பேனா எடுத்துக் கொடுத்தான் கம்பம்

(டிஸ்கி: இந்த நிமிஷக்கதைகளில் விவரிக்கப்படும் நிகழ்வுகளில் பெரும்பாலானவை உண்மைக்கு மிக அருகில் நடந்ததாக தம்மை உணர்த்திக் கொள்பவை; அதைச் செய்யும்போதே புனைவின் தன்மையையும் சுட்டிக்காட்டுபவை. நம் அன்றாட வாழ்வின் நமது கொடுப்பினைகள் குறித்து ஒரு நம்பிக்கை, அதன் விளைவான அலட்சியம் நமக்கு பழகிப்போன ஒன்று: ஆனால் எதிர்பாராமல் ஒரு கணம் கண்ட காட்சி, எவரேனும் சொல்லக் கேட்ட ஒரு சங்கதி நம் மனதில் சந்தேக விதையை விதைத்து இயல்பென ஏற்றுக் கொண்ட நம் உலகை மாற்றி விடுகிறது- இந்தக் கதைகளும் அதையே நோக்கமாகக் கொண்ட சோதனை முயற்சிகள்: ஒரு காட்சி, ஒரு சொல், ஒரு செயல், ஒரு உணர்த்தல், ஒரு புரிதல் நாம் அறிந்தவற்றுக்குப் புதிய பொருள் தரக்கூடியனவாக இருப்பதைப் பேசுகின்றன. இதில் வருபவர்கள் உண்மையாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, நிகழ்வுகள் உண்மையானவையாக இருக்கும் என்ற அத்தாட்சியில்லை – இவை தம்மை உண்மை என உணர்த்திக் கொள்ளும் நோக்கத்தில் புனையப்பட்டவை. இந்தக் கதையில் வரும் எழுத்தாளர் வேறொருவராக இருக்கலாம், அல்லது இப்படியொரு சம்பவம் நிகழாமலும் இருந்திருக்கலாம்.)

அவனது பத்து வயது முதல் இருபது வரை ஒரு கிருத்தவரின் வீட்டில் அவர்கள் குடியிருந்தனர். அங்கே டார்த்தி அக்கா என்றொருவர் இருந்தார். அந்த வீட்டுக்காரர்கள் அவனுக்குப் பிடிபடாதவர்களாகவே இருந்தார்கள். வண்ணநிலவனின் டாரதி இதை மாற்றினாள்.

அவன் தன் சகோதரனுடன் வண்ணநிலவனின் நாவல்களைப் பற்றி பக்கம் பக்கமாக விவாதித்திருக்கிறான். விவாதம் என்றால் புகழ்ச்சிதான், பிரமிப்பு, பேராச்சர்யம். நாம் குழந்தைகளாக இருக்கும்போது கதை கேட்பதில் கிடைக்கும் பிடிப்பு, அவ்வளவு சுலபமாக நம்மை விடுவதில்லை. விடலைப் பருவத்தின் குழப்பத்துக்கு கதைகள் விடை கூறாவிட்டாலும், சரியான துணைகளாக இருக்கின்றன. வண்ணநிலவனின் எழுத்து அவனுக்கு விவரிக்க முடியாத ஒரு உலகைக் காட்டியது. தன் பக்கத்து வீட்டில் இருந்த டாரதி அக்காவை அந்நாவலில் இணைத்து அவனளவில் அவர்களையும், வண்ண நிலவனின் எழுத்தையும் புரிந்து கொண்டான். இப்போது யோசித்தால் அது பிழையான வாசிப்பு என்று தெரிகிறது. ஆனால், உலகம் புரியாத, கற்பனை விரிந்த அந்த வயதில் அதுதான் அவனால் முடிந்தது. அவன் வண்ணநிலவனின் கதைகளைப் புரிந்து கொண்டானோ இல்லையோ, அவரது உயர்வை புரிந்து கொண்டிருக்க வேண்டும். அப்படி இல்லை எனில் அவனால் வண்ணநிலவனைத் திரும்பத் திரும்பப் படித்திருக்க முடியாது. அப்புறம் அவரது கதைகள் அத்தனையும் மறந்தபின்னும் வண்ணநிலவன் என்ற பெயரின் பிரமிப்பு தொடர்ந்து கொண்டே இருந்தது.

