நிலைக் கண்ணாடி

அது என் முதல் நியமனம். கோவையில் ஒரு தனியார் வங்கியில் வேலை. நட்பா காதலா என்று தெரியாமல் இரு சாத்தியங்களையும் முயன்று பார்க்கும் மனநிலை- ஒரு காதல்/ நட்பு விவகாரத்தில் சிக்கிக்கொண்டு அவமானம் மேலிட்டு அந்த வேலையை விட வேண்டியதாயிற்று.

இந்தக் கதை அதைப் பற்றியல்ல. வண்ணநிலவன் அண்மையில் கல்கியில், “ஆசிரியர் சிறு பிசுறு கூட இல்லாமல் விறுவிறுப்பான நடையில் கதையை விவரித்துக் கொண்டு செல்கிறார். என்றாலும், இலக்கியத்துக்குரிய அமைதியான மொழியும், அதைக் கலையாகப் பரிமளிக்கச் செய்யும் அம்சமும் ‘இரவு’ நாவலில் இல்லை,” என்று எழுதினாரே, அந்த அமைதியைப் பற்றி. அசோகமித்திரனின் இரு பத்திகளை மேற்கோள் காட்டியிருந்தேனே, அது சுட்டும் மனநிலையைப் பற்றி.

அந்த வேலையிலிருந்து வெளியேறிய என்னால் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியவில்லை. சில உடல் உபாதைகள் துவங்கின, நான் எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை- என்று சொல்வதைவிட, எனக்கு அதைத் தேடி அடையும் முனைப்பில்லை என்று சொல்ல வேண்டும்.

அப்போதெல்லாம் நான் சின்னச் சின்ன விஷயங்களுக்கும் ஆத்திரப்படுவேன், அழுவேன். இருபது இருபத்திரெண்டு வயது இளைஞன் அழுது ஆர்ப்பாட்டம் செய்வது அவனது பெற்றோருக்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும்? ஆனால் என் அம்மாவோ அப்பாவோ ஒரு வார்த்தை கடிந்து பேசவில்லை. “வேலைக்குப் போகாமல் ஏன் வீட்டில் இருக்கிறாய்?” என்று கேட்கவில்லை. நானாகக் கேட்காமலேயே நான் நினைத்ததைக் கொடுத்தார்கள். முடிந்த அளவு என்னை அனுசரித்து நடந்து கொண்டார்கள். ஜோசியம் பார்த்தார்கள்.

வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோதிடர் ஒருவர் நான் ஒரு பாழடைந்த காளி கோவிலில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமையன்று மாலை வேளையில் விளக்கேற்றி வைத்தால் என் வாழ்வு பிரகாசமாக இருக்கும் என்று சொல்லியிருந்தார். அதை மட்டும் செய்யும்படி என் அம்மா தினமும் தொல்லை செய்து வந்தார். “ஞானம், வைதீஸ்வரன்…” என்று எதையாவது பேசத் துவங்கும்போதே அவரது முகம் இருண்டு குரல் மாறி என்னைக் கோபப்படுத்திவிடும்.

அந்தத் தொல்லையைத் தவிர்ப்பதற்காகவே வேலை தேடுகிறேன் என்று என் சித்தப்பா மகன், எனக்குத் தம்பி முறை ஆக வேண்டும், அவன் சென்னையில் நங்கநல்லூரில் இருந்தான்- அங்கே போய் ஒரு மாதம் அவனுடன் இருந்தேன். அப்போது ஒரு மாறுபட்ட அனுபவம் ஏற்பட்டது.

நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போகும் வழியில் ஒரு வீட்டில் மண்டபம் மாதிரி ஒன்று கட்டியிருப்பார்கள், அதில் சின்னதாக ஒரு கோயில் இருந்தது. எனக்கு அந்தக் கொவிலின் பெயர் நினைவுக்கு வர மாட்டேனென்கிறது. பகவதி கோவில் என்று மட்டும் மனதில் பதிந்திருக்கிறது.

