கொலைவலி – சில விளக்கங்கள்

இந்த தளம் இப்போது புனைவுகளை ஆயும் தளமாக மாறிவிட்டதை நண்பர்கள் அறிவீர்கள். வாசக சௌகரியத்தை உத்தேசித்து நாம் நிமிஷக்கதைகளில் புகுந்திருக்கிறோம். அன்பர்கள் புரட்சி செய்துவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை தந்தால் நான் முழு நீள சிறுகதை, குறுநாவல் மற்றும் நாவல் வடிவங்களையும் ஒரு கை பார்க்கக்கூடும்.

அண்மையில் இங்கு பதிவு செய்யப்பட்ட இரு நிமிஷக்கதைகளுக்கும் வருவோம்- காண்க: ஒரு கொலைவலி டாக்டரின் கோபம், கொலைவலி- மொங்கான் போட்ட பிறகு. இது குறித்து எனக்கு சில தனி மடல்கள் வந்திருக்கின்றன. அவற்றை நான் இங்கே பகிர விரும்பவில்லை என்றாலும், இந்தக் கதைகளை எழுதிய எழுத்தாள நண்பர்களுடன் கலந்துரையாடியதன் விளைவாக சில விளக்கங்களைத் தர கடமைப்பட்டுள்ளேன்.

இந்த இரு நிமிஷக்கதைகளும் சிறுகதையின் வடிவ இலக்கணத்தில் கச்சிதமாகப் பொருந்துகின்றன- சந்தேகமே வேண்டாம். இதை நான் திரு ஜெயமோகன் அவர்கள் வரையறுத்துத தந்திருக்கும் சிறுகதை கோட்பாட்டு அடிப்படைகளில் நிறுவ நினைக்கிறேன். காண்க- சிறுகதை – ஒரு சமையல் குறிப்பு.

அவர் எழுதியுள்ள விஷயத்தை விரிவாகவே மேற்கோள் காட்டுகிறேன்:

சிறுகதையின் வடிவத்துக்கு ஐந்து அடிப்படைகள் உண்டு என்பது மரபான இலக்கணமாகும்

1. சிறுகதையின் ‘உடல்’ ஒருமை கொண்டதாக இருக்கும். தேவையில்லாத விஷயங்களே அதில் இருக்காது. அது நேராக ஒரு முடிவை நோக்கிச் செல்லும்.

2. சிறுகதையின் முடிவு வாசகன் ஊகித்திராத ஒன்றாக இருக்கும். இதுவே ‘திருப்பம்’ என்பது. சிறுகதையின் மையம் என்பது திருப்பத்திலேயே உள்ளது.

3. திருப்பம் நிகழ்வது வாழ்க்கையின் ஒரு புள்ளியிலேயே. ஆகவே சிறுகதை வாழ்க்கையின் ‘ ஒரே ஒருபுள்ளியை’ மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். சிறுகதை ‘ஒன்றை மட்டுமே சொல்லக்கூடிய ‘ இலக்கிய வடிவம். திருப்பம் மூலம் வெளிப்படும் அந்த மையத்தைதவிர வேறு எதை அது சொல்ல தொடங்கினாலும் கதை சிதறி ,ஒருமை இல்லாமலாகும்

4. சிறுகதை வாசகனிடம் எதையாவது சொல்வதற்காக உருவான வடிவம் அல்ல. வாசகனை கதையில் பங்கெடுக்க வைப்பதற்காக உருவான வடிவம். வாசகனை எந்த அளவுக்கு கற்பனைசெய்ய வைக்கிறதோ அந்த அளவுக்கு சிறுகதை வெற்றி பெறுகிறது. சொல்லப்படும் விஷயம் சிறுகதையில் இருக்கக் கூடாது. வாசகனே ஊகித்துச் சென்றடையும் விஷயமே சிறுகதையின் மையமாகும்.

5. சிறுகதை அதன் கடைசி வரிக்குப் பிறகு வாசகன் மனதில் மீண்டும் தொடங்குகிறது.

. சந்தேகமே இல்லாமல் இந்தக் கதைகள் இரண்டும் ‘நேராக ஒரு முடிவை நோக்கிச் செல்கின்றன”. தேவையில்லாத விஷயமே இல்லை

. நிச்சயமாக கதையின் திருப்பத்தை நீங்கள் ஊகித்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அந்தத் திருப்பமே இந்தக் கதைகளின் மையத்தில் உள்ளது என்பதையும் ஏற்பீர்கள், இல்லையா?