அதன் பின் அவனது அறிவைத் தொட்ட வறுமை இந்த உலகில் எது முக்கியம் என்ற நிதர்சனத்தை அவனுக்கு அளித்தது. அவனது நோக்கங்கள் மாறி, அவநம்பிக்கைகள் வேரூன்றிய நிலையில் கதைகள் சாத்தியமற்ற, பின்னடைவை உண்டாக்கக்கூடிய இருண்ட உலகின் ஒளிரும் வாசல்களாகத் தெரிந்தன அவனுக்கு, இலக்கியத்தின் கவர்ச்சியை விட்டு விலகினான். இலக்கியவாதிகள் கேலிக்குரியவர்களானார்கள்.

அவனது மத்திமப் பருவத்தில்தான் தன் வயதொத்தவர்களைப் பீடிக்கத் துவங்கிய நோய்கள்- இருவர் மாரடைப்பில் காலமானார்கள்- அவனைக் கதைகளை நோக்கித் திருப்பின. திரும்பவும் தன் பதின்ம வயது முதல் இருபதுகளில் படித்த புனைவுகளுள் நுழைந்தான்.

அவன் தான் படித்த புத்தகங்கள் பற்றிப் பேசக் கேட்ட ஒருவர், அவனை வண்ணநிலவனிடம் அறிமுகப்படுத்துவதாகச் சொன்னார். அவன் அவரை ஒரு ஹோட்டலில் சந்திப்பதாக ஏற்பாடானது. அங்கே ஒரு அற்புதம் நடந்தது.

அங்கே அவனோடு சேர்த்து ஆறேழு பேர் இருந்தனர். ஒரு மணி நேரம் அந்த ஹோட்டலில் இருந்தார்கள். எல்லாரும் என்னென்னவோ பேசினார்கள், எதிலும் அவனுக்குப் பெரிதாக ஆர்வம் இருக்கவில்லை. அவர்களது கவனம் அன்றைய பிரபலங்கள், செய்திகளில் அடிபடுபவர்கள் பற்றி இருந்தது. ஆனால் அவன் மனமெல்லாம் அத்தனையையும் ஒரு புன்சிரிப்புடன் அமைதியாக ஆமோதிக்கும் வண்ணநிலவனுடன் தான் இருக்கிறோம் என்ற மிதப்பிலேயே இருந்தது. அவன் அவரோடு பேசவில்லை. அவரும் யாருடனும் அதிகம் பேசவில்லை. புன்சிரிப்புடன் மற்றவர்கள் பேசுவதைப் பெரும்பாலும் ஆமோதிக்கும் வகையில் ஓரிரு வாக்கியங்கள் பேசியதோடு சரி- சில சமயம் அபூர்வ ஆர்வத்துடன் அவர் எதையேனும் பேசும்போது அவரது குரல் உயர்ந்து ஒலித்தது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. என்ன பேசுகிறார்கள் என்பதில் கவனமின்றி அவன் அங்கே அமர்ந்திருந்தான்.

வீட்டுக்குப் போகும்போது அவனிடம் அவனது நண்பர், வண்ணநிலவனை அவரது வீட்டில் கொண்டு விட முடியுமா என்று கேட்டார். அவன் வீட்டுக்குச் செல்லும் வழியில்தான் இருந்தது அவரது வீடு என்று சொல்ல முடியாது, இருந்தாலும் மிகுந்த மகிழ்ச்சியுடன் சரியென்று சொன்னான். தனது ஆக்டிவாவை தான் நிறுத்தி வைத்த இடத்திலிருந்து எடுக்கும்போது அங்கே உதவிக்கு நின்றிருந்த நேபாளிக்குக் காசு கோடுக்க தன் சட்டை பாக்கெட்டில் கை விட்டான். காசை எடுக்கும்போது அதிலிருந்த பேனா கீழே விழுந்து விட்டது. அவன் குனிந்து அந்த சாலையின் தெரு விளக்கு நிழலில் எதையோ தேடுவதைப் பார்த்ததும் எல்லாரும் என்ன என்ன என்று பதைப்புடன் கேட்டனர். ஒண்ணுமில்லை, ஒரு பால் பாயிண்ட் பேனாதான், போனா போகுது, என்று அவன் சொன்னான்.