ஹால் போன்ற ஒரு அறை. அதற்கப்பால் சின்னதாக ஒரு அறை. அதில் ஒரு முகமாக பகவதியம்மன். இதுதான் இப்போது என் நினைவில் உள்ள அந்த பகவதி கோயில். தினமும் மாலை பிரசாதத்துக்காக ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போய்விட்டுத் திரும்பும்போது அந்தக் கோவிலுக்கும் போவேன். பெரிய அளவில் பக்தி எல்லாம் கிடையாது. ஆஞ்சநேயர் கோயிலின் பிரம்மாண்டத்துக்கும் கூட்டத்துக்கும் மாறாக இங்கே ஆளே இல்லாமல் இருக்கும், மிக அமைதியாக இருக்கும். அந்த ஹாலில் ஒரு கண்ணாடி இருந்தது. நான் அமரும் இடத்துக்கு அது குறிப்பாக எதைவும் பிரதிபலிக்காது. இருந்தாலும் கண்ணை எங்காவது வைத்துக் கொண்டிருக்க வேண்டுமே, அதைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு ஒரு கிண்ணத்தில் இருக்கும் விபூதி குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு திரும்புவேன்.

என் சித்தப்பா பையன் பேசவே மாட்டான். காலையில் ஆறு மணிக்கு வேலைக்குக் கிளம்பினால் வீடு திரும்ப ராத்திரி எட்டு மணி ஆகி விடும். வந்ததும் டிவி முன் உட்கார்ந்து விடுவான். பத்து மணி வரை ஒழிந்த நேரத்தில் சேனல்களை மாற்றிக் கொண்டிருப்பான். சரியாக பத்து ஆனதும் தூங்கப் போய் விடுவான். என்னை எதுவும் சொல்லவில்லை. ஆனால் என்னிடமும் ஒன்றும் சொல்லவில்லை. அந்த ஒரு மாதத்தில் அவன் என்னிடம் ஒரு அரை மணி நேரம் பேசியிருந்தால் அதிகம். சித்தி சித்தப்பாவும் அதிகம் பேச மாட்டார்கள். வேளா வேளைக்கு சாப்பிட்டுவிட்டு என் சித்தப்பா மகனின் அறைக்குப் போய் ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பேன், அல்லது அழுது கொண்டிருப்பேன்.

விஷயத்துக்கு வருகிறேன். ஒரு நாள் மாலை வழக்கம் போல ஆஞ்சநேயர் கோயிலில் தொன்னை நிறைய கொடுத்த சர்க்கரைப் பொங்கலை சாப்பிட்டுவிட்டு நெய் மணக்கும் கைகளுடன் பகவதி கோவிலுக்கு வந்தேன். வழக்கம் போல அன்றும் அங்கே யாரும் இல்லை. மாலை இரவின் சாயலைப் பெறத் துவங்கிய நேரம். அந்த வீட்டுக்காரர் ஹாலுக்கு வந்து ட்யூப் லைட்டைப் போடவில்லை. அல்லது அவர் இன்னும் கொஞ்சம் நேரம் ஆகட்டும் என்று இருந்திருக்கலாம்.

எனக்கும் ஸ்விட்சைப் போட சோம்பல். வெளிச்சம் வந்துதான் நான் இருக்கும் நிலையில் எனக்கு எது மாறிவிடப் போகிறது? ஒளியை இருள் கூடும் அந்த வேளை, அங்கே நான் மங்கத் துவங்கிக்கொண்டிருந்த கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருந்தேன், வழக்கம் போல ஆயிரம் எண்ணங்கள், கொந்தளிக்கும் குழம்பில் கொப்பளிக்கும் குமிழ்களாய்.

அப்போது என்னையுமறியாமல் பகவதியை நோக்கித் திரும்பினேன், ஒற்றை விளக்கில் அவள் முகம், கற்சிலைக்கு உரிய கருமை. விளக்கு அந்த இருண்ட உருவத்திடம் தோற்றுப் போய்க் கொண்டிருந்தது- தீபத்தின் ஒளி மெல்ல சொபையிழந்தது.