. இந்தக் கதைகள் ஒரு புள்ளி, ஒரு மையம், அதற்கு எதெல்லாம் தொடர்புடையனவாக இருக்கின்றனவோ, அவற்றைப் பற்றி மட்டுமே பேசுகின்றன.

. “சொல்லப்படும் விஷயம் சிறுகதையில் இருக்கக் கூடாது. வாசகனே ஊகித்துச் சென்றடையும் விஷயமே சிறுகதையின் மையமாகும்.”- ஒருவர் “இது என்ன சார் கதை? என்னதான் சொல்ல வறார் இவர்?” என்றே கேட்டார். இந்த இரு கதைகளில், கிரியின் கதையில் கூடுதலாகவும் வீராவின் கதையில் சற்றே குறைவாகவும் ஊகத்துக்கு இடம் இருக்கிறதென்று நினைக்கிறேன். அந்த வெற்ற்டத்தை வாசகன் தன் நுட்பமான அவதானிப்பால் இட்டு நிரப்பத் தவறினால், இந்தக் கதைகளின் மையம் அவனைக் கடந்து போய் விடும் என்பதில் சந்தேகமில்லை.

௫. “சிறுகதை அதன் கடைசி வரிக்குப் பிறகு வாசகன் மனதில் மீண்டும் தொடங்குகிறது.”- இது மிக முக்கியமானது. இந்தக் கதைகளின் கடைசி வரியைப் படித்தபின் முதல் வரியைப் படித்துப் பாருங்கள்- கதை அங்கே தொடரக் காண்பீர்கள்.

சிறுகதையின் வடிவ இலக்கணத்தின்படி இந்தக் கதைகளுக்கு சிறுகதைகளுக்குரிய சாமுத்திரிகா லட்சணங்கள் அவ்வளவும் இருப்பதைக் கண்டோம் (அவை கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம், அதை தர்போதைக்குப் பொருட்படுத்த வேண்டாம்).

இனி சிறுகதைகளுக்குரிய உள்ளுருப்புகளாக திரு ஜெயமோகன் அவர்கள் குறிப்பிடும் விஷயங்களுக்கு வருவோம்:

1. மையக்கதாபாத்திரம். [ Protagonist ] – உண்டு. டாக்டர்.

2. எதிர் கதாபாத்திரங்கள்.[ Antagonists ] – உண்டு. மருந்து வாங்க வந்தவன்.

3. கதைக்களம். [context]. ‘கதை எங்கே எப்போது நிகழ்கிறது’ என்பதை வாசகன் உணர வேண்டும். இந்தக் கதைகள் டாக்டரின் அறையில் நிகழ்கின்றன என்பது தெளிவு. தேதி வருடம் போன்ற விவரங்கள் குறிப்பிடவில்லை. அவை கதைக்குத் தேவை இல்லை என்பதால். அனேகமாக டாக்டரின் கன்சல்டிங் ஹவர்களில்தான் கதை நடந்திருக்க வேண்டும் என்பது ஊகம். ஆனால் ஜெயமோகன் அவர்கள் இதைக் குறிப்பிடவில்லை என்று நினைக்கிறேன். கதையின் களம் கடந்தகாலத்தில் உள்ளதா, நிகழ்காலத்தில் உள்ளதா, எதிர்காலத்தில் உள்ளதா என்பன போன்ற கேள்விகளுக்குக் கதையில் விடை இருக்க வேண்டும் என்கிறார். இந்த இரு கதைகளிலும் இருக்கின்றன- நிகழ் காலம்.

4. கதைமுடிச்சு . “பெரும்பாலும் மையக்கதாபாத்திரத்தை ஒட்டித்தான் முடிச்சு உருவாகும். அதற்கு எதிர்கததாபாத்திரம் காரணமாக இருக்கும்.” இந்தக் கதைகளில் மையக் கதாபாத்திரம் டாக்டர். அவரை ஒட்டியே முடிச்சு உருவாகிறது. அதற்குக் காரணம் எதிர்கதாபாத்திரம். மருந்து கேட்க வந்தவனின் முட்டாள்தனமான பேச்சு.