ஆனால் வண்ணநிலவன் அதைக் கண்டு எடுத்துக் கொடுத்தார். அவ்வளவு பெரியவர் தன் பேனாவை குனிந்து எடுப்பதை பார்த்ததும் அவனுக்குக் குற்ற உணர்வாக இருந்தது. எப்போதும் எதற்கெடுத்தாலும் நன்றி, ஸாரி என்ற இரண்டில் ஒன்றையாவது சொல்வது அவனுக்கு வழக்கம். ஆனால் அவர் பேனாவைத் தரையில் இருந்து எடுத்து அவனிடம் தந்தபோது அவன் எதுவும் பேசாமல் அதை தன் சட்டை பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டு ஆக்டிவாவை எடுத்தான்.

வண்ணநிலவன் அவன் பின்னால் சற்று தள்ளி அமர்ந்திருந்தார். அவரது எடையே தெரியவில்லை. ஆக்டிவாவை சாலையின் செலுத்தும்போதுதான் அவனுக்கு அவரது மகள் பேறு காலத்துக்கு வீடு வந்திருக்கிறாள் என்று அவர் பேச்சோடு பேச்சாக சொன்னது நினைவுக்கு வந்தது. முடிந்த அளவுக்கு வண்டி குழிகளில் இறங்காமல் எப்போதும் முப்பதைத் தாண்டாமல் ஜாக்கிரதையாக அவன் தன் வண்டியை ஓட்டினான். அப்படியும் இரண்டு மூன்று இடங்களில் பள்ளத்தில் இறங்கியது, ஸ்பீட் பிரேக்கர்கள் வந்தபோது எவ்வளவுதான் மெதுவாகச் சென்றாலும் வண்டி அதிர்வதைத் தவிர்க்க முடியவில்லை. இவரை பத்திரமாக வீட்டில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நினைவில் அவன் அதிகம் பேசவில்லை.

ஆனாலும் அவன் தன்னிடம் சொல்வதற்கு முக்கியமாக இருந்த அந்த ஒரு விஷயத்தை அடக்க மாட்டாமல் சொல்லவே செய்தான், “நான் எனக்கு இருபது வயது ஆவதற்குள் உங்கள் நாவல்களைப் படித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் உங்களைப் பார்ப்பேன் என்று நினைத்தே பார்க்கவில்லை,” என்றான். அப்புறம் அவன் அதையே திரும்பச் சொன்னவுடன் அவர் சிரித்து விட்டு அவன் எந்த ஊர், எங்கு படித்தான் என்ற விவரங்களைக் கேட்டார்.

அவர் தன் வீட்டு வாசலில் இறங்கியதும் அவனையும் தன் வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அப்போது இரவு மணி ஒன்பதைத் தொட்டுக் கொண்டிருந்ததால் தன் மனைவி தனக்காகக் காத்திருப்பாள் என்றும் இன்னொரு நாள் வருவதாகவும் சொன்னான். அவர் சிரித்தபடியே நின்றுக் கொண்டிருந்தார். அவன்தான் வேறு வழியில்லாமல் கிளம்ப வேண்டியிருந்தது. அவன் யூ டர்ன் அடித்துத் திரும்பும்போது அவர் அந்த அபார்ட்மெண்ட்டின் காவல்காரனை நோக்கித் திரும்புவது தெரிந்தது.