வெகு காலம் முன் ஏற்பட்ட அனுபவம் இது. அதனால் என்னால் இப்போது முழுமையாக நினைவுபடுத்திக் கொள்ள முடியவில்லை. இருள் இன்னும் இருண்டது, வெளிச்சம் இருந்தது, ஆனால் அதை இருள் நிறைத்தது, ஒளியே இருளாக மாறி ஒளிர்ந்தது என்பது போல் இருட்டு தன்னினும் அடர்ந்த இருளில் மறைந்து ஒளியாய் வெளிப்பட்டது- அந்த ஒளி இருளாய் ஒளிர்ந்த ஒளி. அந்த பகவதி கோயில் மறைந்து அங்கே இருள் மட்டுமே இருந்தது. ஒளியற்ற இருள் அல்ல. என் இருப்பாய், என் பிரக்ஞையாய் ஒளிர்ந்த இருள். என்னைச் சுற்றி இருளும் இருந்தது, ஒளியும் இருந்தது. இருளே ஒளியாகவும் ஒளியே இருளாகவும், நானறிந்த எந்த இருட்டையும்விட அடர்த்தியாக, இரவின் ரகசிய கதவு திறந்தது போன்ற இருளாக, பிரகாசமற்ற, ஆனால் அனைத்தையும் நிறைக்கும் ஒளியாக – “தன்னை விழுங்கிய தற்பரம்” என்று சொல்வார்களே அப்படிப்பட்ட ஒளியும் இருளுமாக இருந்தது.

அந்த அனுபவம் சில நிமிடங்கள் நீடித்திருக்கலாம். அதிகம் போனால் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள். ஆனால் அது என் மனதில் ஒரு அமைதியைத் தோற்றுவித்தது. அந்த அமைதியையும் நான் அப்போது அறியவில்லை. என் ஆத்திரமும் அழுகையும் தொடர்ந்தன, நான் என் முனைப்பை திரும்பப் பெற்றேன் என்றும் சொல்ல முடியாது, புறச்சூழல்கள் வெவ்வேறு விதமாக மாறினாலும் அந்த அனுபவத்தால் நானறிய அப்போது எந்த மாற்றமும் எனக்கு ஏற்பட்டுவிடவில்லை. எனக்குத் திருமணமாகி வேறு பல சிக்கல்களில் பிரவேசித்தபோது என்னை அதுவரை அலைக்கழித்த உக்கிர உணர்வுகள் நீர்க்குமிழ் போன்ற ஒரு மௌன வட்டத்தினுள் கட்டுப்பட்டிருந்தன என்பதை உணர்ந்தேன், நான் இழந்த அமைதியில்தான் அதுவரை என்னில் நிலைபெற்றிருந்த அமைதியை உணர்ந்தேன், அதன் இழப்பு தன் இருப்பை ஒரு வெற்றிடமாக விட்டுச் சென்றது.

இப்போதும் எனக்கு வலிக்கும் நான் தோழியாய் மதித்த என் காதலியின் கபடம், தொழிலை சுயநல லாபங்களுக்காகப் பயன்படுத்திப் பழிதீர்த்துக் கொண்ட நண்பர்களின் துரோகம், அன்பைத் தவிர வேறு ஆயுதங்கள் இல்லாத என் பெற்றோரின் இயலாமை, சுயபச்சாதாபப் போர்வையில் நான் புனைந்த வேடங்கள்- அப்போது நான் இவற்றை எழுதி இருந்தால் என் எழுத்தில் அமைதி இருந்திருக்கலாம். எதிர்காலம் ஒரு பாழ்வெளியாகி, இறந்த காலத்தின் நினைவுகளைத் தொடர்ந்து வெவ்வேறு கோணங்களில் கூர்ந்து கவனித்துப் புரிந்து கொள்ள முயலும் நிகழ்வாக ஒவ்வொரு கணமும் இருந்த அந்த நாட்களின் உணர்ச்சிகளை நான் என் எழுத்தில் அப்போது வடித்திருக்க வேண்டும். இருளும் ஒளியும் சமன்பாடடைந்த அந்த கணத்தின் நிறைவு, அந்த அனுபவத்தின் முழுமை அந்த எழுத்தின் அமைதியாய் வெளிப்பட்டிருக்கும்.

