலிருந்தது. அந்தத் தரை தொடுவானம் வரை சென்று கடலோடும் வானத்தொடும் இணைந்தது. நானே வானமும் கடலாகவும் வேறு மாறி விட்டேன்.

சடாரென்று நான் மீண்டும் என் உடலுக்குள் மட்டும் இருப்பவனாகவும், இயங்குபவனாகவும் மாறினேன். எனக்கேற்பட்ட அந்த அனுபவம் என்னுடைய துக்கத்தால் ஏற்பட்டதா, குற்ற உணர்வால் ஏற்பட்டதா என்று தெரியவில்லை. ஒரு வேளை, இவை இரண்டுமே காரணமில்லை என்று தோன்றியது. ஐம்பது வயதுக்காரன் ஒருவன் இருட்டில் ரயில்களைப் பார்த்தபடியே சூழ்நிலையோடும் பூமியோடும் ஒன்றிப் போவது சுயநலனையும் அகங்காரத்தையும் சார்ந்ததாக இருக்க முடியுமா?

… பாவம் டல்பதடோ- அசோகமித்திரன்.

One thought on “இரு பத்திகள்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.