கொஞ்சம் தூரம் போனதும் அவன் தன் சட்டைப் பையில் இருந்த பேனாவைத் தொட்டுப் பார்த்துக் கோண்டான். “இது வண்ணநிலவன் தேடி எடுத்துக் கொடுத்த பேனா” என்ற நினைப்பில் அவனுக்கு சிரிப்பு வந்தது. தான் அதை பத்திரப்படுத்தப் போவதில்லை என்பது அவனுக்குத் தெரியும், ஆனால் பேனா இல்லாமல் போனாலும் அதை அவர் தனக்கு எடுத்துக் கொடுத்தது இல்லாமல் போகாது என்று நினைத்துக் கொண்டே வீட்டுக்குப் போனான. இரவு வெகு நேரமாகியும் எதையோ ஜெயித்து விட்ட உணர்வில் அவனால் தூங்க முடியவில்லை.

Advertisements

14 thoughts on “பேனா எடுத்துக் கொடுத்தான் கம்பம்

 1. தலைப்பில் ஏதோ இடறுகிறது. கதையை அது பாதிக்க வில்லை என்றாலும் கூட.
  பரிந்துரைக்கும் தலைப்புகள்.
  எழுதிச் செல்லும் விதி எடுத்தும் கொடுக்கும்
  பாக்கெட்டிலிருந்து விழுந்த பேனா
  எடுத்து கொடுத்தார்

  1. பரிந்துரைகளுக்கு நன்றி வீரா. ஆனால் தலைப்புக்கு பிரத்யேகமான காரணமிருக்கிறது. அதை அப்புறம் பேசுவோம் 🙂

 2. சார்

  கதாபாத்திரத்தின் இயல்பு வரிகளுக்கூடே வெளிப்படுகிறது.
  நிகழ்வு மீண்டும் எழுத்தில் நிகழ்கிறபோது பல மனங்களில் பேனா எடுத்துக்கொடுக்கப்படுகிறது. ஆனால் பேனாவும் தருணமும் தொடர்ந்தும் இருப்பதில்லை

  நல்லகதை,வாழ்த்துக்கள்

  1. முழுக்க முழுக்க உண்மை சார். நினைவுகள் மட்டுமே மிஞ்சுகின்றன, அவையும் புழக்கத்தின் அரை இருளில் அடையாளமிழக்கின்றன. அவற்றை மெய்யியல்பு கெடாமல் மீட்டுக் கொடுக்க வல்லவர்கள் வெகு சிலரே. கிரிதரன் சார் சொன்னமாதிரி அவர்கள் வாசிக்கக் கிடைப்பதே பாக்கியம்தான், பலபத்தாண்டுகள் செலவானபின்னும் அதன்வழி உண்மையின் ஒளியை நாம் உணர இயலுவதால். நன்றி சார், நீங்களும் நேரம் கிடைச்சப்ப எழுதுங்க 🙂

 3. //. “சிறுகதை அதன் கடைசி வரிக்குப் பிறகு வாசகன் மனதில் மீண்டும் தொடங்குகிறது.”-//

  எனக்குக் குழப்பம்தான் துவங்குகிறது. உண்மையில் என் சிறுமூளைக்கு ‘மையம்’ விளங்கவில்லை. ஏன் தலைப்பு என்பதுவும் கூட!

   1. அருமையான விளக்கம். நன்றி சார்.

    என்னைவிட நீங்கள் அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். என்னால்கூட இவ்வளவு அருமையாக விளக்கியிருக்க முடியாது.

    என்ன சொல்கிறீர்கள்?

 4. இதைப்பற்றி ரூம் போட்டு யோசிச்சுக்கொண்டிருக்கிறேன்.

  உணருவதும் விளங்குவதும் ..

  சில விளங்க உணர்வு கெடும்

  சில உணர விளக்கம் கெடும்.

  சில உணர ,விளக்கம் தேவை

  சில விளங்க உணர்வு தேவை

  சில உணர்ந்து விளங்கப்படும்.
  சில விளங்கி உணரப்படும்
  சில உணர்ந்து ,விளங்கி மேலும் விளங்க உணர்ந்து……….

  🙂

  1. உணர்வுக்கும் விளக்கத்துக்கும் நடுவுல இந்த நான் புகுந்து காரியத்தைக் கெடுத்துடுதே, இதை எப்படி விலக்கலாம்? 😦

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s