அசோகமித்திரன் பாவம் தல்பதடோவில் அந்த இரு பத்திகளைத் தொடர்ந்து ஒரு பக்கம் தாண்டி எழுதுகிறார், “மனித உடல் அதனுள் உயிரிருக்கும்போது ஒரு மாதிரி நாற்றமெடுக்கிறது. உயிர் போன பிறகு இன்னொரு விதமாக நாற்றமெடுக்கிறது. இப்படி நாற்றமெடுக்கும் தோல் பைகளைத்தான் கணவன், மனைவி, மகன், மகள், நண்பன், விரோதி என்று உறவு கொண்டாடுகிறோம்”.

பாவம் டல்பதடோ கதையைச் சொல்பவர் அசோகமித்திரன் அல்ல, அவரது பாத்திரம். இருந்தாலும் அந்தக் கதையைப் படிக்கும்போது துவக்கம் முதல் விரியும் தன் கதையில் இந்த மாதிரியான ஒரு ஏகாந்த அனுபவம் பெற்றவர், மனித வாழ்வைப் பற்றி இப்படி நினைப்பவர், அவர்தான் பாவம் டல்பதடோ என்று முடிக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

எழுத்தின் அமைதி பாத்திரங்களை தம்மியல்பில் இருக்க விடுவதில் இருக்கிறது. நல்லவர்களோ கெட்டவர்களோ எல்லாரும் பாவம்தான்- அவரவர்களுக்கு ஒரு நீதி இருக்கிறது, அதன் ஒளியில் அவர்கள் அப்படித்தான் இருக்க முடியும். அதை ஒளி இருள் என்று பிரித்துப் பார்த்து கட்சி கட்டாமல் விவரிக்கும் படைப்பே தன் வடிவத்திலும் மொழியிலும் அமைதி கொண்ட ஒன்றாக இருக்க முடியும். இதற்கு மாறாக ஒரு சூத்திரதாரியின் நுட்பத்துடன் தன் பாத்திரங்களை இயக்கும் எழுத்து, நம் உணர்வுகளையும் தன் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது: இந்த எழுத்தில் அமைதி இருக்காது என்பது மட்டுமல்ல, இதில் அமைதி இருக்கவே முடியாது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சென்ற சில வாரங்களில் நான் காட்டமாக சில விஷயங்களை எழுதியிருப்பதைப் படித்துவிட்டு என் நண்பன் ஒருவன் கேட்டான், வெறும் கதைதானே, அதைப் பற்றி யார் என்ன எழுதினால் என்ன, எதற்காக நீ இப்படி டென்ஷன் ஆகிறாய், என்று. உண்மையில் நாம் கதைகள் வழியாக நம் உணர்வுகளை வாசிக்கிறோம்: நம் ரசனை மலினப்பட்ட ஒன்றாக இருக்கலாம், வணிக தேவைகளின் எளிய பயன்பாட்டுக்கு பலியாகும் ஒன்றாக இருக்கலாம், அவை போலி மனவெழுச்சியாகவே இருப்பினும் அவற்றின் ஆளுகைக்குட்பட்டிருக்கும் காலத்தின் நம் உணர்வுகள் உண்மையானவை: கலை குறித்த கோட்பாடுகள், அரசியல் நிலைப்பாடுகள், ரசனை அடிப்படையிலான தீர்மானங்கள், வரலாற்றின் நிதர்சன உண்மைகள்- இவை எதுவும் நிகழ் உணர்வுகளின் மெய்ம்மையை பொய்யாக்கிவிட முடியாது.

உதாரணத்துக்கு இந்த நிமிஷக்கதையையே எடுத்துக் கொள்ளுங்களேன்!

Advertisements

8 thoughts on “நிலைக் கண்ணாடி

  1. கதையாகவும் இல்லாமல் கட்டுரையாகவும் இல்லாமல் ரெண்டும் கெட்டானாக இருக்கும் என்று நினைத்தேன், நீங்கள் ரசித்தமைக்கு நன்றி ஐயா.

 1. அனுபவமா கதையா? அனுபவங்கலந்த கதையா?