4. திருப்பம். நிச்சயம் இரண்டு கதைகளின் முடிவுகளும் வாசகன் எதிர்பாரா திசையில் திரும்புகின்றன. அதிலும் குறிப்பாக, “சொற்றொடர்களில் அத்தகைய திருப்பம் உள்ளது. இது வாசகனை சற்று அதிர வைக்கிரது. நிலைகுலையவைக்கிறது. அவனது சிந்தனையை உசுப்புகிறது. அவனை மேலே சென்று கற்பனைசெய்யவைக்கிறது.” என்று ஜெயமோகன் அவர்கள் குறிப்பிடும் விஷயத்தில் கிரி வெற்றி பெற்று விட்டார். அவரது கதையைப் படித்த தாக்கத்தில் வீராவும் மேலே சென்று கற்பனை செய்து ஒரு கதையை எழுதி விட்டார். வாழ்த்துகள் கிரி. நன்றி வீரா.

5. தலைப்பு. “நினைவில் நிற்கும் தலைப்பு போடுவது நல்லது” இங்கேதான் நான் சொதப்பி விட்டேன். நினைவில் நிற்கும் தலைப்பு போட வேண்டும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு மேதாவித்தனமாக “கொலைவலி டாக்டரின் கோபம்” என்று தலைப்பு வைத்திருக்கக் கூடாது. கிரி “கொலைவலி” என்று மட்டுமே தலைப்பு தந்திருந்தார். அவர் தந்த தலைப்பை மாற்றாமலிருந்தால் கதையின் இந்த உறுப்பு கெட்டுப் போயிருக்காது. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால் நாம் தோல்விகளில் இருந்துதான் பாடம் கற்கிறோம். தலைப்பில் என்னவெல்லாம் செய்யக்கூடாது என்று மூன்று விஷயங்களை ஜெயமோகன் சொல்கிறார். அவற்றை இனி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால் இங்கே பதிவு செய்கிறேன்.

அ. கதையின் மையம் என்ன, சாரம் என்ன என்றெல்லாம் ஆசிரியனே சொல்வதுபோல தலைப்பு வைப்பது தவறு. உதாரணம் ‘ மனமே மருந்து!’

ஆ. எல்லாரும் போட்டு தேய்ந்து போன பாணியில் தலைப்பு போடக்கூடாது . உதாரணம் ”கற்க மறந்த பாடங்கள்’ ‘தோணியும் வண்டியில் ஏறும்’

இ. கதையின் சாரத்தை படிமம் மூலம் சுட்டும் தலைப்பு வைக்கலாம். அது கதையை நினைவில் நிறுத்த உதவும்.ஆனால் அது மிக வெளிப்படையாக இருக்கக் கூடாது. வாசகனின் கற்பனைக்கு அது தடையாகும்”

இவற்றைத் தவிர வாசக இடைவெளி என்ற ஒரு விஷயத்தை ஜெயமோகன் குறிப்பிடுகிறார்- “‘சொல்லவந்த விஷயத்தை சொல்வது அல்ல சிறுகதையின் இயல்பு. கொஞ்சமாகச் சொல்லி பெரும்பகுதியை வாசகனை ஊகிக்கவைப்பதுதான் சிறுகதையின் இயல்பு. இவ்வாறு வாசகனின் ஊகத்துக்காக விடப்படும் மௌனத்தைத்தான் வாசக இடைவெளி என்கிறோம்.”

என் அபிப்பிராயத்தில் கிரியின் கதையில் இந்த வாசக இடைவெளி மிக அதிகமாகவும் வீராவின் கதையில் மிகக் குறைவாகவும் உள்ளன. கிரி அதிகமான விஷயங்களை ஊகத்துக்கு விட்டுவிட்டார் என்றால் வீரா கதையின் மையத்தில் உள்ள விஷயத்தை மட்டும் ஊகத்துக்கு விட்டிருக்கிறார். இதை நான் ஒரு விமரிசனமாகச் சொல்லவில்லை: “…சிறுகதையிலும் விடப்படும் வாசக இடைவெளியை ஊகித்து ரசிப்பதற்கு கொஞ்சம் பழக்கம் தேவை. தொடர்ந்து படிப்பதன்மூலம் இயல்பாக அது உருவாகிவரும். அ·தன்றி சிறுகதையை வாசித்துவிட்டு ‘சொல்லவந்ததை தெளிவாகச்சொல்லு”என்று எழுத்தாளனிடம் சொல்வதில் பொருள் இல்லை. அப்படிச்சொன்னால் அது சிறுகதை அல்ல,” என்று எழுதுகிறார் ஜெயமோகன் அவர்கள். இனிமேலானும் எந்த ஒரு கதையையும் படித்து முடித்து விட்டு “என்ன எழுதியிருக்கார் இவர்? சரியாவே புரியல” என்று சொல்லக் கூடாது என்று எனக்கு மின் அஞ்சல் அனுப்பிய நண்பரிடம் தெளிவுபடுத்த விரும்புகிறேன். உங்களிடமிருந்து விஷயத்தை மறைப்பதும் உங்களையே ஊகித்துத் தெரிந்து கொள்ள வைப்பதுமே கதாசிரியனின் நோக்கமாக இருக்கும் என்பதை இனி நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நண்பரே.

