மயான காண்டம்

(நமக்குக் கோபம் வராது என்பது நம் நீண்ட நாள் வாசகர்களுக்குத் தெரியாத உண்மையல்ல- அதே சமயம் வாய்ப்பு கிடைத்தால் பழி வாங்கவும் செய்வோம் என்ற உண்மையையும் நீங்கள் அறிவீர்கள், இல்லையா? இப்போது ரா கிரிதரனின் முறை)

தன் ஒரு வருட இல்லற வாழ்வில் பெண்கள் ராட்சசிகள், அவரவர் அம்மாவைத் தவிர என்ற முடிவுக்கு சேகர் எப்போதோ வந்திருந்தான். கோரப் பற்களைக் காட்டியபடி தலைவிரித்தாடும் சினிமாக் காட்சிகளில் பயம் தெளிந்து பல வருடங்கள் ஆயினும் பிசாசு நம்பிக்கை முழுவதும் அவனைவிட்டு விலகிப் போய் விடவில்லை.

பஸ் வருகிறதா எனப் பார்க்கும் சமயத்தில் பேண்ட் பாக்கெட்டைக் கிழிக்கும் காட்டேரிகள், நீட்டாக டை கட்டிக் கொண்டு பல் மட்டும் முகத்தில் தெரிய நாம் ஓடிச் சம்பாதித்த பணத்தை கபளீரம் செய்யும் பைனான்சியர் பேய்கள், நானும் பாலக்காடாக்கும் என இளித்தபடி மேனேஜரிடம் குழையும் நேற்று வந்த கிளார்க் அசுரர்கள், 7/- என எழுதித் தந்து இறங்கும் சமயத்தில் சன்னமாகச் சுரண்டினால் செம்மொழி பேசும் கண்டக்டர் பூதகி- எனச் சென்னை வாழ்வெனும் மயான காண்டத்தில் சேகருக்கு பூதவுடல் தரித்த பிசாசுகளுடனான பிணக்கனுபவம் தினமும் ஏற்படும் ஒன்றாகி விட்டிருந்தது.

புயலுக்குப் பின்னான அமைதி நிலவுவதை சேகர் வீட்டுக்குள் நுழையும்போதே உணர்ந்தான்.. அவன் கைலி மாற்றுவதற்குள் மனைவி பிசாசு சேகரை உலுக்கத் துவங்கி விட்டது- “எனக்குத் தினமும் தலையில் ஏறுது. வாயை மூடிகிட்டு உங்கம்மா ராட்சஸியை ஆட்டம் போடாம அடங்கி இருக்கச் சொல்லுங்க. நம்ப வீட்டில அவங்க கெஸ்ட் மட்டும்தான்னு புரியுதா அவங்களுக்கு?”

சாப்பாட்டு டப்பாவை டேபிளில் வைக்கப் போனவன், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மீண்டும் உருவாவதை அவசர அவசரமாக அவதானித்தவனாய், சமையல் அறைக்குள் தஞ்சம் புகுந்தான். பிசாசு நுழைய முடியாத பூஜை அறையோடு இணைந்த சமையல் அறை. என்றுமிலாமல் அவனே டப்பாவைக் கழுவி கவிழ்த்து வைத்தான்.

காபி கலந்து தயாராக வைத்திருந்தாள் அம்மா.

உலகிலேயே தன்னைப் புரிந்துகொள்வது அம்மா மட்டுமே. இது அந்த பிசாசுக்கு எப்படித் தெரியப்போகுது?

சகல ஆசுவாசத்தையும் அளிக்கக் கூடிய சமாதானத் தூதுவன் டிவி முன் முடிந்தளவு தூரமான அறையின் இரு பகுதிகளில் அம்மாவும் பிசாசும் உட்கார்ந்திருந்தனர்.

சரிசெய்ய முடியாத பட்சத்தில் கணவன் மனைவி இருவரில் ஒருவரோ அல்லது இருவருமேவோ திருமணம் ஆன ஒரு வருடத்துக்குப் பிறகு விவாகரத்துக்கு அப்ளை செய்ய சட்டம் இருக்கிறது – நிலா சேனலில் ஏதோ ஒரு வக்கீல் பேய் உலகை உய்விக்க உபதேசம் செய்துகொண்டிருந்தது.

சேகரின் கண்களை ஒரு கணம் சந்தித்து விலகின பெண்டாட்டி பேயை விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருந்த அம்மாவின் கண்கள்.

Advertisements