  உயிர்த்துடிப்போடு எழுதியிருக்கிறீர்கள்.இருளையும் ஒளியையும் உள்ளே தங்கிவிடுகிற அமைதியையும் இலக்கிய அமைதியையும் உணரமுடிந்தது உங்கள் எழுத்தினூடாக
  நன்றி

  1. அனுபவமான கதை 🙂

   யோசித்துப் பார்த்தால் சோகத்தில்தான் மனம் அமைதியடைகிறது, சந்தோஷமாக இருக்கும்போது மனக் கிளர்ச்சிதான் கிடைக்கிறது, இல்லையா? அதனால்தான் சோகக் கதைகள் நம்மீது தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவோ என்னவோ…

   நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

   நன்றி.

 2. சோகம் ,மகிழ்ச்சி,அமைதி மூன்றும் வேறுவேறுதானே.மனக்கிளர்ச்சி, மனச்சோர்வு, அமைதி; மனச்சோர்வை அமைதி எனலாமா?
  ராசதம் தாமதம் சாத்வீகம்??

  வாழ்க்கை இயல்பாய் சோகமானதோ அதுதான் மனிதர்கள் மகிழ்ச்சியை முயன்று அடையவேண்டியிருக்கிறது.

  சோகமான கதைகள் இயல்பாய் அனேகருக்கு பொருந்துகின்றனவோ, அல்லது தங்களை கதையோடு பொருத்தமுடிகிறதோ?

  1. ஜெ கிருஷ்ணமூர்த்தி சோகத்தின் அடித்தளத்தில் அச்சம் இருக்கிறது என்கிறார். ஆழமான சோகம் மனதை ஸ்தம்பிக்கச் செய்து, அது தப்பும் பாதைகளை அடைத்து, தன் இருப்பின் நிரந்தரமின்மையின் முழு வெளிச்சத்தில் அதன் தன்னியல்பு வெளிப்பட வழி செய்யக்கூடும். துயரில் மலரும் கருணை என்கிறார் அவர். அசோகமித்திரன் ஜெ கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளை அறிந்திருப்பாரா, தெரியவில்லை. இருப்பின் அசோகமித்திரன் சாமானியனின் தோல்விகளை, எளிய அற்பத்தனங்களை மட்டும் பதிவு செய்யவில்லை என்றாகும். அவரது பாத்திரங்களின் தொடுவானம் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தாலும் அது காலவெளியை நிறைக்கும் சாத்தியம் கொண்டது என்றாகும், அது பெரும்பாலும் கைகூடுவதில்லை என்றாலும். பாவம் டல்பதடோவில் அது சாத்தியப்பட்டிருக்கிறது 🙂

   1. இந்தச் சோகத்தை பற்றி நானும் என்னென்னவோ யோசித்திருக்கிறேன். மனிதனுக்கு அது ரொம்பப் பிடித்திருக்கிறது போலும். சமீபகாலங்களில் வந்த ஒன்றிரண்டு படங்கள் இறுதிவரை சாதாரண படங்களே. ஆனால் கடைசியில் நெஞ்சை அதிரவைக்கும் படி எதையாவது காட்சிப்படுத்தி மிக நேர்த்தியான படம் என்று பெயர் வாங்கிவிடுகிறார்கள்.

    பல பெரிய பெரிய இலக்கியப் படைப்புகள் எல்லாமே இப்படித்தான் பெயர் பெறுகிறதோ?

    ஒரு விமர்சகர் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் சிறுகதைகளைப் பற்றி எழுதும் போது, அவரின் கதைகள் எதுவுமே ‘அறைவது போல் இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். மனிதர்களுக்கு சோகம் வேண்டியிருக்கிறது. கற்பனை அளவிலாவது வேண்டியிருக்கிறது.

    சோகமான இருப்பது எனக்குமே கூட சில நேரம் பிடித்துதான் இருக்கிறது. சில நேரம் என்னைப் பற்றிய கவலை. வேறு சில நேரம் மற்றவர்களைப் பற்றிய கவலை. இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருந்தால் அல்லது சத்தம் போட்டு பாட்டு பாடத் தோன்றினால் ‘என்ன இது கொஞ்சம் கூட கவலையில்லாமல் இருக்கிறோமே?’ என்று எனது மனசு பதறுகிறது. 🙂

    1. அருமையான சிந்தனை. இது பின்னூட்டப் பெட்டியில் புதைந்திருக்கக் கூடாது. பதிவாக இடுகிறேன், சார்.

     நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s