இவற்றைத் தவிர சிறுகதையின் சித்தரிப்பு, சிறுகதையைச் செறிவாக்குவது, சிறுகதையின் துவக்கம், சிறுகதையின் முடிவு, சிறுகதையின் வளர்ச்சிக்கட்டம் ஆகிய விஷயங்களையும் ஜெயமோகன் அவர்கள் விளக்கியிருக்கிறார். அவற்றையும் பேசுவதானால் இந்தப் பதிவு மிக நீளமாகப் போய் விடும் அவற்றையும் பேச வேண்டும் என்று யாரேனும் பின்னூட்டம் போட்டால் அந்த விஷயங்களை அப்புறம் பார்க்கலாம்.

நான் சொல்ல வந்த விஷயம், சிறுகதையின் வடிவம் மற்றும் உள்ளுறுப்புகள் இந்த இரு கதைகளிலும் பூரணமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கின்றன என்ற தகவலை மட்டுமே. இனியேனும் “இதெல்லாம் ஒரு கதையா?” என்று யாரும் கேட்க வேண்டாம் என்று மட்டும் விண்ணப்பித்துக் கொள்கிறேன். நன்றி.

Advertisements

14 thoughts on “கொலைவலி – சில விளக்கங்கள்

  • இது ரெண்டு மட்டுமா பஞ்சாங்கம்? இன்னும் ஏராளமானவைகள் இருக்கின்றன.

   ஆனால் நவக்கிரகங்கள்தான் ஒன்பதுதான், நட்சத்திரங்கள் இருபத்தேழுதான்- கவனிச்சீங்களா? :))

 1. அண்ணன் ,

  பலவருஷ உபயோகத்தில் சைக்கிள்னா இப்படி இருந்தா வசதின்னு எல்லாரும் சேந்து ஒரு முடிவுக்கு வந்திருப்பாங்க .

  அதில என்னோட கிரியேட்டிவிட்டி மூலம் இன்னும் மேம்படுத்தலாம் ,

  நான் ரெண்டு போக்ஸ் கம்பியில்லாம , ஒரு வீல் சின்னதா சைக்கிள் செஞ்சுட்டேன் , ஆனா அதையும் நீங்க சைக்கிள்னுதான் ஏத்துக்கனும் .

  அதை சைக்கிள் இல்லைன்னு யாராவது சொல்லப்போச்சு – கபார்தார்

  • என்னங்கண்ணா நீங்க, வீரா நம்மூர்க்காரர், கிரி நம்ம நண்பர். இவங்க எழுதின கதையை இதெல்லாம் கதையான்னு கேட்டா சும்மா விட்டுற முடியுமா? சைக்கிள் மாதிரி இருக்கு, சைக்கிள் மாதிரி ஓடுதுன்னா அதுவும் சைக்கிள்தாங்க. ஏண்டா பொம்மை சைக்கிளும் ராலி சைக்கிளும் ஒண்ணாடான்னு கேக்கக்கூடாதுங்க, அது வேற பிரச்னை. என்னைப் பொறுத்தவரை இது ஒரு கருவி. ஸ்பான்னர் மாதிரி, ஏதாவது தப்பா இருக்கற மாதிரி தெரிஞ்சா அனலைஸ் பண்ண பயன்படுத்தலாம். அதை ஆயுதமா பயன்படுத்தி மண்டையில அடிச்சாதான் தப்பு. இங்க அப்படி செய்யலைன்னு நினைக்கறேன். நன்றி சார், தப்பா இருந்தா மன்னிச்சுக்குங்க.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s